நம்மாழ்வார் உகந்த நம்பெருமாள்!
ஸ்ரீரங்கம் முரளி பட்டர்
ஆழ்வார்கள் பாடிய திவ்யப் பிரபந்தங்களுக்கு 'தமிழ் மறை' என்று பெயர். இதற்கு இத்தனை சிறப்பு வரக் காரணமாக இருந்தவர், 'வேதம் தமிழ் செய்த மாறன்' ஆகிய நம்மாழ்வார்.
திருவழுதிவளநாட்டை ஆண்ட காரியாருக்கும் வேளிர் அரசி உடையமங்கைக்கும், திருக்குருகூர் தலத்தில், வைகாசி- விசாக நட்சத்திரத்தில் விஷ்வக்ஸேனரின் அம்சமாக அவதரித்தவர் இவர். பிறந்தவர் அழவும் இல்லை, அசையவும் இல்லை! ஒன்றேயன்று உயிர்... அது மட்டுமே இருந்தது.
திருக்குருகூர் ஆதிநாதர் சந்நிதியில் குழந்தையை விட்டுவிட்டு, காரியாரும் உடைய மங்கையும் கதறி அழுதனர். அப்போது, ஓர் அதிசயம் நிகழ்ந்தது. பூப்போல் சிரித்து, குப்புறக் கவிழ்ந்து தவழ்ந்த குழந்தை, அப்படியே சந்நிதியில் உள்ள புளியமரத்தை நோக்கிச் சென்றது! மரத்தின் அடியில் சென்று சேர்ந்த குழந்தையை யாராலும் தூக்க முடியாமல் போனது. பசி-தாகம் இன்றி, எவ்வித வாட்ட மும் இன்றி, அதன் அடியிலேயே இயல்புக்கு மாறாக வளர்ந்ததால் மாறன் எனப் பெயரிடப் பெற்றார்.
சாதாரணமாக குழந்தை பிறந்தவுடன் சடம் என்னும் அறியாமைக்கு உரித்தான ஒரு நாடி படருமாம். இந்தக் குழந்தை அந்த நாடியைத் தன்னிடம் நெருங்கவிடவில்லை. அதனை வென்றதால், சடகோபன் என்ற பெயரும் வந்தது. திருக்குருகூர் ஆதிநாதப் பெருமாள், விஷ்வக்ஸேனரையே இவருக்கு குருவாக நியமித்தார். இளமையிலேயே கற்றுத் தேர்ந்தார் மாறன்!
இவரின் மௌனத்தைக் கலைத்தவர் மதுரகவிகள். ஞானம் தேடி வடக்கே சென்ற மதுரகவி, அயோத்தியில் வானில் தெரிந்த தெய்விக ஒளியைக் கண்டு அதிசயித்தார். அதனால் ஈர்க்கப்பட்டு, அந்த ஒளியைப் பின்தொடர்ந்தார். அது இவரை திருக்குருகூருக்கே கொண்டு வந்து சேர்த்தது. இத்தனைக்கும் திருக்குருகூரை அடுத்த திருக்கோளுர்தான் இவருக்கு சொந்த ஊர்!
இப்படி, வெகுதூரம் ஞானம் தேடிச்சென்று, தன் ஊர் அருகிலேயே தான் தேடிய ஞானியைக் கண்டுகொண்ட மதுரகவி, நம்மாழ்வாரிடம் வெகுநாட்களாக தனக்கு விடைதெரியாத ஒரு கேள்வியை நம்பிக்கையுடன் கேட்டார்...
''செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?''
(செத்தது- சரீரம்; சிறியது- ஜீவாத்மா(உயிர்). உடலில் தங்கும் இந்த ஜீவன், எப்படி செயலாற்றும்? என்பது மதுரகவிகளின் கேள்வி)
நம்மாழ்வார் முதன் முதலாக திருவாய் மலர்ந்தார்-''அத்தைத் தின்று அங்கே கிடக்கும்''.
(உடலில் உயிர் உள்ளவரை, உடல் அனுபவிக்கும் ஐம்புலன்களின் இன்ப- துன்பங்களையும் இந்த ஜீவாத்மா சகித்துக் கொண்டிருக்கும்). இதனால் தெளிவு பெற்ற மதுரகவி, அவருடனேயே தங்கிவிட்டார்.
தன் குரு நம்மாழ்வாரிடம் வேதம் அனைத்தையும் தமிழ்ப்படுத்த வேண்டினார் மதுரகவிகள். அதனால், நம்மாழ்வார் நான்கு வேதங்களின் சாரமாக, நான்கு பிரபந்தங்களை அருளிச்செய்தார். அவை: திருவிருத்தம் (ரிக் வேத சாரம்), திருவாசிரியம் (யஜூர் வேத சாரம்), திருவாய்மொழி (சாம வேத சாரம்), திருவந்தாதி(அதர்வண வேத சாரம்).
இவர், எந்த திவ்யதேசத்துக்கும் செல்லவில்லை. திருப் புளியின் அடியிலேயே இருந்தார். எல்லா திவ்யதேச எம்பெருமான்களும், இவர் இடத்துக்கு வலிய வந்து, தங்கள் திவ்ய தரிசனத்தை இவருக்குக் காட்டி அருளினர்.
மற்றைய ஆழ்வார்களைப் போன்று இவ்வுலக உணர்ச்சி ஏதும் அடையாமல், தத்துவ ஞானத்தோடு ஞானபக்தியை உடையவராக, சதா தியானபரராக... இந்நிலை என்றும் மாறாதிருந்த மாறன் இவர். இவர் அவயவி(உடல்). மற்றைய ஆழ்வார்கள் எல்லாரும் இவருக்கு அவயம்(உறுப்புகள்).
பூவுலகில் சுமார் 35 ஆண்டுகள் எழுந்தருளியிருந்த சுவாமி நம்மாழ்வார், பரமபதம் செல்ல எண்ணம் கொண்டார். அதனால், மிகவும் துயரம் அடைந்த அவரின் சீடர் மதுரகவியாழ்வார், நம்மாழ்வாரை விக்ரஹ உருவிலாவது தரிசிக்கலாமே என்று எண்ணி, 'நம்மாழ்வாரின் அர்ச்சைத் திருமேனி வேண்டும்' என்று கேட்டார். அதற்கு நம்மாழ்வாரும், ''தாமிரபரணி ஆற்று நீரை எடுத்து வந்து, சுண்டக் காய்ச்சினால், எனது உருவம் கிடைக்கும்'' என அவரைத் தேற்றினார். மதுரகவிகளும், தாமிரபரணி ஆற்றின் நீரை ஒரு பொற்குடத்தில் எடுத்து வந்து, வேத விற்பன்னர்களின் வேதகோஷம் முழங்க, இடைவிடாமல் காய்ச்சினார்.
ஏழாம் நாள்... யாரும் எதிர்பாராத வகையில்... கூப்பிய கையுடன், திரிதண்டமாகிற முக்கோல் ஏந்தியிருக்க, ஒரு திவ்ய மங்கள விக்ரஹம் தோன்றியது. அதனைக் கண்ட நம்மாழ்வார், 'பொலிக பொலிக பொலிக' என, திருவாய் மலர்ந்தருளினார். ''அது, வருங்காலத்தில் வைணவத்தை ஆழமாக நிலைநாட்டப் போகும் சுவாமி ராமானுஜரின் பவிஷ்யதா சார்ய திருமேனி'' என்று அருளி, தனது வலது திருவடியைக் காண்பித்தார். அதில் ஸ்ரீராமானுஜரின் உருவத்தை அனைவரும் தரிசித்தனர். அந்த விக்ரஹத்தை அங்கேயே வைத்திருந்து ஆராதனைகள் செய்து வரும்படி பணித்தார்.
மீண்டும் ஒருமுறை தாமிரபரணித் தண்ணீரைக் காய்ச்சுமாறு சொன்னார். முன்பு செய்தது போல செய்தபோது, சுவாமி நம்மாழ்வாரின் திவ்ய மங்கள விக்ரஹம் சின்முத்திரையோடு உண்டானது. (இன்று நாம் ஆழ்வார் திருநகரியில் தரிசிக்கும் விக்ரஹம் இதுதான்!) அப்போது நம்மாழ்வாரின் திருமேனியில் இருந்து அருள்ஒளி விக்ரஹத் திருமேனியில் பாய்ந்தது. அதன் பிறகு நம்மாழ்வார் பரமபதம் எழுந்தருளினார். அவரது சரமத் திருமேனியை திருப்புளியமரத்தின் அடியில் பள்ளிப்படுத்தி, திருவரசு ஏற்படுத்தி மதுரகவியாழ்வார் வழிபட்டு வரலானார்.
நம்மாழ்வார் மிகவும் உகந்த பெருமாள் நம் அரங்கனே!
திருவரங்கனைத் தன் மணாளனாக வரித்து, தானே அரங்கனின் நாயகியாகிப் பாடிய பாசுரங்கள் அநேகம். அவற்றில், அரங்கனையே நினைத்து உருகும் தன் மகளின் நிலையைக் கண்டு கண்ணீர் உகுத்து, அரங்கனிடம் 'நீ என்ன செய்யப் போகிறாய்?' என்று நாயகியின் தாயார் கேட்கும் பாசுரம் ஒன்று... கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் எனத் தொடங்கும் பாசுரம். இதில்,
''இரவு பகலாக கண் மூடி உறங்க வேண்டும் என்பதை அறிந்தும் அறியாதவளாகி விட்டாள். பொங்கும் கண்ணீர், உன்னைக் காண இடையூறாக இருக்கும் என்பதால், அதனைத் தனது கைகளால் தள்ளி விடுகிறாள். சங்கு- சக்கரங்கள் என்று சொல்லி வணங்க முயல்கிறாள். தாமரைக் கண்கள் என்று சொல்லி, அதனைப் பெற முடியாமல் உள்ளத்தால் சோர்வடைகிறாள். உன்னை விட்டு நான் எப்படி இருப்பேன்?- என்கிறாள். தன் கைகளால் நிலத்தை அளைந்த வண்ணம் இருக்கிறாள். திருவரங்கப் பெரிய பெருமாளே! என் மகளின் நிலைகுறித்து நீ என்ன நினைத்துள்ளாய்?'' என்று அரங்கனைக் கேட்கிறாள் நாயகியின் தாயார்.
முடிவு இவன் தனக்கு ஒன்று அறிகிலேன் என்னும்
மூவுலகாளியே! என்னும்
கடிகமழ் கொன்றைச் சடையனே! என்னும்
நான்முகக் கடவுளே! என்னும்
வடிவுடை வானோர் தலைவனே! என்னும்
வண் திருவரங்கனே! என்னும்
அடியடையாதார் போல் இவளணுகி
அடைந்தனள் முகில் வண்ணனடியே!
இந்தப் பெண் இவ்வாறு சிரமப்படும் நேரங்களில் தனக்கோ அல்லது தன் சிரமங்களுக்கோ எந்தவித முடிவும் தெரியவில்லை என்கிறாள். மூவுலகையும் ஆளும் இந்திரனுக்கு ஆத்மாவாக உள்ளவனே... மணமுள்ள கொன்றை மாலையை சடையில் தரித்துள்ள சிவனுக்கு ஆத்மாவாக உள்ளவனே... நான்முகனுக்கு ஆத்மாவாக உள்ளவனே... உன் வடிவினை உடைய வானோர்களின் தலைவனே... அனைவருக்கும் அருள்புரிகின்ற திருவரங்கப் பெரியபெருமாளே - என்கிறாள். அவனது திருவடிகளை அடைய மாட்டாள் என்று எண்ணும்படி இருந்தபோது, மேகவண்ணன் திருவடிகளை அவள் பெற்றுவிட்டாள்.
மூவுலகாளியே = மூ + உலகு + ஆளியே! திருமலையாண்டான் சுவாமி, இதற்கு விளக்கம் சொல்லும்போது, மூன்று உலகையும் ஆளும் இந்திரன் எனப்படும், சிவன் எனப்படும், பிரம்மன் எனப்படும் வடிவுடைய வானோர்கள் மற்றும் தேவர்களின் தலைவனே- என்கிறார். ஸ்ரீமத் ராமானுஜர் விளக்கம் சொல்கையில், 'அவர்களது தலைவன் என்பதோடு, அந்தர்யாமியாக இருப்பவனே' என்றும் சேர்க்கிறார்.
மூவுலகாளியே... மூவுலகையும் ஆளும் தலைவனே என்று சொல்லும்போது, ஒரு சம்பவம் நினைவுக்கு வருகின்றது.
திருவரங்கம் கோயிலில்... கருவறையில் காலை, மதியம், மாலை, இரவு ஆகிய நான்கு வேளைகளிலும் பச்சரிசி மாவை தண்ணீர் விட்டுக் குழைத்து, பூர்ணம் போன்று செய்து, நடுவில் நெய் திரி ஏற்றி, ஆறு மங்கள ஆரத்தியும், கற்பூரத்தினால் மூன்று கற்பூர ஆரத்தியும் பெரிய பெருமாளுக்கு காண்பிப்பர்.
அன்று ஓர் ஏகாதசி. நம்பெருமாள் புறப்படும் முன் அடியேன் மங்கள ஆரத்தி செய்தேன். வெளியில் ஸ்ரீதிரிதண்டி நாராயண ஜீயர் சுவாமி தரிசித்துக் கொண்டிருந்தார். அவருடன் உபந்யாசகர் ஸ்ரீவில்லிபுத்தூர் கண்ணன் சுவாமியும் இருந்தார். இரண்டு மூத்த அர்ச்சகர்கள் உடனிருக்க, நம்பெருமாளை தோளுக்கினியானில் எழுந்தருளச் செய்து, துவாரபாலகர்கள் படியைத் தாண்டி வந்து கொண்டிருந்தோம். அப்போது, ஜீயர் சுவாமி திடீரென ஒரு கேள்வி கேட்டார்...
''எதற்காக ஆறு பூரணம் போன்று செய்யப்பட்ட மங்கள ஆரத்தி? எதற்காக மூன்று கற்பூர ஆரத்தி?''
அர்ச்சகர்கள் இருவரும் சற்று மௌனம் சாதித்தனர்... அதற்குள் ஸ்ரீகண்ணன் சுவாமிகள் அடியேனைப் பார்த்து, ''என்ன முரளீ! உனக்குத் தெரியுமா?''என்றார்.
உடனே, தோன்றிய பதிலை அப்போது சொன்னேன்... ''நம்பெருமாள் ஷாட்குண்யபரிபூரணர் (ஞானம், சக்தி, பலம், ஐஸ்வரியம், வீர்யம், தேஜஸ் என்ற ஆறுகுணங்களும் முழுமையாகப் பெற்றவன்) அதனால் ஆறு மங்கள ஆரத்தி...''
''சரி, மூன்று கற்பூர ஆரத்தி..?'' ஜீயர் சுவாமிகள் கேட்டார்.
''த்ரைலோக்ய பூஜிதர்... அதனால்!'' (மூன்று உலகிலும் ஆளும் இந்திரன், சிவன், பிரம்மனால் பூஜிக்கப்படுபவர்) என்றேன்.
இந்த பதிலால் ஜீயர் சுவாமி திருப்தியடைந்து மகிழ்ச்சி அடைந் தார் என்பதை அவரின் முகம் காட்டியது. இருந்தாலும், 'நாம் ஏதோ நேரத்துக்குத் தகுந்தாற்போல உளறிவிட்டோமோ?' என்று எனக்குள் ஒரு குழப்பம். நம்மைக் காட்டிலும் பெரியவர்களே அமைதியாகப் போகும்போது, நாம் ஏன் வாயைக் கொடுத்தோம் என்ற உதறல்!
சிறிது நேரத்தில், ஸ்ரீகிருஷ்ணப்ரேமி சுவாமி நம்பெருமாளை தரிசிக்க வந்தார். அடியேனை சிறுகுழந்தையாக இருக்கும் போதிலிருந்து சுவாமி நன்கு அறிவார். அவரிடம் நடந்ததைச் சொன்னேன். ''தாங்கள்தான் இதற்கு ஒரு விளக்கம் தரவேண்டும்'' என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர், ''நீ இங்கிருந்து சொன்னாய் அல்லவா! அதுதான் உண்மை. இதுதான் பிரமாணம். கவலை வேண்டாம்'' என ஆசீர்வதித்தார். நானும், நம் மனதில் இருந்து அரங்கனே அப்படி வெளிப்படுத்தினானோ என்று ஆறுதலடைந்தேன்!
நன்றி////உரிமை////சக்திவிகடன்
No comments:
Post a Comment