தமிழ் நாட்டில் இன்று ஜாதி என்னும் அமைப்பும் ஜாதி உணர்வும் உறுதிப்பட்டிருப்பதற்கு, ஜாதி மறுப்பைத் தனது கொள்கை யெனக் கொண்டுள்ள
திராவிட இயக்கமே பொறுப்பாகிவிட்டிருப்பது புலப்படுகிறது.
ஆனால் அதற்கு மாறாக, ஹிந்து தர்ம சாஸ்திரங்கள் வகுத்துக் கூறும் வர்ணாசிரம தர்மம்தான் ஜாதிகளின் இருப்புக்கும் அவற்றிடையே
பிரிவினையும் ஏற்றத் தாழ்வுகளும் இருப்பதற்கும் காரணம் என்று ஹிந்து சமயத்தின் மீது குறை காண்பதில் திராவிட இயக்கம் முனைப்பாக
இருந்து வந்துள்ளது. பிறப்பின் அடிப்படையில் மனிதர்களைப் பிரித்து வர்ண பேதம் செய்வதுதான் வர்ணாசிரமம் என்று திராவிட இயக்கம் குற்றம் சுமத்துகிறது. எனவே இது எந்த அளவுக்குச் சரியானது என ஆராய வேண்டியது அவசியமாகிறது.
முதலில் “வர்ண’ என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு என்ன பொருள் என்பதைக் காண்போம். “நிறம்’ என்று அதற்குப் பொருள் கூறுவது பாமரத் தன்மையாகும். குணத்தைப் புலப்படுத்துவதற்கு நிறத்தைக் குறிப்பிடுவதுண்டு எனினும், அதனிலும் பார்க்க நுட்பமான பொருள்கள் “வர்ண’ என்ற சொல்லுக்கு இருப்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும்.
வர்ண
என்பதன் வேர்ச் சொல் “வர்’ என்பதாகும். இதன் பொருள்,தேர்ந்து கொள்வது என்பதாகும். இணைத்தல், ஒழுங்கு செய்தல் என்றும் அதற்குப் பொருள் காண முடியும். ஒரே சொல்லுக்குப் பல பொருள்கள் எல்லா மொழிகளிலும் உள்ளதுதான் என்பதை அறிவோம்.
தொன்மையான ருக் வேதத்தில் இடம் பெறும் புருஷ ஸூக்தத்தில்தான் முதன் முதலில் நான்கு வர்ணம் என்ற பாகுபாடு தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அதில் “வர்ண’ என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
பிரபஞ்சத்தை ஒரு விராட் புருஷனாக, அதாவது பிரமாண்டமான மனிதனாக உருவகித்து, அவனது முகத்திலிருந்து பிரம்ம அல்லது பிராமணவும், புஜங்கள், மார்பிலிருந்து பிற்காலத்தில் க்ஷத்திரிய என்று மாறிய ரஜன்யவும், வயிறு, தொடைகளிலிருந்து வைசியவும், கால்கள், பாதங்களிலிருந்து ஷýத்திரவும் வெளிப்பட்டதாக புருஷ ஸூக்தம் கூறுகிறது. இவ்வாறு கூறுகையில் ஒன்று மேம்பட்டது, ஒன்று தாழ்ந்தது என்று அவற்றுக்கிடையே ஏற்றத் தாழ்வு எதையும் அது கற்பிக்கவில்லை. மேலும், இவ்வாறான நான்கு பெயர்கள் மனிதப் பிரிவுகளைக் குறிக்கிறதா அல்லது குணங்களைக் குறிக்குமா என்று யோசிக்க வேண்டியுள்ளது. ஒரு பிரமாண்ட மனிதன் என்னும் குறியீட்டிலிருந்து மேலும் நான்கு விதமான மனிதர்கள் புறப்பட்டு வருவதாகக் கொள்வதைவிட நால்வகை குண விசேஷங்கள் வெளிப்படுவதாகக் கருதுவதுதான் பொருத்தமாகவும், குறியீடின் அழகியலை ஒட்டியும் இருக்கும் என்பதைக் கண்டுகொள்ள வேண்டும்.
பிராமண வர்ணம் அறிவு சார்ந்த அம்சங்களையும், ரஜன்ய அல்லது க்ஷத்திரிய வர்ணம் உடல் வலிமை சார்ந்த அம்சங்களையும், வைசிய வர்ணம் வயிற்றுப் பாட்டுக்கான அம்சங்களையும் சூத்திர வர்ணம் உடல் உழைப்பால் ஆற்ற வேண்டிய அம்சங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இந்த நான்கு வகையான அம்சங்களும் ஒருவரிடமே இருப்பதும் சாத்தியமேயாகும். அறிவு சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்தி ஞானத்தை வளர்த்துக் கொள்வதிலும் தனது விஷய ஞானத்தைப் பிறருக்கு அளிக்கும் போதும் பிராமண குணத்தைப் பிரதிபலிப்பவன், தன்னைச் சார்ந்தோருக்குப் புகலிடம் அளித்துக் காப்பாற்றுகையில் க்ஷத்திரியனாக இருக்கிறான். தனக்கும், தன்னைச் சார்ந்தோருக்கும் உணவும் உடையும் உறயுள்ளும் அளிப்பதற்காக ஒரு பணியில் ஈடுபடுகையில் வைசியனாகச் செயல்படுகிறான். தான் சார்ந்துள்ள சமூகத்தினரின் நலனுக்காகத் தொண்டாற்ற முன்வருகையில் அவனே சூத்திரனும் ஆகிறான். இதில் ஏற்றத் தாழ்வு எங்கே வருகிறது?
நால்வகையான குண அம்சம் என்ற மானிட இயல்பை சமூக அமைப்பிற்குப் பொருத்திப் பார்க்கும்போதுதான் அது சமுதாயத்தின் நான்கு பிரிவுகளாக அமைகின்றது. இவ்வாறு நான்கு பிரிவுகள் உருவாகும்போது, அப்பிரிவில் சேர்க்கப்படுபவர்கள் ஒவ்வொருவரும் பிறப்பால் அன்றி அவரவர் விருப்பம், ஈடுபாடு ஆகியவற்றைப் பொருத்து, தமது பிரிவைத் தேர்ந்துகொள்கிறார்கள் என்பதைத்தான் வர்ண என்ற சொல்லின் வேரான “தேர்ந்து கொள்ளல்’ என்ற சொல் உறுதி செய்கிறது. ஒழுங்கு செய்தல் என்ற வேர்ச் சொல்லும் அவ்வாறான முடிவுக்கே செல்கிறது எனலாம். ஒருவரின் இயல்பு ஈடுபாடு ஆகியவற்றுக்கு இணங்க அவருக்குரிய பிரிவில் சேர்த்து சமுதாயத்தை ஒழுங்கு செய்தல் என்று இதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
முன்னரே குறிப்பிட்டதற்கு இணங்க, பிரதான குணங்களின் அடிப்படையில் சமூக அமைப்பில் உருவாகும் மனிதப் பிரிவுகளில் உயர்வு தாழ்வு ஏதும் இருப்பதாக புருஷ ஸூக்தமோ பிற்கால ஹிந்து தர்ம சாஸ்திரங்களோ குறிப்பிடவில்லை. முகத்திலுள்ள வாயிலிருந்து வெளிபட்டதாலேயே ஒரு குணாம்சம் மேன்மையானது என்றும் பாதங்களிலிருந்து வெளிப்பட்டதால் ஒரு குணாம்சம் இழிவானது என்றும் அதில் குறிப்பு ஏதும் இல்லை. ஒவ்வொரு குணாம்சத்தின் இயல்புதான் அங்கு விவரிக்கப்படுகிறது.
மேலும், மனித உடலில் ஒர் உறுப்பு மேலானது என்றும் இன்னொன்று இழிவானது என்றும் கருதுவது பொருளற்றது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆக, இந்த வர்ணப் பிரிவானது ஒரு கருதுகோள் என்ற நிலையில் அமைந்துள்ளதே யன்றி, அது நடைமுறையில் இருந்ததற்கான ஆதாரம் ஏதும் இல்லை. அவ்வாறே இருப்பினும் மிகவும் இலகுத் தன்மை வாய்ந்ததாகவே அது இருந்திருக்க வேண்டும். ஏனெனில், குண மாறுதல்க ளுக்கு ஏற்ப வர்ண மாற்றம் ஏற்பட முடிந்திருக்கிறது. க்ஷத்திரிய குல மன்னனாக இருந்து தவக் கோலம் பூண்டு துறவியாக மாறிய விசுவாமித்திரன் குண மாறுதலுக்கு ஏற்ப பிராமணப் பிரிவிற்கு மாறியதாக இதிகாசம் தெரிவிக்கிறது.
ஆட்டை அறுத்து இறைச்சியினை விற்பவனிடம் அரச குலத்தவன் ததுதுவ விசாரம் செய்து உபதேசம் பெற்ற கதையும் நம்மிடம் உண்டு.
நான்கு குண விசேஷங்களுக்கு அப்பால் ஐந்தாவதாகவொரு குண விசேஷம் அடையாளம் காணப்படுகிறது. இது பொதுவாக அமைந்த குண விசேஷங்களுக்குட்படாமல் அதற்கு வெளியே ஆனால் தொடர்பற்றுப் போய்விடாமல் உள்ளதாகப் பிற்கால தர்ம சாஸ்திரங்களில் காணப்படுகிறது. சமூக நிலையில் அதனைப் பொருத்திப்பார்க்கையில், “பஞ்சம’ என்பதாக அது அமைகின்றது. ஆனால் அதுவுங்கூட இழிவானது என்றோ, புறக்கணிக்கப்பட வேண்டியது என்றோ கருதப் படவில்லை. வனவாசிகள், வேடுவர்கள், நாடோடிகள் போன்ற மனிதக் கூட்டமே பஞ்சம என்கிற அடையாளத்தைப் பெற்றது. ஆனால அவையுங்கூட வர்ண மாற்றத்திற்குத் தகுதி வாய்ந்தனவாகவே இருந்துள்ளன. வேடுவராக இருந்த வால்மீகி ராம காதையை இயற்றி சமூக அங்கீகாரம் பெற முடிந்திருக்கிறது. அதே போல சூத்திரர் என்ற பிரிவின் கீழ் வரக் கூடிய மீனவரான வியாசர் மகா பாரதம் இயற்றி சமூகத்தில் அவரது இயல்பிற்குரிய பிரிவில் இணைய முடிந்துள்ளது. அவரது பிறப்பு அதற்குத் தடையாக இருக்கவில்லை. ராமபிரான் வனவாசம் கொள்ளச் செல்கையில் வேட்டுவ குலத்திலோ படகோட்டிகள் குலத்திலோ பிறந்த குகனை மார்புறத் தழுவித் தன் தம்பியருள் ஒருவனாகக் கொள்ளும்போது, அவனது வர்ணமும் மாறிப் போகிறது.
வர்ண என்ற சொற்பிரயோகம் உபநிடதங்களில்தான் முதலில் இடம் பெறுகிறது. சண்டோக்கிய உபநிடத்தில் தன்னிடம் பயில விரும்பி வரும் இளைஞனிடம் குரு கௌதமர் அவனது வர்ணம் எதுவென்று அறிய வேண்டி, அவன் தந்தை பெயர் என்னவென்று வினவுகிறார். தனது தாய் பலரிடம் சேவகம் செய்ததாகவும், அதனால் அவனுடைய தந்தை யார் எனக் கூற இயலாது என்று தன் தாய் கூறியிருப்பதாகவும் இளைஞன் தெரிவிக்கிறான். உன் பெயர் சத்திய காமன், என் பெயர் ஜாபாலி அவ்வளவுதான் கூற முடியும் என்று தன் தாய் தன்னிடம் கூறியதைத் தெரிவிக்கும் இளைஞனை, வெளிப்படையாக உண்மையினைக் கூறும் அவனது குண நலனுக்காகவே குரு ஏற்றுக் கொள்வதாக உபநிடதம் கூறுகிறது. குருவால் கல்விப் பயிற்சிக்குரிய மாணவனாக ஏற்றுக்கொள்ளப்படும் ஜாபாலன் மாடுகளை மேய்த்துப் பராமரிக்கும் பணியில்தான் அமர்த்தப்படுகிறான். அது சூத்திர அல்லது வைசிய வர்ணத்திற்குரியதுதான் என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும்.
பாகவதமும் சமுதாயத்தில் பொருத்திப் பார்க்கும் வர்ணம் பற்றிப் பேசுகிறது. “ஒருவனை அவனது குணவியல்புகளின் அடிப்படையில்தான் அவனுக்குரிய வர்ணத்தில் சேர்க்க வேண்டுமேயன்றி, அவனது பிறப்பைக் கருத்தில்கொண்டு அல்ல’ என்று ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது (7.21.35).
அடுத்து, பகவத் கீதையில் கண்ணபிரான் வர்ண பேதம் பற்றிப் பேசுகிறான். “எனது உறவினர்களான க்ஷத்திரியர்கள் அனைவரையும் கொன்று போடச் சொல்கிறாய். போர்க்களத்தில் அவர்களை நான் வீழ்த்திவிட்டால் க்ஷத்திரிய வம்சத்தில் ஆண்களின் எண்ணிக்கை குன்றும். அதனால் வர்ணக் கலப்பு ஏற்பட்டுவிடும்’ என்று அர்ஜுனன் சொல்கிறபொழுதுதான் கண்ணபிரான் தனது பிரசித்திபெற்ற வர்ணாசிரம தர்மத்தை விளக்குகிறான் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
“”நான்கு வகை குணங்களும் அவற்றையொட்டிய செயல்பாடுகளும் சேர்ந்த வர்ணாசிரம தர்மத்தை நிறுவியவன் நானே” என்று பிரகடனம் செய்யும் கண்ணபிரான் அடுத்து, “”ஆனால் அதன் நடவடிக்கைகளில் எனக்குப் பங்கில்லை” என்றும் அறிவிக்கிறான். வர்ணம் என்னும் குண பேதங்களின் அடிப்படையில் அவற்றைப் பொருத்தி மனிதன் தனக்கென உருவாக்கிகொண்ட சமுதாய அமைப்பிற்கு அவனே பொறுப்பு என இதனைப் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய புரிதலின் காரணமாகத்தான் டாக்டர் அம்பேத்கரும் காந்தியைப் பற்றித் தாம் ஒரு முறை ஆற்றிய உரையில், “வர்ணம் என்பது பிறப்பால் வருவது அல்ல என்று பகவத் கீதை மிகத் தெளிவாகவே தெரிவிக்கிறது, காந்தி அதனை உணராமல் வழக்கமாகப் பழமையாளர் கூறும் விளக்கத்தையே தாமும் கூறுகிறார்’ என்று தெரிவித்தார்.
பிறப்பின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட வர்ணத்தைச் சேர்ந்தவனாக ஒருவனை முடிவு செய்வதானால் அவனது குணவிசேஷங்களைப் பரிசீலித்து அவை அந்தக் குறிப்பிட்ட வர்ணத்திற்கு ஏற்ப உள்ளனவா என்று ஆராய்ந்து, அதன் பிறகே அவனை அந்த வர்ணத்திற்குரியவனாக முடிவு செய்ய வேண்டும் என்று மகாபாரதம் கூறுகிறது. இந்த விதியின் அடிப்படையில்தான் துரியோதனன் தன் நண்பன் கர்ணனின் பிறப்பு பற்றித் தெரியவராத நிலையில், சூத்திரன் எனக் கொள்ளத் தக்க தேர்ப்பாகனால் அவன் எடுத்து வளர்க்கப்பட்டதால், சூத்திரனாகவே கொள்ளப்பட்ட போதிலும், க்ஷத்திரிய குண வியல்புகளை அவன் வெளிப்படுத்தியமையைச் சான்றாகக் காட்டி, கர்ணனை ஓர் சமஸ்தானத்திற்கு அரசனாக நியமித்ததன் மூலம், க்ஷத்திரிய வர்ணத்திற்குரியவனாக்கு கிறான்.
வர்ணம் என்ற குணம் சார்ந்த பிரிவுகள் பின்னர் சமூக அமைப்பில் நான்கு பிரிவுகளாகப் பொருத்தப்பட்டதன் நோக்கம் என்னவாக இருக்கும் என ஆய்வது அவசியமாகிறது. சமூகத்தின் தொடர் இருத்தலுக்கு அவசியமாக கல்விகேள்விளை வழங்குவதற்கு ஒரு பிரிவும், சமுதாயத்தைக் கட்டிக் காப்பதற்கு ஒரு பிரிவும், அத்தியாவசியப் பொருள்களை உற்பத்தி செய்தலும், திரட்டி வழங்கலுமான பணிக்கு ஒரு பிரிவும், உடல் உழைப்பை வழங்குவதற்கு ஒரு பிரிவும் இருப்பது முக்கியம் என உணரப்பட்டு, இந்நால்வகை குணங்கள் எவரெவரிடம் தனித்தனியாகக் கூடுதலாகக் காணப்படுகிறதோ அவர்களை அந்தந்தப் பிரிவுகளில் சேர்த்துவிட்டால் சமுதாயத்தின் இயக்கம் சிறப்பாக இருக்கும் என்ற எண்ணம்தான் குண விசேஷங்களுக்குரிய வர்ணத்தை சமூகப் பிரிவுகளாக அமைத்துக் கொள்ளும் ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும்.
சிலருக்குக் கல்வி கேள்விகளிலும் வேறு சிலருக்கு உடற் பயிற்சி, போர்க் கலைகளிலும், இன்னும் சிலருக்குப் பொருள் உற்பத்தி, பொருள் தேடல் ஆகியவற்றிலும், சிலருக்கு உடல் உழைப்பிலும் ஈடுபாடு இருப்பது மனித இயல்பேயாகும். இந்த ஈடுபாட்டினை வர்ண குண பேதங்களுடன் பொருத்திப் பார்த்து, சமூகப் பிரிவுகளுடன் அவை இணைக்கப் பட்டிருக்க வேண்டும்.
வர்ணமானது, வர்ணாசிரமம் என்று அறியப்படுகிறது. ஆசிரமம் என்பது வாழ்வியலின் ஒரு கட்டம் அல்லது நிலை என்பதைக் குறிப்பதாகும். மனித வாழ்க்கையின் செயல்பாடுகள் பிரம்மசரியம், கிருஹஸ்தம் வானப் பிரஸ்தம், சந்யாசம் என நால்வகை ஆசிரமங்களாக அமைவது போலவே தனி மனிதப் பண்பை யொட்டி அன்றாடத் தனி மனித இயக்க நிலைகளில், பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர என்னும் நால்வகை குண விசேஷங்களுக்குரிய செயல்பாடுகள் அமைகின்றன. தனி மனிதனின் விரிவாக்கமே சமூகம் ஆதலால் அதன் சீரான இயக்கத்திற்கும் பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர குண விசேஷங்களின் அடிப்படையில் பிரிவுகளை அமைதுக் கொள்வது நலமெனக் கருதப் பட்டிருக்க வேண்டும். எவ்வகைக் குண விசேஷம் எவரிடம் கூடுதலாக உள்ளது எனக் கண்டு, அதற்கு ஏற்ப உரிய பிரிவுகளில் நியமனம் நடைபெற்றிருக்கவேண்டும். இதைத்தான் முன்பு சுட்டிக் காட்டிய ஸ்ரீமத் பாகவதத்தின் வரிகள் உணர்த்துகின்றன.
இவ்வாறு நால்வகை குண விசேஷங்களான வர்ணாசிரமத்தின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக அமைந்த சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினையும் சேர்ந்தவகள் அப்பிரிவில் நீடிக்கவும், அவர்களின் சந்ததியாரும் அதே பிரிவுகளில் நீடிக்கும் நிலை உருவாகியிருக்க வேண்டும். இதன் விளைவாகவே வர்ணமும் ஜாதியைப் போல் பிறப்பினால் வருவது என்ற எண்ணமும், வர்ணமும் ஜாதியும் ஒன்றே என்னும் மயக்கமும் ஏற்பட்டிருக்க வேண்டும்.
ஆராயும் வேளையில், வர்ணமும் ஜாதியும் ஒன்றல்ல என்பது தெளிவாகவே புலப்படும். வர்ணம் என்பது, தனி மனித மனப் போக்கு, நாட்டம், இயல்பு ஆகியவை குறித்துத் தீவிரமான சிந்தனையும் ஆய்வுக் கண்ணோட்டமும் மேற்கொள்ளப் பட்டதன் பயனாக நிர்ணயிக்கப்பட்ட குணப் பாகுபாடு ஆகும். ஒரே நபரிடம் சந்தர்ப்பச் சூழலுக்கு ஏற்ப அது வெவ்வேறாகவும் காணப்படும். அதாவது ஒருவரே ஒரு சந்தர்ப்பத்தில் பிராமணனாகவும், இன்னொரு சந்தர்ப்பத்தில் சூத்திரனாகவும் இருப்பது சாத்தியம்.
ஜாதி என்பதோ, இவ்வாறான நோக்கு எதுவும் இன்றித் தானாக உருவான பிரிவாகும். மனித இனம் சேர்ந்து வாழும் மந்தை வாழ்க்கையில் உள்ள இயற்கை ஈடுபாட்டின் காரணமாகச் சிறு சிறு குழுக்களாக வாழத் தொடங்கியதுதான் ஜாதிகளின் தொடக்கமாக இருக்க வேண்டும். மானிடவியலை ஆராயும்போது, இவ்வாறான மனிதக் குழுக்கள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்குத் தேவையான ஒவ்வொரு கைவினையில் இயல்பாகவே தேர்ச்சிபெற்று அதன் விளைவாகக் கைவினைத் தொழிலின் தன்மைக்கு ஏற்ப ஜாதியாக அடையாளம் பெற்றிருக்கவேண்டும் என முடிவெடுக்கலாம். இவ்வாறாக, வெவ்வேறு கைவினைத் தொழில்களில் சிறந்த ஜாதிகள் தமது தேவைகளை நிறைவு செய்துகொள்வதற்காகத் தமக்கிடையே பணட மாற்று செய்துகொள்ளத் தொடங்கி, பிறகு, வசதியை முன்னிட்டு ஒன்றாக இணைந்து வாழத் தொடங்கவும் அதுவே காலப் போக்கில் தொழிலை முன்னிலைப் படுத்தும் ஜாதிப் பிரிவுகள் உள்ள சமூகமாக உருவாகியிருக்க வேண்டும். இவ்வாறு தேவை அடிப்படையில் ஒருங்கிணைந்து உருவான சமுதாயங்களுக்கிடையே கருத்து வேறுப்பாடுகளோ, பகைமையோ, தனது தனித் தன்மையைக் காத்துக் கொள்ள வேண்டும் என்னும் வேட்கையோ எழுந்த நிலையில் அருவமான எல்லைக் கோடுகள் சமுதாயங்களைத் தனித் தனிப் பிரதேசங்களாகப் பிரித்துக் காட்டவும், வர்ண அடிப்படையில் நான்கு பிரிவுகளாக அமைந்த சமூகங்களும், ஜாதி அடிப்படையில் அமைந்த சமூகங்களும் இணைந்து ஒரு புதிய சமூக அமைப்பு தோன்றியிருக்கக் கூடும். இதன் காரணமாகவே வர்ணப் பிரிவினையும் ஜாதிப் பிரிவுகளையும் ஒன்றெனக் கொள்ளும் மனப் போக்கு உருவாகி ஜாதிப் பிரிவினைகளுக்கு வர்ணாசிரமத்தைக் குறை கூறும் போக்கும் உருவாகியுள்ளது.
ஜாதி என்னும் குழு அமைப்பே பிறப்பின் பிரகாரம் வருவது. வர்ணம் ஒருவரை ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு எளிதில் மாற இடம் அளிக்கும் அளவுக்கு இலகுத் தன்மைகொண்டது. ஆனால் ஜாதி தன்னில் பிறந்த ஒருவர் என்னவாகிலும் தன்னை விட்டு நீங்கிச் செல்ல அனுமதிக்காத அளவுக்குப் பிடிவாதத் தன்மை வாய்ந்தது.
சிறு சிறு மக்கள் திரள்கள் ஒரு சமுதாயமாக் இனைந்த போதிலும் தமது தனித் தன்மையை இழக்க விரும்பாமல் பிடிவாதமாக அதனை இறுகப் பற்றிக் கொண்டமையால்தான் ஒவ்வொரு ஜாதியிலுங்கூடப் பல உட்பிரிவுகள் நீடித்திருக்கக் காண்கிறோம்.
ஜாதியானது தனது தனித் தன்மையை விடாது பற்றிக் கொண்டு அதனைக் குறித்து சமயங்களில் அகம்பாவமும் சமயங்களில் அவமான உணர்வும் கொள்வது. இதன் காரணமாகப் பிற ஜாதிகளுடன் மோதி பலப் பரீட்சை செய்ய முற்படுவது. தனது எண்ணிக்கை பலத்தைப்பெருக்கிக் கொண்டு மேலாதிக்கம் செய்ய முற்படுவது. தனது திறனைக் காட்டி மற்ற ஜாதியாரைத் தனக்குக் கீழாக அமுக்கி வைதுக் கொள்ளவும் அது முற்படும். இத்தகைய இயல்பு கொண்ட ஜாதி அமைப்பானது, சமுதாயத்திற்கு நன்மையைக் காட்டிலும் தீங்கையே கூடுதலாக விளைவிக்கிறது. ஆனால் இத்தகைய ஜாதி அமைப்பினைத்தான் திராவிட இயக்கம் கட்டிக் காத்து வருவதுடன், ஜாதி அமைப்பிற்கு வர்ணாசிரமத்தைக் குறை கூறவும் முற்படுகிறது.
வர்ணாசிரமம் குண பேதங்களை நிறுவி அவற்றுக் கேற்பச் செயல்பாடுகள் அமைவதை நிர்ணயிப்பதேயன்றி, அவற்றுக்கிடையே ஏற்றத் தாழ்வுகளைக் கற்பிப்பதல்ல. ஆனால் ஜாதியமைப்பு இறுமாப்பு, இகழ்ச்சி போன்ற உனர்வுகளுக்கு ஆட்பட்டு சமுதாயத்தில் பிளவுகள் ஏற்படக் காரணமாகிறது. எனினும், சமூக நீதி, இட ஒதுக்கீடு என்ற பெயர்களில் ஜாதிப் பிரிவுகளை நிரந்தரப்படுத்தும் நிலைப்பாட்டில் திராவிட இயக்கம் தன்னை நிறுத்தி வைத்துக் கொண்டுள்ளது. இது எவ்வகையில் சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்பதை திராவிட இயக்கம் சார்ந்தவர்களும் அதன் ஆதரவாளர்களும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
ஜாதியமைப்பு வலுப்பெற்று நீடித்திருக்குமாறு தனது நிலைப்பாட்டை அமைத்துக் கொண்டுள்ள திராவிட இயக்கம், வர்ணாசிரமப் பிரிவுகளுக்கு அளிக்கும் ஒரு விளக்கம் ஆய்வுக்கு ஒவ்வாத வகையில் இருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டிள்ளது.
ஹிந்து தர்ம சாஸ்திரங்கள் வர்ண பேதங்களை நிர்ணயித்தபோது நான்கு பிரிவுகளுமே தன்னைச் சார்ந்தவை என்ற கண்ணோட்டத்துடன்தான் அணுகியுள்ளன. குணபேதத்தின் அடிப்படையில் ஒரு சமூக அமைப்பை ஹிந்து சமூகம் நிறுவிக் கொண்டபொழுது, சூத்திரர் உள்ளிட்ட நான்கு பிரிவுகளையும் தன்னைச் சார்ந்தவையாகத்தான் கொண்டுள்ளது. ஆனால் திராவிட இயக்கமானது, வர்ண பேதத்தில் பிராமணரை மட்டும் அவர்கள் வேறு இனம் சார்ந்தவர்கள் என்பதுபோல அந்நியப் படுத்திவிட்டு, எஞ்சிய க்ஷத்திரிய, வைசிய, சூத்திரப் பிரிவுகளை ஒட்டுமொத்தமாக சூத்திரர் என்ற ஒரே பிரிவாகவும் ஒரு தனி இனமாகவும் வேறுபடுத்திக் காட்டுகிறது.
திராவிட இயக்கத்தின் கற்பிதமான ஆரிய திராவிட இன வாதக் கோட்பாட்டின்படியே ஆராய்ந்தால்கூட, ஆரியக் கோட்பாடு என வர்ணிக்கப்படும் வர்ணக்கொள்கையில் காணப்படும் பிராமண, க்ஷத்திரிய, வைசிய, சூத்திர வர்ணங்கள் அனைத்துமே ஆரிய இனத்திற்குட்பட்டவையாக அங்கீகாரம் உள்ளவைதான் என்பது விளங்கும். நான்கு வர்ணங்களுக்கு வெளியே பஞ்சமர் என்பதாகக் கூறப்படும் ஐந்தாவது பேதத்தைக்கூட அது தன்னில் உள்ளடக்கியதாகக் கொண்டுள்ளதையும் ராம காதையினை இயற்றிய வால்மீகியின் வரலாற்றை நினைவுகொள்கையில் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
‘ஆரிய’ என்பது சீரிய பண்பு நலன்களைச் சுட்டுவதாகவும், “திராவிட’ என்ற சொல் புவியியல் ரீதியான வட்டாரத்தையும் அதில் வழங்கும் மொழியினையும் குறிப்பிடுவனவாக இருப்பினும், ஹிந்து சமுதாயத்தில் பிளவினை உண்டு பண்ண வேண்டும் என்பதற்காகவே அவற்றை இருவேறு இணங்களாகக் காட்டுவதில் ஏறத் தாழ முன்னூறு ஆண்டுகளுக்கு முன் ஹிந்துஸ்தானத்திற்கு வந்த கிறிஸ்தவ மத மாற்றப் பிரசாரகர்களுக்கு மிகுந்த ஆர்வம் இருந்ததில் வியப்பில்லை. மேலும் ஆரியர்களை வெளியிலிருந்து வந்தவர்கள் என்று சித்திரிப்பதிலும், ஒரு வசதி இருந்தது. ஹிந்துஸ்தானம் என்று அறியப்படுகிற நிலப்பரப்பு எவரும் சொந்தம் கொண்டாட முடியாத புறம்போக்கு என்றும், மற்றவர்களைப் போலவே தாமும் அதனுள் புகுந்து கைக்கு எட்டியதை ஆக்கிரமித்துக் கொள்வதில் தவறில்லை என்றும் சாதிக்க முடிந்தது. ஆரியர் வருவதற்குமுன் பழங்குடியினரான திராவிடர்கள் வசித்து வந்தனர் என்றும் அவர்களை ஆரியர் வெற்றிகொண்டு தென்திசை நோக்கி விரட்டியடித்தனர் என்றும் கதை சொன்னதில் திராவிடர்கள் ஹிந்துக்கள் அல்ல என்றும் எனவே அவர்களுக்குக் கிறிஸ்துவின் நற்செய்தியைச் சொல்லி அரவணைத்துக் கொள்வதில் தவறில்லை என்றும் வாதிக்க முடிந்தது. எவ்வித முகாந்திரமும் இன்றி, பிராமணர்களை மட்டும் அவர்கள் சமயச் சடங்குகளை முன்னின்று நடத்துபவர்களாக இருக்கின்ற ஒரே காரணத்திற்காக அவர்களை மட்டும் ஆரியர்கள் என்று அடையாளப்படுத்தி மற்ற பிரிவினர் அனைவரையும் ஒட்டு மொத்தமாக சூத்திரர் என்று ஒரே பிரிவாக அமைத்ததில் ஹிந்து சமூகத்தை இரண்டாகப் பிளந்து சூத்திரர் என்ற பிரிவினரிடையே மத மாற்றப் பணியை மேற்கொள்வது எளிதாக இருந்தது.
ஹிந்துஸ்தானத்தின் மொழிப் பிரிவுகளை ஆரியம், திராவிடம் என வகைப்படுத்தியது ஐரோப்பிய மொழியியலாளர்கள்தாம். ஆனால் அதனைக் கிறிஸ்தவ மதப் பிரசாரகர்கள் தங்கள் வசதிக்காக இனப் பிரிவுகளாக நிறுவ முற்பட்டனர். இனப் பிரிவுகளை வகைப்படுத்துவது மானிடவியலாளரேயன்றி, மொழியியலாளர் அல்ல என்பது கருத்தில் கொள்ளப்படாமல், இடைவிடாத பிரசாரத்தின் காரணமாக அதுவே ஓர் உண்மையென உறுதிப் பட்டது.
கிறிஸ்தவ மதப் பிரசாரகர்கள் ஒரு பெரும் மக்கள் கூட்டத்தை எளிதில் மத மாற்றம் செய்துவிடுவதற்கான வசதிக்காக நிறுவிய ஆரியதிராவிடப் பிரிவுக் கோட்பாட்டைத் தனது சமூக சீர்திருத்தப் பிரசாரத்திற்கென திராவிட இயக்கம் இரவல் வாங்கிக் கொண்டதை ஒரு நகை முரண் என்றே கொள்ளவேண்டும். எவ்வித ஆதாரமும் இன்றித் தமிழ் நாட்டு பிராமணர்களை அவர்கள் தமிழையே தாய்மொழியாகக் கொண்டிருந்த போதிலும் அந்நியர் எனவும் வந்தேறிகள் எனவும் வர்ணித்து, சமுதாயத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிரான துவேஷப் பிரசாரத்தை முடுக்கிவிட்டு, அவர்கள் மீது மற்ற பிரிவினருக்கு வெறுப்பூட்டுவதே திராவிட இயக்கத்தின் சமூக சீர்திருத்தப் பணியாக அமைந்தது.
சுயமான கருதுகோள் இன்றி உள் நோக்கத்துடன் வெளியார் கற்பித்த ஒரு ஆதாரமற்ற கோட்பாட்டைத் தனதென வரித்துக் கொண்டு திராவிட இயக்கம் செயல்பட்டதால் அது மண்ணில் வேரூன்ற மாட்டாமல் ஒரு நூற்றாண்டு கூட உயிர் தரித்திருக்க இயலாமல் பட்டுப் போயிற்று. ஆனால் அது சமூகத்தின் ஒரு சாரார் மீது இடைவிடாமல் தூண்டிவிட்டுக் கொண்டிருந்த துவேஷப் பிரசாரம் மட்டும் எல்லாத் துறைகளிலும் ஊடுருவி ஒரு பார்த்தீனியமாக எங்கும் பரவி விட்டிருப்பதுதான் இன்றைய நிதர்சனமாகும்.
credits by www.thanni.com
No comments:
Post a Comment