- சிலேடை (கண்ணன், மயில்) பாடல்:
பெரும்பாம்பைக் கொன்றக்கால் நீட்டி யகவி
வரும்மாரி கண்டுயர்த்திப் பீலி - கருநீல
வண்ணமுடல்; வள்ளல் தரக்கொடை பெற்றதனால்
கண்ணனும் கான்மயிலும் நேர்
பொருள் (கண்ணனாக):
பெரும்பாம்பாகிய காளிங்கனைக் கொன்றது, கால் நீட்டி மூவுலகை அளந்தது (அகவி), மழையினின்று காக்க கோவர்தன மலை (பீலி) ஏந்தி நின்றது, கரு நீல வண்ண உடல் கொண்டவன், கர்ணன் கொடையாய்த் தரப் பெற்றது.
பொருள் (மயிலாக):
பெரும் பாம்பை கொன்று கால் நீட்டி அகவுவது, மழை வருவதை முன்னுணர்ந்து தோகை (பீலி) விரித்து ஆடுவது, கரு நீல நிறங்கொண்டது, பேகன் தந்த போர்வையை கொடையாய் கொண்டது.
- கண்ணன் / பழையது
பாடல்:
காலமாய் நீரில்மி தந்துருத்தி ரிந்துமே
பாலின் தயிர்வழிய ஓரிலையில் - காலிடுக்கித்
தானமர்ந்தே அங்கலிச்சு வையானந் தம்பர
மானந்த னப்பழைய தொப்பு
(அங்கலி-விரல்; அலி- சோறு)
"கண்ணனாக" சொற்பிரித்து:-
காலமாய் நீரில் மிதந்து உரு திரிந்துமே
பாலின் தயிர்வழிய ஓரிலையில் - காலிடுக்கித்
தான் அமர்ந்தே அங்கலிச் சுவை ஆனந்தம் பர (அங்கலி-விரல்)
மானந்தன்
பொருள்:
பலகாலமாய் நீரில் (பாற்கடலில்) வாழ்பவனும், பல உருவங்களில் அவதாரம் எடுத்தவனும் ஆகிய பரமானந்தன், தன் வாயில் தயிர் வழிய, ஆலிலையில் தன் காலை மடக்கித்தன் விரலை சுவைத்து ஆனந்தம் அடைகிறான்.
"பழையதாக" சொற்பிரித்து:-
காலமாய் நீரில் மிதந்து உரு திரிந்துமே
பாலின் தயிர் வழிய ஓரிலையில் - காலிடுக்கித்
தான் அமர்ந்தே அங்கு அலிச் சுவை ஆனந்தம் (அலி- சோறு)
அப்பழையது
பொருள்:
சமைத்து வெகு காலமாகி, நீரில் இடப்பட்ட சோறு, தன் இயல்பான உருவிலிருந்து திரிந்து, தயிருடன் சேர்த்து இலையில் இடப்பட, காலை மடக்கி அமர்ந்து அந்த சோற்றை சுவைக்க ஆனந்தத்தை தரும் பழைய சோறு.
- சிவன் / பழையது
நீர்கசிய நாளாய்ப் பொருட்குன் றிலுறையு
மோர்மத்தாற் சேரக்க டைந்தமுதன் - ஆர்வுடன்
பேர்சொல ஊறும் சுவைச்சேர்க்கு மாமிளகாய்
தூர்ச்சடியோ னேபழைய துகாண் (பொருட்குன்று - மேரு; தூர்ச்சடி - சிவன், பாரமான சடை தரித்தவன்)
- நீர் / அனல்
உணவேகும் பூதமன்றோ ஊர்ந்தோடி வான்சேர்
குணங்கொண்டேப் பூச்சிரிப்பா யோர்த்துளியில் - சினந்தப்பிஞ்
சேதமது சேர்க்குங்காண் சேருங்கா லோர்ச்சடங்காய்
நாதனுறை நீரனல் நேர் பொருள் (நீராகவும் நெருப்பாகவும் கொள்க):
உணவைக் கொடுக்கும்
ஐம்பூதங்களில் ஒன்று
ஆவியாக ஊர்ந்தோடி வான்சேரும் குணங்கொண்டது
துளியாயுள்ள போது சிரிக்கும்
சினந்தப்பின் சேதம் பலச் சேர்க்கும்
ஈமச் சடங்கில் பங்குபெரும்
சிவபிரானிடம் உறையும்
- காலணி / நாய்
அடுத்துவரு மில்வாயி லோரமிருந் தோசைக்
கொடுத்தே வருவோரைக் காட்டும் - கடித்துப்பின்
நாளாகக் கால்படியும் நம்வசைச்சொல் லாகுமிதைக்
காலணி நாயெனக் காண் பொருள்:
1) காலணியாக:
காலுடன் அடுத்துவரும்; இல்ல வாசலின் ஓரம் இருக்கும்;
ஓசைக் கொடுத்தே வருவோரை நமக்கு தெரிவிக்கும்;
புதிதாக இருக்கையில் கடித்துப்பின் கால் படியும்;
'அடிச் செருப்பே' என்று நாம் பயன்படுத்தும் வசைச் சொல்லாகும்.
2) நாயாக:
காலுடன் அடுத்துவரும்; இல்ல வாசலின் ஓரம் இருக்கும்;
ஓசைக் கொடுத்தே வருவோரை நமக்கு தெரிவிக்கும்;
புதிதாக இருக்கையில் கடித்துப்பின் நம் காலில் படியும்;
'நாயே' என்று நாம் பயன்படுத்தும் வசைச் சொல்லாகும்.
- புத்தகம் / நா
மடிக்கினொலி சேர்ந்துறையும் மாசுவை சேர்த்துக்
கொடுத்தோரம் தாள்சேர்ந்து காணும் - படர்ந்தேதான்
அட்சரஞ் சேரும் வெளியிட நீர்வாங்கும்
புத்தகம் நாவுக்கு நேர் பொருள்:
1) புத்தகமாய்..
மடிக்கையில் ஒலி சேர்க்கும்,
சரஸ்வதி மா உறையும்,
சுவை சேர்த்துக்கொடுக்கும்,
தாள்கள் ஓரத்தில் சேர்ந்துக் காணும்,
சொற்கள் (அட்சரங்கள்) சேர்ந்து படர்ந்து காணப்படும்,
வெளியிடுகையில் நீ வாங்கும் புத்தகம்
2) நாவாய்...
மடிக்கையில் ஒலி சேர்க்கும்,
சரஸ்வதி மா உறையும்,
சுவை சேர்த்துக்கொடுக்கும்,
கழுத்துடன் (தாள்) ஓரத்தில் சேர்ந்துக் காணப்படும்,
படர்ந்து வாய்ப்புண் (அட்சரம்) சேர்ந்து காணப்படும்,
நாவை வாயிற்கு வெளியிடுகையில் நீர் சொட்டும்
- சிவனும் மானும்
கலைநடனஞ் செய்யுடலம் பெய்தோன்வி ராடன்
மலையோரி டஞ்சேர்க்கண் மிக்கு - அலைதழலாய்
செம்மேனிசெ ருக்கும்போம் கொம்பினிடைக் கூத்தாடும்
எம்மானும் செம்மானும் நேர் பொருள்:
கலை நடனஞ் செய்யுடல்: அழகு நடமிடும் உடலமைப்பு
அம்பு எய்தோன் விராடன் : விராடன் மானைத்துரத்தி அம்பெய்ய பின் மானே சிவானாய் காட்சியளித்த திருவிளையாடல்
மலையோரிடஞ்சேர்: மலையோனின் இடம் சேர்ந்த / மலையில் ஓரிடம் சேர்ந்து மலையோன் என வழங்கும் சிவன்
கண் மிக்கு அலைதழலாய் செம்மேனி : கண் பல கொண்ட தழல் ஒத்த நிறங்கொண்ட சிவந்த மேனியுடைய மான் / அலைதழலாய் அமைந்த மூன்றாம் கண்ணையும், சிவந்த மேனியையும் கொண்ட சிவன்
செருக்கும்போம் கொம்பினிடைக் கூத்தாடும் : மான்கள் கோபப்படும் போது, தங்கள் கொம்போடு கொம்பு இணைத்து சண்டையிடும் / சிவதாண்டவத்தின் இறுதியாக, நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் நடமாடிய சிவன்.
- அரனும் மயிலும்
சிரமிசைநீர் பெய்யச் சடையுடன் ஆடுங்
கருவணல்கண் மிக்குச்சேர்ப் பீலி - அரவ
மருட்டுமோங் காரம் மருவிக் குறியாய்
இருக்கும் மயில்ஈசன் நேர்.
சிரமிசைநீர் பெய்யச் சடையுடன் ஆடுங் - (கங்கையுடன் கூடிய சடையுடன் நடமாடும் சிவன் / மழை வரின் தன் தலைச்சடையுடன் நடமாடும் மயில்) கருவணல் - கருமையான கழுத்தினை உடைய (அரனுக்கும் மயிலுக்கும் பொருந்தும்)
கண் மிக்குச்சேர்ப் பீலி - (ஒரு கண் மிகையாக கொண்டு மலையைச் சேர்ந்தவன் / கண் பல கொண்ட மயிலறகைக் கொண்ட மயில்)
அணல் - கழுத்து; பீலி - இறகு/மலை
அரவ மருட்டும் - (அடங்கும் பாம்பினை அணிந்த சிவன் / பாம்பினை பயமுறுத்தும் மயில்)
ஓங்காரம் மருவிக் குறியாய் - ஓகாரம் பிரணவ சொரூபத்திற்கும், மயிலுக்கும் பயன்படுத்தப்படும் குறியீடு
- அரனும் கரியும்
ஆலுண்ட கண்டமணி கைந்நாகம் நீறேற்றி
கோலஞ்செய் ஏற்றுவாக னன்பேரடி - மாலன்ன
உம்பல்தான் கண்டிறைய, தண்டமிட்டு மாத்தழல்
சோம்பப் புரியரன் கரி
ஆலுண்ட கண்டமணி கைந்நாகம் - (விடத்தை உண்ட கண்டன் அணிந்து அழகூட்டும் நாகம் / ஆலிலயை உண்ணும் யானையின் கண்டத்தில் தும்பிக்கை அமைய)
நீறேற்றி கோலஞ்செய் - (கங்கை நீரை தலையில் ஏற்றி அழகுடன் விளங்கும் / தும்பிக்கையில் திருனீறு அணிந்து அழகுடன் விளங்கும் யானை)
ஏற்றுவாக னன்பேரடி - (ஏறை வாகனமாக கொண்ட சிவனின் திருவடிகள் / யானையின் பெரிய அடிகளை)
மாலன்ன உம்பல்தான் கண்டிறைய - (திருமால் ம்ற்றும் பல மேலோகமே கண்டு வழிபட / (யானையின்) மலை போன்ற வலிமையை கண்டு இங்குமங்குமாய் சிதற)
தண்டமிட்டு - (சிவனை வணக்கி / யானையை தண்டத்தில் இட்டு)
மாத்தழல் சோம்பப் புரி - (புரி அணிந்த சிவன் தழல் விழிகள் குளிரச் செய்தனர் / யானையின் கோபம் தணியக் கயிரால் கட்டினர்) - அரனும் மனையும்
உடுக்கை யரைக்கசைத் துட்கத மேறிக்
கடுவளி கஞ்சேர் விழிக்காய்ந் - தடுத்தாடி
அம்பலஞ் சேர்ந்தென் செருக்கருக் கத்தழலும்
எம்மனையும் அச்சிவனும் நேர்.
சொற்களின் பொருள்:
உடுக்கை = ஆடை/உடுக்கை வாத்தியம்
கதம் - கோபம்/பாம்பு
வளிகம் - நெற்றி/வண்டு
அருக்குதல் - காய்ச்சுதல்; விலக்குதல்; அழித்தல்;
மனை - மனைவி
சிவனாக பொருள் கொண்டு:
உடுக்கையை இடையில் கொண்டவனின் மேல் பாம்பு ஏற,
கருப்பான நெற்றியில் உள்ள விழி கோபத்துடன்,
திருசிற்றம்பலத்தில் ஆடியபடியே காலில் செருக்கை அழித்தவன் செந்தழலாக உள்ள சிவன்
மனைவியாக பொருள் கொண்டு:
உடுக்கை போன்ற இடையை அசைத்து,
உள்ளிருக்கும் கோபம் வெளித்தெரிய,
கருமையான வண்டு போன்ற விழியால் (எனைக்) காய்ந்து, ஆட்டமிட்டு,
எல்லோருக்கும் எதிராக என் கௌரவத்தை குலைத்து
எப்போதும் கோபத்துடன் உள்ளாள். - சொல்லும் அம்பும்
எய்யத் திரும்பாதி லக்கடையும் தப்பாது;
மெய்யின் உடன்பற்றும்; உள்ளிறங்கும் - தீய்த்துப்பின்
அல்லற்சேர் புண்ணாற நாட்பல வாகுமிதைச்
சொல்லாயம் பாய்பொருட் காண்
சொல்லாக பொருள் கொண்டு:
சொல்லிடின் திருப்ப இயலாது,
யாருக்காக சொன்னோமோ அவரை சென்றடையும்,
சொன்ன சொல் மெய் என்றால் கேட்டவர் மனதை உடனே பற்றிக் கொள்ளும்,
கேட்டவர் மனதின் உள்ளிறங்கும்
(சொன்னவை கெட்டதாக இருந்தால்) கேட்டவர் உள்ளத்தை தீக்கும்,
அதுவே அவர்களை அல்லல் படுத்தி அதனால் வந்த புண் ஆற நாளாகும்
அம்பாக பொருள் கொண்டு:
எய்த பின்பு திருப்ப இயலாது,
யாரை நோக்கி எய்தோமோ அவரை சென்றடையும்,
எய்த அம்பு அவரின் மெய்யில் (உடலில்) பற்றும்,
உடலின் உள்ளிறங்கும்
பின் அதுவே அவர் உடலைத் தீய்க்கும்,
மேலும் அவர்களை அல்லல் படுத்தி அதனால் வந்த புண் ஆற நாளாகும் - பிறப்பும் இறப்பும்
உள்ளிருந்து வெளியேறும்; உறவை அறுத்தெறியும்;
பள்ளத்தின் மண்ணேற்கும்; பாலுக்குடன் ஏங்கும்; பின்
வரும்நாளில் வளர்புழுவாய் நெளியும்; வல்லியற்கை
தரும்பிறப் போடிறப்பாய் காண் - ஆறும் தேளும்
மலைமண்ணில் ஊறும்; மனப்பயமிகு கொடுக்கும்
தலைவரை வளைந்து கொட்ட, நுரை ஓடும்; தலையேற
மூச்சடைக்கும்; மெல்லக் குறைந்து இறங்கிப்பின்
பேச்சுவரும்; பெருந்தேளாய் ஆறாய்க்காண்
Welcome to my blog spot. I am 76 years young and energetic person who is also a voracious reader. Here is the place holder blog site where I want to register all the information that I relished and wished to pass it on others.
Pages
▼
Sunday, November 15, 2009
siledai
சிலேடைகள்
No comments:
Post a Comment