Bhoo thatha's Blogspot

Search my older Blog

Tuesday, February 2, 2010

STRANGE AMERICA

தாறுமாறாகப் பொருள்களை வீணாக்கும் அமெரிக்கர்கள்


பொருள்களை அமெரிக்கர்கள் வீணாக்குவது பற்றி பல முறை வயிறெரிந்து, அது பற்றி இரண்டு முறை ஏற்கனவே நான் எழுதியும்விட்டேன். ஆனால் இம்மாதம் ஆறாம் தேதி நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி இதுவரை நான் அறிந்த எல்லா வகையான வீணாக்குதல்களையும் தூக்கிச் சாப்பிடுவது போல் இருந்தது.



ஃபாஷன் உடைகளும் ஃபாஷன் சாமான்களும் தயாரிக்கும் கம்பெனிகளின் தயாரிப்புகளை விற்கும் நியுயார்க்கில் உள்ள மேல்மட்டக் கடை ஒன்றின் பின்புற வாசலில் பல வகையான கம்பளி உடைகளும், ஆண்களின் சட்டைகளும், குளிருக்குப் பாதுகாப்பாக கைகளில் அணியும் கையுறைகளும் காலணிகளும் வேண்டுமென்றே சேதப்படுத்தப்பட்டு பெரிய குப்பைகளுக்கான பைகளில் அடைக்கப்பட்டுக் கிடந்தனவாம். இந்தப் பொருள்கள் எதையும் யாரும் உபயோகிக்கவில்லை. இவை எல்லாம் அந்தக் கடையில் இருந்த விற்பனையாகாத பொருள்கள். குப்பைத்தொட்டிக்கு அருகில் ஒரு ஏழைப் பெண்ணும் ஆணும் அந்தப் பைகளைத் திறந்து பைகளில் சேதப்படாமல் தப்பித்த ஆடைகள் ஏதாவது இருக்கின்றனவா என்று அந்தப் பைகளை தேடிப்பார்த்து, அப்படி ஏதாவது இருந்தால் அவற்றை இன்னொரு பையில் சேமித்தார்களாம்.



இன்னும் சில கடைகள் தள்ளி தெருவில் நடந்துகொண்டிருந்த ஒரு பெண் இன்னொரு கடைக்கு அருகில் அதே மாதிரி இதுவரை உபயோகிக்கப்படாத சட்டைகள், பேன்ட்டுகள், குளிருக்கு இதமாக உபயோகிக்கும் ஆடைகள் அடங்கிய பெரிய பைகளைக் கண்டார். பெரும் அதிர்ச்சி அடைந்த அவர் கிழிக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் உள்ள பொருள்களில் சிலவற்றையாவது யாராவது சீர்செய்து உபயோகிக்கலாம் என்ற எண்ணத்தில் தன்னால் தூக்க முடிந்த அளவு சில பைகளை வீட்டிற்கு இழுத்துச் சென்றார். கையுறைகளில் விரல்கள் வெட்டப்பட்டிருந்தனவாம்; ஆண்களின் சட்டைகளின் கைகள் துண்டிக்கப்பட்டிருந்தனவாம்; காலணிகளில் துளைகள் போடப்பட்டிருந்தனவாம்; அழகான டி ஷர்ட் என்னும் சட்டைகள் தாறுமாறாகக் கிழிக்கப்பட்டிருந்தனவாம். “நியுயார்க்கின் ஜனத்தொகையில் மூன்று பங்கு வறுமையில் வாடுகிறது; இப்போது குளிர்காலமாதலால் குளிர் நடுக்குகிறது. இப்படிப் பொருள்களை வீணாக்குகிறார்களே” என்று வருத்தப்பட்டு ஒரு நிருபர் பத்திரிக்கையில் எழுதியிருந்தார். அவரைப் போலவே நிறையப் பேர் இந்தச் செய்தியை அறிந்து அவருக்கு நிறைய மின்னஞ்சல்கள் அனுப்பியிருந்தார்களாம். அப்படி மின்னஞ்சலகள் அனுப்பிய சிலர் தாங்கள் விற்பனையாளர்களாக வேலைபார்க்கும் சில கடைகளும் விற்பனையாகாத பொருள்களை இப்படிச் சேதப்படுத்தி குப்பையில் எறிவதுண்டு என்று குறிப்பிட்டிருந்தார்களாம்.



இந்தச் செய்தி வெளியாவதற்கு முன் தினம் நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அந்தக் கடைகளின் மேனேஜர்களை பத்துத் தடவை தொலைபேசியிலும் மின்அஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ள முயன்றதாம். ஆனால் அவர்கள் எந்தவித பதிலும் கூறவில்லையாம். பலர் இதைக் கண்டு குமுறவும் அந்த இரண்டு சங்கிலித் தொடர் கடைகளின் மேல்மட்ட அதிகாரிகள், குறிப்பிட்ட அந்தக் கடைகள் ஏன் அப்படி நடந்துகொண்டன என்று தங்களுக்குத் தெரியாது என்றும் எப்போதும் தங்கள் கடைகள் விற்பனையாகாத பொருள்களை தர்ம ஸ்தாபனங்களுக்கு இலவசமாகக் கொடுத்துவிடுவதாகவும் கூறினார்களாம். இனி இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்வதாகவும் உறுதி அளித்தார்களாம்.



சாமான்களைச் சேதப்படுத்தித் தூக்கியெறிந்த அந்தக் கடைகளுக்கு மிக அருகில் உபயோகித்துப் பழையதான உடைகளைச் சேகரித்து ஏழைகளுக்கு இலவசமாக வழங்கும் ஒரு ஸ்தாபனம் இயங்கி வருகிறது என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.



இப்படி பொருள்கள் வீணடிக்கப்பட்டது சம்பந்தமாக மறுநாள் காலையில் வந்த இன்னொரு செய்தி இதை விட அதிர்ச்சியூட்டுவதாக இருக்கிறது. இப்படி விற்கப்படாத பொருள்களை தர்மஸ்தாபனங்களுக்குக் கொடுத்தால் அவற்றை அங்கிருந்து இலவசமாகப் பெறுபவர்களோ அல்லது அவற்றை அங்கிருந்து திருடிவிடுபவர்களோ கடைக்கு எடுத்துச் சென்று அவற்றைத் திருப்பிக் கொடுத்து, அந்தப் பொருள்களுக்குப் பணத்தைப் பெற்றுக்கொள்வார்களாம். ஒரு பொருளை வாங்கிவிட்டுப் பின் அது பிடிக்கவில்லையென்றால் கடையிலேயே திருப்பிக் கொடுத்துவிடுவது அமெரிக்காவில் சகஜம். (அமெரிக்காவில் சங்கிலித் தொடர் கடை ஒன்றில் வாங்கிய ஒரு சாமானை அதே ஊரில் வேறு இடத்தில் உள்ள அதே சங்கிலித்தொடர் கடையிலோ அல்லது மற்றொரு ஓரில் உள்ள அதே சங்கிலித் தொடர்கடையிலோ திருப்பிக் கொடுத்துப் பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம். இப்படிக் கொடுப்பதற்கு சில மாத தவணை உண்டு. தவணை முடிந்த பிறகும் சில கடைகள் தங்கள் கடைக்கு வாடிக்கையாளர்களை மறுபடி வரவழைக்க வேண்டும் என்பதற்காக வாங்கிக்கொள்வார்கள்.) இது உண்மையான காரணமா என்று ஆராய முற்படுமுன் பத்திரிக்கை நிருபர் குறிப்பிடும் இன்னொரு காரணம் மனதை வெகுவாக நோகடிக்கிறது. இந்தப் பொருள்கள் எல்லாம் ஃபாஷனை விரும்பும் பணக்காரர்களுக்காக தயாரிக்கப்படுவனவாம். இப்படிப் பணக்காரர்களுக்காகத் தயாரிக்கப்படும் உடைகளை, பொருள்களை ஏழைகள் உபயோகிக்கக் கூடாதாம். தங்கள் பிராண்டுகளை உபயோகிப்பவர்கள் பணக்காரர்களாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர இலவசமாகப் பெற்று உபயோகிக்கும் ஏழைகளாக இருக்கக் கூடாதாம். எப்படிப்பட்ட சின்னப் புத்தி!



நியுயார்க் மாநகராட்சியே இப்படி பொருள்களை வீணாக்கும் காரியத்தைச் செய்து வருகிறது. சில கம்பெனிகள் பெரிய பிராண்டுகளின் பெயரைக் கொண்டு போலித்தயாரிப்புகளைத் தயாரிக்கின்றன. இந்தக் கம்பெனிகளின் மீது பிராண்டுகளின் சொந்தக்காரர்கள் வழக்குப் போட்டு அந்தப் பொருள்கள் போலித் தயாரிப்புகள் என்று நிரூபணமானால் அந்தப் பொருள்களை நீதிமன்றம் பறிமுதல் செய்கிறது. இப்படிப் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை நியுயார்க் நகராட்சியே ஒரு டன்னுக்கு 150 டாலர் செலவழித்து எரியகங்களில் எரித்தோ பெரிய இயந்திரங்களைக் கொண்டு துண்டு துண்டாகக் கிழித்தோ சேதமாக்குகிறது. ஓரிரண்டு வருடங்கள் வரை இப்படிப் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை பிராண்டுகளின் சொந்தக்காரர்களின் சம்மதத்தோடு ஏழைகளுக்கு இலவசமாக வழங்கும் கம்பெனிகளுக்குக் கொடுத்துவந்தனவாம். அப்படிக் கொடுத்துவந்தபோதும் உடைகள், காலணிகள் ஆகிய பொருள்களை மட்டுமே ஏழைகளுக்கு இலவசமாகக் கொடுக்கும் கம்பெனிகளுக்குக் கொடுக்க ஒப்புக்கொண்டனவாம். போலித்தயாரிப்புகளான ரோலக்ஸ் கைக்கடிகாரங்கள். பெண்களின் டம்பப் பைகள் ஆகியவற்றை சேதப்படுத்திவிட்டனவாம். இந்தப் பொருள்கள் சேதமாவதைக் கண்காணிப்பவர்கள் இலவசமாக அவற்றைப் பெற்றுக்கொள்ளும் கம்பெனிகள் இவற்றை வாங்க மறுத்துவிட்டதாகக் கூறியிருக்கிறார். அவற்றைப் பெற்றுக்கொண்டு இலவசமாக விநியோகிக்கும் கம்பெனியின் அதிகாரி ஒருவர் “நாங்கள் ஒரு போதும் அவற்றை வாங்க மறுத்ததில்லை. இப்படி வீணாக்காமல் ஏழைகளுக்குக் கொடுத்தால் நியுயார்க் நகராட்சிக்குப் பணமும் மிச்சமாகும். அந்தப் பொருள்களைத் தேவையானவர்களும் உபயோகிக்கலாம். சுற்றுப்புறச் சூழல் கெடுவதையும் தவிர்க்கலாம்” என்று கூறியிருக்கிறார்.



அமெரிக்காவில் அதிகமாகச் சோளம் விளைந்துவிட்டது என்று அதைக் கடலில் கொட்டுவார்கள். அதிகமாகப் பால் உற்பத்தி என்றால் அதையும் கடலில் கொட்டுவார்கள். அவற்றையெல்லாம் ஏழை மக்கள் அதிகமாக இருக்கும் நாடுகளுக்கு அனுப்பச் செலவாகும் என்று காரணம் கூறுவார்கள். விருந்துகள், விருந்துகள் என்று அங்கு பரிமாறப்பட்ட உணவில் பாதியை வீணடித்து குப்பையில் கொட்டி புதைகுழியில் சேர்ப்பார்கள். உணவகங்களில் அன்றன்று மிஞ்சும் உணவுகளை மறுநாள் உபயோகித்தால் உடல்நலத்திற்கு நல்லதல்ல என்று குப்பையில் சேர்ப்பார்கள். இதற்கெல்லாம் சிகரம் வைப்பது போல் இப்போது வந்திருக்கிறது உடைகளையும் குளிருக்காக உபயோகப்படுத்தும் பொருள்களையும் வீணாக்கும் செய்தி.



உலகின் ஒரு மூலையில் இருக்கும் கச்சாப் பொருள்களை குறைந்த விலையில் வாங்கி ஊதியம் குறைவாக உள்ள நாடுகளில் உள்ள ஏழைத்தொழிலாளிகளின் உழைப்பைக் கொண்டு உற்பத்தி செய்து தங்கள் நாட்டில் விற்பனை செய்து பெரும் பணக்காரர்களாக விளங்குபவர்கள் இருக்கும் அமெரிக்காவிற்கு, இந்தியாவும் சீனாவும் சுற்றுப்புறச் சூழ்நிலையை மாசுபடுத்துகின்றன என்று சொல்வதற்கு என்ன யோக்கியதை இருக்கிறது? தன் முதுகு தனக்கே தெரியாது என்பார்கள். அமெரிக்காவிற்கு இதை யார் எடுத்துச் சொல்வது? சுற்றுபுறச் சூழலை மாசுபடுத்துவதைத் தடுத்து நிறுத்த நடக்கும் மாநாடுகளில் கலந்துகொள்ளும் அமெரிக்காவை, “நீதான் முதல் குற்றவாளி, நீ திருந்தினால்தான் இது முடியும்” என்று சொல்லும் காலம் எப்போது வரும்?
நன்றி; நாகேஸ்வரி வலைத்தளம்

No comments: