Bhoo thatha's Blogspot

Search my older Blog

Sunday, October 9, 2011

ramaayanam in one page


மிதிலை செல்லும் வழியில் அகலியைத் தன்கால் வண்ணத்தால் பெண்ணாக்கி, பாபவிமோசன ராமானாக விளங்கினான். ஜனகனின் ராஜ மண்டபத்தில் சிவதனுசை ஒடித்து சீதையைக் கைப்பிடித்து ஜானகி ராமனாகத் தோன்றினான். அயோத்தி வரும் வழியில் பரசுராமனின் விஷ்ணு தனுசையும், அவர் கர்வத்தையும் ஒருங்கே வளைத்த ராஜா ராமனாக நின்றான்.
உள்ள நிறைவில் கள்ளம் புகுந்த கைகேயின் விருப்பப்படி, ஓட்டையும் பொன்னையும் ஒக்கநோக்கும் அன்றலர்ந்த தாமலை மலர் போன்ற முகத்தை உடைய பரந்தாமன், தந்தை சொல் காக்கக் கானகம் ஏகி, குகனின் அன்பெனும் நாவாயால் கடந்து, சித்ரகூடத்தில் முனிவர்களுக்கு அபயம் அளித்து சபரியின் கனி உண்டு அவளுக்கு முக்திக்கனி அளித்து ஆனந்த ராமானாகக் காட்சி அளித்தான்.
பஞ்சவடியில் ராமபிரான் மீது மையல்கொண்ட சூர்ப்பணகையை இளவல் மூக்கறுத்து அவமதித்தபிறகு ராமன் கரனின் சிரம் சாய்த்த அற்புத ராமானக் கோலம் பூண்டான், அண்ணல் பொன்மான் பின் சென்ற சமயம் ராவணன் சீதையைக் தூக்கிச் சென்ற பிறகு ஜடாயுவிற்கு வீடுபெற்றைத் தந்து, சுக்ரீவனின் நட்பைப் பூண்டு வாலியை வதம் செய்து சுக்ரீவனுக்குப் பட்டம் சுட்டிய தூய நேய ராமனாகத் திகழ்ந்தான். ஐயனின் தூதனாக அனுமான் கடலைத் தாண்டி அன்னையைக் கண்டு, அண்ணலின் கணையாழியைக் கொடுத்து, அவளது சூடாமணியைப் பெற்று வந்ததும் ராமன் மன்மதரூபனாகக் காட்சி அளித்தான்.
கடலைத் தாண்ட முயற்சிக்கையில் கடல் அரசன் உதவ மறுக்க ஐயன் வெகுண்டு பாணம் எடுத்து ஊழிக்கால உருத்திர சிவராமனாகத் தோன்றினான். இலங்காபுரியை அடைந்து விபீடணின் சரணாகதியை ஏற்றுக்கொண்டு, ராவணனுடன் போர் செய்து, அவனது கை சளைக்கையில் இன்று போய் நாளைவா' என்று மொழிந்த பகைவனுக்கருளும் உத்தம ராமனாக நின்றான்.
ராவணனைக் கொன்று மீட்ட சீதையின் கற்பைக் கனலில் புடம் போட்டுப் பார்த்த சீதா ராமனாக மனித ராமனாகக்
தோன்றினான்.
நந்திக் கிராமம் வந்து, பரம பக்தனாக பரதனைக் காத்த பக்தி நேயானக் காட்சி அளித்தான், அயோத்தி மாநகரை அடைந்து, அன்னைமார் புடை சூழ, தேவி அருகிருக்க, ராஜ்ய பட்டாடிஷேகம் செய்து கொண்ட பட்டாபிராமனாக விளங்கிய ஐயன் பல தத்துவங்களைத் தன் வாழ்க்கையின் மூலம் விளக்கி நம் அனைவரது உள்ளங்களிலும் என்றும் முடிவில்லாத நிலைபெற்ற அனந்த ராமன் ஆவான்.
-திருமதி. என்.லலிதா-COURTESY;DINAMALAR/KUMUDAM BHAKTHI

No comments: