Bhoo thatha's Blogspot

Search my older Blog

Thursday, September 10, 2015

‘ரத்தம் உறைதல்

மனித உடலில் வியப்புக்குரிய விஷயங்கள் நிறையவே நிகழ்கின்றன. இதயம் துடிப்பது, காது கேட்பது, கண் பார்ப்பது, கருத்தரிப்பது,  தூக்கம் வருவது, ருசியும் வலியும் தெரிவது... இந்த வரிசையில் உடலில் இயற்கையிலேயே ரத்தம் உறைவதும் வியந்து பார்க்கும்  விஷயம்தான். இது மட்டும் நிகழாமல் இருந்தால், லேசான காயம்கூட மரணத்தில் முடிந்துவிடும். இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த ‘ரத்தம்  உறைதல்’ என்பது சொல்லிவைத்தது போல் ஒரு சங்கிலி வினையாக நிகழ்கிறது. கிழிபட்ட ரத்தக் குழாயிலிருந்து கொழுப்புப் புரதமும்  பாஸ்போ புரதமும் இணைந்து, ‘திராம்போபிளாஸ்டின்’ (Thromboplastin) எனும் புதுப் புரதமாக மாறுகிறது. இது சில ரத்த உறைவுக்  காரணிகளுடன் வினைபுரிந்து, ‘திராம்போகைனேஸ்’ (Thrombokinase) எனும் புரதப் பொருளாக மாறுகிறது. 



இந்த நேரத்தில், கல்லீரலில் இருந்து புரோத்ராம்பின் எனும் புரதப்பொருள், ரத்தச் சுற்றோட்டம் வழியாக அடிபட்ட ரத்தக்குழாய்க்கு  வருகிறது. அப்போது அங்குள்ள திராம்போகைனேஸ் கால்சியம் தாதுவுடன் இணைந்து செயல்பட்டு, புரோத்திராம்பினை ‘திராம்பின்’ எனும்  என்சைமாக மாற்றி விடுகிறது. இது ரத்தத்தில் உள்ள ‘ஃபைப்ரினோஜன்’ (Fibrinogen) எனும் புரதப்பொருளுடன் வினை புரிகிறது. இதன்  பலனாக, பிசுபிசுப்பான, நீண்ட ‘ஃபைப்ரின்’ இழைகள் உருவாகின்றன. இவை ஒரு வலைப்பின்னலை உருவாக்குகின்றன. அந்த வலையில்  தட்டணுக்கள், ரத்த அணுக்கள், பிளாஸ்மா முதலியவை சிறை பிடிக்கப்படுகின்றன. பின்னர் இந்த  வலையமைப்பு சுருங்கி, ஒரு  ரத்தக்கட்டியாக  உருவாகிறது. ஒழுகும் தண்ணீர்க் குழாயைத் துணி வைத்து அடைப்பதைப் போல, இந்த ரத்தக்கட்டிதான் கிழிபட்ட  ரத்தக்குழாயை அடைத்து, ரத்தம் வெளியேறுவதைத் தடுக்கிறது. 

ரத்த உறைவு என்பது இருமுனைக் கத்தி போன்றது. உடலிலிருந்து வெளியேறும்போது மட்டுமே ரத்தம் உறைய வேண்டும். ரத்தம் உடலில் 
சுற்றிக்கொண்டிருக்கும்போதே உறைந்துவிட்டால், ரத்த ஓட்டம் தடைபட்டு உடலுக்கும் உயிருக்கும் ஆபத்தாகிவிடும். உதாரணமாக, இதயத்  தசைகளுக்கு ரத்தம் கொடுக்கும் கரோனரி தமனி குழாய்களில் ரத்தம் உறைந்துவிட்டால், மாரடைப்பு நேரும். மூளைத் தமனிகளில் இது  ஏற்பட்டால் பக்கவாதம் வரும். இந்த மாதிரி நிலைமைகளைச் சமாளிக்க ‘ஹெப்பாரின்’ (Heparin) எனும் ஊசி மருந்து செலுத்தப்படுகிறது.  இது  உடலுக்குள் ரத்தம் உறைவதைத் தடுக்கும் முக்கியமான மருந்து. அமெரிக்காவில் ஜோன்ஸ் ஹாஃப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில்  இரண்டாமாண்டு மருத்துவம் படித்துக்கொண்டிருந்த ஜேய் மெக்ளியான் எனும் மாணவர் 1916ல் தற்செயலாகக் கண்டுபிடித்த மருந்து இது.  தன்னுடைய கண்டுபிடிப்பு குறித்து அப்போது அவர் கொடுத்த பேட்டியைப் படிப்போமா?

‘‘பேராசிரியர் டாக்டர் ஹோவெல் என்பவருக்கு நான் உதவியாளராக இருந்தபோது அவர்  ரத்தம் உறைய வைக்கும்  மருந்தைக் கண்டு
பிடிக்கும் ஆராய்ச்சியில் இருந்தார். மூளைத் திசுவிலிருந்து செபாலின் எனும் வேதிப்பொருளைப் பிரித்தெடுத்து பக்குவப்படுத்தி, அதில்  எந்தப் பகுதி ரத்தம் உறைவதற்குக் காரணமாக இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டியது என் வேலை. மூளைத் திசுவைப் பக்குவப்படுத்த  பக்குவப்படுத்த, அதிலிருந்து கிடைத்த செபாலினுக்கு ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை குறைந்துகொண்டே போனது. அதே வேளையில்  அதைப் பக்குவப்படுத்தாமல் பயன்படுத்தவும் முடியாது. எனவே இந்த ஆராய்ச்சி நேரத்தை வீணாக்குவதாகப்பட்டது. 

இதயம் மற்றும் கல்லீரலில் செபாலின் போலவே வேறு ஒரு வேதிப்பொருள் காணப்படுவதாக ஜெர்மன் நாட்டின் ஆராய்ச்சி நூல்களில்  படித்தேன். அதற்கு பாஸ்போடைடு என்று பொதுவான பெயர். இதைக் கண்டுபிடிக்கும் விதமாக என் ஆராய்ச்சியைத் தொடர்ந்தேன். முதலில்  இதயத் திசுவிலிருந்து கியூரின் எனும் பொருளைத் தயாரித்தேன். அதற்கு ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை மிகவும் குறைவாகவே இருந்தது.  எனவே, கல்லீரலிலிருந்து இதேபோன்று ஹெப்பர் பாஸ்போடைடு என்ற பொருளைத் தயாரித்தேன்.  நாளாக நாளாக, காற்று பட்டதும்  ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை இதற்கும் குறைந்தது. ஒரு கட்டத்தில் துப்புரவாக  அது ரத்தத்தை உறையவே விடாமல் தடுக்கிறது  என்பதைத் தற்செயலாகப் பார்த்தேன். இதை ஏன் ரத்தம் உறைவைத் தடுக்கும் மருந்தாக பயன்படுத்தக்கூடாது என்று யோசித்தேன். 

என் புதிய கண்டுபிடிப்பு குறித்து பேராசிரியரிடம் கூறினேன். அவர் அதை நம்ப மறுத்தார். ‘திராம்பின் எதிர் மருந்து என்பது ஒரு  புரதமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் நீ கண்டு பிடித்ததோ பாஸ்போடைடு வேதிப்பொருள். இது எப்படிச் சாத்தியம்?’ என்றார். நான்  அதை நிரூபிக்கத் தயார் என்றேன். சம்மதித்தார்.

உடனே ஒரு பூனையின் தோலை அறுத்து ஒரு குடுவையில் அதன் ரத்தத்தைச் சேகரித்து நான் கண்டுபிடித்திருந்த வேதிப்பொருளை அதில்  ஊற்றினேன். அந்த ரத்தம் உறையவே இல்லை. இந்த அதிசயத்தைக் கண்டு ஆனந்தப்பட்ட பேராசிரியர், என்னைக் கட்டிப் பிடித்துப்  பாராட்டினார். பிறகு நாய் மற்றும் பல விலங்குகளுக்குக் கொடுத்துப் பார்த்து அதை உறுதி செய்துகொண்ட பேராசிரியர் 1920ல் இந்த  மருந்துக்கு ‘ஹெப்பாரின்’ என்று பெயரிட்டார். ரத்தம் உறைவதற்கு மருந்து கண்டுபிடிக்கப்போய் அதற்கு எதிர் மறையாக ரத்தம் உறைவதைத்  தடுப்பதற்கு மருந்து கண்டுபிடித்த அதிசயம் இப்படித்தான் நடந்தது’’ என்று அந்தப் பேட்டியில் சொல்லியிருக்கிறார்.. 1935ல் சுவீடன்  விஞ்ஞானி எரிக் ஜார்பெஸ், ஹெப்பாரினுக்கு வேதிக்கட்டமைப்பைக் கண்டுபிடித்துச் சொன்னதும், விட்ரியம் எனும் மருந்து நிறுவனம்  இதைத் தயாரித்துக் கொடுக்க, 1936ல் மனிதப் பயன்பாட்டுக்கு வந்தது. 

ஹெப்பாரின் எப்படி வேலை செய்கிறது? 

இது திராம்பின் என்சைமை செயலிழக்க வைப்பதால் ஃபைப்ரினோஜன் உற்பத்தியாவதும் ஃபைப்ரின் இழைகள் உருவாவதும்  தடுக்கப்படுகிறது. இதன் விளைவால் ரத்தம் உறைவதில்லை. இன்றைக்கும் மாரடைப்பு, பக்கவாதம் ஏற்பட்ட நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்  இந்த மருந்துதான்.courtesy:kungumam







































No comments: