Bhoo thatha's Blogspot

Search my older Blog

Friday, August 28, 2015

Aruna's tour to japan

ஜென் கவிதை, சூஷி உணவு, அதி வேக புல்லட் ரயில், புத்த மதம் என ஜப்பானை பற்றி பேசினாலே ஒரு பிம்பம் மனதில் தோன்றுவதுண்டு. என் நண்பர் ஒருவர் 3 வருடங்களாக அங்கு வசித்து வருகிறார். அமெரிக்காவில் இருந்த பொழுது 3 வார விடுமுறை ஒவ்வொரு முறையும் இந்தியா வந்து போவதிலேயே தீர்ந்து விடும். இந்தியா வந்த பின் இப்பிரச்சனை இல்லை. நண்பர் வேறு வருட கடைசியில் தாய்வான் போய் விடுவதாக பயமுறுத்தியதால் ஜப்பான் போக ஒரு திட்டம். மே மாதம் போக முடிவு செய்து விட்டு ஜெயமோகனின் ஊட்டி முகாம் அந்த நேரத்தில் வந்ததால் பின் ஜூன் முதல் வாரம் என முடிவானது. பெங்களூரில் இருந்து ஹாங்காங் சென்று பின் ஒசாகா. கதே பசிபிக்கில் மொத்தம் 13 மணி நேரத்தில் போய் சேர்ந்து விடலாம். கோபேயில் வசிக்கும் நண்பர் கிரனும் அவருடைய மனைவி சாச்சிகோவும் விமான நிலையம் வந்ததிருந்தனர். நண்பரின் அம்மாவும் என்னுடன் வந்திருந்தார்.
கோபேவிற்கும் ஒசாக்காவிற்குமான தூரம் 30 கி.மீ தான் என்றாலும், ஒசாகாவின் விமான நிலையம் ஒரு செயற்கை தீவில் இருப்பதால் சுற்றிக் கொண்டு வருவதற்கு காரில் 45 நிமிடம் பிடித்தது. இந்த தீவு ஹோன்ஷு தீவின் கரையில் உள்ளது. ஹோன்ஷு தீவை சுற்றி பாலம் அமைத்து எக்கச்சக்கமான தொழிற்சாலைகள் அமைத்து இருக்கிறார்கள். அமெசானின் ராட்சச கிடங்கு கூட இதில் உள்ளது.
பத்து வருடத்திற்கும் மேலாக பொருளாதார வீழ்சியில் (stagflation) உள்ளது ஜப்பான். மொத்த உள்னாட்டு உற்பத்தியை விட 230% சதவீதம் அதிகம் உள்ளது ஜப்பானின் மொத்த கடன். இச்சதவீதம் மிக அதிகமான நாடு உலகிலேயே ஜப்பான்தான் எனலாம். ஒரு ஒப்பு நோக்கிற்கு வேண்டுமானால், இந்தியாவில் இச்சதவீதம் 60%. ஜப்பான் நாட்டு பணமான யென்னின் ஆரோக்கியம் வேறு ஏற்றுமதியை பாதிக்கிறது என சொல்லிக் கொண்டு வந்தார் நண்பர். தொட்டில் முதல் சுடுகாடு வரை ஒரே நிரந்தர வேலை போன்ற கடந்த கால சாத்தியங்கள் தற்போது கனவாக மாறிக்கொண்டிருக்கிறது. 
ஜப்பான் கடல் சூழ்ந்த தீவானதால் வசிப்பதற்கான இடம் மிக குறைவு. நண்பர் அமெரிக்க கம்பெனியில் ex-pat ஆகியதால் கோபேயின் (Steak என அழைக்கப்படும் ஒரு விதமான மாட்டு கறிக்கு உலகிலேயே மிக புகழ் பெற்ற நகரம்) மத்திய பகுதியில் ஒரு அதி நவீன அடுக்கு மாடி கட்டிடத்தின் 27ஆம் மாடியில் வசிக்கிறார். ஜப்பானின் தீப்பெட்டி வீடுகளில் வளர்ந்த அவர் மனைவி மிக மகிழ்ச்சியுடன் வீட்டை சுற்றிக் காட்டினார். வீட்டை சுற்றி உள்ள பால்கனியில் உட்கார்ந்தால் டச்சுகாரர்கள் விரும்பி வசித்த மலை தூரத்தில் தெரிந்தது. சாச்சிக்கோ இரவெல்லாம் அமர்ந்து தங்கப் போகும் ஹோட்டல்களுக்கான பதிவுகள் செய்தார். அங்கு பெரும்பாலும் ஜப்பானிய மொழியே அதிகம் பேசப்படுவதால், அவர்தான் இந்த வேலையை செய்ய வேண்டி இருந்தது. 
ஆட்டோ சின்மயா நகர் வருமா என்று கேட்டாலே புழுவை போல் பார்த்து நம் மீது வசவெறியும் நம் மக்களுக்கு நேர் எதிர் ஜப்பானியர்கள். அனுமதி சீட்டை கொடுத்தால் கூட சொத்தெழுதி வைத்தது போல் கால் மடக்கி வணங்கி சிறிய கண்கள் காதெட்டும் வரை சிரித்து அரிகாத்தோ ஓசைமாஸ் என்கிறார்கள். ஆனால் மிக அதிகமான மன நோயையும் தற்கொலையையும் உள்ளடக்கிய ஒரு சமுதாயம் இது. மனிதர்களிடம் இவ்வளவு பண்புடன் பழகிவிட்டு பின் நேர்த்தியாக உடுத்தி ரயிலின் முன்னால் போய் விழும் முரண். முதல் சில நாட்களுக்கு இந்தத் தன்மை என்னை லேசாக பயமுறுத்தியது.
அடுத்த நாள் நாங்கள் ஜப்பானின் முன்னாள் தலைநகரான நாராவிற்கு ஹான்ஷின் என்ற தனியார் ரயில் பிடித்து சென்றோம். போகும் வழி எல்லாம் வித விதமான வண்ணங்களில் தானியங்கி இயந்திரங்கள் வைத்திருக்கிறார்கள். தண்ணீர், குளிர்பானம், சிகரெட், மதுபானம் என எல்லாம் கிடைக்கிறது. அதன் மேல் உள்ள விளம்பர பலகைகளில் பெரும்பாலும் அமெரிக்க நடிகர்கள் எதையாவது வாங்க சொல்லி ஜப்பானியர்களை வற்புறுத்துகிறார்கள். அன்று சனிக்கிழமை ஆதலால் பேஸ்பால் மாட்ச் பார்க்க மக்கள் உற்சாகமாக குடும்பத்துடன் போய் கொண்டிருந்தார்கள். நம்மூரில் கிரிக்கெட் போல் ஜப்பானியர்களுக்கு பேஸ்பால் பைத்தியம். அவர்கள்தாம் தற்போதைய உலக சாம்பியன்களும். ரயிலில் திரையில் அடுத்த நிறுத்தம் எது என்பதை ஆங்கிலத்திலும் காண்பிக்கிறது.
டாக்ஸி ஒன்று பிடித்து தோடைஜி (Todaiji) என்கிற புத்த மதத்தின் கேகான் பிரிவின் தலைமை ஆலயத்திற்கு சென்றோம். தோடைஜி என்றால் கிழக்கு நோக்கிய பெரிய ஆலயம் என பொருள். இவ்வாலயம் அமைந்திருக்கும் மரக் கட்டிடமும் அதில் உள்ள வெங்கல புத்தரும் உலகிலேயே மிக பெரியது. ஆலய தெற்கு வெளி வாசலில் இரு புறமும் உங்யோ, அக்யோ என்றழைக்கப்படுகிற இரு வாயில்காப்போன் சிலைகள். ஆலய வாசலில் கை கழுவ நீர் தொட்டியும் மரக் கரண்டிகளும் வைத்திருக்கிறார்கள். நிறைய பள்ளிக் குழந்தைகள். வருட இறுதி ஆனதால் கலாச்சார சுற்று பயணத்தில் வந்திருக்கிறார்கள். நான் பார்த்த எல்லா ஆலயங்களிலும் கொத்து கொத்தாக சிதறி கிடந்தார்கள். ஆலய முகப்பில் குண்டத்தில் ஊதுபத்திகள் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கின்றன. வலது புறம் பிண்டோலா பாரத்வாஜா என்கின்ற புத்த அர்ஹதரின் 8 அடி உயர மரச்சிலை. இவர் புத்தரால் உலகில் இருக்கும்படி பணிக்கப்பட்ட 4 அர்ஹதரில் ஒருவர் என்றறியப்படுகிறார். ஜப்பானில் இவரை பின்சுரு என்கிறார்கள். இவரின் ஒரு பாகத்தை தொட்டு பின் நம் உடலில் அதே இடத்தை தொட்டால் அவ்வுறுப்பு சம்பந்தமான வியாதிகள் வராது என நம்புகிறார்கள்.
743-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலயம் 2 முறை தீக்கிரையாகி தற்போதுள்ள ஆலயம் 1709ல் கட்டப்பட்டது. இவ்வாலயம் ஒரு World Heritage Site. ஆலயத்தில் உள்ள புத்தர் வைரோசனா என்றும் ஜப்பானியர்களால் டைபுட்சு என்றும் அழைக்கப்படுகிறார். 49 அடி உயரமும் 500 டன் எடையும் கொண்ட கருப்பு புத்தர். அவரை சுற்றி 16 போதி சத்வர்களும் அவரின் இரு புறத்தும் சிறு புத்தர்கள். போதிசத்வர்கள் தாமரை இதழ்களில் அமர்ந்து இருப்பது போல் பொரிக்கப்பட்ட ஒரு சிம்மாசனம் சிலையின் காலடியில்.
பிஷமோதேன், கொமுகூதேன் என்ற காவலர்கள் புத்தரின் பின்பக்கத்தில் நின்று ஆலயத்தை காக்கிறார்கள். இவர்களை இடிக்கும், காற்றுக்குமான கடவுளராக கருதுகிறார்கள்.
ஆலயத்தின் முன் இருமருங்கிலும் பச்சை புல்வெளி. நடுவில் ஒரு மரம் கூட கிடையாது. சதுர வடிவிலான ஒரே நிறத்துப் பச்சை திறந்த வெளி. ஆலயத்தின் வெளிவாசலில் ஒரு பெரிய குளம். நீர் நிலையும், திறந்த வெளியும் எல்லா ஆலயங்களிக்கும் உள்ள பொதுத்தன்மை. புத்த, ஷிண்டோ என எல்லா மத ஆலயங்களிலும் அவை உள்ளது.
ஆலயத்தின் வெளியே உள்ள இடங்களில் எல்லாம் சிகா வகையை சார்ந்த மான்கள் உலவுகின்றது. அவை புனிதமாக கருதப்படுவதால் அவை வேட்டை ஆடப்படுவதில்லை. மான்களுக்கு உணவளித்து, துரத்தி விளையாடும், கலர் ஐஸ் வாங்கி சாப்பிடும் குழந்தைகளும், பெரியவர்களுமான ஒரு மனித சிதறல்.
பின்னர் நாங்கள் கோப்கூஜி (Kokukuji) என்ற 7ஆம் நூற்றாண்டு கோவிலுக்கு சென்றோம். இக்கோவிலும் ஒரு World Heritage Site ஆக பாதுகாக்கப்படுகிறது. 669-ஆம் ஆண்டு புஜிவாரா குடும்பத்தின் தோற்றுனரும், அரசியல்வாதியுமான புஜிவாரா நோ கமடாரியின் மனைவி ககாமியால் அவர் கணவர் உடல் நலம் குன்றியிருந்த போது கட்டப்பட்டது. இக் கோவிலின் சிறப்பம்சம் இவ்வளாகத்தில் உள்ள 5 அடுக்கு பகோடா தான். தீக்கிரையான இந்த பகோடா மீண்டும் 15 ஆம் நூற்றாண்டில் புதுப்பிக்கப்பட்டது. இவ்வளாகத்தின் உள்ளே பகோடாவும், ஒரு தங்க மண்டபமும் அதன் உள்ளே யகூஷி புத்தாவின் மரச்சிலையும், ஒரு எண்கோண முக கோவிலும் (இப்பொழுது புழக்கத்தில் இல்லை) தற்பொழுது ஆலயமாக செயலாற்றி வரும் சிறிய எண்கோண கோவிலும் உள்ளது. ஆலய முகப்பில் ஒரு இளம் புத்த பிக்கு ஒரு பிரார்த்தனையை வழி நடத்திக் கொண்டிருந்தார். இக்கோவிலில் உள்ள புத்தரிடம் ஏதேனும் ஒரு வேண்டுகோளை மட்டுமே கூறி பிரார்த்தனை செய்ய வேண்டும். இரண்டாவது வேண்டுதல் இருந்தால், கோவிலை விட்டு வெளியேறி பின் மீண்டும் செல்ல வேண்டும். சிறிய கோவிலின் உள்ளே தரை மெத்தைகள் வைத்திருக்கிறார்கள். நாம் அமர்ந்து, முன்னே இருக்கும் காங் (gong) என்ற மணியை பிரார்த்தனையின் ஆரம்பத்தை குறிக்க ஒரு முறை ஒலித்து விட்டு, பிரார்தித்து மெழுகுதிரி ஏத்தி விட்டு பின் ஒரு முறை மணியை வழிபாடு முடிந்ததை குறிக்க ஒலித்து விட்டு வெளியேற வேண்டும். 
நாரா ரயில் நிலைய வாசலில் ஒருவர் ஜெபமாலையுடன், எளிய ஆடைகள் அணிந்து கையில் பிச்சைப் பாத்திரத்துடன் நின்றிருந்தார். அவர் பிக்கு ஆவதற்கான பயிற்சியின் ஒரு பகுதியாக இரந்து உண்கிறார் என்றார் நண்பர்.
பல நூற்றாண்டுகள் பழமையான ஆலயம் அதே சூழலில் பேணப்பட்டு காலத்தில் உறைந்தது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது. நவீன உலகத்தின் நிழல் கூட படாமல் பாதுகாக்கப்படும் தனிமை. ஆனால் நூறே அடி நடந்து வந்தால் பாதாள ரயிலுக்கான பாதை. இரு மருங்கிலும் நூற்றுக்கணக்கான கண் கூசும் நியான் விளம்பர பலகைகள், விற்கும் உணவை தத்ரூபமாக மெழுகில் செய்து வைத்திருக்கும் உணவகங்கள், உலகின் எல்லா உயர் பிராண்டுகளும் விற்கும் நூற்றுக்கணக்கான கடைகள் இவைகளை கடந்து உள்ளே சென்றால் அதி வேக ரயில்கள். 100 அடி வித்தியாசத்தில் ஒரு அதி நவீன உலகம். ஒரே புனைவில் வரும் இரு வேறு தொடர்பில்லா உலகங்கள் நடுவே பயணிப்பது போன்ற உணர்வு.

No comments: