Bhoo thatha's Blogspot

Search my older Blog

Thursday, August 27, 2015

Johannesburgh

தென் ஆப்பிரிக்காவில், ஹைவெல்டு என்னுமிடத்தில் "ஆண்டிலோப்' என்னும் கலைமான்கள் சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருந்தன. சிறிய நாடோடிக் கூட்டத்தினர், உணவுக்காக இம்மான்களை வேட்டையாடி வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் ஐரோப்பியர்கள், அண்டை நாடுகளை ஆக்ரமித்துக் குடியேறினர். ஆப்பிரிக்காவில் ஊடுருவிய ஐரோப்பியக் குடியானவர்கள், தங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களைத் தேடி தென்திசையில் பயணித்து புதிய நிலப்பரப்புகளில் குடியேறினர்.

இவர்கள் கலைமான்களின் கூட்டத்துக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஹைவெல்டு பகுதியில் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவியது. இந்த அமைதியும், தனிமையும் 1886ல் முடிவுக்கு வந்தது. இந்த ஆண்டில் இப்பகுதியில் தங்கம் கிடைத்ததுதான் திடீர் மாற்றத்துக்குக் காரணம். ஹைவெல்டு பகுதியில் 1886ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 8ம் தேதி தங்கச் சுரங்கம் உள்ள இடத்தில் "ஜோஹன்னஸ்பர்க்' என்ற புதிய நகருக்கு அஸ்திவாரமிடப்பட்டது.

ஜோஹன்னஸ்பர்க் நகருக்குக் கிழக்கிலும், மேற்கிலும் முப்பது மைல் தொலைவில், ஆயிரம் மைல் உயரத்தில் பொட்டலான மலைப்பகுதி, வெல்டு பகுதியைச் சூழ்ந்து நின்றது. இம்மலைப் பகுதியை, "விட் வாட்டர் ஸ்ராண்ட்' என்றழைத்தனர். அதாவது, "வெள்ளை நீரின் மேல் வரம்பு' என்பது பொருள். இம்மலையின் மேல்வரம்பை, "பேங்கெட்' என்றழைத்தனர்.

இந்த பேங்கெட்டில் தங்கத்துகள்கள் ஏராளமாகக் கிடைத்தன. ஒரு டன் மலைப்புழுதியில் கிடைக்கும் தங்கம் மிகக் குறைவுதான். ஒரு அவுன்ஸ் தங்கம் தான். ஆனால், இந்த பேங்கட்டின் நிலத்தின் அடியில் ஆழத்தில் ஏராளமான தங்கம் புதைந்து கிடந்தது. உலகிலுள்ள சில தங்கச் சுரங்கங்களிலே மிக ஆழமான சுரங்கம். ஒன்றரை மைல் ஆழம். ஆற்றுப் பள்ளத்தாக்கு மேட்டு நிலமான ராண்ட் பகுதியின் ஆழத்தில் தங்கரேகைகளுள்ள பாறைகள் கிடைத்தன.

தங்கம் கிடைக்கும் செய்தி காட்டுத் தீயாகப் பரவவே ஆயிரக்கணக்கானோர் ஜோஹன்னஸ் நகரை முற்றுகையிடலாயினர். ஒரு மாதத்தில், 4 ஆயிரம் பேர் வந்து முகாமிட்டனர். பத்து வருடத்தில் இந்நகரில் வசிப்போரின் எண்ணிக்கை 1 லட்சமாகப் பெருகியது. ஆரம்பத்தில் இந்நகரின் குடியிருப்புகள், மரத்தினாலான தாழ்வான வீடுகளே. கடைகள், வங்கிகள், உணவகங்கள் அனைத்துமே இப்படித் தான்! மாடுகள் இழுக்கும் வண்டிகளும், குதிரைகள் பூட்டிய கோச்சுகளுமே போக்குவரத்து சாதனங்கள். தெருச்சாலைகள் புழுதி மண்டிக்கிடக்கும். எந்த அசவுகரியத்தையும் தங்கத்துக்காக சகித்துக் கொண்டனர்.

ஆனால், இன்று-நவீன யுகத்தில் நவீன வசதிகள் கொண்ட மில்லியன் மக்கள் வாழும் நகரமாக விளங்குகிறது. கெய்ரோவைத் தவிர்த்து, ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய நகரமாக ஜோஹன்னஸ் பர்க் விளங்குகிறது. கெய்ரோ நகருக்கு 4000 மைல் வடக்கே பல மாடிகளை கொண்ட கம்பீரமான கட்டடங்கள் எழுந்துள்ளன. நகரின் நடுவே செல்லும் நெடுஞ்சாலையில், இருபக்கத்திலும் நகரைச் சுற்றி உயர்ந்து நிற்கும் வெள்ளை நிறப் பாறைக்குவியல் மேடு, 5 ஆயிரம் மில்லியன் மதிப்புள்ள தங்கத்தை கொடுத்துள்ளது.

கடந்த நூறு ஆண்டுகளில் ராண்ட் பகுதியிலுள்ள தங்கச்சுரங்கம், நம்பத்தகாத அளவுக்கு செல்வத்தை வழங்கி இருக்கிறது. இப்போது இப்பகுதியில் யுரேனியம் என்ற தாதுவும் கிடைக்கிறது. அணுசக்தி உற்பத்திக்கு யுரேனியம் அவசியமாயிற்றே. இதனால் ஜோஹன்னஸ்பர்க்கின் செல்வம் மேலும் கூடுகிறது.

இங்குள்ள ஜனத்தொகையில் பாதி பேர் வெள்ளையர். இவ்வெள்ளையரில் பாதிக்கும் மேலானவர்கள் ஆப்பிரிக்கர் எனப்படும் கலப்பு (வெள்ளை-நீக்ரோ) இனத்தவர். டச்சு நாட்டு வம்சாவழியினர்; மீதி பேர் ஆப்பிரிக்க நீக்ரோக்கள். நீக்ரோக்களில் ஆயிரக்கணக்கானோர் தங்கச் சுரங்கங்களில் பணியாற்றுகின்றனர்.

இவர்கள் ஆப்பிரிக்காவின் பல பகுதிகளிலிருந்தும் ஜோஹன்னஸ்பர்குக்கு வந்து குடியேறியவர்கள். இவர்களில் ஜூலு, ஸோலாஸ், ஸ்வாஸிஸ், பாஸுடோஸ், நியாயாஸ் ஆகிய ஆப்பிரிக்க இனத்தவர்களும் அடக்கம். தங்கச் சுரங்கங்களில் பணியாற்றி, பொருள் சேகரித்துக் கொண்டு, தங்கள் தாயகங்களுக்குத் திரும்பி வருபவர்கள் சிலர். மற்றவர் ஜோஹன்னஸ் பர்க்கிலேயே தங்கி அந்நகர வாசியாகி விடுகின்றனர். ஆப்பிரிக்க (நீக்ரோ) தொழிலாளிகள் "ஷாக்ஸ்' எனப்படும் குடியிருப்புகளில் நெருக்கமாக வாழ்கின்றனர்.

***

No comments: