Bhoo thatha's Blogspot

Search my older Blog

Thursday, November 7, 2013

மௌனம் ஒரு மகத்தான சக்தி!

ரு பேச்சு சொல்லாத எத்தனையோ விஷயங்களை, ஒரு மௌனம் சொல்லிவிடும். மௌனம் ஒரு மகத்தான சக்தி! மௌனத்தின் சக்தியை உணர்ந்தவர்கள், அதைத் தங்கள் வாழ்வில் பிரயோகித்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.
எதை, எப்போது பேச வேண்டும், எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் தெரிந்துவைத்திருப்பது அவசியம்தான். ஆனால், அதைவிட அவசியம், எப்போது பேசாமல் மௌனமாக இருக்கவேண்டும் என்று தெரிந்து வைத்திருப்பது.
சுந்தர காண்டத்தில், அசோக வனத்தில் மரத்தின் மேலிருந்து சீதையைப் பார்க்கிறான் அனுமன். ராவணன் வருவதையும், அவன் சீதையை மிரட்டுவதையும் பார்க்கிறான். சீதாப்பிராட்டி ஒரு புல்லைத் தூக்கி ராவணனின் முன் போட்டு, அந்தப் புல்லைப் பார்த்துப் பதில் சொல்கிற விந்தையான காட்சியையும்கூடப் பார்க்கிறானே? அப்போதே, சடாரென்று குதித்து, ராவணனிடம் ஆக்ரோஷமாக அனுமன் பேசியிருக்கலாமே?
ஆனால், அப்படிப் பேசியிருந்தால், உடனடியாக அவன் கைது செய்யப்பட்டிருப்பான். அவன் வாலில் அப்போதே தீ வைக்கப்பட்டிருக்கும். சீதையிடம் ராமனின் கணையாழியை அனுமன் கொடுத்து ஆறுதல் சொல்லியிருக்க இயலாது. சீதையிடமிருந்து சூடாமணியைப் பெற்றுக்கொண்டிருக்கவும் முடியாது. எனவே, தன் கோபத்தை அடக்கிக்கொண்டு, நடப்பதை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறான். பின்னர், ராஜ சபையில் ராவணனைச் சந்திக்கும்போது, அங்கு முழங்குகிறான் தன் வீராவேசமான பேச்சை.
சொல்லின் செல்வனான அனுமனின் சாதனைகளுக்குக் காரணம், அவன் சொல்லாற்றல் மட்டுமல்ல; எதையும் சொல்லாமலே இருக்கும் ஆற்றலும்தான்!  இன்னும் சரியாகச் சொல்லப் போனால், மௌனம் என்பதே சொல்லாற்றலின் ஒரு பகுதிதான். ஒரு விஷயத்தைச் சொல்வது கலை என்றால், ஒரு விஷயத்தைச் சொல்லாமல் சொல்வது, அதைவிட நுணுக்கமான கலை. மௌனத்தைப் பேசவைக்கிற கலை அது!
இந்தச் சொல்லாமல் சொல்லும் கலையில் அதிகம் தேர்ச்சி பெற்றிருந்தார், கவியரசர் கண்ணதாசன். அவர் ஓரிடத்தில் எழுதுகிறார்... 'என் தந்தைக்கு மது, மங்கை, மாமிசம் முதலிய எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது. ஆனால், நிறையச் சீட்டாடுவார். நான் சீட்டு மட்டும் ஆடமாட்டேன்!’ கண்ணதாசன் என்ன சொல்ல வருகிறார் என்பது அவர் சொல்லாமலே நமக்குப் புரிகிறதல்லவா?
தத்துவமேதை பெர்னாட்ஷா ஒருமுறை, தனக்கு 25 மொழிகள் தெரியும் என்று பெருமையோடு சொல்லிக் கொண்டார்.மற்றவர்கள் எப்படி என்று விசாரிக்க, 'ஆமாம்! என்னால் 25 மொழிகளில் மௌனமாக இருக்கமுடியும்!’ என்றார் அவர் குறும்பாக.
'மௌனம் சர்வார்த்த சாதகம்’ என்கிறது சம்ஸ்கிருதம். மௌனத்தால் எல்லாவற்றையும் சாதிக்கலாம்.  
காஞ்சி பரமாச்சார்யாள், அடிக்கடி மௌன விரதம் இருப்பார். அதற்குக் 'காஷ்ட மௌனம்’ என்று பெயர். சைகைகளால்கூடப் பேசாமல் இறை சிந்தனையில் தோய்ந்திருக்கும் மிக உயர்ந்த மௌனம் அது.
ஆனால், தாம் அத்தகைய மௌன விரதம் இருந்த நாளன்றில், தொலைதூரத்திலிருந்து தம்மைத் தேடி மாணவர் குழு ஒன்று வந்தபோது, அவர் தம் மௌனத்தைக் கலைத்துக்கொண்டு பேசினார் என்கிறது வரலாறு. காரணம், வந்த மாணவர்கள் பார்வையற்றவர்கள்; அவர்கள் தம்மைக் கண்களால் காண இயலாது என்கிறபோது, தம் குரலையாவது அவர்கள் கேட்கவேண்டும் என்று நினைத்திருக்கிறது பரமாச்சார்யாளின் கருணை உள்ளம்.
ஸ்ரீதட்சிணாமூர்த்தியை மௌனகுரு என்கிறோம். ஸ்ரீரமணர் மௌனத்தாலேயே ஏராளமான பேருக்கு உபதேசம் செய்திருக் கிறார். அவர் முன் போய் அமர்ந்தால், அவரது ஒளிபொங்கும் விழிகள் அடியவருக்குச் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிடும் என்கிறார்கள், ஸ்ரீரமணரை நேரில் தரிசித்த அன்பர்கள்.
ஸ்ரீஅரவிந்த அன்னையின் பார்வை மொழி புகழ்பெற்றது. புதுச்சேரி அரவிந்த ஆஸ்ரமத்தின் பால்கனியிலிருந்து அவர் பார்த்த பார்வையைக் கூட்டம் கூட்டமாய் தரிசித்தவர்கள் ஏராளமானோர். அந்தப் பார்வை, பல்லாயிரம் சொற்களைச் சொல்லித் தங்கள் மனத்தில் சாந்தி நிலவச் செய்ததை உணர்ந்திருக்கிறார்கள், அந்த அடியவர்கள்.
ஆன்மிகத்தில் மட்டுமல்ல, காதலிலும் வாய் பேசுவதற்கும் முன்பாகக் கண்களே பேசிக்கொள்கின்றன. அண்ணலும் நோக்கி அவளும் நோக்கிய கம்பராமாயணக் காட்சி புகழ் பெற்ற காட்சி! 'கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச் சொற்கள் என்ன பயனும் இல!’ என்பார் வள்ளுவர்.
புதுச்சேரியில் அரவிந்தரின் தத்துவங்களில் தோய்ந்து வாழ்ந்து வந்தசுத்தானந்த பாரதியார், பல நாட்கள் தொடர்ந்து மௌனத்தில் இருப்பார். மௌனம் கலையும் நாளில், எழுத்தாளரும் பாடகியுமான வை.மு.கோதைநாயகி அம்மாளை சென்னையிலிருந்து வரவழைத்து, அவரது உள்ளத்தை உருக்கும் பக்திப் பாடலைக் கேட்ட பின்புதான் மௌனம் கலைப்பார்.
இலக்கணப் புலவர் அமரர் முத்துகண்ணப்பர் வாரந்தோறும் ஒருநாள் மௌனவிரதம் இருந்து வந்தார். எழுத்தாளர் அமரர் லா.ச.ராமாமிர்தம் நவராத்திரி ஒன்பது நாளும் மௌனவிரதம் இருப்பார். விஜயதசமி அன்று 'அம்மா நமஸ்காரம்!’ என்கிற வார்த்தைகளைச் சொல்லித்தான் மௌனம் கலைவார்.
மௌனத்தைப் பழகுகிறபோது, சுருக்கமாகப் பேசுகிற ஆற்றல் தானாய்க் கைவந்துவிடும். பேச்சைக் குறைப்போமானால், வாழ்வில் ஏராளமான நேரம் மிச்சமாகும். அதுமட்டுமல்ல, மௌனத்தால் உடலிலும் மனத்திலும் சக்தி மேலோங்குவதையும், பேச்சில் எவ்வளவு சக்தி வீணா கிறது என்கிற உண்மையையும் அறிந்துகொள்ள முடியும். 'உங்களால் சுருக்கமாகப் பதில் சொல்ல முடியுமா?’ என்று ஒரு வாசகர் கேட்ட  கேள்விக்கு எழுத்தாளர் சாவி சொல்லியிருந்த பதில்: 'ம்!
மாமியார் மருமகள் சண்டை உள்பட, பல சண்டைகளில் யாரேனும் ஒருவர் மௌனமாக இருந்தால் போதும்; சண்டை வலுவிழந்துவிடும். இப்படியே தொடர்ந்து சண்டை நேரத்தில் மௌனம் பழகினால், பிறகு சண்டையே ஏற்படாத சூழல் தானாகவே தோன்றிவிடும். நோயாளிகள் சில நாட்கள் பேசாமலே இருந்தால், உடலில் எதிர்ப்புச் சக்தி வலுப் பெற்று நோய் குணமாக வழிபிறக்கும்

காந்தி, மௌனத்தின் சிறப்பைப் பல இடங்களில் புகழ்ந்து எழுதியுள்ளார். காந்தி அன்பர்களில்மௌனத்தை அதிகம் கடைப்பிடித்து வாழ்ந்தவர் வினோபாஜி.
மௌனத்தின் சிறப்பை மட்டும் சரிவர உணர்வோமானால், ஒவ்வொருவரும் எத்தனையோ சாதனைகளைச் செய்ய முடியும். முக்கியமாக, பயணம் செய்யும் போதும், வாகனம் செலுத்தும்போதும், நடக்கும்போதும் கைபேசியில் ஓயாமல் பேசி, தானும் துயரங்களுக்கு உள்ளாகி, அடுத்தவர்களுக்கும் தொல்லை தரும் வழக்கத்தை இளைஞர்கள் கைவிட்டாலே எத்தனையோ சக்தி மிச்சமாகும்.
அன்பர் ஒருவர், நாள்தோறும் காலை 10 மணி வரை மௌனமாக இருப்பார். இது தெரியாத அவரது நண்பர் காலை 10 மணிக்குள்ளாக அவரைப் பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேச முயன்றிருக்கிறார். அவர் பேசவில்லை. 10 மணிக்கு மேல் பேசிய அவரிடம் நண்பர் இப்படிக் கோபித்துக்கொண்டாராம்...
'என்னய்யா... பத்து மணி வரைக்கும் நீங்கள் மௌனவிரதம் என்று எனக்கு எப்படித் தெரியும்? நான் போன் செய்தபோது எடுத்து, 'நான் மௌனம்’ என்று சொல்லித் தொலைத்திருந்தால், மீண்டும் மீண்டும் போன் செய்யாமல் இருந்திருப்பேனல்லவா?’

courtesy;sakthi vikatan

No comments: