Bhoo thatha's Blogspot

Search my older Blog

Thursday, January 7, 2010



சிவன் - திருவாதிரை மகாவிஷ்ணு திருவோணம், பிரம்மாவின் திருநட்சத்திரம்...?

பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற பரம்பொருளின் செயல்நடிவங்களுக்கும் நட்சத்திரங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. குறிப்பிட்ட நட்சத்திரங்களின் தேவதைகளாக மும்மூர்த்திகளையும் சொல்வார்கள். இந்த மூவரின் இயக்கத்தில் நட்சத்திர தேவதைகள் இயங்குகின்றனர். ஐம்பூதங்களில் ஒன்று ஆகாயம். அதில் ஒளி வடிவத்தில் தென்படுபவர்கள் நட்சத்திரங்கள் என்கிறது வேதம். இவை உலக இயக்கத்துக்கு உறுதுணையாக உலக இயக்கம் உள்ளவரை இயங்கிக் கொண்டே இருக்கும்
அனைத்து ஜீவராசிகளுக்கும் ஆகாசம் சொந்தம். நீர், நிலம், நெருப்பு, காற்று ஆகிய அனைத்தும் இயற்கையின் சொத்து எவரும் சொந்தம் கொண்டாட இயலாது. உயிரினங்கள் அவற்றுடன் இணைந்து தங்களை வளர்த்துக் கொண்டு மகிழலாம். அவ்வளவுதான்!
நட்சத்திரங்களின் பெருமையை உயர்த்திச் சொல்ல, தேவர்களுடன் இணைத்துக் கூறினார். பிரம்மனுடன் சம்பந்தப்பட்ட நட்சத்திரமும் உண்டு. இதை அபிஜித் என்பர். உத்திராடம் மற்றும் திருவோண நட்சத்திரங்களுக்கு இடையே உள்ளது அபிஜித். இது, 28வது நட்சத்திரம்.



பிரதோஷ நாளில் சிவபெருமானுக்கு உப்பில்லாத முழு உளுந்து வேக வைத்து நைவேத்யம் செய்கின்றனரே! இது எதனால்?
- .

இறையுருவத்தின் பார்வை பட்டதும் அந்த உணவு பரிசுத்தமாகி விடுகிறது. எனவே அந்த உணவை உட்கொள்ளப் பரிந்துரைக்கிறது சாஸ்திரம். தெய்வத்துக்கு படையலிட சமைக்கிறோம். இறைவனுக்கும் உணவுக்கும் அங்கே ஒரு தொடர்பு வேண்டும்; உணவால் நமக்கு ஆரோக்கியம் தேவை; ஆன்மிகமும் அவசியம். ஆரோக்கியத்துடன் ஆன்மிகத்தையும் வளர்க்கும் உணவு வகைகளைப் பட்டியலிட்டுள்ளது தர்மசாஸ்திரம். இதனை ஆயுர்வேதமும் ஆமோதிக்கிறது. தவிர தர்மசாஸ்திரம் உளுந்தையும் பரிந்துரைக்கிறது.
இதேபோல, உப்பில்லாத நைவேத்தியத்தில் தவறு ஏதும் இல்லை. மாறாக, இப்படியான நைவேத்தியமே சிறப்பு எனப் போற்றுகிறது தர்ம சாஸ்திரம். இதனால்தான் உப்பு கலக்காத அன்னம், உளுந்து சர்க்கரைப் பொங்கல், பாயசம், பால், பழம் ஆகியவற்றை மகா நைவேத்தியம் என்கின்றனர்.



வறுமை; பந்தபாசம் அற்ற நிலை; கடன் சுமை என வாழ்ந்துவிட்டேன். என் குழந்தையும் இதுபோல் கஷ்டப்படக்கூடாது இதற்கு சுந்தரகாண்டம், பகவத்கீதை பாராயணம் � சய்யலாமா?.
முதலில் ஒரு விஷயம்... உங்களைப் போலவே உங்களுடைய குழந்தையும் துன்பப்பட நேரும் என பயப்படுவதே தவறான கணிப்பு! உங்களின் காமவினை வேறு; யாருக்குத் தெரியும்... முற்பிறவியில் நன்மை செய்து, புண்ணியங்கள் பலவற்றை உங்கள் குழந்தை சேர்த்து வைத்திருக்கலாம்; அதுவே அவனை நல்வழிப்படுத்தி, செழிப்புறவும் செய்யலாம்!
படிப்பு, நல்ல பழக்கவழக்கம் ஆகியவற்றில் அவனை ஈடுபட வைத்து உதவுங்கள். குறிப்பிட்ட வயது வரை அவனை வழிநடத்துங்கள்; பிறகு அவனது சிந்தனையே அவனை வழிநடத்தும்!
உக்ரசேனனுக்கு கம்சனும், ஹரிரண்யகிசிபுவுக்கு பிரகலாதனும் பிறந்தனர். தந்தையின் சாயல் இவர்களிடம் இல்லையே?! ஏழ்மையைக் காரணம் காட்டி திருடியவன். சிறையில் அறுசுவை உணவு சாப்பிடுவதும்... செல்வச் செழிப்புடன் இருப்பவனால் ஒரு கவளம்கூட சாப்பிட முடியாமல் அவன் நோயால் அவதியுறுவதும் நடக்கத்தானே செய்கிறது!
இன்னொரு விஷயம்... துயரம் வரும்போது மட்டுமே தெய்வத்தை நினைப்பதால் ஒரு பவனும் இல்லை. ஆகவே சுந்தரகாண்டத்தையும் பகவத் கீதையையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் படிக்கச் சொல்லுங்கள். பக்கத்தில் அமர்ந்து புரிய வையுங்கள்!" பதட்டத்தைத் தவிர்த்து தெளிவுடன் குழந்தையை வளர்ப்பது தந்தையின் கடமை. தருணம் வரும்போது மேம்படுத்தி முன்னேறுவது குழந்தையின் திறமை!



வீட்டின் முன்பு தென்னை மரம் உள்ளது. அதில் பூ, மட்டை ஆகியவை பக்கத்து வீட்டில் விழுகின்றன. தென்னை மரத்தை வெட்டும்படி சொல்கிறார்கள். தென்னை மரத்தை வெட்டலாமா?

முன்யோசனையே இல்லாமல் தவறான இடத்தில் தென்னையை நட்டு வைத்ததும் தவறு. அது வளர்ந்ததும் அடுத்தவருக்கு தொந்தரவு தரும்படி செய்ததும் தவறு! இப்போது தென்னையின் பெருமையைச் சொல்லி, வெட்டாமல் இருக்க முயற்சிப்பது மேலும் தவறாகிவிடும்!
நோய் முற்றி, ஒரு காலையே இழக்கும் நிலை வரும்போது காலின் பெருமையைப் புகழமாட்டோம்; இழப்பதற்கு தயாராகிவிடுவோம். முன்னெச்சரிக்கை உணர்வுடன், தகுந்த இடத்தில் தென்னையை வளர்த்தனர் முன்னோர், சாலையோர மரங்கள், கோடைக்காலங்களில் இளைப்பாற உதவும். ஆனால் இப்போதோ வாகனப் பெருக்கத்தால் சாலையை அகலப்படுத்த மரங்களை வெட்டத்தானே செய்கிறோம்?! பொதுநலம் கருதி செய்யப்படும் எந்தவொரு செயலும் தவறில்லை!


எங்கள் சமூகத்தில் பெற்றோர் இறந்துவிட்டால் (தாய் அல்லது தந்தை), முதலில் 13 நாட்களும் பிறகுஒரு வருடம் வரையும் காரியங்கள் செய்ய வேண்டும். அப்படிச் செய்யவில்லை எனில் அவர்களின் சந்ததிக்கு பாதிப்பு ஏற்படும் என்கின்றனரே?

இறந்தவர்களுக்கு ஈமச் சடங்கு செய்வது கடமை; எனவே இதை அலட்சியப்படுத்தக் கூடாது என்கிறது சாஸ்திரம். பிராமணரல்லாத சமூகத்தவரும்கூட இறந்தவர்களுக்கு 16-ஆம் நாள் வரை காரியங்கள் செய்வது உண்டு.
ரிஷி வழி வந்த பிராமண சமூகத்தினர், ரிஷிகளின் நடைமுறைகளைச் செயல்படுத்த வேண்டும்; ஆயாசம் காட்டுவது கூடாது! இதில் காசு பணம் முக்கியமே இல்லை. வறுமை கோட்டுக்கு கீழ் இருப்பவர்களும் நிறைவேற்றும் வகையில் எளிமையாக்கித் தந்திருக்கிறது தர்மசாஸ்திரம். சடங்கை நிறைவேற்ற பொருளாதார தடையாக இருக்காது; இருக்கவும் கூடாது! எள், தண்ணீர், உமி, விராட்டி மற்றும் உணவு போதுமே!
பசி-பட்டினி என அல்லல்பட்டுக் கொண்டிருப்பவர், ஈம காரியத்தைச் செய்வது எப்படி? இதற்கும் எளிய வழி உண்டு. இரண்டு கைகளையும் உயரத் தூக்கி, அய்யஹோ! கடமையைச் செய் இயலாதவனாகி விட்டேனே! இதனால் என் மனம் வேதனைப்படுகிறதே! என்ன செய்வேன்? என்று நொந்து மனதார இறைவனைப் பிரார்த்தித்தால் போதும். உஞ்களின் தவறை கடவுள் மன்னிப்பார்! தர்ம சாஸ்திரங்களும் சடங்குகளும் பொருளாதாரத்தைக் கொண்டு செயல்படவில்லை. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. அத்தனை எளிமை மிக்கவை நம் சடங்குகள்!


சமஸ்கிருதத்தை தேவபாஷை என்கிறார்களே! அப்படி என்ன சிறப்புகள் அதில்?

முதலில் தோன்றிய மொழி எனும் பெருமை கொண்ட சமஸ்கிருதம், அழியாத, அழிக்க இயலாத மொழி! இதன் துவக்கத்தை அறிந்தவர் எவருமில்லை! சம்ஸ்கிருதம் என்றால் செம்மைப்படுத்தப்பட்டது என்று பொருள், சொல் வளம் கொண்ட மொழி, சமஸ்கிருதம். எண்ணங்களை சரியான விதத்தில் விளங்க வைக்கும் திறன், இந்த மொழியின் பலம். தவிர, இந்த மொழியில் வெளியான இலக்கியங்களும் வெகு அதிகம். தொன்மை வாய்ந்த இந்த மொழி, நம் தேசத்தில் பேசப்படும் ஏகப்பட்ட மொழிகளில் கலந்திருக்கிறது.
சமஸ்கிருத மொழி எல்லாத் துறைகளிலும் நுழைந்து வியாபித்துள்ளது. ஒருவருக்குத் தேவையான முழு அறிவையும் புகட்டக்கூடிய மொழியாக, சமஸ்கிருதம் திகழ்கிறது.
ஒரு நூலைப் படிக்கிறபோது அந்த நூலில் இருந்து பெறும் அறிவுடன் பண்டைய கலாசாரமும் மனதுள் பதிய வேண்டும். அந்த வகையில், கலாசாரங்களை உள்ளடக்கியது இந்த மொழி. ஆக, கருத்துப் பரிமாற்றத்துக்குப் பயன்படுகிற மொழி, கலாசார, நாகரீக, பண்பாடுகளையும் விவரிக்கிறது. அந்த வகையில், மனித நாகரீகத்தின் விதை, சமஸ்கிருதத்தில் உண்டு. ஆன்மிகம், பொருளாதாரம், மருத்துவம், அரசியல், சமூகவியல், காப்பியல், நாடகம், அணிகலன், ஜோதிடம், சடங்கு, சம்பிரதாயம், காலட்சேபம்- உபந்யாசம், நாட்டியம், வாய்ப்பாட்டு வாத்திய இசை, வாழ்வியல் மனவியல் ஆகிய அனைத்து விஷயங்களையும் அலசி ஆராயவும் நூல்கள் ஏராளம்!
இன்னொரு விஷயம்... ஜெர்மன், பழைமையான ஆங்கிலம், கிரீக் முதலான வெளிநாட்டு மொழிகளுடன் சம்ஸ்கிருதத்துக்கு இருக்கும் தொடர்பு பற்றி மொழி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் வடக்கே வழங்கப்படும் மொழிகளில் உள்ள சொல்வனத்திலான குறையை, சமஸ்கிருத மொழியே நிறைவு செய்கிறது.
நம் தேசத்தில் உயர்கல்வி மற்றும் சமஸ்கிருதக் கல்லூரிகளில் இதனை பயிற்று மொழியாகவே பயன்படுத்துகின்றனர். சாஸ்திர சர்ச்சைகளின் போது உபயோகிக்கப்படுகின்றனர். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்பு சமஸ்கிருத நூல்களின் அகராதி துவங்கப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் அகர வரிசையில் பதினாறுக்கும் மேற்பட்ட பகுதிகள் புத்தக வடிவில் வந்துள்ளன; இன்னும் பல பகுதிகளும் வரவுள்ளன!
தற்போதைய காலகட்டத்தில், சமஸ்கிருதத்தில் மாத இதழ், வார இதழ், தனிச்சுற்று இதழ்கள் வருகின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்கிருத ஆய்வு நிறுவனங்களும் வேதக் கல்வி, சாஸ்திரக் கல்வி, கலைக்கல்வி என பாடசாலைகளும் உள்ளன. இங்கே 64 கலைகள் குறித்தும் விவரிக்கப்படுகின்றன.
பேச்சு வழக்கில் உள்ள மொழிகள் நூற்றாண்டுகளைக் கடக்கும்போது அந்த மொழியில் சிலபல மாறுதல்கள் ஏற்படலாம். ஆனால் சமஸ்கிருதம் மட்டும் கால மாறுபாடு பிறமொழிக் கலப்பு என எந்த மாறுதலும் இன்றி அப்படியே உள்ளது ஆச்சரியம்தான்!
லண்டனில் சமஸ்கிருத நூல்கள் நிரப்பிய ஒரு நூலகம் உள்ளது (இண்டியா ஆப்பீஸ் லைப்ரரி). காளிதாசனின் சாகுந்தலம், ராமாயணம், சிறுவர் இலக்கியமான பஞ்சதந்திரம் என்ற நீதிநூல் உள்ளிட்ட சமஸ்கிருத நூல்கள் வெளிநாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பாரம்பரிய யோகக்கலை, வாஸ்து சாஸ்திரம், ராசிக்கற்கள் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை உணர்த்துவதற்கு சமஸ்கிருத இலக்கியங்களையே ரெஃபரன்ஸுக்கு தேடுகிறார்கள். அந்த அளவுக்கு வளமையான மொழி, வேத காலம் தொட்டு புழங்கப்படும் மொழி என்பதால், தேவபாஷை என்றனர்

நன்றி;சக்தி விகடன்

No comments: