Bhoo thatha's Blogspot

Search my older Blog

Saturday, January 16, 2010

RELIGION

நம் காதில் ஒலிப்பது நாராயண மந்திரமே


ஒரு சமயம் நாரத மகரிஷி ஸ்ரீமன் நாராயணனிடம் தாம் எப்போதும் உச்சரிக்கும் நாராயண மந்திரத்தின் மகிமை என்னவென்று வினவினார். அதற்கு எம்பெருமான் அப்பொழுதுதான் பிறந்த ஒரு புழுவின் காதில் அம்மந்திரத்தை உரைக்குமாறு கூறினார். நாரதரும் அவ்வாறே செய்ய புழு உடனே இறந்து விட்டது.



மகரிஷி இதைக்கண்டு திடுக்கிட்டார். பகவான் அவரிடம் "போனால் போகிறது இப்பொழுது பிறந்த மீன்குஞ்சு ஒன்று உள்ளது , அதன் காதில் உரைத்திடுக" என்று சொன்னார். சிறிது தயக்கத்துடன் நாரதரும் அவ்வாறே செய்தார். உடன் அதுவும் மரித்துவிட்டது.





நாரதர் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானார். உடன் பகவான்" கவலை வேண்டாம் , தற்பொழுதுதான் பிறந்த கன்று ஒன்று இருக்கிறது பார், ஒருமுறை அதன் காதில் உரைத்திடுக" என்றார். மிகுந்த தயக்கத்துடன் இருந்த நாரதரை பகவான் மீண்டும் உரைக்குமாறு பணித்திட, அவரும் தயக்கத்துடன் உரைத்தார். அவர் எண்ணியவாறே அதுவும் இறந்து விழுந்தது. மிகுந்த அதிர்ச்சி அடைந்த நாரதர் "பகவானே , மந்திரத்தின் பொருள் கேட்டால் தாங்கள் , பிற உயிர்களின் மாரகதிர்க்கு என்னை காரணமாக்குகிரீர், என்ன விளையாட்டு இது" என கேட்டார் .

அதற்கு பகவான் "சற்று பொறும் மகரிஷி, இன்னும் ஒரு முறை இந்த மந்திரத்தை பரிட்சித்து பாரும் , இந்நாட்டின் அரசனுக்கு, வாரிசு தற்பொழுதான் பிறந்துள்ளது. தாங்கள் அச்சிசுவின் காதில் எமது நாமத்தை உரைத்திடுக "என்றார். துடுக்குற்ற நாரதர், "பகவானே அரசனின் சிசுவை கொன்றால் , அரசனின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் , ஆதலால் , மன்னித்து விடுங்கள், என்னால் செல்ல இயலாது "என்றார். அதற்கு பகவான், "கவலை வேண்டாம் , சென்று உரைத்திடுக" என்றார்.



நடுக்கத்துடன் நாரதரும் அக்குழந்தையின் காதில் நாராயண மந்திரத்தை உரைத்தார். மிகுந்த பயத்துடன் கண்களை இருக்க மூடிக்கொண்டு என்ன நடக்குமோ என்று அஞ்சினார். அப்பொழுது ஒரு சிறுகுரல், " மகரிஷி நான் தங்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுளேன்" என்று கேட்டது. வியப்புடன் கண்களை திறந்தவர், பிறந்த குழந்தை பேசுவதை கண்டார். மற்றவரும் மிகுந்த வியப்புடன் அதை நோக்கினர். அக்குழந்தை " நான் மூன்று பிறப்பு எடுத்து நான்காவதாக இந்த மனிதப்பிறப்பு எடுக்க வேண்டி இருந்தது. எத்துணை காலம் ஆகுமோ எனக்கவலை கொண்டிருந்தேன். ஆனால், தங்களின் கருணையால், தாங்கள் உரைத்த நாராயண மந்திரத்தின் மகிமையால், புழுவாகி, மீனாகி, கன்றாகி பிறப்பெடுத்து , அம்மந்திரத்தின் மகிமையால் மேலான இம்மானிட பிறப்பெடுத்து, முற்பிறவி நினைவுகளுடன் , பிறந்தவுடன் பேசும் வரம் பெற்றேன். தங்களுக்கு மிகுந்த நன்றிகள். அனைத்தும் தாங்கள் உரைத்த மந்திரத்தின் மகிமையே " என்றது.





மனம் தெளிவுற்ற நாரதர் உடன் பகவானிடம் சென்று " தங்களின் மந்திரத்தின் மேன்மையை அறிந்து கொண்டேன் , எவ்வுயிரையும் மேன்மையான நிலைக்கு உயர்த்த வல்லது அது " என்றார்.



முக்காலமும் உணர்ந்த, பரம்பொருளின் உடன் நிறை, நாரத மகரிஷியால் அம்மந்திரத்தின் பொருள் அறியாமல் இருந்திருக்க முடியாது.



ஆகையால் இக்கதை நமது வாழ்வியலுக்கு தேவையான ஒரு பாடத்தை நமக்கு எடுத்துரைக்கும் பொருட்டே கூறப்பட்டிருக்கறது என்பதை உணர வேண்டும்.



நமது வாழ்க்கையின் ஒவ்வொரு சமயத்திலும் ஏதாவது ஒரு சம்பவம் , நாம் அவை உருவாக காரணமில்லாத போதும் , நம்மை , நமது வாழ்க்கையை பாதிக்கிறது.

அப்பாதிப்பினால் அச்சம் கொள்ளாமால், அவற்றை முதலில் , ஏற்றுக்கொண்டு பிறகு ஆராய்ந்தால் , அவை நம்மை அடுத்த நிலைக்கு உயர்த்த ஏற்படுத்தப்பட்ட படிக்கட்டுகள் என்பதை உணரலாம். அப்படிப்பினையை உணர்ந்து வாழ்வில் செயல்படுத்தினால் நமது வாழ்வும் மேன்மையுறும்.



ஆகவே , துன்பங்கள், சோதனைகள் நம்மை சூழும் பொது, அவை நம்மை அடுத்த உயரிய நிலைக்கு அழைத்து செல்ல நம் காதில் உரைக்கப்படும் நாராயண மந்திரமே என உணர்ந்து செயல்படுவோம்.



சோதனைகள் வெல்லப்படுவதற்கே
நன்றி; ந;கணேசன்

No comments: