வெவ்வேறு மொழிகளில் உள்ள கவிதைகளை மொழிபெயர்ப்பில் ஒப்பிட்டு ஆராய்ந்து இம்மொழியில் உள்ள கவிதைதான் சிறந்தது என்று இலக்கியத் தீர்ப்பு வழங்குவது சரியா? ஒவ்வொரு மொழிக்கும் அதற்கென்றே பரம்பரியமாக வருகின்ற மொழியொடு இணைந்த பண்பாடு உண்டு. ஒரு மொழியில் உள்ள நல்ல கவிதை, அந்த மொழியைப் பேசுகின்றவர்களுக்கு அதைப் படித்ததும் ஏற்படுகின்ற சுகாநுபவம், அம்மொழி தெரியாமல் அக்கவிதையை மொழிபெயர்ப்பில் படிக்கின்றவர்களுக்கு உண்டாகாது.ஏனென்றால், அந்த அநுபவம், எந்த மொழியில் அந்தக் கவிதை எழுதப்பட்டிருக்கிறதோ, வழி வழியாக வரும் அந்த மொழிப் பண்பாட்டினின்றும் பிரிக்க ஒண்ணாது. மொழிப் பண்பாடு, ச்மூகக் கலாசாரத்தால் நிர்ணயம் ஆகின்றது. உதாரணம் காட்டி விளக்கலாம்.
ஒளியா வெண்ணெய் உண்டான் என்று
உரலொடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்
விளியா ஆர்க்க ஆப்புண்டு
விம்மி அழுதான் மென் மலர்மேல்
களியா வண்டு கள் உண்ண
காமர் தென்றல் அலர் தூற்ற
நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்
நறையூர் நின்ற நம்பியே.
இச்செய்யுள் பெரிய திருமொழியில் வருகிறது.
திருநறையூர் நின்ற நம்பி கிருஷ்ணன். அவன் ஒவ்வொரு வீடாகச் சென்று வெண்ணையைத் திருடி உண்கின்றான். அவன் விஷமம் பொறுக்க முடியாத அவன் தாய் யசோதை அவனைக் கயிற்றால் உரலில் சேர்த்துக் கட்டி விடுகின்றாள்.குழந்தையாகிய கிருஷ்ணன் தேம்பித்தேம்பி அழுகின்றான்.
இது ஒரு காட்சி.
இன்னொரு காட்சி, அவன் இருக்கும் ஊராகிய திருநறையூரைப் பற்றியது.அங்கு வண்டுகள் ஒவ்வொரு மலரிலும் புகுந்து தேனைத் திருடி உண்கின்றன. வண்டுகள் ஒவ்வொரு மலராக நாடுவதென்பது காதல் காட்சி. வண்டுகள் உள்புகுந்து தேணுண்ண, மலர்கள் பூக்கும். நறுமணம் எங்கும் காற்றின் மூலம் பரவும். மலர்களோடு வண்டுகள் காதல் பயின்றதை எங்கும் பரவும் நறுமணம் மூலம், தென்றல் காற்று ஊருக்கு அறிவிக்கின்றதென்று (‘அலர் தூற்ற’)கவிஞர் கூறுகிறார். இந்த ‘அலரை’க் கேட்டு முல்லை மலர்கள் முறுவலிக்கும்.
‘அலர்’ என்ற சொல், பண்டையத் தமிழ் இலக்கியங்களில் அகத்திணைப் பாடல்களில் வரும் சொல். தலைவனும் தலைவியும் களவு ஓழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும் செய்தி ஊராருக்குத் தெரிய வருவதுதான் ‘அலர்’. தமிழ் ப் பண்பாட்டு சந்ததியினரைத் தவிர மற்றவர்களால் இப்பாட்டை ரஸிக்க இயலுமா? ஒரு மண்ணுக்கே உரிய ஒரு பயிரை அடியோடு பிடுஙகி வேறொரு மண்ணில் நட்டு விட முடியுமா? அது போல்தான் ஒரு மொழியினின்றும் இன்னொரு மொழியில் ஆக்கம் செய்வது.
ஆகவே வெவ்வேறு மொழிகளில் எழுதும் கவிஞர்களுடைய கவிதைகளை ஒப்பிட்டு மதிப்பீடு செய்வதென்பது வீண் வேலை. அந்த்ந்த மொழியில் படித்து ரஸிப்பதுதான் சாத்தியம்.
Courtesy:indhra parthasarathi
No comments:
Post a Comment