Bhoo thatha's Blogspot

Search my older Blog

Wednesday, August 26, 2015

Tourism at pondicherry


பிரெஞ்சு கலாச்சாரத்தின் ஜன்னல் என முன்னாள் பிரதமர் நேருவால் புகழப்பட்ட நகரம் புதுச்சேரி.கொளுத்தும் வெயில் என்றாலும் கோடை விடுமுறைக்கு புதுச்சேரி களை கட்டி விடும். பைவ் ஸ்டார் ஓட்டல்கள் முதல் சாதாரண விடுதிகள் வரை அனைத்தும் படு பிசியாகிவிட்டன.மாலை நேரத்தில் வங்கக்கடல் காற்றை அனுபவித்தபடி கடற்கரை சாலையில் நடமாடும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை எண்ணிலடங்காது. புதுச்சேரியில் இளைஞர்களைக் கவரும் உற்சாக பான கடைகள் மட்டுமல்ல, பல ஆன்மிக தலங்களும்,கண்கவர் சுற்றுலா இடங்களும் இருக்கிறது. 
ஆன்மிகதலங்கள்
புதுச்சேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் சிறிதும், பெரிதுமாக 350க்கும் அதிகமான கோயில்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சோழர்கள் காலமான கிபி 10 முதல் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டவை. 18ம் நுõற்றாண்டில் கட்டப்பட்ட வேதபுரீஸ்வரர் கோயிலில் சுயம்புலிங்கத்தை தரிசனம் செய்யலாம். வில்லியனூரில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திருக்காமீஸ்வரர் கோயிலும்,10ம் நூற்றாண்டில் திருவண்டார்கோயிலில் கட்டப்பட்ட பஞ்சநாதீஸ்வரர் கோயிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. 
இவற்றுடன் கடற்கரையை ஒட்டியுள்ள மணக்குள விநாயகர் கோயில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் ஈர்த்து பெருமை பெற்றது.. சமீபத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு முன்பை விட அதிகமான வெளிநாட்டு பயணிகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.சமீபகாலமாக புதுச்சேரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதிய கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதில் 36 அடி உயர பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலும்,72 அடி உயர பிருத்தியங்கரா தேவி காளி கோயிலும், நவக்கிரக கோயிலும் சிறப்பு பெற்று வருகிறது.
புதுச்சேரியில் மிகவும் புகழ்பெற்ற தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா சர்ச் ரயில் நிலையம் எதிரில் அமைந்துள்ளது. வாடிகன் நகரில் உள்ள சர்ச்சைப் போல வித்தியாசமான கட்டிடக் கலையுடன் கடற்கரை அருகே உள்ள கப்ஸ் சர்ச், மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி சர்ச், நெல்லித்தோப்பில் உள்ள விண்ணேற்பு அன்னை சர்ச், அரியாங்குப்பத்தில் உள்ள சர்ச் ஆகியவை கிறிஸ்தவ மக்கள் மட்டுமின்றி அனைத்து சமூக மக்களும் செல்லும் சர்ச்சுகளாக உள்ளன. இத்துடன் புதுச்சேரிக்கு அருகில் உள்ள வில்லியனூரில் பிரசித்தி பெற்ற லூர்து சர்ச் ஆலயம் உள்ளது. இங்குள்ள சர்ச்சில் உள்ள புனிதகுளம் சிறப்பு பெற்றது. 
அரவிந்தர்ஆசிரமம் 
கொல்கத்தாவில் சுதந்திரத்திற்காக போராடிய அரவிந்தர், பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருந்த  புதுச்சேரிக்கு வந்தார். புதுச்சேரியில் ஆசிரமம் அமைத்த ஸ்ரீஅரவிந்தர் மக்களிடையே ஆன்மிக சிந்தனையை தூண்டினார். பல நூல்களை எழுதி மக்களிடம் ஆன்மிகம், அமைதியை பரப்பினார். இவர் நூல்களால் ஈர்க்கப்பட்ட அன்னை மீரா ஸ்ரீஅரவிந்தருடன் இணைந்து ஆன்மிக சேவையில் ஈடுபட்டார். ஸ்ரீஅரவிந்தர், ஸ்ரீஅன்னை ஆகியோர் பணி உலக நாடுகள் முழுவதும் பரவியது. அவர்களின் மறைவிற்குப் பின்னர் அவர்களின்  வழிகாட்டுதலின்படி ஆசிரம நிர்வாகிகள் ஆசிரமத்தை நிர்வகித்து வருகின்றனர். கடற்கரை சாலை அருகே உள்ள ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்திற்கு உலகின் பல நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அங்கு ஆழ்ந்த தியானத்தை மேற் கொள்கின்றனர்.
அழகியகடற்கரை 
புதுச்சேரி என்றவுடன் நினைவுக்கு வருவது அழகிய கடற்கரைதான். இந்த கடற்கரையில் பல மணி நேரம் நின்று கடலின் அழகையும், அலைகளின் ஆர்ப்பரிப்பையும் சுற்றுலா பயணிகள் கண்டுகளிப்பர்.சுத்தமாகவும், அழகாகவும் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படும்  கடற்கரை சாலையில் மகாத்மா காந்தியின் முழு உருவ பிரம்மாண்ட சிலை,முதலாம் உலகப்போர் போர் வீரர்கள் நினைவிடம், பிரெஞ்சு போர் வீரர்கள் நினைவிடம், பழைய கலங்கரை விளக்கம், அம்பேத்கர் மணி மண்டபம், நேரு சிலை முன்பு அமைக்கப் பட்டுள்ள திறந்தவெளி கலையரங்கம் போன்றவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் அம்சங்களாகும்.
படகுகுழாம்
புதுச்சேரியிலிருந்து 8 கிமீ தொலைவில் சுண்ணாம்பாறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தை ஒட்டிய பகுதியில் அரசு சுற்றுலா போக்குவரத்துக்கழகத்தால் படகு குழாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படகு குழாமிலிருந்து இயற்கையை ரசித்தபடியே 20 நிமிடம் படகில் பயணம் செய்தால் பேரடைஸ் கடற்கரையை அடையலாம். அங்கு கடல் அலைகளின் சீற்றத்தை கண்டுகளிக்கலாம். இந்த படகு குழாமில் அதிவேகமாக செல்லும்  படகுகள், வாட்டர் ஸ்கூட்டர், பெடல் படகு, துடுப்பு படகு போன்றவையும் இயக்கப் படுகிறது. குழந்தைகளுக்காக சிறுவர் பூங்காவும், பொழுதுபோக்கு விளையாட்டு  உபகரணங்களும் அமைக்கப்பட்டுள்ளது. 
ஆற்றின் அழகை ரசிக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகள் பயணிகள் ஒரு நாள் தங்கி ஓய்வெடுத்து செல்லும் வகையில்  திறக்கப்பட்டுள்ளது. இதேபோல ஊசுடு ஏரியிலும் சுற்றுலாத்துறை மூலம் படகுகுழாம் உள்ளது. அங்கு ஏரியின் அழகையும், பறவைகளையும் கண்டுகளிக்கும் வகையில் படகுகள்  இயக்கப்படுகிறது. இந்த ஏரியில் பயணம் செய்யும்போது நகரத்தின் நெரிசல்களில் இருந்து விடுதலை கிடைத்து ரம்மியான இயற்கை காற்றை சுவாசிக்கலாம். 
அரிக்கன்மேடு
உலக வரைபடத்தில் புதுச்சேரியை அடையாளம் காட்டும் வகையில் வரலாற்று சிறப் புமிக்க வணிகதலமாக விளங்கியது அரிக்கன்மேடு. புதுச்சேரியிலிருந்து 7 கிமீ தூரத்தில் உள்ள அரியாங்குப்பத்தில் இது உள்ளது.கிமு 2ம் நூற்றாண்டில் ரோம், இந்தியாவுக்கு இடையிலான வர்த்தகம் நடைபெற்றதற்கு சான்றாகவும் புதுச்சேரியின் பாரம்பரிய பெருமையை அறிந்துகொள்ளும் சாட்சியாக அரிக்கன்மேடு இன்றும் விளங்கி வருகிறது.
தாவரவியல்பூங்கா
பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் 1826ல் புதுச்சேரியில் உருவாக்கப்பட்ட தாவரவியல் பூங்கா  நகரத்தின் மைய பகுதியில் பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இங்கு அரியவகை  மரங்களும், செடிகளும் உள்ளது. தானே புயலால் இங்குள்ள மரங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் மீண்டும் தாவரவியல் பூங்காவை உயிர்ப்பிக்கும் பணி நடந்து வருகிறது. இங்குள்ள மீன் அருங்காட்சியகத்தில் அரிய மீன்வகைகளையும், கடல்வாழ் உயிரினங்களையும்  பார்த்து ரசிக்கலாம். பூங்காவை சுற்றிவரும் ரயில் சிறுவர்களை குதுõகலப்படுத்தும்.
அருங்காட்சியகம்
புதுச்சேரி கவர்னர் மாளிகை அருகே அருங்காட்சியம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் இந்திய, ரோமானிய வர்த்தகம் அரிக்கன்மேட்டில் நடந்ததற்கான அரிய ஆவணங்கள் இடம்பெற்றுள்ளது.மேலும் வர்த்தகர்கள் பயன்படுத்திய காசுகள், வீரர்கள் பயன்படுத்திய போர் கருவிகள் ஆகியவையும் இடம்பெற்றுள்ளது. சோழர்கள், பல்லவர்கள், விஜயநகர பேரரசுகளின் காலங்களை சேர்ந்த அரிய சிலைகளும் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.
ஆயிமண்டபம்
புதுச்சேரி அரசின் முத்திரை சின்னமாக விளங்குவது ஆயி மண்டபம். இந்த மண்டபம் கடற்கரைசாலையின் அருகே உள்ள பாரதி பூங்காவிற்குள் அமைந்துள்ளது. கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பூங்காவையும், ஆயி மண்டபத்தின் அழகையும் கண்டுகளிப்பர்.பூங்காவில் சிறுவர்கள் விளையாடி மகிழலாம்.
குருசிஷ்யர்களின்அருங்காட்சியகம்:
புதுச்சேரியில் தங்கி சுதந்திர தாகத்தை உருவாக்க பாட்டு, கவிதை, உரைநடைகளை முண்டாசு கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் எழுதினார். அவர் ஈஸ்வரன் கோவில் தெருவில் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். அந்த வீடு இப்போது அவரது நினைவாக  அருங்காட்சியமாக மாற்றப்பட்டு வருகிறது. பாரதியின் சிஷ்யரான பாரதிதாசனின்  நினைவு அருங்காட்சியகம் பெருமாள் கோவில் தெருவில் அமைக்கப் பட்டுள்ளது. இங்கு பாரதி, பாரதிதாசனின் அரிய நூல்கள், அவர்களின் கடிதங்கள், அரிய புகைப்படங்கள், கட்டுரை, கதை தொகுப்புகள் இடம்பெற்றுள்ளன. 
ஆரோவில்சர்வதேசநகரம்
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லையில் ஆரோவில் சர்வதேச நகரம் அரவிந்தர் ஆசிரம நிர்வாகிகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அமைதி ஆலயம் எனப்படும் மாத்ரி மந்திர் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரக்கூடியது. இங்கு உலகின் அனைத்து நாட்டு மண்ணும் புதைக்கப்பட்டு நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சர்வதேச நகரத்தில் 55 மொழி பேசும் மக்கள் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். சர்வதேச நகரத்தின் நுழைவு வாயிலில் சிறிய திரையரங்கம் உள்ளது.இதில் அரவிந்தரைப்பற்றியும், சர்வதேச நகரம் உருவான விதம் குறித்தும் சுற்றுலா பயணிகள் அறிந்துகொள்ளலாம்.
தங்கிச்சென்றுபார்க்கக்கூடியவை
புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியில் 25 கிமீ தொலைவில் திருவக்கரை கிராமம் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற சந்திரமவுலீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் முகப்பில் வக்கிரகாளியம்மன் கோயில் உள்ளது. புதுச்சேரி தவளகுப்பத்தை ஒட்டியுள்ள சிங்கிரிகுடியில் லட்சுமி நரசிம்மர் கோயில் உள்ளது. கோயிலின் நேர் கோட்டில் பூவரசங்குப்பத்தில் லட்சுமிநரசிம்மர் கோயிலும், பரிக்கல் கிராமத்தில் லட்சுமி நரசிம்மர் கோயிலும் அமைந்துள்ளது. 22 கிமீ துõரத்தில் கடலுõர் திருப்பாதிரிப்புலியூரில் பாடலீஸ்வரர் கோயிலும், திருவந்திபுரத்தில் வெங்கடேச பெருமாள் கோயிலும் சிறப்பு  வாய்ந்தவை. 
புதுச்சேரியிலிருந்து 50 கிமீ தூரத்தில் கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் ஜோதிமயமான கோயில் உள்ளது. விருத்தாச்சலத்தில்  சிறப்புவாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. புதுச்சேரியிலிருந்து 74 கிமீ தூரத்தில்  சிதம்பரம் நடராஜர் கோயிலும் உள்ளது.சிதம்பரம் செல்லும் வழியில் பிச்சாவரத்தில் சதுப்புநில மாங்குரோவ் காடுகளும், படகு சவாரியும் சுற்றுலா பயணிகளை பெரிதும் கவர்பவை. 

No comments: