திருக்கண்ணமங்கை
வைஷ்ணவ திவ்யதேசங்களில் 108 இல் 106 திவ்ய தேசங்களை மட்டுமே நில உலகில் உள்ளது. திருப்பாற்கடல், மற்றும் ஸ்ரீவைகுண்டம் என்னும் இரு திவ்யதேசங்களும் மோக்ஷத்தினை அடைந்தவர்கள் மட்டுமே ஸேவிக்கமுடியும்.
திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடப்பெற்ற) இமயமலையில் உள்ள “திருப்பரிதி” என்னும் திவ்யதேசம் இன்னமும் எங்கு உள்ளது என கண்டுபிடிக்கமுடியவில்லை.
அதற்கு பதிலாக “ஜோஷி மட்” என்னும் திய்வதேசத்தினை பக்தர்கள் திய்வதேசமாக ஸேவித்துவருகின்றனர்.
108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் 27 வது ஸ்தலமாக உள்ளதும், சோழநாடு திவ்யதேசங்களான நாற்பதில் பஞ்ச கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரங்கள் ஐந்தில்... திருக்கண்ணங்குடி, திருக்கண்ணாமங்கை, திருக்கண்ணபுரம், கபிஸ்தலம்,திருக்கோவலூர் என்னும் ஐந்து திவ்ய தேசங்களின் நடுநாயகமாக திகழ்வதும் 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீகிருஷ்ணனுக்கும் தாயாருக்கும் திருக்கல்யாணம் நடந்ததால் “திருக்கண்ணமங்கை” திவ்ய தேசம் “கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம்” என வழங்கப்படுகிறது.
திருவாரூரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் இரண்டாவது கிலோமீட்டரில் உள்ளது திருக்கண்ணமங்கை திவ்யதேசம்.
ஸ்ரீ திருக்கண்ணமங்கை யாண்டான் வரலாறு
ஸ்ரீ நாதமுனிகளின் பதினோரு சீடர்களில் புகழ் பெற்ற ஐந்து சீடர்கள் புண்டரீகாக்ஷர், அஷ்டாங்க யோகத்தில் ஈடுபட்ட குருகைக் காவலப்பன், நாதமுனிகளின் மருமக்களான மேலையகத்தாழ்வான், கீழையாகத்தாழ்வான், மற்றும் திருக்கண்ணாமங்கையாண்டான் ஆகியோர்.
திருக்கண்ணமங்கையில் ஆனி மாதம் க்ருஷ்ண பட்ச ஸ்ராவண (திருவோண) நட்சத்திரத்தில் அந்தணர் குலத்தில் அவதரித்து கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கி விவாஹம் ஆகியவராய் ஸ்ரீ நாதமுனிகளால் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்விக்கப்பட்டு, துளஸீ மாலைகளை ஸ்ரீ பக்தவத்ஸல பெருமாளுக்கும் திருக்கண்ணமங்கை நாயகிக்கும், அபிஷேகவல்லி தாயாருக்கும் ஸமர்பித்துவந்தார்.
பெருமாளை ஸேவிக்க இரண்டு வேட்டையாடுபவர்கள் தனது நாய்களுடன் கோவிலுக்கு வந்தனர். கோவிலுக்கு வெளியே தனது நாய்களினையும் செருப்பினையும் விட்டுவிட்டு கோவிலுக்கு உள்ளே செல்ல...
ஒரு வேடனின் நாயானது மற்றொரு வேடனின் செருப்பினை கடிக்க அதை கண்ட மற்றொரு நாயானது தனது எஜமானனின் செருப்பினை நாய் கட்டிப்பதை பொறுக்காது அந்த நாயுடன் பலமாக சண்டையிட்டது.
சண்டையின் முடிவில் ஒரு நாய் இறந்துபோக இதனை அப்போது வெளியில் வந்த வேடர்கள் கண்டனர்.
தனது நாயினை கொன்ற மற்றொரு நாயை தன் வாளால் வேடுவன் வெட்டிக்கொல்ல, தமது நாய்களின் பொருட்டு இரு வேடுவர்களுக்கும் இடையே கத்திச் சண்டை துவங்கியது, உச்ச கட்ட சண்டையின் முடிவில் இரு வேடுவர்களும் ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு இறந்தனர்.
கையில் துளஸீ மாலையுடன் அங்கு வந்த திருக்கண்ணமங்கையாண்டான் நடந்த நிகழ்ச்சிகளை அறிந்து பிறருக்கு வேலை செய்து பிழைப்பவர்களும், தாழ்ந்த ஒழுக்கமுள்ளவர்களுமான இவ்விருவரும் தங்களின்மேல் அன்புள்ள நாய்களிடம் கொண்ட கருணையால் சண்டையில் தங்களது உயிரை இழந்தார்கள்.
தர்மங்களை பற்றி ஆராய்ச்சி இல்லாத, இவர்களது மனித இயற்கைக்கு மீறிய இந்த கருணை வியக்கத்தக்கது.
இவர்களுக்கே இப்படிப்பட கருணை இருக்குமானால் இந்த உலகை படைத்து இயற்கையிலேயே உறவினனாய் எல்லாம் அறிந்தவனாய், உலகனைத்துக்கும் தலைவனாய், உயிர்கள் அனைத்துக்கும் தாயாய் தந்தையாய் உள்ள ஸ்ரீ பத்வத்ஸல பெருமாள்,தாயாருக்கும் பக்தர்களிடம் இருக்கும் கருணை பற்றி கேட்கவும் வேண்டுமோ?
பெருமாள் தன் பக்தனை ரக்ஷிப்பானா? மாட்டானா? என்னும் சந்தேகம் தேவையற்றது என எண்ணி, பக்தியால் உறுதி பூண்டு,தன்னை ஸ்ரீ பத்வத்ஸல பெருமாள், தாயாரிடம் ஒப்படைத்தவராய் எல்லா நித்ய, நைமித்திக கர்மானுஷ்டானத்தினையும் அடியோடு விலக்கி நாயைப்போல இரண்டு கைகளையும் கால்களாக்கி நான்கு கால்களை ஊன்றி நாய் போன்று நடந்து...
காலையில் ஊருக்கு வெளியே சென்று காலைக்கடன்களை முடித்து குளத்தில் குளித்து வஸ்திரமில்லாமல் (உடலில் துணிகள் இல்லாமல்) கைகளினையும் கால்களாக்கி நடந்து வேகமாக வந்து ஸ்ரீ பத்வத்ஸல பெருமாள் ஸன்னதியில் மகிழ மரத்தின் அடியில் பெருமாளை ஸ்துதித்தபடி மௌனியாய் கிடந்து, கிடைக்கும் பிரசாதத்தினை உண்டு வாழத்துவங்கினார்.
தன் பக்தனின் பக்தியில் மகிழ்வுற்ற ஸ்ரீ பத்வத்ஸல பெருமாள் ஓரிரவில் ஊர்மக்கள் அனைவர் கனவிலும் தோன்றி, எனது பக்தனான திருக்கண்ண மங்கை யாண்டானுக்கு அனைவரும் காணும் பொழுதில் மோக்ஷமளிக்கப்போகிறேன் எனக் கூறிட...
மறுதினம் பெருமாளை நோக்கி திருக்கண்ணமங்கையாண்டான் செல்ல பக்தர்கள் அனைவரும் தங்கள் கண்களால் கண்டுகொண்டிருக்கும் போது மின்னல் கூட்டம் போன்ற ஒரு பெரிய ஒளி ஆட்கொள்ள திருகண்ண மங்கை யாண்டான் பெருமாள் திருவடிகளை அடைந்தார்.
மோக்ஷத்தினை அடைந்த அவருடைய திருவரசு இன்றும் திருகண்ண மங்கை திவ்யதேசத்தில் ப்ராஹாரத்தின் வலது புறம் மகிழ மரத்தின் கீழ் செண்பக ப்ரஹாரத்தில் அமைந்துள்ளது.
திருவரசின் மேற்புறமும், ஆழ்வார்கள் சன்னதியிலும் திருக்கண்ணமங்கையாண்டான் மூலவராக சேவை சாதிக்கிறார். உத்சவர் திருமேனி கோவிலின் மூலவர் சன்னதியின் முன் வலது புறம் உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆனி ஸ்ராவணத்தின் போதும், திருக்கண்ண மங்கையாண்டான் உற்சவர் திருமேனிக்கும், அவரது திருவரசிலும் திருமஞ்சனம் சிறப்பாக நடைபெறுகிறது.
வெகுஜன மக்களால், ஏன் பக்தர்களால் கூட அதிகம் அறியப்படாத ஆழ்வார்களின் சரித்திரத்தினை விட உயர்ந்ததான, பக்தி மற்றும் ஸரணாகதி என்பதை தன் வாழ்க்கையின் மூலம் வாழ்ந்து காட்டிய,இம்மகானின் பெருமையை உணர திருக்கண்ணமங்கை சென்று ஸேவிக்கவேண்டும்.
ஆனி ஸ்ரவணத்துதித்தோன் வாழியே!c
C
No comments:
Post a Comment