வரலாற்று காலத்தில் காகதீய ராஜ்ஜியத்தின் தலைநகரமாக விளங்கிய காகதீபுரம் என அழைக்கப்பட்ட இந்த வாரங்கல் நகரனாது ஒருகல்லு என்றும் ஒம்டிகொண்டா என்றும் அழைக்கப்படுகின்றது. இங்கு அமைந்துள்ள ஒரு பிரம்மாண்டமான ஒற்றைப்பாறைக் குன்றே இப்பெயருக்கு காரணமாக விளங்குகிறது. புரோள ராஜ என்னும் காகதீய வம்சமன்னரால் நிர்மாணிக்கப்பட்ட இந்நகரானது கி.பி, 12ஆம் நூற்றாண்டிலிருந்து 14ஆம் நூற்றாண்டுவரை காகதீய வம்சத்தினராலேயே ஆளப்பட்டுவந்தது. இவ்வம்சத்தை சேர்ந்த மன்னர் பிரதாப ருத்ரா முசுன்றி நாயக்கர்கள் வீழ்த்தியபிறகு அவர்கள் வசம் 50 ஆண்டுகள் ஆளப்பட்டுவந்தது. நாயக்க தளபதிகளிடையே ஒற்றுமையில்லாததால் இவர்களின் ஆட்சிகாலமும் வம்சச் சண்டையினால் முடிந்துவிட, பாமினி அரசர்களின் ஆளுகைக்குள் சென்றது வாரங்கல். பிறகு 1687ஆம் ஆண்டு கோல்கொண்டா கோட்டையை முகலாயமன்னர் ஔரங்கசீப் கைப்பற்றிவிட அக்கோட்டையின் அங்கமாக இருந்த வாரங்கலும் முகலாயர் வசம் சென்றுவிட்ட வாரங்கல் 1724ஆம் ஆண்டுவரை முகலாயர் வசமிருந்தது. பின்னர் 1724ஆம் ஆண்டில் ஹைதராபத் சமஸ்தான ராஜ்ஜியம் உருவானபோது அதில் வாரங்கல்லும், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவின் சிலபகுதிகளும் ஹைதராபாத் சமஸ்தானத்திற்கு சென்றுவிட்டது.
வாரங்கல் கோட்டை:
தென்னிந்தய கட்டிடக் கலையின் மேன்மைக்கு சிறந்த உதாரணமாக திகழும் இக்கோட்டையானது கி.பி. 1199 ஆம் ஆணில் காகதீய வம்சத்தை சேர்ந்த மன்னர் கணபதி தேவ் என்பவரால் இக்கோட்டையின் கட்டுமான துவக்கப்பட்டு அவரது மகளான ராணி ருத்ரம்மா தேவியின் காலத்தில் 1261 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. அழகிய ஆபரணங்கள் போன்று வெகு நுணுக்கமான சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய வெகு சிக்கலான பல அலங்காரப் படைப்புகளுடன் உருவாக்கப்பட்டிருக்கும் இக்கோட்டையானது தற்போது சிதிலமடைந்து இருந்தாலும் இக்கோட்டையானது சாஞ்சி கட்டிடக்கலை பாணியிலிருப்பது போன்றே நான்கு பெரிய வாயில்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
ஆயிரம் தூண் கோயில்:
கி.பி. 1163 ஆம் ஆண்டில் காகதீய வம்சத்தை சேர்ந்த மன்னர் ருத்ரதேவ் என்பவரால் கட்டப்பட்ட இக்கோயில் விஷ்ணு, சிவன், சூரியன் ஆகியோருக்காக கட்டப்பட்டதாகும். நுணைக்கமான கலை அம்சத்துடன் 1000 தூண்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ள இக்கோயிலின் பின்னணில் வீற்றிருக்கும் ஹனுமகொண்டா மலையான இக்கோயிலின் அழகை மேலும் கூட்டுகிறது. இக்கோயில் வாசலில் அமைக்கப்பட்டுள்ள நந்தி சிலையானது வழவழப்பான ஒற்றைக் கல்லில் வடிக்கப்பட்டதாகும்.
பக்கல் ஏரி:
வாரங்கல் நகருக்குள் அருகில் உள்ள பக்கல் சரணாலயத்தில் அமைந்துள்ள இந்த ஏரியானது கி.பி. 1213 ஆம் ஆண்டில் காகதிய மன்னர் கணபதி தேவ் அவர்களின் ஆட்சிகாலத்தில் வெட்டப்பட்டதாகும். மயக்கவக்கும் இயற்கை காட்சிகளைக் கொண்ட இந்த ஏரியை சுற்றிலும் பசுமையே நிரம்பியுள்ளது. இந்த பக்கல் ஏரியின் கரைகளை ஒட்டியே அமைந்துள்ள பக்கல் சரணாலயத்தில், சிறுத்தைகள், உடும்புபல்லிகள், முதலைகள், கரடிகள், மலைப்பாம்பு மற்றும் ஓநாய்கள் போன்ற விலங்குகளும், பலவிதமான தாவரவகைகளும் உள்ளன.
பத்ரகாளி கோயில்:
வாரங்கல்லில் உள்ள பிரசித்திபெற்ற மிகப் பழமையான கோயில்களில் ஒன்றான வாரங்கல் பத்ரகாளி கோயிலானது சாளுக்கிய மன்னரான இரண்டாம் புலிகேசியால் 625ஆம் ஆண்டு கட்டப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அலாவுதீன் கில்ஜியின் படையெடுப்புக்கு பின் இக்கோயில் பாழடைந்த நிலைக்குச் சென்றாலும் 20ஆம் நூற்றாண்டின் மத்தியில் இக்கோயில் புணரமைக்கப்பட்டது. சாளுக்கிய கால கட்டிடக்கலை மேன்மைக்கு சான்றாக விளங்கும் இக்கோயிலைச் சுற்றிலும் இயற்கையாக உருவாகியுள்ள பாறைஅமைப்புகளும் காணப்படுகின்றன.
கோவிந்த ராஜுல குட்டா:
வாரங்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குகின்ற இவ்விடத்தின் மலை உச்சியில் ராமர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயிலைச சென்றடைவதற்காக மலைப் பாதையில் வெட்டப்பட்டுள்ள படிகளில் மிகுந்த கவனத்துடன் ஏறிச்செல்லவேண்டும். ஸ்ரீ ராமநவமி திருநாளன்று இத்திருத்தலத்தில் ஏராளமான ராமபக்தர்கள் வந்து இறைவனை வணங்கிச் செல்கின்றனர். அச்சமயம் மலையுச்சியில் வீற்றுள்ள பெரிய ரதம் ஒன்று விலை மதிப்பற்ற பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு காட்சியளிக்கிறது. இந்த ரதம் வாரங்கலை சேர்ந்த ஹஜாரி இனத்தாரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
வாரங்கல் பிளானெட்டேரியம்:
வாரங்கல்லில் உள்ள முக்கிய அறிவியல் பிரசித்திப்பெற்ற மையமாக திகழ்கின்ற இந்த வாரங்கல் பிளானெட்டேரியமானது பிரதாபருத்ரா பிளானட்டேரியம் என்றும் அழைக்கப்படுகின்றது. வானியல் குறித்த விழிப்புணர்வை மக்களிடமும் இளம்தலைமுறையினரிடமும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இக்கோளரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.அறிவியல் சிந்தனை மற்றும் ஆர்வம் போன்றவற்றை இளம் மாணவர்கள் மனதில் உருவாக வேண்டும் என்பதும் இந்த கோளரங்கத்தின் பிரதான நோக்கமாகும்.
பத்மாக்ஷி கோயில்:
12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் பத்மாக்ஷி தேவி என்ற பெண் தெய்வத்திற்காக கட்டப்பட்ட இக்கோயிலின்ன் வாயிற் பகுதியில் சதுரமான தூண் ஒன்று கருப்பு சலவைக் கல்லால் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகும். அன்னகொண்டா தூண்ம் என்றும் அழைக்கப்படுகின்ற இத்தூணில் காணப்படும் குறிப்புகளும் சித்தரிப்புகளும் இந்து ஒரு ஜைன கோயிலாகவும் விளங்கியிருக்கலாம் என்று எண்ணத்தோன்றும்.
ராக் கார்டன்:
வாரங்கல் கோட்டைக்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த ராக் கார்டனில், புள்ளிமான், வரிக்குதிரை, கொம்புமான் போன்ற விலங்குகளின் பாறை வடிவமைப்புகள் இந்த பாறைப்பூங்காவில் அமைக்கப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தத்ரூபமாக காட்சியளிக்கும் இந்த சிலை அமைப்புகள் இப்பகுதியிலுள்ள சிற்பக் கலைஞர்களின் திறமைக்கு சான்றாக உள்ளன.பலவிதமான ரோஜாச்செடிகள், மல்லிகைச் செடிகள் மற்றும் மரங்களும் இந்த பூங்கா வளாகத்தினுள் வளர்க்கப்பட்டுள்ளன.
Courtesy:kumudham.com
|
No comments:
Post a Comment