சமுதாயத்தில் எத்துணைதான் படித்திருந்தாலும், பெண்ணுக்குச் சம உரிமை இல்லை; பெண்கள் சரி நிகர் சமான நிலை பெற வேண்டும் என்பதே குறிக்கோள். பெண் பிரச்சினை, உரிமையே மையக் கருத்து. பெண்ணின் பெருமை பேசுவதே, அருமை பாராட்டுவதே அடித்தளம். இல்லத்தின் உயிர் நாடியே பெண்தான் என்பது. குடும்பச் சிக்கல்களை அலசுவது. பெண்மையின் மென்மை உணர்வுகள்/ஆண்மையின் வன்மை உணர்ச்சிகள், இவற்றின் உரசல்களால் உருவாகும் நிகழ்ச்சிகளைப் பின்னித் தருபவர்; அதேசமயம் நமது தமிழ் மரபினையும், இந்தியப் பண்பாட்டினையும் உயிராகப் பேணி எழுதி வருபவர் – அவர் தான் லக்ஷ்மி என்கிற டாக்டர் எஸ்.திரிபுரசுந்தரி (மது.ச. விமலானந்தம்)
சிதம்பரத்தை அடுத்துள்ள அம்மாபேட்டை என்ற சிறு கிராமத்தில் 1921ம் வருஷம் மார்ச் மாதம் 21 தேதி பிறந்தவர் லக்ஷ்மி. பெற்றோர் திருச்சி ஜில்லா தொட்டியம் கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீனிவாசன், பட்டம்மாள் என்ற சிவகாமி. உடன் பிறந்தவர்கள் ஐவர், நான்கு சகோதரிகள், ஒரு தம்பி.
தொட்டியம் தொடக்கப் பள்ளியிலும், முசிறி உயர் நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்ற லக்ஷ்மி, தனது உயர் நிலைக் கல்வியைத் திருச்சியிலுள்ள ஹோலி க்ராஸ் கல்லூரியில் தொடர்ந்தார். காரணம் ஐந்தாவது ஃபாரம் படிப்பை முடித்து எஸ்.எஸ்.எல்.சி வகுப்புக்குப் போக வேண்டிய சமயம், முசிறிப் பள்ளியின் தலைமையாசிரியர் “ஆண்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பள்ளியில் தொடர்ந்து வயது வந்த ஒரு பெண்ணைப் படிக்க அனுமதிக்க முடியாது” என்றதால்தான். சீரான போக்குவரத்து வசதிகள் இல்லாத காரணத்தால், முறையிட்டு, ஹாஸ்டல் வசதியைப் பெற்றார் லக்ஷ்மி. தமிழில் வகுப்பில் முதல் மாணவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் ஆண்டு ஒரு பரிசையும் பெற்றார். இண்டர் முடித்தவுடன் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், சென்னையிலுள்ள கல்லூரிகளுக்கு விண்ணப்பங்களை அனுப்பினார். முதலில் வெய்டிங் லிஸ்டில் இருந்த போதிலும் இவருக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிக்க இடம் கிடைத்தது.
முதல் ஆறுமாதங்கள் ப்ரி-ரிஜிஸ்ட்ரேஷன் ஸ்டான்லியிலும், கல்லூரியில் வசதிகள் இல்லாததால், அனாடமி, ஃபிசியாலஜி படிப்பை மதராஸ் மெடிகல் காலேஜில் இரண்டு வருஷங்கள் தொடர்ந்து, மூன்றாம் வருஷப் படிப்பைத் தொடர ஸ்டான்லி திரும்பினார். இவர் மருத்துவம் படித்த காலம் இரண்டாவது உலக மகா யுத்தம் நடந்து கொண்டிருந்த காலம். அதன் தாக்கங்கள் எப்படியிருந்தன என்பதை கதாசிரியையின் கதை என்ற தமது சுய சரிதத்தில் விவரமாக எழுதியிருக்கிறார் லக்ஷ்மி. மருத்துவம் படித்துக் கொண்டிருக்கும்போது ஏற்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள எழுத்தின் உதவியை நாடினார் லக்ஷ்மி. அக்காலத்தில் ஆனந்த விகடன் காரியாலயம் ஸ்டான்லிக்கு அருகே ப்ராட்வேயில் தான் இருந்தது. இதைப் பற்றி திருமதி பட்டம்மாள் வாசன் நினைவு கூர்கிறார்:
ஒரு நாள் லக்ஷ்மி ஃபோன் பண்ணினா. “நான் கதையெல்லாம் எழுதுவேன், உங்கள் கணவரைப் பார்த்துப் பேச வேண்டும், உதவி செய்வீர்களா?” நீ ஆஃபீசுக்குப் போனால் அவரைப் பார்க்கலாம் என்றேன். அவரிடம் “டாக்டருக்குப் படிக்க வேண்டும், எங்களுக்கு இப்போது நிதி வசதி சரியாயில்லை. என்னுடைய கதைகள் சிலதைக் கொண்டு தருகிறேன். பிரசுரித்துப் பண உதவி செய்தால் சந்தோஷப்படுவேன்” என்று கேட்டிருக்கிறாள். நல்ல கதைகள் என்றால் பிரசுரிப்போம் என்று சொன்ன வாசன், பின்னர் கதைகள் தரமாக இருக்கவே பிரசுரம் செய்து உதவினார்.
டாக்டர் படிப்பு முடித்ததும் லக்ஷ்மியின் குடும்பம் சென்னையிலேயே குடியேறிற்று. தங்கைகள் கல்யாணம் பொறுப்பேற்று நடத்தி முடித்தார். 1955ம் வருஷம் தானும் கண்ணபிரான் என்ற தென்னாப்பிரிக்கத் தமிழரை திருமணம் செய்து கொண்டார். சென்னையிலுள்ள அடையாறு தியோசாஃபிகல் சொசைட்டியில்தான் இந்தத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின் லக்ஷ்மி இருபத்தியிரண்டு வருஷங்கள் தென்னாப்பிரிக்காவில் தங்கியிருந்தார். மகப்பேறு வைத்தியராகப் பணியாற்றினார். இத்தம்பதிகளுக்கு மகேஸ்வரன் என்ற ஒரு பிள்ளை.
1966ம் வருஷம் கண்ணபிரான் இறந்தது லக்ஷ்மியை மிகவும் பாதித்தது. இருப்பினும் அங்கேயே தன் வாழ்க்கையைத் தொடர்ந்த லக்ஷ்மி 1977ம் வருஷம் சென்னை திரும்பினார். என்ன காரணமாகவோ அதன் பிறகு அவர் தொடர்ந்து எழுதவில்லை. மகேஸ்வரனையும் மருத்துவப் படிப்பில் சேர்த்து அவரையும் மருத்துவராக்கினார்.
பதினான்கு வயதிலேயே எழுத ஆரம்பித்த லக்ஷ்மி நாற்பத்தி ஐந்து ஆண்டுகள் படைப்பிலக்கியம் செய்து, ஆயிரத்துக்கும் மேலான சிறுகதைகள், நூற்றுக்கும் மேலான நாவல்கள் வெளியிட்டுள்ளார். மருத்துவம், மகப்பேறு போன்ற பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் எழுதியுள்ளார். வானொலி நாடகங்களும் எழுதியுள்ளார். இவரது முதல் நாவல் பவானி. பெண் மனம், மிதிலா விலாஸ் என்ற இரு நாவல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசையும், ஒரு காவிரியைப் போல 1984ல் சாகித்திய அகாதெமி விருதையும் பெற்றன. காஞ்சனையின் கனவு, பெண் மனம் என்ற நாவல்கள் காஞ்சனா, இருவர் உள்ளம் என்ற தலைப்புகளுடன் மூன்று தென் மொழிகளில் திரைப் படங்களாயின. இருவர் உள்ளம் படத்திற்கு, திரைக்கதை, வசனம் எழுதியது முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி.
லக்ஷ்மியின் மறைவு 1987ம் வருஷம் ஜனவரி மாதம் ஏழாம் தேதி சென்னையில். அவரது மறைவு குறித்து ஆனந்த விகடனில் (25-1-1987 – மீள் பதிப்பு ஆ.வி.11-3-2009) பட்டம்மாள் வாசன் நினைவு கூர்வது:
வாழ்க்கையில் நிறையச் சிரமப்பட்டிருந்தாலும், அவ பேசறப்போ சிரிச்சுண்டேதான் பேசுவா. சாகித்ய அகாடமி பரிசு வாங்கியதும் என்னைத் தேடி வந்து சொன்னது எனக்குப் பெருமையா இருந்தது. சமீபத்திலே எங்க வீட்டுக் கல்யாணத்துக்கு வந்திருந்தபோது ‘என் பிள்ளைக்குக் கல்யாணம் பண்ணப் போறேன்’ என்று ரொம்ப சந்தோஷமாச் சொன்னாள். அவ சாகும்போது, அந்த ஒரே பிள்ளையும் துரதிர்ஷ்டவசமா கிட்டக்க இல்லாம எங்கேயோ இங்கிலாந்திலேயா இருக்கணும்னு நினைச்ச போது என் மனசுக்கு கஷ்டமாயிருந்தது.”
No comments:
Post a Comment