Bhoo thatha's Blogspot

Search my older Blog

Thursday, January 7, 2010

positive attitude

அளப்பறிய சாதனை செய்திடும் அங்கஹீனர் !

""என்னால் ஆகாது, என்று கைட்டி மூலையில் உட்கார்ந்து காலத்தைக் கழிப்பவன் முட்டாள்'' என்ற பழமொழி யாருக்குப் பொருந்துமோ தெரியாது. ஆனால், அங்கக்குறைவான கே.எஸ்.ராஜண்ணாவிற்குப் பொருந்தவேப் பொருந்தாது. உண்மை.
காரணம் அவருக்கு இரண்டு கையும், இரண்டு காலும் இல்லை. ஆனால், அவரது சாதனை ஆச்சர்யத்தைத் தருகிறது. இரண்டு கையும், இரண்டு காலும் இழந்த நிலையில் இவ்வாறு எப்படி சாதிக்க முடியும் என்று எல்லாரும் மூக்கின் மேல் விரலை வைக்கும் அளவு ஆச்சர்யப்படுகிறார்கள் என்றால், அது உண்மையே !
வாழ்க்கையில் எதையும் தன்னம்பிக்கையோடும், திட மனதோடும் செயல்பட்டு வெற்றி காண வேண்டும் என்ற அளவில்லாத உறுதியுடன் சாதனை புரிந்து வரும் இந்த ராஜண்ணா கர்நாடக அங்கஹீனர் சங்கத்திலும், கர்னாடக அங்க குறைவுள்ளோர் வித்யா சங்கத்திலும் பெரிய பதவியிலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமல்ல ; அவரது மற்ற சாதனைக�ளாச் சொன்னால் யாரும் எளிதில் நம்ப மாட்டார்கள்.
விளையாட்டுத் துறையிலும் பங்கேற்று ஓட்டப்பந்தயம், டிஸ்கஸ் த்ரோ முதலிய நிகழ்ச்சியில் பங்கேற்றவர் என்பதோடு அதில் பரிசுகளும் பெற்றவர் என்பதையும் யாரும் எளிதில் நம்பமாட்டார்கள்.
அவரது துணிவைப் பாராட்டதவர்கள் யாரும் இல்லை. ஆச்சர்யம்தான்.
மத்தூர் அருகில் உள்ள கப்பா என்கிற கிராமத்தில் பிறந்தவர் ராஜண்ணா. பிறந்த 11 மாத குழந்தையாக இருந்தபோது போலியோவால் தாக்கப்பட்டார். சிகிச்சை துவங்கிய சில வருஷங்களில் கைகால் இரண்டும் இரத்த ஓட்டம் இல்லாததால் சுருங்கி இரண்டும் குச்சி போல் ஆகிவிட்டதாம். மேலும், அவரைக் காப்பாற்ற வேண்டுமானால் இரண்டு கை, கால் எல்லாம் வெட்ட வேண்டிய சூழ்நிலை, பரிதாபம்.
"" திட நம்பிக்கையுடன் என்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற ஒருவித ஆவேசம், வெறி, ஆண்டவன் மேல் கொண்ட அழியாத எண்ணம், விடாமுயற்சி தான் எனக்கு உள்ளது'' என்று கூறும் இந்த ராஜண்ணா
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் டிப்ளமோ படித்ததோடு மட்டும் அல்லாமல், அரசாங்க ரேஷன்கடை அரிசி, கோதுமை, மண்ணெண்ணெய் விற்கும் கடையிலும் ஆர்வம் கொண்டு நடத்தி வருவதோடு, சிறிய சிறிய கைத்தொழில் கூட நடத்தி வருகிறார்.
பெங்களூர் போன்ற பெரிய நகரங்களில் ஜனசஞ்சாரம் மிகுந்த பெரிய சாலைகளில் நடந்து போகும் போது மட்டுமல்ல ; ஆட்டோ,பஸ்,கார்,ஸ்கூட்டர் முதலிய வாகனங்களில் போகும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதில் எல்லாருக்கும் பயம், திகில்,படபடப்பு இருக்கும்.
ஆனால், ராஜண்ணாவோ யாரது உதவியில்லாமல், ஸ்கூட்டர், கார் முதலியவைகளைச் சர்வ சாதாரணமாக, ஓட்டுவதுதான் விந்தை !!
இந்த மாதிரி வாகனங்கள் ஓட்டுவதுகூட இவரேச் சொந்தமாகத் தானே பயிற்சி கொண்டு லைசென்ஸ் வாங்கியது வேறு விஷேஷம்.
ஆனால், இவருடைய ஆசை : ஏதாவது எலக்ஷனில் நின்று வெற்றி பெற வேண்டும் என்பதுதான். அதற்காக எம்எல்ஏ அல்லது எம்பி பதவி வேண்டும் என்ற ஆசை இல்லை. சாதாரணமாகத் தொழிற்சாலை ஊழியர்கள் சங்கம், அறிவாளிகள் சங்கம் இம்மாதிரி சிறிய தேர்தல்களில் வெற்றி பெற வேண்டும். தவிர அங்கஹீனம் இருந்தும் காரில், பரபரப்பான சூழ்நிலையில் சாலையில் கார் ஓட்டுவது குறித்துத் தனது சாதனையைக் கின்னஸ் புத்தகத்தில் வெளியிட ஆசை.
இவரது அரிய சேவை, நம்பிக்கை, விடாமுயற்சியின் காரணமாக சமூக சேவை, சிறிய கைத்தொழில், சித்திர கைத் திறன்,விளையாட்டு மற்றும் பல துறைகளில் இவரது பங்கு கண்டு மகிழ்ச்சி அடைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கொடுத்த சர்ட்டிபிகேட் முதலியவைகளைப் பார்க்கும்போது, அவர் மேல் கொண்டுள்ள நம்பிக்கையும் சாதித்து வாழ வேண்டும் என்ற உறுதியும் பாராட்ட வேண்டியதாகும் என்பது உண்மை.
செய்தி : ""விஜய கர்நாடகா''

No comments: