இளமை உற்சாகம்
இளமையில் உற்சாகத் துள்ளல் அதிகம் இருக்கும். இளம் வயதிலேயே அலெக்ஸாண்டர் உலகை வென்றான். நெப்போலியன் 25-ஆம் வயதிலேயே இத்தாலியை வெற்றி கொண்டான். பைரன் 37 வயதிலேயே புகழேணியில் இறந்தார். பாரதியார் 39 வயதில் அருட்கவியைக் கொட்டி தேசத்தைத் தட்டி எழுப்பி புகழுடம்பு எய்தினார். 39 வருடங்கள் வாழ்ந்தே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த பாரதத்தை ஆன்மீக விழிப்படையச் செய்தார் சுவாமி விவேகானந்தர். ஆறு மதங்களை நிறுவி இந்து மதத்தை புனருத்தாரணம் செய்ய பாரதமெங்கும் கால்நடையாகவே சென்று நான்கு இடங்களில் மடங்களை நிறுவி உலகின் குருவாக - ஜகத் குருவாக 33 வயதிலேயே திகழ்ந்தார் ஜகத்குரு சங்கரர்.
முதுமையிலும் உற்சாகம்
இளமையில் உற்சாகம் இயல்பே என்றால், முதுமையிலும் விடாப்பிடியாக அதைப் பிடித்தால் எப்படி இருக்கும்? வயதான ஹோமர் படைத்த உலக மகா காவியம் தான் ஓடிஸி.
'கவிஞர்களின் வாழ்க்கை வரலாறு' என்ற புத்தகத்தை டாக்டர் ஜான்சன் எழுதும்போது அவருக்கு வயது 71.
ராபின்சன் குரூஸோ எனும் உலகப் புகழ்பெற்ற நாவலை வெளியிடும்போது (DEFOE) டீபோவின் வயது 58. தனது "பிரின்சிபியா" என்ற நூலுக்கு விளக்கவுரை அளித்தார் நியூட்டன் தனது 83-ம் வயதில்.
ஆங்கில அகராதியைத் தொகுத்த வெப்ஸ்டர் ஐம்பது வயதிற்குப் பின்னர் 17 மொழிகளைக் கற்றார்.
பிராங்க் பெட்கரின் வெற்றி
பிராங்க் பெட்கர் உலகின் புகழ் பெற்ற சேல்ஸ்மேன் நம்பர் ஒன். அவர் ஆரம்பத்தில் பேஸ்பால் விளையாடுபவராக இருந்தார். எல்லாத் திறமைகளும் இருந்தும் கூட அவரை டீமிலிருந்து விலக்கி விட்டனர் - அவரிடம் உற்சாகம் இல்லை என்ற ஒரு காரணத்தால்.
அதே துறையில் வல்லுநரான ஒருவர் அவரிடம் அக்கறை கொண்டு, "பிராங்க் உன்னிடம் உற்சாகம் வேண்டும். வெற்றிக்கு அதுவே அடிப்படைத் தேவை" என்றார்.
"நான் என்ன செய்வது? அது என்னிடம் இல்லையே! கடையிலா வாங்க முடியும் அதை? என்னிடம் இல்லை என்றால் அது இல்லைதானே?" என்றார் பிராங்க்.
"அப்படி இல்லை பிராங்க், உற்சாகமுள்ளவனாக உன்னை ஆக்கிக் கொள். உற்சாகமுடன் விளையாடு. உற்சாகமுடன் இருப்பதுபோல் நட, விளையாடு. உற்சாகம் தானாக உன்னை வந்து அடையும். உறுதியான முனைப்புடன், உற்சாகத்துடன் நீ விளையாடினால் உனது இயல்பான திறமைகள் உன்னை சிகரத்தில் ஏற்றிவிடும்" என்றார் அவர்.
அப்படியே நடந்தது. பேஸ்பாலில் மட்டும் வெற்றி பெறவில்லை பிராங்க். பின்னர் சேல்ஸ்மேனாக ஆகி, உலகின் நம்பர் ஒன் சேல்ஸ்மேனாக உயர்ந்தார்.
உலகின் தலைசிறந்த சேல்ஸ்மேனாகத் தான் ஆனதற்கான காரணம் உற்சாகம் என்கிறார் பிராங்க் பெட்கர்.
"HOW I RAISED MYSELF FROM FAILURE TO SUCCESS IN SELLING" என்ற அவரது புத்தகம் படிப்பதற்குரியது.
இருப்பது போல
"இருப்பது போல" (AS IF) என்னும் இயற்கை விதி ஒன்று உண்டு.
உங்களிடம் இல்லாவிட்டாலும் கூட தேவையான குணம் இருப்பது போல நீங்கள் நடக்க ஆரம்பித்தால் நீங்கள் விரும்பும் குணம் தாமாக உங்களை வந்தடையும்.
ஜலதோஷம் போல எளிதில் தொற்றிக் கொள்ளக் கூடியது உற்சாகம். ஆனால் ஜலதோஷம் போலக் கெடுதலைச் செய்யாமல் நல்லதைச் செய்கிறது என்கிறார் நார்மன் வின்சென்ட் பீல்.
உற்சாகம் இருப்பது போலச் செயல்படுங்கள். தானே உற்சாகம் வந்து சேரும்.
தோரோ காட்டும் வழி
அமெரிக்கா தத்துவஞானி தோரோ காலை துயிலெழும் போது படுக்கையில் ஒரு 5 நிமிடம் இருந்தவாறே தன்னிடம் உள்ள நல்ல அம்சங்களை எல்லாம் எண்ணிப் பார்ப்பார். ஆரோக்கியமான உடல், விழிப்பான மனம், வேலையில் ஆர்வம், பிரகாசமான எதிர்காலம் தன்னை நம்பி உள்ள மக்கள்-இவற்றை எண்ணிப் பார்த்து இந்த "நல்ல செய்திகளை" முதலில் மனதில் போட்டு எழுந்திருப்பார். இந்த உத்தியைக் கடைப்பிடிப்பதால் வெளி உலகம் தரும் கெட்ட செய்திகள் அவரைப் பாதிக்காத அளவில் அவரது மனம் பண்பட்டது. ஆனால், நாளடைவில் நல்ல செய்திகள் மட்டுமே நிறைந்த நாட்களே அவருக்கு உருவாகத் தொடங்கின.
கெட்டவற்றைத் தூக்கி எறியுங்கள்
உற்சாகம் எப்போதும் தவழ ஒரு சிறிய உத்தி உண்டு. மனசாளரத்தைத் திறந்து கெட்ட எண்ணங்களை, கெட்ட செய்திகளை, கெட்டவை அனைத்தையும் ஒவ்வொன்றாகத் தூக்கி எறிவதுதான் அது.
சஞ்சலம் மிக்க சம்பவங்கள், தூக்கி எறிந்து பேசப்பட்ட வினாடிகள், துயரமான வார்த்தைகள், மனதை நோகச் செய்யும் செயல்கள், சிந்தனைகள் இவற்றால் நல்ல "மூடை" இழந்து எல்லாமே பாழாகிவிட்டது போல வரும் உணர்ச்சியை மாற்ற வல்லது இந்த உத்தி.
அமைதியான ஒரு இடத்தில் அமர்ந்தோ, படுத்தோ அன்று நடந்த ஒவ்வொரு உற்சாகமற்ற, வெறுப்பூட்டும் செயலை, சிந்தனையை "சம்பவத்தை மனதிலிருந்து எடுத்து, வெளியே போடுவது போல" பாவனையுடன் நினையுங்கள்.
அந்தச் செயல்களுக்கும் உங்களுக்கும் இனி சம்பந்தம் இல்லை. இப்போது வெற்றிடமாக இருக்கும் உங்கள் மனதில் உங்களுக்குப் பிடித்த வெற்றிகரமான, உற்சாகமாக செய்திகளை, சிந்தனைகளை நிரப்பி "நாளை நமதே", "நாளை வெற்றி நிச்சயம்" என்ற உணர்வுடன் உறங்கச் செல்லுங்கள்.
இந்த உத்தி தரும் அமைதியும், ஆனந்தமும் அனுபவித்தால் மட்டுமே புரியும்.
உற்சாகம் என்ற எரிபொருள், ராக்கெட்டான உங்களை வெற்றி விண்வெளியில் ஏற்றிவிடும்.
நன்றி-நிலா ச்சாரல்
Search my older Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment