அன்று மிதிலையின் வரலாற்றில் ஒரு பொன்னாளாக ஆகப் போகிறது.
முந்தைய நாள் அந்த நகருக்கு வந்து “மண்வழி நடந்து அடி வருந்தப் போன” அரசகுமாரன் மிதிலைச் செல்வியின் “கண்வழி நுழைந்திடும் கள்வனாகி” அவள் இதயத்தை ஆட்கொண்டு விட்டான். மகாமேரு போல நிற்கும் அந்த சிவதனுசு என்னும் வில்லை உடைக்கவேண்டும், பாற்கடல் பள்ளியில் பிரிந்த தெய்வ தம்பதியர் ஒன்று சேரவேண்டும் – அது ஒன்றுதான் பாக்கி. அண்ணலின் நெஞ்சிலும் அவளே நீக்கமற நிறைந்து விட்டாள். இரவு முழுவதும் அவளையே எண்ணி, எப்போது நிலவு மறையும், கதிரவன் உதிப்பான் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறான் இராமன்.
பொழுது புலரத் தொடங்குகிறது. அதைக் கம்பன் இப்படி விவரிக்கிறான் -
ததையும் மலர்த் தார் அண்ணல் இவ்வண்ணம்
மயல் உழந்து, தளரும் ஏல்வை
சிதையும் மனத்து இடருடைய செங்கமலம்
முகம் மலர, செய்ய வெய்யோன்,
புதை இருளின் எழுகின்ற புகர்முக யா-
னையின் உரிவைப் போர்வை போர்த்த
உதயகிரி எனும் கடவுள் நுதல் கிழித்த
விழியே போல், உதயம் செய்தான்.
(மிதிலைக் காட்சிப் படலம், 150)
[ததையும் மலர்த் தார் அண்ணல் – மலர்கள் அடர்ந்த மாலையணிந்த இராமன்; மயல் உழந்து – மயங்கி; தளரும் ஏல்வை – தளரும் காலத்தில்; செய்ய வெய்யோன் – இளஞ்சிவப்பாக எழும் சூரியன்; புகர்முக யானை – புள்ளிகளுடைய முகத்தயுடைய யானை; உரிவை – உரித்த தோல்; நுதல் – நெற்றி]
இருளைக் கிழித்துக் கொண்டு உதயகிரி மீது இளஞ்சூரியன் எழுகிறான். அது எப்படியிருக்கிறது? புதையிருள் வடிவம் கொண்ட கரிய யானையின் (கஜாசுரனின்) தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்திக் கொண்ட மாமலையாகிய மகாதேவனின் நெற்றிக் கண் திறப்பது போல் இருக்கிறதாம்!
சுடரோன் எழுந்து விட்டான். அவனது கதிர்கள் நாற்புறமும் பரவுகின்றன. அந்தக் காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.
எண்ண அரிய மறையினொடு கின்னரர்கள்
இசை பாட, உலகம் ஏத்த,
விண்ணவரும், முனிவர்களும், வேதியரும்
கரம் குவிப்ப, வேலை என்னும்
மண்ணும் மணி முழவு அதிர, வான் அரங்கில்
நடம் புரி வாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன், கனகச் சடை விரிந்தா-
லென விரிந்த – கதிர்கள் எல்லாம்.
(மிதிலைக் காட்சிப் படலம், 153).
[மறை – வேதம்; கின்னரர்கள் - குதிரை முகமும் மனித உடலும் கொண்டு பறந்து கொண்டே இசை பாடும் தேவ வர்க்கத்தினர்; வேலை – கடல்; மண்ணும் மணி முழவு – மார்ச்சனம் என்னும் மாப்பசை தடவப் பட்ட அழகிய மிருதங்கம்; வாள் இரவி – ஒளி பொருந்திய சூரியன்; கண்ணுதல் வானவன் – நெற்றிக் கண்ணுடைய சிவபிரான்]
தேவரும், முனிவரும், மனிதரும் புகழ்ந்தேத்த, ஆர்ப்பரிக்கும் அலைகடலே மிருதங்கமாக ஒலிக்க, அந்த வான் அரங்கில் சிவ நடனம் நிகழ்கிறது. ஆடும் கூத்தனின் செஞ்சடை விரிவது போன்று கதிர்கள் விரிந்து உலகனைத்தையும் தீண்டுகின்றன.
இப்படி, சீதா கல்யாணம் நடக்கும் அந்த சீரிய நாளின் உதயத்தை சிவனது திருக்காட்சியாகக் கம்பன் வர்ணித்திருக்கிறான். சிவதனுசை முறிக்கப் போகும் மாவீரனின் பெருமைக்கு அந்த நாளின் உதயமே கட்டியம் கூறுகிறது என்பதைக் குறிக்கத் தானோ?
சபை கூடிவிட்டது. அரசகுமாரர்களை விசுவாமித்திர முனிவர் ஜனக மகாராஜனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார். ”குழந்தாய் ராமா, இந்த வில்லைப் பாரேன்” (”வத்ஸ ராம, தனு: பஷ்ய” – வால்மீகி) என்று குறிப்புணர்த்துகிறார் முனிவர். முனிவரின் நினைப்பைப் புரிந்து கொண்ட இராமன் எழுகிறான். அதைக் கம்பன் பாடும் அழகு தான் என்னே!
பொழிந்த நெய் ஆகுதி வாய்வழி பொங்கி
எழுந்த கொழுங்கனல் என்ன எழுந்தான்;
“அழிந்தது வில்” என வானவர் ஆர்த்தார்;
மொழிந்தனர் ஆசிகள் முப்பகை வென்றார்;
(கார்முகப் படலம், 26)
[கொழுங்கனல் – கொழுந்து விட்டெரியும் தீ; முப்பகை வென்றார் – காமம், கோபம், மயக்கம் முதலாகிய மூன்று பகைகளையும் வென்ற முனிவர்கள்]
வேள்வியின் முடிவில் பூர்ணாகுதியாக சொரிந்த நெய் முழுதும் வழிய, வேள்வித் தீ ஜுவாலையாகக் கொழுந்து விட்டு விண்ணை நோக்கி எழுவது போல, இராமன் எழுந்தானாம்! கார்மேக வண்ணனைத் தீவண்ணனாக இங்கே கவி சித்தரிக்கிறார். (”செழுநீர்ப் புனற்கங்கை செஞ்சடை மேல் வைத்த தீவண்ணனே” – அப்பர் தேவாரம்)
இந்த உவமை மிகவும் அழகானது. வேட்டல் என்றால் விரும்புதல். வேள்வி என்ற சொல் அதிலிருந்து வருகிறது. தெய்வீக சங்கல்பமே இச்சையாக மாறி வேள்வியாக உருக்கொள்கிறது. வேள்வியின் விளைவான பலன் நெருங்கப் போகிறது என்பதை உணர்த்தும் வகையில் தீ எழுவது போன்று, சீதா ராமர் திருமணம் நடக்க வேண்டும் என்ற தெய்வ சங்கல்பத்தின் உருவாக ராமன் வில்லுடைக்க எழுகிறான்.
சூரிய, சந்திரரை திருமாலின் கண்களாகக் கூறுவது மரபு. ”திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற்போல், அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்” என்பது திருப்பாவை. அதே போன்று சூரியன், சந்திரன், அக்னி இவை மூன்றையும் சிவனது முக்கண்களாகக் கூறுவார்கள். மூன்றாவதாகிய நெற்றிக் கண் அக்னி வடிவானது. நாளின் உதயத்திலேயே ராமனைத் தீண்டிய செங்கதிரின் உள்ளுறை பொருளான அந்த அக்னி வடிவமாக இங்கே ராமன் வில்லுடைக்க எழுகிறான் என்றும் கொள்ள இடமிருக்கிறது. ”பொறுமையில் பூமிக்கு நிகரானவன், அறத்திற்காகக் கோபமுறும் தருணத்திலோ காலாக்னிக்கு நிகரானவன்” (காலாக்னி ஸத்ருச: க்ரோதே, க்ஷமயா ப்ருத்வீ ஸம:) என்றல்லவோ வால்மீகி முனிவர் ராமனின் குணாதிசயங்களைப் பட்டியலிடுவார்!
’கங்கை வார் சடை’
அயோத்தியா காண்டத்தில் மற்றொரு காட்சி.
நகரை விட்டு நீங்கி ராமனும், சீதையும், லக்ஷ்மணனும் வனத்துக்குள் நுழைகிறார்கள். கங்கைக் கரையை அடைந்து முனிவர்களின் உபசாரத்தை ஏற்று, கங்கையில் நீராடச் செல்கிறார்கள்.
நுரைத்து ஓடும் கங்கை நீரின் துளிகள் ராமனின் சடைக் கற்றைகள் வழியாக விழுகின்றன. திரண்ட அவன் புயங்கள் அந்த நீரில் ஜொலிக்கின்றன. தன் கணவனைக் கண்டு ரசித்துக் கொண்டிருக்கிறாள் சீதை. கம்பனின் கவிதை இதைக் காட்சியாக விரிக்கிறது –
வெங்கண் நாகக் கரத்தினன், வெண் நிறக்
கங்கை வார் சடைக் கற்றையன், கற்புடை
மங்கை காண நின்று ஆடுகின்றான், வகிர்த்
திங்கள் சூடிய செல்வனின் தோன்றினான்.
(கங்கைப் படலம், 18)
[வெங்கண் நாகக் கரத்தினன் – வெம்மையான கண்களைக் கொண்ட நாகங்களைக் கரத்தில் ஆபரணமாக அணிந்த சிவன்; சிறிய கண்களைக் கொண்ட யானையின் துதிக்கை போன்ற கம்பீரமான கரங்களைக் கொண்ட இராமன்; வகிர்த் திங்கள் – பிறை நிலா]
தில்லை அம்பலத்திலே உமையவள் மகிழ்ந்து காண கௌரி தாண்டவம் ஆடிய கங்காதரனின் திருவுருவை ஸ்ரீராமனின் கங்கை நீராட்டத்தில் இணைத்துக் காட்டுகிறது கம்பன் கவி. வைணவத்தையும், சைவத்தையும் மட்டுமல்ல, வடக்கையும், தெற்கையும் கூட இணைக்கிறது.
காசி ராமேஸ்வரம்:
வால்மீகி ராமாயணத்தில் சேதுக் கரையில் ஸ்ரீராமன் சிவபூஜை செய்ததாக வரும் பிரசங்கம் இல்லை. ஆனால் கம்பராமாயணத்தில் உள்ளது.
இலங்கையிலிருந்து புஷ்பகவிமானத்தில் திரும்பும்போது சீதைக்கு சேதுவைக் காட்டி அதன் மகிமையை விரிவாக இராமன் விளக்குகிறான். சேதுக் கரையில் இறங்கி திருவணையை வாய் கீறி, அந்த அணைக்குத் தெய்வங்களைக் காவலாக நிறுத்துகிறான். அகத்தியர் அப்போது அங்கு வந்து ராமனைச் சந்தித்து, சிவபூஜை செய்யுமாறு கூறுகிறார். கங்கையிலிருந்து சிவலிங்கம் கொண்டுவர அனுமன் போய் வரத் தாமதமாகிறது. அப்போது -
காலம் சென்றது எனக் கருதி, கையால்
கோலமான மணலினைக் கூட்டியே
‘ஆலம் உண்டதே இவர் ஆம்’ என
ஞாலம் உண்டவர் தம் மனம் நாட்டவே.
[ஆலம் – ஆலகால விஷம்; ஞாலம் உண்டவர் – பிரளய காலத்தில் உலகனைத்தையும் தன் வயிற்றில் ஒடுக்கும் மகாவிஷ்ணுவாகிய ராமன்]
’முகுத்தம் ஆனதே’ என முனி மொழிதலும், இராமன்
மிகுத்தது ஓர் இடத்து எய்தியே, வெண்மணல் கூப்பி
அகத்தினில் புறம் பூசித்தே, அடி மலர் இறைஞ்சி
செகுத்த தோளுடைத் தம்பியும், சீதையும், தானும்
[முகுத்தம் – முகூர்த்தம்]
ஒத்தபூசனை செய்யவும், அமைதியின் உள்ளச்
சுத்தி மேவிய ஞானமும் தொடர்விடாது இருந்தோன்
அத்தன் பாதகம் ஆனவை அழிதர இயற்றி
சித்தம் வாழ்தர நின்றனன் தேவர்கள் துதிப்ப.
(யுத்தகாண்டம், மீட்சிப் படலம், 34-36. கம்பன் கழகப் பதிப்பு, பக்-1678)
கம்பன் வாழ்ந்த காலகட்ட்த்தில் (11-ஆம் நூற்றாண்டு) இராமேஸ்வரம் பற்றிய இந்தப் புராண ஐதிகம் தமிழகத்தில் நிலைபெற்றிருந்தது. 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த திருஞானசம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் தேவாரப் பதிகங்களிலேயே இராமேஸ்வரம் குறிப்பிடப் படுகிறது.
தேவியை வவ்விய தென்னிலங்கை அரையன் திறல் வாட்டி
ஏவிய வெஞ்சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை..
[வவ்விய – கவர்ந்து சென்ற; வாட்டி – அழித்து; வெஞ்சிலை – வெம்மை தரும் வில்]
கம்பனுக்கு முன்பே ஸ்ரீராமனை அண்ணல் என்று அழைத்திருக்கிறார் சம்பந்தர்!
தமிழகம் மட்டுமல்ல, கர்நாடகத்திலும் மைசூர்ப் பகுதியில் காவிரி சங்கமத்தில் ராமநாதபுரா என்ற ஊரில் இதே ஐதிகத்துடன் கூடிய பழமையான கோயில் உள்ளது. ஆந்திராவில் வாரங்கலுக்கு வடக்கே “ராமப்பா குடி” என்றே ஒரு ஊரும், அதில் காகதீயர் காலத்திய ராமலிங்கேஸ்வர ஸ்வாமி கோயிலும் உள்ளது. மிக அழகிய வேலைப் பாடுகள் கொண்ட ஒரு மாபெரும் சிற்ப அற்புதம் இந்தக் கோயில். எனவே ராமேஸ்வரம் பற்றிய ஐதிகமும் ஒரு தொன்மை மரபு தான் என்பதில் ஐயமில்லை.
வால்மீகியின் ராமன் “ஆத்மானம் மானுஷம் மன்யே” என்று தன்னை மனிதனாகவே கூறிக் கொள்பவன். அந்த இலக்கணத்தின் படியே பெரியோர்களையும், தேவதைகளையும், முனிவர்களையும் அவன் வணங்கிச் செல்வதாக நெடுகிலும் வால்மீகி முனிவர் சொல்லிச் செல்கிறார். உலக அன்னையாகிய சீதாதேவி படகில் கங்கை நதியைக் கடக்கையில் (இன்றைக்கும் இந்துத் தாய்மார்கள் செய்வது போன்று) தங்கள் குடும்பத்தையும், குலத்தையும் காக்கவேண்டும் என்று கங்கையையும், யமுனையையும் வேண்டிக் கொள்கிறாள், நேர்த்திக் கடன் செலுத்துவதாகவும் பிரார்த்தனை செய்கிறாள்! கானகத்தில் புனித விருட்சங்களை ராமரும், சீதையும் வணங்குவதாகவும் வருகிறது.
இதனால் இராமன் பரம்பொருளின் அவதாரம் என்ற கருத்து ஒரு மட்டுக் குறைகிறது என்று சில சமயவாதிகள் எண்ணினால் அது அறியாமையும், ஸ்ரீராமனின் அவதார ரகசியத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாததன் விளைவுமே ஆகும். போரில் இறந்த வானரர்கள் அனைவரையும் உயிர்ப்பித்த ராமன் ஜடாயு இறந்தபோது கதறி அழுகிறான். அதற்கு எப்படி தர்க்கபூர்வமாக விளக்கம் கொடுக்க முடியும்? இவையனைத்தும் அவனது அலகிலா விளையாட்டு, “நடையின் நின்றுயர் நாயகனின்” தெய்வலீலையில் ஒரு அங்கம் என்று தான் கொள்ளவேண்டும். அவனது சிவபூஜையும் அவ்வாறே என்றே கருதிக் கம்பன் தன் காவியத்தில் அதனைச் சேர்த்திருக்க வேண்டும்.
அதோடு, பிரம்மஹத்தி (அல்லது வீரஹத்தி) தோஷம் அகல்வதற்காக ராமன் சிவபூஜை செய்தான் என்றும் சொல்லப் படுகிறது. அதர்மத்தை அழித்தொழித்த ஸ்ரீராமனின் செய்கை எப்படி பாவமாகவும், தோஷமாகவும் ஆகக் கூடும்? ராமாயணத்தின் மையத் தத்துவத்திற்கே முரணாக அல்லவா இருக்கிறது இது! இந்த ஐதிகம் சாதிய, ஜோதிட, பரிகார வெறியர்களால் ஒரு கட்ட்த்தில் நுழைக்கப் பட்டிருக்க வேண்டும். இந்தப் பிரசங்கத்தை மட்டுமல்ல, இதிகாச புராணங்களின் எல்லா நிகழ்வுகளையுமே நாள்கள் கோள்களின் பலன்களாகவும், விதிப் பயன்களாகவுமே சித்தரிக்கும் ஒருவித இயந்திரத் தனத்தின் விளைவு அது. (உதாரணமாக: ஏன் ராமன் காட்டுக்குப் போக நேர்ந்தது என்றால் அவன் ஜாதகத்தில் அப்படி இருந்தது, சீதையின் ஜாதகமும் அப்படி இருந்த்து; வசிஷ்டர் பட்டாபிஷேகத்திற்குக் குறித்த நாள் சரியில்லை.. இப்படியாக அது போய்க் கொண்டிருக்கும்). இத்தகைய ஒரு கண்ணோட்டம் ஜோதிடப் பிரியர்களான ஒரு சிறு கூட்டத்தாருக்கு சுவாரஸ்யம் தருவதாக இருக்கலாம். ஆனால் இந்தக் கண்ணோட்டம் இதிகாச, புராண நிகழ்வுகளில் அற்புதமாக இழையோடும் ரசானுபவத்தையும், அவற்றின் இயல்புத் தன்மையையும், பல சமயங்களில் அவற்றின் தெய்வீக, தத்துவ பரிமாணங்களையுமே குலைப்பதாக இருக்கிறது. எனவே இந்த “தோஷ நிவாரண” ஐதிகத்தை நிராகரித்து, தெய்வலீலையின் ஒரு அங்கமாக மட்டுமே ராமனின் சிவபூஜையைக் கருதவேண்டும்.
ராமேஸ்வர: என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு சமத்காரமாக மூன்று விதங்களில் பொருள் கொள்ளலாம். ராமனாகிய ஈஸ்வரன் (ராம: ஈஸ்வரஸ்ச), ராமனுக்கு ஈஸ்வரனாகிய சிவன் (ராமஸ்ய ஈஸ்வர: ), ராமனைத் தனக்கு ஈஸ்வரனாகக் கொண்ட சிவன் (ராம: யஸ்ய ஈஸ்வர: ) !
ராமேஸ்வரத்தின் ஐதிகத்திற்கு இணையாக, காசியில் சிவன் எப்போதும் ராம நாம தியானத்தில் இருக்கிறார் என்றும், இறக்கும் உயிர்களின் காதில் தாரக மந்திரமான ராமநாமத்தை உபதேசித்து அவைகளைக் கரையேற்றுகிறார் என்றும் ஒரு தொன்மை மரபு உள்ளது.
அதையும் கம்பன் சொல்லியிருக்கிறான்.
வாலிவதம் நிகழ்ந்தவுடன், ராமன் வாலிக்கு முன்னே தோன்றுகிறான். நீண்ட விவாத்த்திற்குப் பின், வாலி ஸ்ரீராமனது அவதார ரகசியத்தை உணர்கிறான். தன் உயிர் போகும் தறுவாயில் பலவாறு பரம்பொருளான ராமனைத் துதிக்கிறான். இந்தத் துதிப் பாடல்கள் அனைத்துமே மிக அழகானவை.
ஏவுகூர் வாளியால் எய்து நாய் அடியனேன்
ஆவிபோம் வேலைவாய் அறிவு தந்து அருளினாய்;
மூவர் நீ; முதல்வன் நீ; முற்றும் நீ; மற்றும் நீ;
பாவம் நீ; தருமம் நீ; பகையும் நீ; உறவும் நீ;
(வாலிவதைப் படலம், 129)
[ஏவுகூர் வாளியால் – விரைந்துசெல்லக் கூடிய கூரிய அம்பால், வேலைவாய் - வேளையில்]
மாவலச் சூலியார் வாழ்த்துநர்க்கு உயர்வரம்
ஓவல் அற்று உதவல் நின் ஒரு தனிப் பெயர் இயம்பு
ஆவலிப்பு உடைமையால் ஆகும்; அப்பொருளை யான்
தேவ நிற்கண்ட எற்கு அரிது எனோ தேரினே!
(வாலி வதைப் படலம், 128-1, கம்பன் கழகப் பதிப்பு பக்-744).
[மாவலச் சூலியார் – பெரிய வலியுமையுடைய சூலத்தை ஏந்தியவரான சிவபிரான்; வாழ்த்துநர்க்கு – தம்மைப் போற்றுபவர்களுக்கு; ஓவலற்று உதவல் – குறைவில்லாமல் அருளுதல்; ஆவலிப்பு உடைமை – பெருமித உணர்வு கொண்டமை; தேவ – தேவனே; தேரினே – எண்ணிப் பார்க்கையில்; நிற்கண்ட எற்கு அரிது எனோ – அப்பேர்ப்பட்ட உன்னையே கண்ட எனக்கு கிடைத்தற்கரியது என்று இனி என்ன உள்ளது?]
சிவபிரான் தன் பக்தர்களுக்கு வரங்களை வாரி வழங்குவது ராம நாம மகிமையினாலேயே என்று இந்தப் பாடலில் உணர்த்தப் படுகிறது.
வாலி ஒரு சிறந்த சிவபக்தன். இது கம்பராமாயணம் கிஷ்கிந்தா காண்டத்தில் பல இடங்களில் குறிப்பிடப் படுகிறது. நாள் தவறாமல் சிவபூஜை செய்து வருபவன் வாலி என்ற குறிப்பு தாரை புலம்பலில் வருகிறது (“அணங்கார் பாகனை ஆசைதோறும் உற்று, உணங்கா நாள்மலர் தூய் உள் அன்பினால் …. வணங்காது இத்துணை வைக வல்லையோ?”). அத்தகைய வாலி, தன் இறுதிக் காலத்தில் ஸ்ரீராமதரிசனமும் மோட்சமும் கிடைத்த பாக்கியத்தை இப்பாடலில் வியந்து போற்றுகிறான். வாலியின் சிவ வழிபாட்டின் பலனாக, அவனுக்கு இறுதிக் காலத்தில் ராமபக்தி சித்தித்தது என்று இதன்மூலம் குறிப்புணர்த்தப் படுகிறது என்றும் கொள்ளலாம்.
அனுமன் அருள்நடம்:
கிஷ்கிந்தா காண்டத்தில் ஒரு காட்சி.
பிரம்மசாரி உருவில் சென்று ராமலட்சுமணர்களை சந்தித்துப் பின்னர் அவர்களுக்குத் தனது உண்மையுருக் காட்டியதன் பின், அதனை அறிவிக்க சுக்கிரீவனிடம் ஓடோடி வருகிறான் அனுமன். ”சுக்ரீவா, நமது துன்பக் கடலைக் கடந்து விடுவோம், அளவற்ற வலிமையுடைய வாலியின் உயிரைக் கவர காலன் வந்துவிட்டான்” என்று அறிவிக்கிறான்!
மேலவன் திருமகற்கு உரைசெய்தான் – ‘விரை செய் தார்
வாலி என்ற அளவு இலா வலியினான் உயிர் தெறக்
காலன் வந்தனன்; இடர்க் கடல் கடந்தனம்’ எனா
ஆலம் உண்டவனின் நின்று அருள்நடம் புரிகுவான்.
(நட்புக் கோட் படலம், 2)
[விரை செய் தார் வாலி – மலர்களால் செய்த மாலை அணிந்த வாலி; வலியினான் – வலிமையுடையவன்; உயிர் தெற – உயிரைக் கவர]
அப்படி அறிவித்த்தோடு, ராமனைச் சந்தித்த மகிழ்ச்சியில் நடனமும் ஆடுகிறானாம் அனுமன்! எத்தகைய நடனம்? “ஆலம் உண்டவனின் நின்று அருள்நடம்” என்கிறான் கம்பன்.
அனுமன் ராமலட்சுமணர்களை சந்திக்கும் கட்டத்தில் வரும் அற்புதமான பாடல்களிலேயே கம்பன் இந்த அருள்வடிவத்தை நமக்குக் கோடி காட்டி விடுகிறான். அனுமன் ஒன்றும் அதிகமாகப் பேசவில்லை, ஆனால் அவனது சுருக்கமான முகமன் மற்றும் கேள்விகள் முடிந்ததுமே, ராமன் லஷ்மணனிடம் கூறுகிறான் –
இல்லாத உலகத்து எங்கும் இங்கு இவன் இசைகள் கூரக்
கல்லாத கலையும் வேதக் கடலுமே என்னும் காட்சி
சொல்லாலே தோன்றிற்று அன்றே! யார்கொல் இச்சொல்லின் செல்வன்?
வில்லார்தோள் இளைய வீர! விரிஞ்சனோ? விடைவலானோ?
(அனுமப் படலம், 18)
[இசைகள் கூர – புகழ்ச்சிகள் விளங்க; காட்சி – அறிவு; விரிஞ்சனோ – பிரமனோ; விடைவலானோ – ரிஷபவாகனன் ஆகிய சிவனோ]
லக்ஷ்மணா! இவன் கல்லாத கலை என்று ஒன்று உண்டா? அப்படி உண்டானால், அது இல்லாத உலகத்தில் தான் இருக்க வேண்டும்! யாரப்பா இந்தச் சொல்லின் செல்வன்? இவன் பிரமனோ? சிவனோ? “வில்லார்தோள் இளையவீர” - இவ்வளவு பெரிய வில்லைக் கையில் வைத்திருக்கிறாய் எல்லாம் சரிதான், ஆனால் இது கூடப் புரியலையா உனக்கு?
பிறகு மேலும் விளக்கிச் சொல்லுகிறான் -
மாணி ஆம் படிவம் அன்று மற்றிவன் வடிவம்; மைந்த!
ஆணி இவ்வுலகுக்கு எல்லாம் என்னலாம்..
[மாணி – பிரமசாரி; படிவம் – உருவம்]
இது ஏதோ சாதாரணப் பிரமசாரி என்று நினைத்து விடாதே. உலகிற்கெல்லாம் ஆதாரமான பொருளின் வடிவம் தம்பி!
ராமனின் பரம பக்தனான அனுமன் சிவாம்சம், சிவஸ்வரூபம் என்றே ராமாயணம் கூறுகிறது.
ராமாவதாரத்தின் போது, அவதார நோக்கத்திற்கு உதவ அனைத்து தெய்வங்களும் வெவ்வேறு உருவங்களில் அவதரிக்கின்றனர். (”அன்னவாறு எவரும் நீர் போய் அவதரித்திடுமின் என்றான்” - திருஅவதாரப் படலம், 25). அனுமன் வாயு மற்றும் சிவபிரான் ஆகிய இருவரது அம்சங்களும் ஒன்றிணைந்து அவதரிக்கிறார் -
வாயு ’மற்று எனது கூறு மாருதி’ எனலும், மற்றோர்
’காயும் மற்கடங்கள் ஆகி, காசினி அதனின் மீது
போயிடத் துணிந்தோம்’ என்றார்; புராரி ‘மற்று யானும் காற்றின்
சேய்’ எனப் புகன்றான்; மற்றைத் திசையுளோர்க்கு அவதி உண்டோ?
(திருஅவதாரப் படலம், 27)
[மற்கடங்கள் – குரங்குகள்; காசினி – உலகம்; புராரி – சிவபெருமான்; திசையுளோர் – தேவர்கள்; அவதி – எல்லை]
ஆஞ்சநேய அஷ்டோத்திரத்தில் “ருத்ர வீர்ய ஸமுத்பவ:” என்ற நாமம் உள்ளது. துளசிதாசர் எழுதிய ஹனுமான் சாலீஸா என்ற அனுமன் துதிப் பாடல் பாரத்த்தின் பல பகுதிகளிலும் பிரபலமானது. இதில் ஒரு பாடலில் “சங்கர ஸுவன பவானீ நந்தன” என்று துளசிதாசர் அனுமனை சிவனின் புதல்வனாகவே போற்றுகிறார். அவரது ராமசரிதமானஸ் என்கிற ராமாயண நூலிலும், “சங்கட மோசன்” என்னும் மற்றொரு துதிப் பாடலிலும் பல இடங்களில் அனுமனை சிவஸ்வரூபமாகப் போற்றும் வரிகள் உள்ளன. வடபாரதத்தில் எல்லா அனுமன் கோவிலிலும் சிவலிங்கம் உண்டு. எல்லா சிவன் கோவில்களிலும் அனுமன் சன்னிதியும் உண்டு! தென்னகத்திலும் எல்லா பழமையான சிவன் கோயில்களிலும் தூண்களில் அனுமார் திருவுருவம் இருக்கும்.
பல ராமாயண நூல்களிலும் தெளிவாகவே பேசப் படும் இந்தக் கருத்தை ஒருமுறை சொன்னபோது, ஸ்ரீவைஷ்ணவ நண்பர்கள் ஒரு சிலருக்கு இது பெரும் எரிச்சலை உண்டுபண்ணியது. ஸ்ரீராமனின் பரமபக்தன் என்ற ஸ்தானத்தில் கூட இப்படி சிவனை ஏற்றுக் கொள்ளவேண்டி வருகிறதே என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. அனுமன் சிவாம்சம் என்பதே இடைச் செருகல் என்று கூறத் தொடங்கினர்! அந்த அளவிற்கு இறுக்கமான சமயவாதம் போலும் என்று எண்ணிக் கொண்டேன். ஆனால் பெரும்பாலான தெய்வ பக்தியுள்ள இந்துக்களுக்கு இத்தகைய சமயவாத பிரசினைகள் இல்லை என்பதே உண்மை.
சிவ-விஷ்ணு ஐக்கியம்:
கம்பனுக்கும் இத்தகைய பிரசினைகள் ஏதும் இருக்கவில்லை.
ஒரு மழைக்கால நாள். சோழவள நாட்டிலே, பசுமை அலையடிக்கும் நெல்வயல்கள் சூழ்ந்த ஒரு காவிரி வாய்க்கால் கரையில் உட்கார்ந்திருக்கிறான் கவிச்சக்கரவர்த்தி. கடவுள் வாழ்த்து முடித்துத் தன் அமர காவியத்தை எழுத ஆரம்பித்திருக்கிறான். முதலில் பாடவேண்டியது கோசல நாட்டு வளம். காவிரிக் கரையில் அமர்ந்த கவிமனம் சரயு நதியில் சஞ்சரிக்க ஆரம்பித்து விட்டது.
“… கோசலம் புனை ஆற்று அணி கூறுவாம்” என்று நிறுத்தி வானத்தை நிமிர்ந்து பார்க்கிறான்.
காலையில் கண்ட வெண்மேகக் கூட்டங்கள் எல்லாம் கடலுக்குப் போய் மேய்ந்து விட்டுக் கருமேகமாகித் திரண்டு வந்து விட்டன. சில கணங்களில் மழை பொழிய ஆரம்பித்து விட்டது. இந்தக் வெண்மேக-கருமேக விளையாட்டைப் பார்த்துக் கொண்டேயிருக்கிறான். நல்லவேளை அவனுக்கு ஆரிய-திராவிட இனவாதமோ, அல்லது கருப்புப் பணத்தை மறுபடி வெள்ளைப் பணமாக்குவது பற்றிய பொருளாதார நுட்பங்களோ மனதுக்கு வரவில்லை. கொடுத்து வைத்தவன் தெய்வீகக் கவிஞன். பாடுகிறான் -
நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று ஆர்கலி மேய்ந்து, அகில்
சேறு அணிந்த முலைத் திருமங்கை தன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே.
(ஆற்றுப் படலம், 2)
அந்த வெண்மேகம் நீறு அணிந்த கடவுள். அது தலையில் “ஆறு அணிந்து” சென்று அலைகடலை முகந்து எடுத்து, கார்மேகக் கடவுளாகத் திரும்பி வருகிறது. செல்வத் திருமகளையே மார்பில் அணிந்த அந்தக் கார்மேகம், உலக உயிர்கள் சகல செல்வங்களும் பெற்று வளமுடன் வாழ வேண்டி மழையாகப் பொழிகிறதாம்!
காவியத் தொடக்கத்திலேயே சிவனையும் திருமாலையும் இணைத்து ஹரி-ஹர வந்தனமாக இந்த அருமையான பாடலைச் செதுக்கிய கம்பனின் கவிதா விலாசத்தை என்னவென்று புகழ்வது!
இன்னொரு காட்சி.
சீதா தேவியைத் தேடுவதற்காக நாற்புறமும் சேனைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறான் சுக்ரீவன். தென்திசைக்கு அங்கதனையும், அனுமனையும் தலைவர்களாகக் கொண்ட சேனை புறப்பட்த் தயாராக நின்று கொண்டிருக்கிறது. அப்போது சேனைத் தலைவர்களுக்கு வழிகூறுவது போல அமைந்த பாடல்களில் பாரத பூமியின் பல்வேறு பிரதேசங்களின் சிறப்புக்களையும் பெருமிதத்துடன் எடுத்தோதி வருகிறான் சோழநாட்டுக் கவி.
கோதாவரி நதிக்கப்பால் கொங்கணத்தைக் கடந்தபின் வருவது அருந்ததி மலை. எவ்வளவு பெரிய மலை தெரியுமா?
’அரன் பெரியவன், அரி பெரியவன்’ என்று சண்டை போட்டுக் கொள்ளும் அறிவிலிகள் பரகதியைச் சென்று அடைவதற்கு எப்படிச் சாத்தியம் இல்லவே இல்லையோ, அது போன்றே யாராலும் சென்றடைய முடியாத மலை அது! வானத்தைத் தொடும் முகடுகள் கொண்ட அந்த மலையைத் தொழுது வணங்கி அப்பால் செல்லுங்கள் வானரர்களே!
“அரன் அதிகன்; உலகு அளந்த அரி அதிகன்”
என்று உரைக்கும் அறிவிலோர்க்குப்
பரகதி சென்று அடைவு அரிய பரிசே போல்
புகல் அரிய பண்பிற்று ஆமால்;
சுரநதியின் அயலது, வான் தோய்க் குடுமிச்
சுடர்த் தொகைய, தொழுதோர்க்கு எல்லாம்
வரன் அதிகம் தரும் தகைய, அருந்ததி ஆம்
நெடுமலையை வணங்கி அப்பால் ..
(நாடவிட்ட படலம், 24)
[அதிகன் – பெரியவன்; அடைவு – அடைதல்; பரிசே போல் – தன்மையதாக இருப்பது போல்; புகல் அரிய பண்பிற்று ஆம் – சென்றடைய முடியாத தன்மையை உடையது; சுரநதி – தேவகங்கை; வரன் – வரம்]
கம்பனைப் போன்றே, மகாபக்தரும் ஞானியுமான துளசிதாசரும் தமது ராமசரிதமானஸ் என்கிற ராமாயண காவியத்தில் சைவ-வைஷ்ணவ சமரசத்தை இன்னும் அழுத்தமாகப் பேசுகிறார்.
ஸ்ரீராமன் கூறுகிறான் –
”சிவத்ரோஹீ மம தாஸ கஹாவா
தே நர ஸபனேஹும் மோஹி ந பாவா”
என்னுடைய தாசன் என்று சொல்லிக் கொண்டு சிவனை துவேஷிப்பவன் எவனோ, அந்த மனிதன் கனவில் கூட என்னை வந்தடைய மாட்டான்.
”சங்கரப்ரிய மம த்ரோஹீ, சிவத்ரோஹீ மம தாஸ
தே நர கரஹி கல்ப பரி, கோர நரக மஹூ வாஸ”
சங்கரனின் அன்பன் என்ற பெயரில் என்னை துவேஷிப்பவன், என் தாசன் என்று சொல்லிக் கொண்டு சிவனை துவேஷிப்பவன் – இவர்கள் இருவருமே கல்பகாலம் முழுவதும் கோர நரகத்தில் வாசம் செய்யும் நிலைக்கு ஆளாவார்கள்.
கம்பன் ஸ்ரீவைஷ்ணவத்தின் தலைமைப் பீடமான திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்த தன் இராமவாதார காவியத்தை, சைவத்தின் தலைமைப் பதியான சிதம்பரத்தில் தில்லை வாழ் அந்தணர் முன்னிலையில் மீண்டும் அரங்கேற்றுகிறான். இரு சாராரும் அவனது அமர காவியத்தைப் புகழ்ந்தேத்திப் பாராட்டினர் என்பது வழக்கு.
துளசிதாசர் பண்டிதர்களின் மொழியான சம்ஸ்கிருதத்தை விடுத்துப் பொதுமக்களின் மொழியான “அவதீ” (லக்னோ பகுதி ஹிந்தி மொழி வடிவம்) என்ற பாஷையில் தனது ராமகாவியத்தைப் படைக்கிறார். இதனைப் பண்டிதர்கள் யாரும் அங்கீகரிக்காமல் போக, மனம் நொந்த துளசிதாசர், அன்றிரவு காசி விசுவநாதர் கருவறையில் வேத,புராண ஏடுகளுக்கெல்லாம் கீழே தனது நூலை வைத்து இது உனக்கே சமர்ப்பணம் என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார். மறுநாள் காலை வந்து பார்க்கையில், துளசிதாசரின் ராமசரிதமானஸ் மற்றெல்லா நூல்களுக்கும் மேலாக வந்தமர்ந்திருந்ததாம்! பண்டிதர்கள் விசுவநாதரின் திருவுள்ளமாக்க் கருதி துளசிதாசரின் நூலை அங்கீகரித்தனர் என்பது வழக்கு.
தென்தமிழ் நாட்டைச் சேர்ந்த குமரகுருபரர் காசி வரை சென்று அங்கு மடம் அமைத்து தர்ம நெறியைப் பரப்பிய வரலாறு அனைவரும் நன்கறிந்தது. குமரகுருபரர் காசியில் வாழ்ந்த காலத்தில் தமது மடத்தில் தினந்தோறும் கம்ப ராமாயணச் சொற்பொழிகள் செய்ததாகவும், அவற்றைத் தவறாமல் கேட்டு வந்த துளசிதாசர், அதனாலேயே தமது காவியத்தில் கம்பராமாயணத்தில் உள்ளது போன்று சில இடங்களை அமைத்தார் என்றும் ஒரு வழக்கு உள்ளதாம். காசி மடத்தைச் சேர்ந்த ஒரு அன்பர் கூறிய தகவல் இது.
இவ்வாறாக, தன் காவியம் முழுவதிலும் சிவ-விஷ்ணு ஐக்கியத்தைப் பல்வேறு விதங்களில் எடுத்துரைக்கிறான் கம்பன். தமிழகத்தில் சமயப் பூசல்கள் அவ்வப்போது தலைதூக்கி வந்த காலகட்டத்தில் வாழ்ந்த கம்பன் ஒரு இலக்கியகர்த்தாவாக தன் காவியமெங்கும் சமய சமரசத்தை வலியுறுத்திக் கொண்டே செல்கிறான். இந்த விஷயத்தில் ஒரு முன்னோடியாகவே கம்பன் திகழ்கிறான் எனலாம்.
உரிமை, தொகுப்பு, நன்றி, ஆக்கம் ----ஜடாயு
Search my older Blog
Thursday, January 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment