திருமலையில் ரதசப்தமி 14 February 2016 -Sunday
சூரியன் உலாவரும் தேரினை இழுக்கும் ஏழு குதிரைகளைப் போல், ஏழு மலைகளின் மீது கோயில் கொண்ட திருமலை-திருப்பதியில் ‘ரதசப்தமி’ விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஒருநாளில் மட்டும், காலை 4.30 மணி முதல் 11.30 மணிக்குள், ஏழு வாகனங்களில் பவனி வருகிறார் திருமலையப்பன்.பத்துநாள் விழாவினை ‘பிரம்மோற்சவம்’ என்பார்கள். அந்த நாளில், தினமும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி உலா வருவார். ஆனால், இந்த ரத சப்தமி திருநாளிலோ, ஒரே நாளில் ஏழு வாகனங்களில் பெருமாள் உலா வருகிறார். இதனாலேயே இந்த விழாவினை ‘அர்த்த பிரம்மோற்ஸவம்’ என்று குறிப்பிடுகிறார்கள்.
திருமலை, ஏழுமலைகளை கொண்டது என்றால், ரங்கம் ஏழு பிராகாரங்களைக் கொண்டது. இங்கும் நம்பெருமாள் ரதசப்தமியை விமரிசையாகக் கொண்டாடுகிறார். தை மாதத்தில், சூரியனை விஷ்ணு என்று குறிப்பதால், பொதுவாக எல்லாப் பெருமாள் கோயில்களிலும் இந்த விழா, சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது போலும்.
மகாலட்சுமிக்கு தை மாதம் சந்தனக்காப்பு!தஞ்சாவூர் மாவட்டம் திருநறையூரில் சித்தநாதேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். தன்னுடைய அவதார்த் தலம் என்பதால் மகாலட்சுமி இங்கே குழந்தை வடிவில் காட்சி தருகிறாள். ‘மழலை மகாலட்சுமி’ என்றே அழைக்கப்படுகிறாள். இந்த பாலகி மகாலட்சுமிக்குப் பாவாடை - சட்டை அணிவித்து அலங்காரம் செய்கிறார்கள். மேற்கு நோக்கிய தலம் இது. இத்தல விநாயகர் ‘ஆண்டவிநாயகர்’ என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.சவுந்தர்யநாயகி தாயார் தனிச்சந்நதியில் கொலுவிருக்கிறாள். இந்த அன்னை க்கு தை மாத கடைசி வெள்ளியன்று சந்தனக்காப்பு செய்யப்படுகிறது. மகாலட்சுமி சந்நதி அருகில் தட்சிணாமூர்த்தி இருக்கிறார். இவர் மேற்கு நோக்கியிருப்பது வித்தியாசமான கோலம். இந்த தட்சிணாமூர்த்திக்கு எதிரே நவகிரக சந்நதி இருக்கிறது.இங்கு அவதரித்த மகாலட்சுமி, திருமாலை திருமணம் செய்துகொண்டு அருகிலுள்ள நாச்சியார்கோயிலில் அருளுகிறாள். எனவே, இவளுக்கு தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களில் பட்டுப்புடவை, சீயக்காய், எண்ணெய், பொங்கல் பானை, வெல்லம் என இங்கிருந்து பிறந்த வீட்டு சீராக அனுப்பி வைக்கின்றனர். வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் இங்கிருந்து சிவன், அம்பிகை இருவரும் பெருமாள் கோயிலுக்குச் செல்கின்றனர்.
தை மாதம் அகத்தியர் திருமணம்
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் அகத்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. அகத்தியர், இக்கோயிலில் நின்ற கோலத்தில் வலது கையில் ருத்ராட்ச மாலையுடன், சின்முத்திரை காட்டியபடி காட்சியளிக்கிறார். இடக்கையில் ஏடு ஏந்தியிருக்கிறார். இவரது சந்நதி எதிரில் நந்தியையும், பிராகாரத்தில் சண்டிகேஸ்வரரையும் காணலாம்.
சிவனுக்குரிய பூஜை முறைப்படியே, இவருக்கும் பூஜை நடக்கிறது. சிவராத்திரியன்று இரவில் 4 கால பூஜையும் உண்டு. உற்சவர் அகத்தியருக்குத் தனிச்சந்நதி இருக்கிறது. தன் வலது கையில் நடு விரல்கள் இரண்டையும் மடக்கி, பக்தர்களை அழைக்கும் கோலத்தில் காட்சி தருவது வேறெங்கும் காணவியலாத சிறப்பான அமைப்பு.
அகத்தியரின் மனைவி லோபமுத்திரைக்கும் இங்கே தனிச்சந்நதி உண்டு. இவர் அம்பிகையைப் போலவே வலது கையில் பூச்செண்டு வைத்திருக்கிறாள். நவராத்திரி விழாவின்போது 9 நாட்களும் இவளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்படுகிறது. தை மாதம், அஸ்தம நட்சத்திரத்தில், அகத்தியர் - லோபமுத்திரை திருக்கல்யாணம் நடக்கிறது.
அன்று காலையில் லோபமுத்திரை மட்டும் கோயிலில் இருந்து புறப்பாடாகி, ஓரிடத்திற்குச் சென்று தவம் இருக்கிறாள். மாலையில் அகத்தியர் அங்கு சென்று காட்சி கொடுக்க, பின்பு இருவரும் கோயிலுக்குத் திரும்புகின்றனர். அன்றிரவு இருவருக்கும் திருக்கல்யாணம் நடக்கும். சிவன் திருமணம் போன்றே, இந்த வைபவம் இங்கு நடக்கிறது. இந்த நேரத்தில் அகத்தியரை தரிசித்திட, திருமண பாக்கியம் கிடைப்பதாக நம்பிக்கை.தை மகத்தில் அவதரித்த ஆழ்வார்சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் சாலையில் 28 கிலோ மீட்டர் தொலைவில் திருமழிசை உள்ளது. இத்தலத்தில் ஜெகந்நாத பெருமாள் மற்றும் ஒத்தாண்டேஸ்வரருக்கு ஆலயங்கள் உள்ளன. பன்னிருவரில் 4வது ஆழ்வாரான திருமழிசை ஆழ்வார் இத்தலத்தில்தான் தோன்றினார்.
துவாபர யுகத்தில் இத்தலம், ‘மகிசார சேத்திரம்’ என்றழைக்கப்பட்டது. 13ம் நூற்றாண்டில் இது ‘திருமழிசை சதுர்வேதி மங்கலம்’, என்றும் 13ம் நூற்றாண்டில் ‘திருமழிசை அகரம்’ என்றும் அழைக்கப்பட்டது. அதன் பிறகு சுருங்கி ‘திருமழிசை’ ஆகிவிட்டது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மிகப் பழமையான இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தால், திவ்ய தேசங்களில் வழிபட்ட பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகமாகும். ஐந்து நிலை ஏழு கலசங்களுடன் உள்ள கோபுரத்தை பயபக்தியுடன் வணங்கி விட்டு உள்ளே சென்றால் இரண்டு பிராகாரங்களுடன் கோயில் அமைந்திருப்பதைக் காணலாம். இத்தலத்தில் தனிச்சந்நதியில் அருள்பாலிக்கும் திருமங்கைவல்லித் தாயார், தம்மை நம்பிக்கையுடன் அணுகும் பக்தர்களுக்கு சகல சௌபாக்கியங்களையும் அள்ளி, அள்ளி கொடுப்பதாக கருதப்படுகிறது.இத்தாயாருக்கு உரிய முறையில் வழிபாடு செய்தால், விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும், நிறைவான வாழ்க்கையையும் பெற முடியும். அதுபோல இத்தலத்தின் பிராகார தேவதையான வைஷ்ணவியும் பக்தர்களுக்கு வரங்களை வாரி, வாரி வழங்குகிறாள். திருமாலின் சங்கு, சக்கரத்தை ஏந்தியுள்ள அவள் கருணை வடிவாக நின்று சேவை சாதிப்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைஷ்ணவிக்குப் பூமாலை வழிபாடு செய்தால் உடனே திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. ஆண்டு தோறும் ஆனி மாதம் ஜெகந்நாத பெருமாளுக்கு பிரம்மோற்சவமும், ஐப்பசி மாதம் வைணவர்களின் குருவான மணவாள மாமுனிவர் உற்சவமும், தை மாதம் மகம் நட்சத்திரத்தில் திருமழிசை ஆழ்வாரின் அவதார மகோற்சவமும், மாசி மாதம் மூன்று நாட்கள் தெப்ப உற்சவமும் கொண்டாடப்படுகிறது.
மாட்டுப் பொங்கலன்று நந்திக்கு மரியாதை
அண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலமானது சிவபெருமானின் ஐம்பூதத் தலங்களில் ஒன்றான அக்னித் தலமாகும். இத்தலத்தின் மூலவர் அருணாசலேஸ்வரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
மாட்டுப் பொங்கலன்று இங்குள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அன்று அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் படைத்து, அனைத்துவகை மலர்களும் கோர்க்கப்பட்ட மாலை அணிவித்து, பூஜை செய்வர். அவ்வேளையில் அண்ணாமலையார்,
நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும்விதமாக சிவன் இவ்வாறு
எழுந்தருளுகிறார்.
தை வெள்ளிக்கிழமை விசேஷ வழிபாடு
அம்மனின் சக்தி பீடங்களில் காஞ்சி காமாட்சி ஆலயம் காமகோடி பீடமாகத் திகழ்கிறது. இத்தல காமாட்சி அம்மனை வேத வியாசர் பிரதிஷ்டை செய்துள்ளார். தங்க விமானத்தின் கீழ் அம்மன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அம்மனுக்கு முன்னால் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த சக்கரம் உள்ளது. இத்தலத்தில்தான் ஆதிசங்கரர் ஆனந்தலஹரி பாடினார். குழந்தை வரம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் உள்ள சந்தான ஸ்தம்பத்தை வணங்கினால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.தசரத சக்கரவர்த்தி இந்த ஸ்தம்பத்தை சுற்றி வந்து, புத்திரகாமேஷ்டி யாகம் செய்ததால்தான் ராமர் முதலானோர் பிறந்தனர் என்கிறது இத்தலப் புராணம். சக்தி பீடங்களில் இது மிக முக்கியமான தலம். அம்பாள் தென்கிழக்கு திசையை நோக்கி அமர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈஸ்வரன், சதாசிவன் ஆகிய பஞ்ச பிரம்மாக்களை தனக்கு ஆசனமாக கொண்டும், நான்கு கைகளுடனும் அம்பிகை காட்சி தருகிறாள்.
கைகளில் பாசம், அங்குசம், புஷ்ப பாணம், கரும்புவில் ஏந்தியிருக்கிறாள். காமாட்சிக்கு லலிதா, ராஜராஜேஸ்வரி, திரிபுரை, சக்கரநாயகி ஆகிய பெயர்
களும் உண்டு. தை மாத வெள்ளிக்கிழமைகளிலும், செவ்வாய்க்கிழமைகளிலும் காமாட்சி அம்மனுக்கு விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. கருவறைக்குள்ளேயே மூல விக்ரகத்துக்கு அருகில் ஒற்றைக்காலில் தவம் செய்த நிலையில் அமைந்திருக்கும் ‘தபஸ் காமாட்சி’யை தரிசிப்பதும் முக்கியமானது.
தை அமாவாசையில் பத்ர திருவிழா
தென்காசி காசி விஸ்வநாதர் திருக்
கோவில், தென்றல் வீசும் குற்றால நீர்வீழ்ச்சியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த தலத்தில் காலடி எடுத்து வைத்தவுடனே மூலிகை நறுமணம் நம்மை வரவேற்று ஆரோக்கியம் அளிக்கும். நெல்லை மாவட்டத்தில் உள்ள இத்திருத்தலத்தில் ஈஸ்வரன் சுயம்புவாக எழுந்தருளி இருப்பது மிகவும் விசேஷம் என்கின்றனர்.
வடக்கே காசியிலுள்ள விஸ்வநாதரை தரிசித்த பலனும், சக்தியும் இங்குள்ள ஈஸ்வரனை தரிசித்தால் கிடைக்கும் என்று நம்புகின்றனர். இங்குள்ள அம்மனின் பெயர் உலகம்மன் ஆகும். இந்தக் கோயிலின் தல விருட்சம் செண்பக மரம். இங்குள்ள சிற்பங்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. குறிப்பாக, இரட்டை சிற்பங்களாகிய வீரபத்திரன்-வீரபாகு, இரண்டு தாண்டவ மூர்த்திகள், இரண்டு தமிழ் அன்னைகள், ரதி- மன்மதன் ஆகியவற்றோடு, மிகவும் நேர்த்தியான மஹாவிஷ்ணு,
கம்பீரமான காளி தேவி சிலைகளும் வியக்கத்தக்க, நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் கொண்டவை. இக்கோயில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் பரந்திருக்கிறது. இந்தத் தலத்தில் மாசி மகம், நவராத்திரி, ஐப்பசி மாதம் திருக்கல்யாணம், ஆவணி மாதம் மூல
நட்சத்திரத்தன்று தெப்பத்திருவிழா, தை அமாவாசையில் பத்ர திருவிழா ஆகியன மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடப்படுகின்றன.
ரதசப்தமியன்று சூரிய வழிபாடுஈசன் ஏகாம்பரநாதராகவும், இறைவன் ஏலவார்குழலியாகவும் திருவருள் புரியும் தலம் காஞ்சி ஏகாம்பரம். பஞ்சபூத தலங்களில் முதன்மையான இத்தலம், பிருத்வி (நிலம்) தலமாகும். கருவறையில் சுவாமி மணல் லிங்கமாகவே விளங்குகிறார். இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடத்தைத் தற்போதும் காணலாம். இவருக்கு புனுகு மற்றும் வாசனைப் பொருட்கள் பூசி வெள்ளிக் கவசம் சாத்தி வழிபடுகின்றனர்.அபிஷேகங்கள் ஆவுடையாருக்கே நடக்கின்றன. சிவன் இத்தலத்தில் அம்பாளுக்கு அருள்புரிவதற்காக கங்கையையும், ஆலகால விஷத்தின் உஷ்ணத்தால் கருப்பு நிறமாக மாறிய மகாவிஷ்ணுவை குணப்படுத்த தன் தலையை அலங்கரிக்கும் பிறைச்சந்திரனையும் பயன்படுத்தியிருக்கிறார் மகேஸ்வரன். தன் திருமுடியில் இருக்கும் கங்கை, சந்திரன் இருவருக்கும் சிவன் இத்தலத்தில் அந்தப் பொறுப்புகளைக் கொடுத்திருப்பது சிறப்பு.தை மாத ரதசப்தமி தினத்தில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுகிறது. இந்நாளில் சுவாமியை தரிசனம் செய்தால் பாவம், தோஷங்கள் நீங்கும்என்பது நம்பிக்கை.
ரதசப்தமி உற்சவம்நீர்வண்ணர், ரங்கநாதர், உலகளந்த பெருமாள், பாலநரசிம்மர் நான்கு தோற்றங்களில் பெருமாள் அருளும் தலம் திருநீர்மலை. இது ஒரு மலைக்கோயில் ஆகும். மலையிலும், கீழேயும் இரண்டு பெரிய கோயில்கள் அமைந்துள்ளன. பெருமாள் நான்கு நிலைகளில், மூன்று அவதார கோலங்களில் காட்சி தருகிறார்.இத்தலத்திற்கு மூன்று ஏக்கர் பரப்பளவில் நடுவில் நீராழி மண்டபத்துடன் அழகிய தெப்பக்குளம் உண்டு. இக்குளம் சுத்த புஷ்கரணி, க்ஷீர புஷ்கரணி, காருண்ய புஷ்கரணி, ஸ்வர்ண புஷ்கரணி என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. வைகானச ஆகம விதிப்படி இருவேளை பூஜை நடக்கிறது. ராமர் தனிச்சந்நதியில் வீற்றிருக்கிறார். இத்தலத்தின்குளத்தில் நீராடி பெருமாளை வழிபட்டால் நோய் விலகி நலம் உண்டாகும். அத்துடன்சித்தம் தெளிந்து சகல சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டியும், திருமணத்தடை நீங்க பெண்கள் கிரிபிரதட்சணம் செய்தும் வழிபடுகின்றனர்.மலைக்கோயிலில் உள்ள ரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப்பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோற்ஸவம் நடக்கிறது.வைகுண்ட ஏகாதசியின்போது அழகிய மணவாளர் சொர்க்கவாசல் கடக்கிறார். இவரே மாசி மகத்தன்று கருடசேவை சாதிக்கிறார்.நரசிம்மருக்கு ஆனியிலும், உலகளந்த பெருமாளுக்கு ஆடியிலும் ஒருநாள் விழா நடக்கிறது. அப்போது இவ்விருவரும் அடிவார கோயிலுக்கு எழுந்தருளி கருடசேவை சாதிக்கின்றனர்.
சித்திரை உத்திரத்தில் நீர்வண்ணர் - அணிமாமலர்மங்கை திருக்கல்யாணமும், பங்குனி உத்திரத்தில் ரங்கநாதர் - ரங்கநாயகி திருக்கல்யாணமும் நடைபெறுகின்றன. பொதுவாக கோயில்களில் விழாக்காலங்களில் சுவாமி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வாகனத்தில்எழுந்தருளுவார். ஆனால், இக்கோயிலில் ரங்கநாதர், ஒரே நாளில் ஏழு வாகனங்களில் பவனி வருவார்.தை மாத ரதசப்தமியன்று இந்த அற்புத தரிசனத்தைக் காணலாம். அன்று காலை சூரிய உதயத்திற்கு முன்பு ரங்கநாதர் சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி சுற்றி தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுகிறார். சூரிய உதய வேளையில், பெருமாளின் பாதத்திலிருந்து முகம் வரையில் படிப்படியாக தீபாராதனை செய்வர். இதனை பெருமாளுக்கு சூரியனே செய்யும் பூஜையாக கருதுவதுண்டு. பின்னர், அனுமந்த வாகனம், கருடன், சேஷன், குதிரை, சிம்மம், சந்திரபிரபை ஆகிய வாகனங்களில் சுவாமி உலா வருவார்.
No comments:
Post a Comment