தில்லி நகரில் இப்போது கடும் குளிருடன் கை கோர்த்து மக்களைப் பதம் பார்த்துக் கொண்டிருப்பது தூசி, மாசு கலப்படமாகியிருக்கும் சுற்றுப்புற சூழ்நிலை. இத்தனைக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே தில்லி நகரில் ஆட்டோக்கள் எல்லாம் எரிபொருள் தேவைக்காக இயற்கை வாயுவிற்கு மாற்றப்பட்டுவிட்டன.
டீசலில் ஓடும் கார்கள், லாரிகளால் இந்த புகைமூட்டம் என்று முடிவு செய்து தில்லி நகரில் டீசலில் ஓடும் வாகனங்களை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று சுப்ரீம் கோர்ட் முதல் டில்லி அரசும், மத்திய அரசும் பலமாக யோசித்துக் கொண்டிருக்கும் நிலையில், சூரிய ஒளி மூலம் மின்சாரம் பெற்று ஓடும் இரண்டு பஸ்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் சென்று வர பயன்படுத்த முடிவாகியுள்ளது. இந்த பஸ்களில் பொருத்தப்படும் பேட்டரிகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் தயாரிக்கிறது. ஆகாயத்தில் ஏவப்படும் விண்கலங்களில் பொருத்தப்படும் பேட்டரிகள் இவை. ஒரு பேட்டரியின் விலை ஐந்து லட்சம். இதே பேட்டரியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய ஐம்பத்து ஐந்து லட்சம் தேவைப்படுமாம்.
தில்லியில் இதுமாதிரி 15 பஸ்கள் பொது மக்கள் பயன்படுத்துவதற்காக விடப்பட உள்ளன. அது மட்டுமல்ல... இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் இந்த பேட்டரி சக்தியில் ஓடும் சூரிய மின்சார பஸ்கள் இயக்கப்படும். ஒன்றரை லட்சம் பஸ்கள் விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. டீசல் பயன்பாட்டைக் குறைக்கவும் இந்த ரக பஸ்கள் உதவும்.
இன்று தில்லி .. நாளை இந்தியாவின் எந்த நகரமும் மாசு, தூசிகளால் அல்லல்படும் நிலை ஏற்படும்.
அதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத் மாநிலம் களத்தில் புகுந்துள்ளது. ஆறு சூரிய மின்சாரத்தால் ஓடும் பஸ்களை காந்தி நகருக்கும் அகமதாபாத் நகருக்கும் இடையில் வெள்ளோட்டம் விட்டு அவை எப்படிச் செயல்படுகின்றன என்று ஆய்வு செய்ய முடிவு செய்திருக்கிறது. இந்த பஸ்கள் மின்சாரத்தைச் ஏற்றிக் கொள்ள, இந்த இரண்டு நகரங்களில் சூரிய ஒளியில் மின்சாரத்தைத் தயாரித்து சேமித்து வைக்கும் மின்நிலையங்களையும் ஏற்படுத்தப் போகிறது.
மாசுகளைக் குறைக்கும் இந்த நவீன ரக பஸ்களுக்கு வரி விலக்கு அனுமதிக்க வேண்டும் என்று குஜராத் போக்குவரத்து அமைச்சர் விஜய் ரூபாணி மத்திய அரசிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Courtesy:dhinamani ilaignarmani
No comments:
Post a Comment