அழகிய சிங்கப்பூர்
சிங்கப்பூர் விமான தளத்தில் இறங்கிய உடன் முதலிலேயே காணக்கூடியது எங்கும் எப்பொழுதும் இவ்வளவு அழகாகவும் துப்புரவாகவும் மிகத் திறமையாகவும் கூட ஒரு நாட்டை நிர்வகிக்க முடிகிறதே என்ற மகிழ்ச்சியும் ஆச்சரியமும் கலந்த பிரமிப்பு.
விமான தளத்தைவிட்டு வெளியே வந்ததும் பார்க்கப் பிரமிக்க வைப்பவை, அழகுமிக்க சாலைகள். நடக்கக் கூட கூச்சப்படக்கூடியதான சுத்தம். பழுதடைய வாய்ப்பே இல்லாத, உறுதியான வடிவமைப்பு. சாலைகளில் குப்பைகளோ, அசுத்தங்களோ, நாற்றமோ கிடையாது. ஈ, கொசு, கிருமிகளுடன் கூடிய அசுத்த தண்ணீர் தேக்கமில்லை. எத்தனை மழை பெய்தாலும், தண்ணீர் மேடு பள்ளமின்றி வழிந்தோடி, நொடியில் வடியக்கூடிய அமைப்பு.
மரக்கன்றுகள் தொட்டிகளில் வளர்க்கப்பட்டு, தேவைப்படும் இடங்களில் நடப்பட்டு நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன. சாலைகளில் போக்குவரத்துக்கு இடைஞ்சலின்றி, குறுக்கிடாமல் இருக்க அவ்வப்போது களை எடுக்கப்பட்டு அழகுடன் பராமரிக்கப்படுகின்றன.
சாலைகளின் இரு மருங்கிலும் அழகுடன் மிளிரும் அழகான மரங்கள். அதனை ஒட்டி நடைபாதைகள். அருகில் பசும் புல் தரை. குழந்தைகள், வயதானவர்களுக்காக போக்குவரத்து இடைஞ்சல் இல்லாத் தனி நடை பாதை. அசுத்தப்படுத்தும் ஆக்கிரமிப்புக் கடை கண்ணிகள் இல்லை. கிருமிகளையும் எங்கும் எப்பொழுதும் இருமி, எச்சில் துப்பும் அசுத்தமான வியாதிகளைப் பரப்பும் நோயாளி பாதசாரிகள் குறுக்கீடுகள் கிடையாது. வேறு எவ்விதப் பயமுமின்றி, மக்கள் நடக்க வசதிகள்.
சாலைகளிலோ, கடைகளிலோ, பூங்காக்களிலோ டீ, காபி, வெற்றிலை - புகையிலை, பீடி, சிகரெட்டுடன் துப்புவது கிடையாது. அனாவசிய அரசியல் அரட்டை அடிப்பது, வெட்டி பேச்சு கூடாது. குப்பைகளை எங்கு வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் இறைப்பதோ, கழிப்பிடமாக உபயோகிப்பதோ கிடையாது, கூடாது. இவற்றுள்ல் எது செய்தாலும், தண்டனை, அபராதத் தொகை கட்டித்தான் ஆக வேண்டும். குற்றமென்றால் கண்டிப்பாய் தண்டனை நிச்சயம்.
ஒவ்வொரு வீடு, அலுவலகம், கடை முன்பும் அழுகக் கூடியவை, திரும்பவும் உபயோகிக்கும் பொருட்களாக மாற்றக்கூடியவை என்று தனித் தனியாக அடையாளமிட்ட சுத்தமான மூடியிட்ட பிளாஸ்டிக் தொட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் தான் அன்றாடம் உள்ள குப்பைகள், வீணான காய்கறி துண்டங்கள், பேப்பர், பிளாஸ்டிக் முதலியவற்றைப் போடவேண்டும். மக்கள் கட்டுப்பாட்டுடன் சிதறாமல், நாற்றமில்லாமல், அதற்குள்தான் குப்பைகளைப் பைகளில் கட்டிப் போடுகிறார்கள். அதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் மக்களுக்கு எவ்வித இடைஞ்சலும் அருவெறுப்பும் இல்லாமல், சுவடில்லாமல், அவ்வப்போது செவ்வனே அகற்றுகிறார்கள். துப்புரவு மென்மேலும் மெருகடைகிறது.
கட்டடங்கள் ஒரே கோட்டில் கட்டினாற்போல் கம்பீரமாக நிற்கின்றன. அடிக்கடி பழுது பார்க்கப்பட்டு வர்ணம் அடிக்கப்பட்டு, பொலிவுடன் திகழ்கின்றன. பாதையை ஆக்கிரமிக்கும் கட்டடம், கடைகள் எதுவும் கிடையாது. எந்த விலாசமும் எவரும் எவ்விதச் சிரமமும் இல்லாமல் கண்டுபிடிக்க ஏதுவாக எல்லா இடங்களிலும் ஆங்கிலத்திலும் சீன மொழியிலும், தமிழிலும் கூட, தெரு பெயரிட்ட வழிகாட்டிப் பலகைகள் ஒரே மாதிரியான வடிவில் இருக்கின்றன. மொழி வெறியோ, சண்டையோ பிரச்சினையோ கிடையாது. எல்லாக் கட்டடங்களின் பெயர்களும் எண்களும் அடையாளமிட்டு, தெளிவாக யாரும் எளிதில் கண்டுபிடிக்கக்கூடிய வகையில் உள்ளன. எல்லாக் குடியிருப்புகளைச் சுற்றியும் நன்கு வடிவமைக்கப்பட்ட அழகு கொஞ்சும் விசாலமான நன்கு பராமரிக்கப்படும் பூங்காக்கள். அவற்றில் எல்லா வயதினருக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள். நடை பழகத் தனித்தனி குறிப்பிட்ட பாதைகள், கை, கால், பயிற்சி செய்ய உபகரணங்கள் (physio therapy like).
கட்டடங்கள் புதிதாகக் கட்டும்பொழுதோ, புதுப்பிக்கப்படும்பொழுதோ ஏற்படும் தேவைப்படாத இடிபாட்டு மண், கற்கள், உடைப்புகள் முதலியன போக்குவரத்துக்கும் மக்களுக்கும் இடைஞ்சல் ஏற்படும் வகையில் தெருக்களில் கொட்டக்கூடாது. அதற்கான சக்கரம் வைத்த பெரிய இரும்புத் தொட்டிகள் வைக்கப்பட்டு அதற்குள் போடப்பட்டு அவ்வப்போது சுவடில்லாமல் சுத்தப்படுத்தப்படுகின்றன.
எந்த வாகனத்தின் டயர்களிலும், சகதியோ, சேறோ, மண்ணோ அல்லது வேறு ஏதாவது அசுத்தங்களோ இருந்தால், வண்டிகள் வெளியில் எடுப்பதற்குமுன், அவை சாலைகளை அசுத்தம் செய்யாமல் இருப்பதற்காக அதிவேகத் தண்ணீர் பீச்சல் (Water jet) மூலமாக டயர்கள் சுத்தம் செய்யப்படவேண்டும். அதன் பின் தான் வாகனங்கள் வெளியில் எடுக்கவேண்டும், எடுக்கிறார்கள். கழுவப்பட்ட அசுத்தத் தண்ணீர், தானாகவே, தெருக்களில் வழிந்தோடாமல், கீழே வடிந்துவிடும். அமைப்புகள். ஆஹா என்ன அக்கறை!
சீன டாக்சி ஓட்டுநர்கள் நம்மை ஏற்றிக்கொண்டு சரியான பாதையில் செல்கிறார்கள். சரியான முகவரியில் இறக்கி விடுகிறார்கள். மீட்டருக்கு உரிய தொகையை மட்டும் வாங்கிக்கொள்கிறார்கள். அது மட்டுமல்லாமல், லக்கேஜை முகம் சுழிக்காமல் இறக்கி வைக்கிறார்கள்.
நன்றி'சென்னை ஆன்லைன்
Search my older Blog
Wednesday, December 9, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment