Search my older Blog
Monday, December 7, 2009
temple
பெருமாள் கோவிலுக்குச் சென்றால், முதலில் தாயாரை வணங்கி, அதன் பிறகே பெருமாளை வணங்குவது மரபு. திருப்பதி செல்பவர்கள், நேராக வெங்கடாசலபதியைத் தரிசித்த பிறகே திருச்சானூர் செல்கின்றனர்; ஆனால், முறைப்படி திருச்சானூர் சென்று, அலமேலு மங்கை எனப்படும் பத்மாவதி தாயாரைத் தரிசித்த பிறகே, வெங்கடாசலபதியை தரிசிக்க செல்ல வேண்டும்.
முற்பிறப்பில் வேதவதி என்னும் பெயரில் பிறந்தாள் பத்மாவதி தாயார். அழகில் சிறந்த அவள், ஒரு தபஸ்வினியாகி காட்டில் தவமிருந்தாள். ஒரு முறை, அவளை பார்த்தான் ராவணன். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினான். ராமபிரானைத் தவிர, வேறு யாரையும் திருமணம் செய்யமாட்டேன் என்று அவனிடம் தெரிவித்த வேதவதியை பலவந்தப்படுத்தினான் ராவணன்.
அவனிடம், “பெண்ணிச்சையால் என்னைப் பலவந்தப்படுத்திய உனக்கு இதே இச்சையால் அழிவு நேரும்…’ என சாபமிட்டாள் வேதவதி. பின்னர் தன் கற்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அக்னியில் விழுந்த அவளை, எரிக்காமல் பாதுகாத்தார் அக்னிபகவான்.
ஒருமுறை, அவள் ராமபிரானைச் சந்தித்தாள். தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டாள். “இப்பிறவியில் நான் ஏகபத்தினி விரதன். கலியுகத்தில், நான் திருமலையில் சீனிவாசன் என்ற பெயரில் தங்குவேன். நீ, அந்த மலையை ஆளும் ஆகாசராஜன்- தரணிதேவி தம்பதியருக்கு புதல்வியாகப் பிறப்பாய். அப்போது, உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்…’ என்று வாக்களித்தார் ராமபிரான்.
இதன்படி, திருமலைக்கு சீனிவாசன் வர, பத்மாவதியைச் சந்தித்தார். தன் காதலை அவளிடம் வெளிப்படுத்தினார். தன் முற்பிறவி வரலாறை மறந்துவிட்ட பத்மாவதி, அவரைக் கண்டு அஞ்சினாள். பத்மாவதியின் தோழிகள் அவர் மீது கல்லெறிந்து துரத்தினர். காயமடைந்த சீனிவாசன், தன்னை வளர்த்து ஆளாக்கிய வகுளாதேவியிடம் தன் விருப்பத்தை தெரிவித்தார்.
சீனிவாசனுக்காக ஆகாசராஜனிடம் தூது சென்றாள் வகுளாதேவி. தன் மகன் சீனிவாசன், நாராயணனின் அம்சம் என்பதை மன்னனிடம் தெரிவித்தாள். அதுகேட்டு ஆனந்தமடைந்தார் மன்னர். இதையடுத்து திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்தன. சீனிவாசனுக்கும், பத்மாவதிக்கும் நடக்கவிருந்த திருமணத்தைக் காண தேவலோகமே கூடியது.
சீனிவாசன் ஏழை என்பதால், ராஜா வீட்டுப்பெண்ணை மணம் முடிக்க வேண்டிய நிலையில், திருமணச்செலவுக்காக குபேரனிடம் கடன் வாங்கினார்.
“குபேரா! என்னை வணங்குவதற்கு இந்த திருத்தலத்துக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள். அவர்களின் பாவக்கணக்குக்கு ஏற்ப அவர்களிடம் நான் செல்வத்தை வசூலித்து விடுவேன். அதை உனக்கு வட்டியாகத் தருவேன்! கலியுகம் முடியும் போது அசலை முழுமையாகத் தந்துவிடுவேன்…’ என்று எழுதிக்கொடுத்தார்.
சீனிவாசன்- பத்மாவதி திருமணம் இனிதே முடிந்தது. நாராயணன், இன்னொரு திருமணம் முடித்துவிட்டார் என்ற தகவலை லட்சுமியிடம் சென்று சிண்டுமுடித்தார் நாரதர். கோபமடைந்த லட்சுமி, சீனிவாசனிடம் வந்து நியாயம் கேட்டு அழுதாள். அவளைச் சமாதானம் செய்து விளக்கமளித்தார் சீனிவாசன்.
“லட்சுமி! முற்பிறவியில் நீ சீதையாக பிறந்த போது ராவணன் உன்னைக் கடத்த வந்தான். அப்போது அக்னியின் பாதுகாப்பில் இருந்த மாயசீதையான இவள், உனக்குப் பதிலாக ராவணனுடன் சென்றாள். உண்மையில் இவள் உன்னைக் காப்பாற்றியவள்…’ என்றார். சமாதானமடைந்த லட்சுமி, பத்மாவதியைத் தன் தங்கையாக ஏற்றாள்.
பின்னர், லட்சுமியிடம், “நீ என் மார்பில் அமர்ந்துகொள். என் மார்பில் வலப்பக்கம் பத்மாவதி இருப்பாள். அவளது மற்றொரு வடிவத்தை பத்மசரோவர தீர்த்தக்கரையில் அமையும் வகையில் ஏற்பாடு செய். நீங்கள் இருவரும் இங்கு வரும் பக்தர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப அருள் வழங்குங்கள்…’ என்றார் சீனிவாசன். பத்மாவதி அமர்ந்த இடமே அலமேலுமங்காபுரம் எனப்படுகிறது. பிற்காலத்தில் திருச்சானூர் என்ற பெயர் சூட்டப்பட்டது.
நன்றி; sendil vayal@
wordpress
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment