Bhoo thatha's Blogspot

Search my older Blog

Thursday, December 3, 2009

vaishnavam

கண் பார்வை தந்தருளும்  ஸ்ரீ எம்பார்


ஸ்ரீ வைஷ்ணவ மரபில், ஆசாரியனுக்கு மிக விசேஷமான ஸ்தானம் அளித்து, அவரின் ஆணைப்படி தொண்டு புரிதல் மிகவும் உன்னதமாகக் கருதப்படுகிறது. இவர்கள் தனது மேன்மையை கருத்தில் கொள்ளாது எப்போதும், ஆசாரியனின் புகழைப் பரப்புவதும், அவர்பால் தொண்டு செய்வதே தான் பெற்ற இன்பம் எனவும் கருதுவர்.
ஆசாரியனின் உபதேசங்களையும், அவரது திருநாமத்தின் மஹிமையையும் நினைத்து நினைத்தும், அவர் காட்டிய நல்வழியில் செல்வர். மேலும் ஆசாரியன் ஒருவர் தான் நற்கதிக்கு வழிகாட்டி என்றும், வீடுபேறு பெற உறுதுணையாக இருப்பார் என்பதுவும், அவர்களது கருத்தாகும். இந்த வகையில், ஜகத்குருவான இராமானுசரின் சிஷ்யராகவும், அவரது நிழலாகவும் இருந்தவர் ‘எம்பார்’ என்னும்
ஸ்ரீவைணவர். இவருக்கு அவரது தாய் பெரிய பிராட்டியார், தந்தை கமல நயன பட்டர் இட்ட பெயர் கோவிந்த பெருமாள் என்பதாகும்.
இவர் மதுரமங்கலம் என்னும் ஊரில் அவதரித்தார். இது ஸ்ரீபெரும்பூதூருக்கு 16 கி.மீ. தூரத்தில் மிகவும் பசுமையும், எழிலும், தோட்டம் துறவுகள் உள்ள இடமாகும்.
எம்பார் தை மாதம் புனர் பூச நட்சத்திரத்தில் அவதரித்தவர். முதன் முதலில் இவரை புருஷா காரமாக (நல்வழிப்படுத்தி திருமாலை அடைய வழி வகுத்து அளித்தல்) இருந்து நல்வழியில் நடத்தியும், வழிகாட்டியும் கொடுத்தவர் ‘பெரிய திருமலை நம்பிகள்’ ஆவார்.
எம்பார் முதலில் சைவ சித்தாந்தத்தில் மிகவும் தீவிர ஈடுபாடு உடையவராக இருந்தால். அவரை இராமானுசர் திருத்தி பணி கொண்டு, தன் சீடராய் ஏற்று வைணவ சித்தாந்தத்தை போதித்து அருளினார் என்பர். இவர் அனுதினமும் திரு ஆராதனம் (பூஜை செய்தல்) செய்த பெருமாள் ‘அழகிய சிங்கர்’ என்கிற நரஸிம்மரே ஆவார்.
இவர் பெரிய திருமலை நம்பிகள் என்கிற ஆசாரிய புருஷருடன் வாழ்ந்து, அவர்காட்டிய வழியில் நடந்து, அவருக்குப் பல தொண்டுகள் ஆற்றி வந்தாராம். அவரிடம் எல்லாவித வடமொழி ஸாஸ்திரங்களையும், தமிழ் மறையான நாலாயிர திவ்யப்ர பந்தத்தையும் கற்று அறிந்தார்.
பிறகு இவர் பெரிய திருமலை நம்பிகளின் மூலம் இராமானுஜரை ஆஸ்ரயித்தார் (அவரையும் அவரது சித்தாந்தங்களையும் ஏற்று நடத்தல் என்பதாகும்).
இவர் இயற்கையில் மிகவும் இரக்கக் குணம் படைத்தவர். அதற்கு உதாரணமாகக் கீழ்க்கண்ட நிகழ்ச்சியைச் சொல்லலாம்.
ஒரு சமயம் நந்தவனத்தில் ஆசாரியனுக்கு கைங்கர்யம் செய்து கொண்டு இருந்தபோது, ஒரு பாம்பு நாக்கை நீட்டிக் கொண்டு துன்பப்படுவதைக் கண்டு, இவர் அதன் நாவில் இருந்த முள்ளை எடுத்து காப்பாற்றினாராம். என்னே, அவரது கருணை! இதையறிந்த இராமானுசர் அவரது செய்கையை பாராட்டி, அவர் பிராணிகளிடம் வைத்துள்ள கருணையைக் கண்டு உளம் மகிழ்ந்தாராம்.
இராமானுசர் திரு அரங்கத்தில் இராமாயண கால«க்ஷபங்கள் செய்து வந்தாராம். அதை முடித்துக் கொண்டு திருமலை நம்பியிடம் விடை பெற வேண்டி கோரினார். அவ்வமயம் அவர் “இத்தனை தூரம் வந்து எங்களுக்கு இராமாயணத்தின் சிறப்பை நன்முறையில் எடுத்து உரைத்த உமக்கு, நான் ஒன்றும் கொடுக்க முடியவில்லையே” எனக் குறைபட்டாராம். ஆயின் இராமானுஜர், “அப்படியாயின், திருத்தி பணி கொண்ட கோவிந்த பெருமாளை (எம்பார்) எமக்குத் தந்தருளும்” என்றாராம்.
இதைக் கேட்ட திருமலை நம்பிகள் மிகவும் ஆனந்தம் அடைந்து, கோவிந்த பெருமாளை அழைத்து, “நம்மைப் போல் இவரை நினைத்து இருப்பீராக” எனச் சொல்லி, தாரை வார்த்து, தத்தம் பண்ணி இராமானுசருடன் அனுப்பி வைத்தாராம்.
இராமானுசர் கோவிந்த பெருமாளையும் தம்முடன் அழைத்துக் கொண்டு சோளசிம்மபுரம் என்கிற கடிகாசலத்தில் உள்ள அக்காரகனி (யோக நரசிம்மர்) என்கிற நரசிம்மரையும், திருப்பக்குழியில் கோயில் கொண்டு அருள்புரியும், விஜயராகவப் பெருமானையும் மங்களாசஸனம் (போற்றிப் பாடுதல்) செய்துவிட்டு காஞ்சிபுரம் வந்து, திருக்கச்சிநம்பியிடம் சேர்ந்தாராம்.
காஞ்சிபுரத்தில், இராமானுஜர் யாதவப் ப்ராகாசரின் குருகுலத்தில் இருந்த போது, இவரின் அறிவாற்றலையும் அணுகும் முறையையும், கண்டு பொறாமை கொண்டவர்கள் இவரைத் தீர்த்துக் கட்ட (கொல்ல) வேண்டிய முயற்சியில் இறங்கினார்களாம். இதை அறிந்த கோவிந்தப் பெருமாள் இந்த முயற்சியை முறியடித்து இராமானுசரைக் காப்பாற்றினாராம். அவர் எப்பொழுதும் இராமானுஜருடன் இருந்து வந்தமையால் இவர் இராமானுசரின் நிழல் எனப் போற்றப்பட்டார்.
ஒரு சமயம் தன்பால் உள்ள ஞானம், பக்தி வைராக்யத்தை தனக்குத் தானே போற்றிக் கொண்டாராம். இதை அறிந்த சிலர், ‘ஆணவம் கூடாது, தாழ்மை அன்றோ பகவத் பாகவதர்களுக்கு இருக்க வேண்டும்’ என்றார்களாம். அதற்கு கோவிந்தப்பெருமாள், “இந்த குணங்களை எல்லாம் தோற்றுவித்தவர் எனது ஆசாரியன் ஸ்ரீ இராமானுசர் என்னும் லோககுரு. ஆகையால், இந்தப் புகழ்ச்சி எல்லாம் அவருக்கே” என்றாராம். இதையறிந்த இராமானுஜர் வியந்து அவரை ஆலிங்கனம் செய்து கொண்டார். என்னே ஆசாரிய பக்தி!
ஒரு சமயம் கோவிந்தப்பெருமாள் ஓர் ஆடல் அழகி வீட்டில் இராமானுசரை பற்றிய குணவிசேஷ தாலாட்டுப் பாடலைக்கேட்டு அவளுடைய வீட்டு வாயிலில் மெய் மறந்து நின்று இருந்தாராம்.
இதை அறிந்த ராமானுஜர், அவரைக் கண்டித்தபோது “தேவரின் குணங்களைப் போற்றிய தாலாட்டு பாடல் என்னை ஈர்த்தது, மேலும் அனுபவிக்கச் செய்தது” என்று பணிவன்புடன் நடந்ததை விரிவாக விளக்கினாராம். இதன்மூலம் அவரது ஆழ்ந்த ஆசாரிய பக்தியை வெளிக்காட்டினார் எனலாம்.
இவருக்குத் திருமணமாயிருந்தும் இல்லறத்தில் சிறிதும் நாட்டமில்லை. ஆயின் எப்போதும் ஆசாரியனுக்குப் பணி செய்வதே தன் கடன் என இருந்தாராம். இவரது தாயாரின் ஆணைப்படி தனது மனைவியை தனியாகச் சந்தித்து, அந்தர்மியான பகவானின் குண விசேஷங்களை எடுத்து உரைத்தும், ஆசாரியனுக்கு செய்யும் பணி ஒன்றுதான் மறுவீடு (மோஷம்) அளிக்கும் எனவும் கூறி மனைவியை அனுப்பி வைத்தார் என்பர்.
இந்த வைராக்கியத்தை அறிந்த இராமானுஜர் இல்லறம் அல்லேல் துறவறம் என்கிறபடி கோவிந்தப் பெருமாளுக்கு ஸந்யாஸ தீ¬க்ஷ கொடுத்து அவரது பெயரை சுருக்கி எம்பார் என்று திருநாமம் சூட்டி அருளினார். அன்று முதல் கோவிந்தப் பெருமாள், எம்பார் என அழைக்கப்பட்டார். எம்பார் அவதார ஸ்தலமான மதுர மங்கலத்தில் ஸ்ரீ வைகுந்தவாசப் பெருமானும், கமலவல்லித் தாயாரும் கோயில் கொண்டு அருள் புரிகிறார்கள்.
இவர் அருளிய பிரபந்தங்கள் ‘விஜ்யான ஸ்துதி’ என்பதாகும். இவர் சதாசர்வ காலமும் ஆசாரியனே சர்வம், என்றும் எம்பெருமானின் (திருமால்) லீலா விபுதிகளே வாழ்க்கை என வாழ்ந்து காட்டியவராவார். இவரது (எம்பார்) அருளால் கண்பார்வை கோளாறுகள் நிவர்த்திக்கப்படுவதால் இத்தலத்துக்கு அடியார்கள் கூட்டம் அலை மோதுகிறது.
கண்பார்வை பெற இந்த ஸ்லோகத்தைச் சொல்ல வேண்டும்.
அப்ஜபாணி பதம் அம்புஜநேத்ரம்
நேத்ர ஸாத்குரு கரீஸ! ஸதா!! மே!
பொருள்: பேரழகான எம்பெருமானே, பேரழகனான உன் வடிவழகை எப்போதும் என் கண்களுக்குத் தெரியும்படி அருள்புரிவாயாக என்பது மேற்படி ஸ்லோகத்துக்கு அர்த்தமாகும்.
அவரது அவதார ஸ்தலமான மதுரமங்கலத்தில் தை மாதம் 10 நாட்கள் (7.02.09) புனர்பூசம் வரை திருவிழா நடக்கிறது.

No comments: