திருஆலி தேசத்து மன்னன் நீலனுக்கு, அந்த தேசத்தின் சாதாரண பிரஜை ஒருத்தி நிபந்தனை விதித்தால், சேனைகளுக்கு கோபம் வரத்தானே செய்யும்? சோழ மன்னனின் கீழ் சிற்றரசனாக ஆட்சி செலுத்தினாலும் மன்னன் மன்னன்தானே?!
ஆனாலும்... புன்னகை மாறாமல், நிபந்தனையை விவரிக்கும்படி கேட்டான் மன்னன். திருநாங்கூரில் வீதியுலா வரும் போது, இவளைப் பார்த்ததுமே மனதைப் பறிகொடுத்ததால்தான் இத்தனையும்!
''ரௌத்திரத்தைத் துறந்து அந்தணனைப்போல் அன்பும் கருணையும் கொண்டு வேதம் பயில வேண்டும்; ஸ்ரீவைஷ்ணவனாக, பெருமாளின் அடியவனாக, பஞ்ச சம்ஸ்காரம் செய்ய வேண்டும்; இல்லையென்று சொல்லாமல் அடியவர்களுக்கு அனுதினமும் அன்னதானம் இட வேண்டும்'' என்றாள். மன்னனும் சம்மதித்தான்!
தனது சத்திரிய குணங்களில் இருந்து மெள்ள மெள்ள விலகினான்; வேதங்களையும் மந்திரங்களையும் பயில... சக மனிதர்கள் மீதான வாஞ்சை மனதுள் பொங்கிப் பிரவாகித்தது. திருநறையூர் (கும்பகோணம் அருகேயுள்ளது) சென்று, திருமாலவன் சந்நிதியில்... அங்கே இருந்த தீபத்தால், தோள்களில் சங்கு - சக்கர இலச்சினையும் பொறித்துக் கொண்டான்! முகத்தில் சாந்தம்; மனதுள் பேரன்பு; தோள்களில் சங்கு - சக்கரம்; நெற்றியிலும் மார்பிலும் உடலிலுமாக பெருமாளின் திருச்சின்னங்கள்... என வந்த திருஆலி தேசத்து மன்னனைக் கரம்பிடித்தாள் குமுதவல்லி! பிறகு இருவருமாகச் சேர்ந்து, அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தனர்.
யுத்தம், வரி என அரசுக் காரியங்களில் இருந்த கவனம் நழுவி, பெருமாளின் தீவிர பக்தனானான் மன்னன். அடியவர்க்கு அன்னமிடுவதையே பெரும்பேறாகக் கருதி செயல்பட்டவனுக்கு வந்தது சோதனை! கஜானாவில் இருந்த செல்வங்கள் அனைத்தும் கரைந்தன; இனி அன்னமிட பணம் இல்லை எனும் நிலை! நீலன் கலங்கினான்; தவித்தான்; துடித்தான்; துவண்டான்; 'எப்படியேனும் அன்னமிட்டே ஆக வேண்டும்' என எண்ணினான்! இதனை அறியாமலா இருப்பார் பெருமாள்?!
அவர்களை நடு வழியில் மறித்தான்; ஆபரணங்களைத் தரும்படி கத்தியைக் காட்டி மிரட்டினான். நகைகள் அனைத்தையும் கழற்றிக் கொடுத்தனர். அந்தக் காலத்தில் ஆண்கள் மெட்டி அணிவது வழக்கம். ஆகவே, மெட்டியையும் கேட்டான் நீலன். 'நீயே கழற்றிக் கொள்' என்றான் பெண்ணின் கணவன். கழற்ற பிரயத்தனம் செய்தான் நீலன்; இறுதியில் தனது பற்களைக் கொண்டே கழற்ற முனைந்தான்; முடியவில்லை.
''என்னப்பா மந்திரம் போட்டாய்? கழற்றவே முடியலியே...'' என்றான் நீலன். உடனே அவன், 'ஆமாம்.. மந்திரம்தான்! காதைக் கொடு சொல்கிறேன்' என்று சொல்ல... நீலனும் செவி கொடுக்க... வந்தவன், 'ஓம் நமோ நாராயணாய' எனும் திருமந்திரத்தை உச்சரிக்க... அவ்வளவுதான்! உடல் முழுவதும் சிலிர்ப்பு பரவியது நீலனுக்குள்! உதறிப் போட்டது உடல்; கண்களிலும் முகத்திலும் தேஜஸ் கூடியது; நிமிர்ந்து பார்த்தவன் இன்னும் பிரமித்தான்.
ஆமாம்! தன் உள்ளம் கவர்ந்த கள்வனாம் நீலனுக்கு எட்டெழுத்து மந்திரத்தை உச்சரித்த நாராயணன், தேவியுடன் திருக்காட்சி தந்தார்!
நாராயண மந்திரத்தை எவரேனும் ஆச்சார்யர் போதிக்கலாம்; ஆனால் நாராயணரே போதித்து அருளினால்...? எவருக்கும் கிடைக்காத பாக்கியம் நீலனுக்குக் கிடைத்தது. அன்று முதல் நீலன், ஆழ்வார் ஆனார்; திருமங்கையாழ்வார் என போற்றப்பட்டார்! இவருக்கு பெருமாள் காட்சியளித்து, எட்டெழுத்து மந்திரம் உபதேசித்த தலம்- திருநகரி!
ஒன்பது நிலை ராஜகோபுரம், ஏழு நிலை மற்றும் மூன்று நிலை கோபுரங்களும் கொண்டு, அழகுறத் திகழும் ஸ்ரீவேதராஜபெருமாள் ஆலயத்தையும், அமர்ந்த கோலத்தில் எழுந்தருளும் வேதராஜரையும் தரிசித்தால், இந்தத் தலத்தை விட்டுச் செல்ல யாருக்குத்தான் மனம் வரும்?
நான்கு யுகங்களைக் கடந்து காட்சி தரும் தலம்; சோழ தேசத்து
40 திருப்பதிகளில் 18-வது தலம்; பஞ்ச நரசிம்ம க்ஷேத்திர ஆலயங்களில் ஒன்று; குலசேகர ஆழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் மங்களாசாசனம் செய்து அருளிய கோயில் என பெருமைகள் பல கொண்ட பிரமாண்ட ஆலயம்!
உள்ளே, இரண்டு துவஜஸ்தம்பங்கள்; ஒன்று ஸ்ரீவேதராஜ பெருமாளுக்கு; இன்னொன்று... திருமங்கையாழ்வாருக்கு! இன்னொரு விஷயம்... வேதராஜ பெருமாளுக்கு அருகிலேயே சந்நிதி கொண்டுள்ளார் திருமங்கையாழ்வார். உற்ஸவரின் திருநாமம் ஸ்ரீகல்யாணரங்கநாதர். தாயாரின் திருநாமம் ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார்.
எந்த ஊரிலும் இல்லாத இன்னொரு விசேஷம்... ஊரைச் சுற்றி சுமார் 4 கி.மீ. தொலைவுகளில் 11 திவ்வியதேச ஆலயங்கள் உள்ளன. திருக்காவளம்பாடி, அரிமேய விண்ணகரம், வண்புருஷோத்தமம், செம்பொன்செய்கோயில், மணிமாடக்கோயில், வைகுந்த விண்ணகரம், திருத்தேவனார்தொகை, திருத்தெற்றியம்பலம், திருமணிக்கூடம், திருவெள்ளக்குளம், பார்த்தன்பள்ளி ஆகிய இந்தத் தலங்களை, திருநாங்கூர் திருத்தலங்கள் என்பர். இவற்றுள், திருநகரி தலமும் ஒன்று!
மேற்குப் பார்த்த ஆலயம்; ஸ்ரீவேதராஜபெருமாளும் மேற்கு பார்த்தபடியே காட்சி தருகிறார். உள்ளே நுழைந்ததும் ஸ்ரீஅமிர்தவல்லித் தாயார் ஒரு பக்கமும்... ஸ்ரீஆண்டாள் இன்னொரு பக்கமும் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். உடையவர் மண்டபம், திருவந்திக்காப்பு மண்டபம், உத்ஸவ மண்டபம் என விஸ்தாரமான ஆலயத்தில், விழா வைபவங்களுக்கு குறைவே இல்லை.
ஸ்ரீராமாநுஜர், எம்பார், மணவாள மாமுனிகள் ஆகியோருக்கு தனிச் சந்நிதி உண்டு. இவர்களின் திருநட்சத்திர நாளில் சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெறுகின்றன. குறிப்பாக, திருமங்கையாழ்வாரின் திருஅவதார நாளன்று, வெகு விமரிசையாக சிறப்பு அலங்காரம், வீதியுலா, உத்ஸவம் என திருநகரியே அமர்க்களப்படும்!
இந்த நாளில், திருமங்கையாழ்வாரின் பாசுரங்களைப் பாடி, பெருமாளைப் பணிவோம்! எல்லா நலனும் பெறுவோம்!
நன்றி; சக்தி விகடன்
No comments:
Post a Comment