Bhoo thatha's Blogspot

Search my older Blog

Thursday, December 3, 2009

vaishnavam

பாண்டிச்சேரியில் வரலாற்று புகழ்மிக்க கோயில்களில் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். பிரசித்த பெற்ற இத்திருத்தலம் புண்ணியம் சேர்ப்பதில் காசியைவிட வீசம் அதிகம் என்று புகழப்படுகிற. அகத்திய முனிவர் இத்திருக்காஞ்சியில் இக்கோயிலில் தங்கி பூஜைகள் செய்வதாக வரலாறு சொல்கிறது. இறைவன் பெயர் கங்கைவராக நதீஸ்வரர். அம்மன் பெயர்கள் (இரு அம்மன்கள்) மீனாட்சி, காமாட்சி.
இத்தலத்தில் வருடம் ஒருமுறை நடக்கும் மாசி மக விழாவில் நீத்தார் நினைவுக் கடன் செய்வது மிக முக்கியமான நிகழ்ச்சியாகும். அந்த நாளில் இங்கு தர்ப்பணம் செய்யப்படும். எத்தகைய பாவ உயிர்களும் நேரே மோட்சத்துக்குச் செல்வதாக நம்பப்படுகிறது. மாசி மகத் திருநாளில் இந்த நதியில் மூழ்கியவர்கள் பாவங்கள் களையப்பட்டு சொர்க்கம் செல்வார்கள் என்று நம்பப்படுகிறது.
அந்தணன் ஒருவன் மரணமடைந்த தன் தந்தையின் அஸ்தியை ஒரு பானையில் இட்டு அதை தலையில் சுமந்து கொண்டு காசிக்குப் பயணமானான். அங்கு சென்று கங்கையில் அஸ்தியைக் கரைக்க வேண்டும் என்பது தான் அவனின் எண்ணம். போகும்போது நண்பன் ஒருவனையும் துணைக்கு அழைத்துச் சென்றான். பல நாட்கள் பயணம் செய்தான், வழியில் திருக்காஞ்சி சங்கராபாணி ஆற்றில் நீராடினான். அப்போது அஸ்தி கலசத்தை நண்பனிடம் தந்தான். நண்பன் அதைத் திறந்து பார்த்துவிட்டு உடனே மூடிவிட்டான். நீராடித் திரும்பிய அந்தணனிடம் தந்துவிட்டான். பின் பல நூறு மைல்கள் பயணம் செய்து இருவரும் காசியை அடைந்தனர்.
அங்கு அஸ்தியைக் கங்கையில் கரைப்பதற்காக அந்தணன் பானையை திறந்த போது அதைப் பார்த்த நண்பன் திடுக்கிட்டான். தான் திருக்காஞ்சியில் திறந்து பார்த்தபோது அஸ்தி பானையில் பூக்குவியல் இருந்ததாகவும், இப்போது அது சாம்பலாகவும் இருப்பதை நண்பன் கூறினான்.
இதனைக் கேட்ட அந்தணன் “வா, நாம் திரும்பி திருக்காஞ்சி சென்று இதனை சோதித்துப் பார்ப்போம்” என்று கூற, இருவரும். திருக்காஞ்சி அடைந்ததும் அஸ்தி திரும்ப பூக்குவியலானது. உடனே அந்தணன் வியந்து அதை சங்கராபரணி ஆற்றில் கரைத்து தகப்பனுக்கு நல்முறையில் தர்ப்பணம் செய்தான். இதன் காரணமாகத்தான் திருக்காஞ்சி தலம் காஞ்சியை விட வீசம் அதிகம் எனப் புகழ் பெற்றது என புராணம் கூறுகிறது. அது முதல் திருக்காஞ்சியில் நீத்தார் கடன் செய்யும் நிகழ்ச்சி ஒரு புனித நிகழ்ச்சியாக ஒவ்வொரு வருடமும் மகத்தன்று நடக்கிறது. மகத்துக்கு 10 நாட்கள் முன்பு ஆலயத்தில் கொடியேற்றி திருவிழா தொடங்குகிறது. விழா பத்து நாட்கள் நடக்கும்.
ஒன்பதாம் நாள் தேரோட்டமும், பத்தாம் நாள் மகா தீர்த்த வாரியும் நடக்கும். இந்த 10 நாட்களும் சுவாமி திருவீதி உலா வருவார். மகத்தன்று சங்கராபரணி ஆற்றங்கரையில் தீர்த்த வாரி நடைபெறும் போது 32 ஆலய சுவாமிகள் ஆற்றங்கரைக்கு வந்து இத்திருவிழாவில் கலந்து கொள்வார்கள். தீர்த்தவாரி முடிந்ததும் இரவுக்குள் அவரவர் ஆலயத்திற்குச் சென்று விடுவார்கள். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அனைத்து சுவாமிகளையும் தரிசித்து மகிழ்வுடன் செல்வார்கள். திருக்காஞ்சி வில்லியனூரிலிருந்து தென்கிழக்கில் அமைந்துள்ளது.

மாசி மகத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்தது. புதிதாகப் படிக்க விரும்புகிறவர்கள் மாசி மகத்தன்று ஆரம்பிப்பது சிறப்பானது. மகா விஷ்ணுவராக அவதாரம் எடுத்த நாளும் அதுதான்.
அன்று மகா மகக் குளத்திலோ வேறு புண்ணிய தீர்த்தத்திலோ குளித்தால் பிதுர் தோஷம் நீங்கும். சுபிட்சம் கிட்டும். மாசி நீராடல் செய்ய இயலாதவர்கள் வீட்டிலேயே குளித்து விட்டு மாக புராணம் படிக்கலாம். அல்லது பிறர் படிப்பதை கேட்கலாம்.
சாபத்தால் கழுதையான இந்திரன் மாசி மகத்தன்று துங்கபத்திரையில் நீராடி சாபம் நீங்கப் பெற்றான் என்று ஸ்கந்த புராணம் கூறுகிறது. அன்று நெல்லி மரத்தடியில், துளசிச் செடியின் கீழ் உள்ள மண்ணை உடலில் பூசிக் கொண்டு திருமாலை நினைத்தபடி நீராடினால் சகல பாவங்களும் விலகி விடும்.
மக நட்சத்திரத்தன்று ஈர்ப்புத் தன்மை காரணமாக பூமியில் காந்த சக்தி அதிகமாகி நீர் நிலைகளில் புதிய ஊற்று தோன்றி காந்த சக்தி கலக்கிறது. அதனால் அப்போது நதியில் நீராடுவதால் உடலிலும், மனதிலும் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்று விஞ்ஞானம் கூறுகிறது.
இம் மாதத்தில் எல்லா நாட்களிலும் புனித நீராடுவது பிரயாகை, கங்கை, நர்மதா, காவேரி, கோதாவரி, துங்கபத்திரா, தாமிரபரணி உள்பட 24 கோடி தீர்த்தங்களில் தொடர்ந்து 10 ஆண்டுகள் நீராடிய பலன் ஒரே நாள் நீராடுவதால் கிட்டும்.
முனி பத்தினியர்கள் சரஸ்வதி நதி தீரத்தில் மண்ணால் அம்பிகை விக்ரகம் அமைத்து மாசி மாதம் 30 நாட்களும் வழிபட்டு சுமங்கலி பேறு பெற்றனர். மாசியின் தேவதை மகா விஷ்ணு. இம்மாதம் முழுவதும் திருமாலை நினைத்து துளசியால் அர்ச்சனை செய்து வழிபட மிகவும் நல்ல பலன் கிட்டும்.
இது முருகனுக்கு உகந்த நாள். அன்று முழுவதும் விரதம் இருந்தால் மறுபிறவி இல்லை. அன்று ஏழைக்கு அன்னதானம் செய்யும் பெண்ணுக்கு ஆண்குழந்தை பிறக்கும்.
மக நட்சத்திரக் கடவுள் குரு பகவான். இருவருக்கு மஞ்சள் உடை அணிவித்து மஞ்சள் மலரால் அர்ச்சித்து வழிபட்டால் எண்ணியது நடக்கும். அன்று தான் முருகன் சிவனுக்கு சுவாமி மலையில் உபதேசம் செய்தார். இரண்யாட்சகனை சம்ஹரித்து பாதாளத்தில் இருந்த பூமியை மகா விஷ்ணு வராக அவதாரம் எடுத்து வெளியில் கொண்டு வந்த நாள் மாசி மகம்.
கர்ணணைப் பெட்டியில் வைத்து ஆற்றில் விட்ட குந்திதேவி அந்த பாவம் நீங்க உரோமேச முனிவரிடம் ஆலோசனை கேட்டாள். முனிவர் மாசி மக நாளில் ஏழு கடலில் நீராடினால் இந்தப் பாவம் விலகும் என்று கூறினார். ஒரே நாளில் எப்படி ஏழு கடல் நீராடல் என நினைத்தபோது ஒரு அசரீரி “திருநல்லூர் கோயில் பின்புறம் உள்ள தீர்த்தத்தில் ஏழு கடலை நினைத்து கொண்டு மாசி மகத்தில் நீராடினால் உனக்கு பாப விமோசனம் கிட்டும்” என்று கூறியது. குந்திதேவியும் அப்படியே செய்து பாப விமோசனம் பெற்றாள். அந்தத் தீர்த்தத்தின் பெயர் ‘சப்த சாகரத் தீர்த்தம்’ என்பதாகும். நாமும் அதில் மாசி மக நாளில் நீராடினால் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் விலகும்.
திருவண்ணாமலை ஆலய கோபுரம் கட்டிய மன்னன் வல்லாள மகாராஜா. இம் மன்னனுக்கு பிள்ளை இல்லை. எனவே ஆண்டுதோறும் மகாமகத்தன்று அண்ணாமலையாரே பிள்ளையாக எழுந்தருளி ஆண்டுதோறும் பள்ளி கொண்டாபட்டுக்குச் சென்று தீர்த்தவாரி கொடுத்து நீர்த்தார் கடன் செய்தார். தற்போதும் இது திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.
மாசி வளர்பிறை துவாதசியில் திருவெண்காடு அகோர மூர்த்தி ஆலயத்திற்கு இந்திரனே நேரில் வந்து இந்திர விழா நடத்துகிறார். இதற்கு இந்திர மகோற்சவம் என்று பெயர். இவ்வாலய அகோர சிவன் ஐந்து முகங்களுடன் பஞ்சமூர்த்தியாக காட்சி தருகிறார். இது போல் வேறு எந்த ஆலயத்திலும் இல்லை. கொங்கு நாட்டில் வெஞ்சமாக் கடலில் மாசி மகத் தேர்த் திருவிழா நடக்கும். மதுரை மீனாட்சி ஆலயத்தில் மாசி மக விழா 16 மண்டலம் நடக்கும். மயிலை கபாலீஸ்வரர் கடலுக்குச் சென்று தீர்த்த வாரி வழங்குவார். இவ்வாலயத்தில் தான் சம்பந்தர் பூம்பாலையின் அஸ்தியை பதிகம் பாடி உயிர்ப்பித்தார்.
தென்காசி விசுவநாதர் ஆலயத் தேர்த் திருவிழா மாசி மக பிரம்மோற்சவத்தில் நடக்கும் தேர் விழா முதல் நாள் தடம் பார்த்தல் நிகழ்ச்சி இன்றும் நடக்கிறது. பூண்டி முருகர் ஆலயத்தில் மாசி மக தேர்த்திருவிழா கோலாகலமாக நடக்கிறது.
திருநெல்வேலியில் அன்று நடக்கும் தெப்ப விழாவிற்கு அப்பர் தெப்பம் என்று பெயர்.அது போல் திருக்கோஷ்டியூர் வைணவத் தலத்தில் தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெறும். இதற்கு ‘ஜோசியர்வாள் தெப்பம்’ என்று பெயர். அன்று தெப்பக் குளக் கரைகளில் ஆயிரக்கணக்கான அகல் தீபங்கள் ஏற்றப்பட்டு இருக்கும். இந்த வேண்டுதல் விளக்கை வீட்டிற்கு எடுத்துச் சென்று நெற்பானையில் வைத்து அடுத்த ஆண்டு தெப்பத்திற்கு குளக்கரையில் ஏற்றுவார்கள். நாமும் மகத்தன்று தீர்த்தவாரியில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து பாவம் போக்கி அருள் பெறுவோம்.

No comments: