Bhoo thatha's Blogspot

Search my older Blog

Wednesday, January 27, 2016

இதயத்தின் முக்கிய வேலை

1 இதயத்தின் முக்கிய வேலை என்ன?courtesy dinamalar

உடல் உறுப்புகள் செயல்படுவதற்கு தேவையான, பிராணவாயு செறிந்த சுத்த ரத்தத்தை வழங்குவதும், உடல் திசுக்கள் பயன்படுத்தியது போக, திரும்ப வரும் கரியமிலவாயு நிறைந்த அசுத்த ரத்தத்தை, நுரையீரலுக்கு அனுப்பி பிராணவாயு ஏற்றம் செய்து, மீண்டும் உடல் உறுப்புகளுக்கு வழங்குவதும், இதயத்தின் வேலைகள்.



2 இதய செயல்பாட்டிற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் நாளங்கள் எவை?


இதயத்துக்கு ரத்தத்தை வழங்குவது இடது முன் தமனி, இடது சுற்றுத் தமனி மற்றும் வலது முன் தமனி.



3 இதயத்திலுள்ள ரத்தக் குழாய்கள் எதனால் பாதிக்கப்படுகின்றன?


இயற்கையில் மனித உடல் வயதாக துவங்கும் போது, அதிலுள்ள ரத்தக் குழாய்கள் கடினமாகத் துவங்குகின்றன. ரத்தக் குழாய் உள்ளுறைகளில் நாளடைவில் கொழுப்புப் படிமங்கள் படிவதால், அவை சுருங்கி விடுகின்றன. இதனால் ரத்த ஓட்டம் குறைகிறது. இந்த மாற்றம், இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களுக்கு மட்டுமல்ல, உடலிலுள்ள எல்லா ரத்தக் குழாய்களுக்கும் பொருந்தும்.



4 வயதானோருக்கு ரத்தக் குழாய் சுருங்குவது இயல்பு. அது இளம் வயதில் ஏற்படக் காரணம் என்ன?

முதன்மை காரணங்கள்: புகைப்பிடித்தல், உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் அதிக கொழுப்பு, கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய்.பிற காரணங்கள்: உடல் பருமன், உடற்பயிற்சியில்லாத வாழ்க்கை, மன அழுத்தம்.



5 இதயத் தமனி அடைப்பை சரி செய்யாவிட்டால் என்ன பிரச்னை நேரிடும்?


அடைப்பை உடனடியாக சரிசெய்யாவிட்டால், இதயத்துக்கு தேவையான பிராணவாயு இல்லாமல், அதன் தசைகள் அழுகத் துவங்கும்.



6 இதயத் தமனி அடைப்பை எவ்வாறு சரிசெய்யலாம்?

ஒரு இதயத் தமனியில் அடைப்பு ஏற்பட்டால், அதை 'ஆஞ்சியோபிளாஸ்டி' போன்ற சிகிச்சையால் சரிசெய்யலாம். ஒன்றிற்கு மேல் இரண்டோ அல்லது மூன்று அடைப்புகள், இதயத் தமனியில் ஏற்பட்டால், குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை அதாவது பைபாஸ் சிகிச்சையின் மூலம் சரிசெய்ய வேண்டும்.



7 பைபாஸ் அறுவை சிகிச்சை என்றால் என்ன?

பைபாஸ் சிகிச்சை என்பது, ஒரு ரயில் தண்டவாளத்தைக் கடக்க, மேம்பாலம் அமைப்பது போல், அடைப்பு ஏற்பட்ட இதயத் தமனியில், புதிதாக வேறொரு தமனிக் குழாய் மூலம் மாற்றுப்பாதை ஏற்படுத்தி, ரத்த ஓட்டத்தை சீரமைப்பது. புதிதாக இணைக்கப்படும் ரத்தக் குழாயின் ஒரு முனை, மகா தமனியிலும் மற்றொரு முனை பழுதடைந்த தமனியில் அடைப்பைத் தாண்டி நல்ல பகுதியிலும் இணைக்கப்படும். இதனால் ரத்த ஓட்டம் இயல்பு நிலைக்குத் திரும்பும். இதுதான் பைபாஸ் சிகிச்சை.



8 பைபாஸ் அறுவை சிகிச்சையை எவ்வாறு செய்வர்?

அறுவை சிகிச்சையின் போது, நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து, நெஞ்சின் மைய எலும்பை இரண்டாக பிளந்து, இதயம் வெளிக்கொணரப்படும். பல ஆண்டுகளுக்கு முன், இது போன்ற அறுவை சிகிச்சைகளில், இதயத் துடிப்பு நிறுத்தப்பட்டு இதயம் குளிர்விக்கப்பட்டு, ரத்தத்தை சுத்திகரிக்கும் ஒரு கருவியில் இணைக்கப்படும். பின், நெஞ்சுப் பகுதியில் இருந்தும், தொடையில் இருந்தும் ரத்தக் குழாய் பிரித்து எடுக்கப்பட்டு, இதயத் தமனிகளில் அடைப்புக்குப் பின் வைத்து தைக்கப்படும். அறுவை சிகிச்சை முடிந்த பின், இதயத்திற்கு மின் அதிர்ச்சி கொடுத்து மீண்டும் உயிர்ப்பிக்கப்படும்.



9 நுண்துளை அறுவை சிகிச்சையின் மூலம், பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய முடியுமா?


கண்டிப்பாக செய்ய முடியும். ஆனால், நோயாளியின் உடல் கட்டமைப்பு மற்றும் இதயத் தமனி அடைப்பை பொறுத்து, நுண்துளை இதய அறுவை சிகிச்சை செய்யலாமா என்பதை, தேர்ச்சி பெற்ற மருத்துவர்கள் முடிவு செய்வர்.



10 'ஆஞ்சியோபிளாஸ்டி' மற்றும் பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின், என்ன விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்?

உடற்பயிற்சி, மனஅழுத்தம் ஏற்படாமல் எண்ணங்களை சீராக வைத்துக் கொள்வது, உணவு முறை மாற்றம், எண்ணெய் பதார்த்தங்கள் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்தல், நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுதல், புகைப்பழக்கம் தவிர்த்தல், மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை

கடைபிடிக்க வேண்டும்.
Courtesy





- எம்.எம்.யூசுப்,

நுண்துளை இதய அறுவை சிகிச்சை நிபுணர், சென்னை.

82206 69911

No comments: