Bhoo thatha's Blogspot

Search my older Blog

Wednesday, January 27, 2016

அரசும், அரசியலும் ஆன்மிகமே!

புத்திரர்களை பெற்றுக் கொள்ள பறவையாக பிறந்தாலும். புத் என்ற நரகத்தில் விழாமல் இருக்க புத்திர உற்பத்தி செய்தாலும் அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யவில்லை மந்தபாலர். 

ஆனாலும் அவர் சுகம் கருதி வெளியே நீங்கிய அச்சமயத்தில் தன் குழந்தைகளை பற்றி அக்கறையோடு அக்னியிடம் வேண்டிக் கொண்டது ஒரு உயர்ந்த அம்சம். குடும்ப காட்சியை இந்தக் கதை நினைவூட்டுகிறது. அந்தக் குழந்தைகள் ஒரு உயர்ந்த ரிஷிக்கு பிறந்ததினால் மிகுந்த விவேகம் உடையனவாக இருந்தன. அம்மாவின் பாசத்தை பார்த்து, ‘எதற்கு துடிக்கிறாய், நீ யார், நான் யார்?’ என்ற உயர்ந்த தத்துவத்தை அவள்முன் வைத்தன.

அந்தப் பாசத்திற்கு கட்டுண்டு, அழுது, அவளை புலம்ப விட்டு தானும் புலம்பவில்லை. மாறாக, ‘நீ பறந்து போ. எங்களால் சுயமாக இருக்க முடியும். அப்படியே இறந்தாலும் சந்தோஷமாக இறக்க முடியும்,’ என்று கூறி அனுப்பின. தங்களால் தப்பித்துக் கொள்ள இயலாது. பறக்க இயலாது. ஆயினும் என்ன, ஒரே ஒரு சாதனம் இருக்கிறது - இறை வேண்டுதல். வலிமையுள்ள தேவனான அக்னி மனம் மாற வேண்டுதல், துதித்தல், பிரார்த்தனை காப்பாற்றும். உடல் 
வலிவோ, மனவலிவோ, பிறர் வலிவோ இல்லாது போனாலும் உயிர் வாழவும், வளரவும் பிரார்த்தனை உதவும் என்று அந்த ரிஷி குமாரர்களுக்கு தெரிந்திருந்தது. அது அவர்கள் ரத்தத்தில் ஊறி இருந்தது.

மனிதர்களுக்கு இக்கட்டு நேரும்போது, சொந்த பந்தங்களால் கைவிடும்போது இந்த சாரங்க பட்சிகளின் கதையை நினைவு கொள்வது 
நல்லது. எதனால் உயிர் பிழைத்தது? அப்பாவின் யாசகமா அல்லது அந்தக் குழந்தைகளின் பிரார்த்தனையா? அல்லது இரண்டுமேதானா?|
ஒவ்வொரு தனி மனிதரும் தன்னை முன் வைத்து யோசித்துக் கொள்ளலாம்.

மற்றவரால் உயரப் போகிறோமோ, அவர்களால் உயிர் வாழப் போகிறோமா அல்லது என் மனோபலம், என் பிரார்த்தனை என்னை உயிர்ப்பிக்கப் போகிறதா என்று கேட்டுக் கொள்ளலாம். இந்தக் கதை தந்தையையும் அலட்சியம் செய்யவில்லை, தன்னையும் விட்டு விடவில்லை. அதேநேரம் பெண்களுக்காக அலையும் ஆண் தன்மையும், ஆண்களை கடுமையாகத் தாக்கி பேசும் பெண்களையும் தெளிவாக காட்டுகிறது. இது உலக நடப்பு. இதிலிருந்தும் மனிதர்கள் பாடம் கற்கலாம். இந்தக் கதை இருதாரத்தை சிலாகிக்கவில்லை. 

மாறாக எவ்வளவு உயர்ந்த ஒரு விஷயமும், ஒரு உயிரினமாக இருந்தாலும், என்ன அறிவு இருந்தாலும் இரு பெண்களின் ஒற்றுமையின்மையினால் ஒரு ஆண் கலவரப்பட நேரிடும் என்று தெள்ளத் தெளிவாகச் சொல்கிறது. சக்களத்தி சண்டை பல மனிதர்கள் வாழ்வில், பல உயர்ந்தோர் வாழ்வில் சோபை இழக்கச் செய்திருக்கிறது. காண்டவ வனம் முழுவதும் கபளீகரம் செய்த அக்னி பகவான் அர்ஜுனன் முன்பும், கிருஷ்ணர் முன்பும் தோன்றினார். தன்னிடமிருந்த மிக உயர்ந்த வில்லை அர்ஜுனனுக்கு வழங்கினார். 

காண்டவ வனத்திலிருந்து அந்த வில் கிடைத்ததால் அதற்கு காண்டீபம் என்று பெயர். வானரக் கொடியுடன் கூடிய தேரை கொடுத்தார். பல அஸ்திரங்களை வழங்கினார்.‘‘தக்க சமயத்தில் இது உமக்கு பயன்படும். இன்னும் உயர்ந்த விஷயங்களை சிவபெருமான் மூலம் உமக்கு தர ஏற்பாடு செய்கிேறன். எந்த வில்லாளிக்கும் இணையில்லாத வில்லாளியாக நீ திகழ்வாய். 

உன் அன்புக்கு நன்றி’’ என்று ஆசிர்வதித்தார். கிருஷ்ணரைப் பார்த்து, ‘‘நீங்கள் யார் என்று அறிவேன். ஆயினும் கிருஷ்ணராக பிறந்திருக்கும் உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள்’’ என்று கேட்க, கிருஷ்ணர் சிரித்துக் கொண்டே, அர்ஜுனனோடே தன்னுடைய நட்பு எல்லா வகையிலும் நன்கு வளர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அக்னி பகவான் ஆசிர்வதித்தார். 

கிருஷ்ணரும், அர்ஜுனுனும், தப்பித்து போன மாயாசூரனும் அக்னியை வலம் வந்தார்கள். இந்திரனும் இவர்களை ஜெயிக்க முடியாது என்று தெரிந்து கொண்டு திரும்ப, அக்னியும் சந்தோஷமாக தன் இருப்பிடம் வந்தார். மாயாசூரன் மண்டியிட்டு அர்ஜுனன் காலை கெட்டியாக பிடித்துக் கொண்டான். ‘‘தப்பித்து ஓடிய என்னை கொல்லாமல் விட்டதற்கு நன்றி. 

உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள், அதை நான் செய்கிறேன்’’ என்றான். ‘‘எனக்கு என்ன தெரியும். கிருஷ்ணரை கேள். எனக்கு வேண்டியவற்றை அ வரே சொல்வார்’’ என்று பதில் சொன்னான்.மாயாசூரன் கிருஷ்ணரிடம் என்னிடம் என்ன வேண்டும் கட்டளை இடுங்கள் என்று அர்ஜுனன் சொல்ல, கிருஷ்ணர் யோசித்தார்.

‘‘அர்ஜுனனுக்கும், எனக்கும் தருவதை விட தருமபுத்திரருக்கு நீ தர வேண்டும். மிகச் சிறந்த மாளிகையை நீ ஏற்படுத்த வேண்டும். நீ மயன். உன்னால் செய்ய முடியாத விஷயமே இல்லை. இதுபோல் இன்னொன்றைச் செய்ய முடியாது என்பதாக ஒரு மாளிகை தருமபுத்திரருக்கு செய்து கொடுக்க வேண்டும். பஞ்ச பாண்டவர்கள் செளக்கியமாக வாழ நீ உதவ வேண்டும். அவர்கள் வனங்களில் திரிந்து கடுமையான வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள்.

நல்ல காற்றும், உணவும், சுகபோகமான கட்டில்களும், இருக்கைகளும், தாரையாக விழும் அருவியும், நீச்சல் குளமும், இன்னிசை கச்சேரி நடத்துகின்ற கூடங்களும், புகை வீசாத சமையல் அறைகளும் அங்கு இருக்க வேண்டும்’’ என்று கட்டளை இட, மயன் என்கிற அந்த மாயாசூரன் அவ்விதமே செய்வதாக வாக்களித்தான்.இந்த ஒரு சிறு விஷயம் கூட யுத்தத்தை நோக்கியே இருந்தது. சிறு விஷயங்களுக்குக்கூட பொறாமைப்படுகின்ற துரியோதனன் இந்த மாளிகைக்கு வரும்போது பெரும் பொறாமை கொள்பவனாக நிச்சயம் மாறுவான் என்று கிருஷ்ணருக்கு தெரிந்திருந்தது. 

மகாபாரதத்தின் ஒவ்வொரு அசைவும் கிருஷ்ணரின் அசைவாகவே இருந்தது. மற்றவர்கள் அவர் அசைவிற்கு, பார்வையாளராக இருந்தார்கள், அவ்வளவே. மகாபாரதத்தை ஒரு ஆன்மிக நூலாக அல்லது அரசியல் நூலாக உற்றுப் பார்க்கிறபொழுது கிருஷ்ணரது ஒவ்வொரு நடவடிக்கையும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ போரை நோக்கி நகர்வதாகவே இருக்கிறது.

தானே முன்நின்று பேசுவதாக அல்லாது தனக்கு உடன் இருப்பவர்களையும் அவர் இந்த விஷயத்தில் உபயோகப்படுத்திக் கொள்கிறார். அவர் சொல்லும் ஆன்மிகத்தில், அரசியல் என்கிற விஷயமும் இருக்கிறது. ஆன்மிகத்தில் அரசன் என்கிற விஷயம் இருந்தால் அரசியல் என்கிற விஷயமும் இருக்கத்தானே செய்யும்! அரசன் என்று ஒருவன் இருந்தால் குரு என்பவர் இருக்கத்தானே செய்வார். குரு என்று ஒருவர் இருந்தால் போதனை என்பது நிச்சயம் இருக்கத்தானே செய்யும். 

அரசன் என்று ஒருவன் இருந்தால் போர் வீரர்கள் இருக்கத்தானே செய்வார்கள். உடல் பலம் என்பது முன்னே நிற்கத்தானே செய்யும். அப்படி இருப்பின் அந்த விஷயங்கள் போரை நோக்கித்தானே முடிவுறும். அரசனை நோக்கித்தானே அந்தணர்கள். அந்தணருக்காக அரசர் வாழ்ந்தது இல்லையே. அரசருக்காகத்தானே குடிபடைகள். 

எனவே, மக்கள் கூட்டு வாழ்க்கை இயல்பு என்று இருந்தால் அதற்கு தலைவன் என்று ஒருவன் உண்டு என்பதும் அந்த தலைவனுக்கு அரசன் என்று பெயர் வைப்பதும், அந்த அரசன் நன்னெறியோடு வாழ வேண்டும் என்பதும், காலப்போக்கில் அவர்கள் அதை மறந்து விடுவார்கள் என்பதும், காலப்போக்கில் மறந்து விட்ட அந்த விஷயத்தை இயற்கை அல்லது கடவுள் தலையில் அடித்து மறுபடியும் ஞாபகப்படுத்தும் என்பதையும் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும். அப்படியானால் அரசு என்பதும், அரசியல் என்பதும் ஆன்மிகமாகத்தானே இருக்க வேண்டும்! 

மகாபாரதம் வாழ்வின் நியமத்தைச் சொல்லும் ஒரு நூல். வாழ்வு நியமம் என்பது ஆன்மிகம் சார்ந்ததாகத்தான் இருக்கிறது, இருக்க வேண்டும். சுபத்திரையை திருமணம் முடித்து அர்ஜுனன் வந்த பிறகு இந்திரப்ரஸ்தம் அதாவது, காண்டவப்ரஸ்தம் மிக சந்தோஷமான நிலையை எட்டியது. புதிய அரசர்கள், புதிய அரசாட்சி, புதிய அதிகாரிகள் என்று வருகிறபொழுது அந்த தேசம் தன்னை வெகுவேகமாக முன்னேற்றப் பாதையில் அமைத்துக் கொள்கிறது. செய்வன திருந்தச் செய் என்கிற விஷயம் அதிகாரிகளாலும், அரசர்களாலும் கூர்மையாக கண்காணிக்கப்பட்டு அந்தக் கண்காணிப்பின் பேரில் மிகச் சிறப்பான ஒரு மாறுதல் ஏற்படுகிறது. 

மக்களின் திருப்தியே மிக முக்கியமான விஷயம் என்றும், மக்களின் ஒழுங்கே தேசத்தின் ஒழுங்கு என்றும், மக்களின் அமைதியே மிக முக்கியம் என்றும் நடத்தப்படுகிறது. எனவே, நிர்வாகம் என்கிற விஷயத்தில் முழு ஈடுபாடு கொண்டிருக்கிற தேசமே நாகரீகம் மிக்க தேசமாகும். இயற்கை பேரிடர்களையும், பகைவர்களையும் தடுத்து நிறுத்துகின்ற வல்லமை மட்டுமல்லாது அமைதியான காலத்தில் மிக முன்னேற்றமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவிப்பதும் நிர்வாகம்தான்.

கீழ் நிலையில் இருக்கின்ற குடிமகனுக்கும், உயர் நிலையில் இருக்கும் அரசனுக்கும் தொடர்பு ஏற்படுத்துவது நிர்வாகம்தான். மக்களின் குறைகளை அரசன் கேட்பது நிர்வாகத்தின் மூலம்தான். மக்களின் குறைகளை தீர்ப்பது நிர்வாகத்தின் மூலம்தான். எனவே, நிர்வாகம் என்பது சபை என்ற விஷயமாக அன்று சொல்லப்பட்டு வந்தது. 

நல்ல சபா மண்டபம் வேண்டும் என்பது ஒரு அரசனுடைய முக்கியமான தகுதி. அதிகாரிகள் வீட்டிலிருந்தே நிர்வாகம் செய்ய இயலாது, கூடாது. அவர்களுக்கு மிகச் சரியான இடம் வேண்டும். ஒரு அலுவலகம் வேண்டும். அந்த அலுவலகத்திற்கு அரசன் வந்துபோக வேண்டும். அரசன் அதிகாரிகள் புடைசூழ அமர வேண்டும் என்பதால், அந்தந்த அதிகாரிகள் அந்தந்த இடத்தில் அமர வேண்டும் என்பதால் சபை என்பது மிக நறுவிசாக, சிறப்பாக இருக்க வேண்டும். கிருஷ்ணர் நேரிடையாக இந்த சபை நிர்மாணத்தில் இறங்காமல் நாரதரை தூண்டிவிட்டார். 

சொல்லோ, செயலோ அல்ல. கிருஷ்ணர் எண்ணத்தை நாரதர் அறிவார். சகோதரர்களெல்லாம் ஒன்றுகூடிய ஒரு நேரத்தில் நாரதர் நாராயணன் நாமத்தோடு வந்து இறங்கினார். ‘‘எந்த ஊரிலிருந்து வருகிறீர்கள் மகரிஷியே. என்ன விசேஷம்?’’ என்று தருமர் பணிவாக உபசாரத்துடன் கேட்க, அவர் மிக சந்தோஷத்தோடு தருமரை வாழ்த்தி விட்டு பேசத் தொடங்கினார்.

மூன்று உலகத்தில் சஞ்சரிக்கின்ற நாரதருடைய பேச்சு முக்கியமானது. ‘‘நான் எமதர்மனுடைய சபைக்குப்போய் வருகிறேன். அவர்களையெல்லாம் அவர்களுடைய சபையில்தான் நான் சந்திக்கிறேன். யமனுடைய சபை எப்படி இருக்கும் தெரியுமா?’’ என்று கேட்டு நீண்டதாக விவரித்தார். ‘‘அதற்குப் பிறகு நான் குபேரனுடைய சபையைப்போய் பார்த்து வந்தேன். அது கொள்ளை அழகு. அங்கிருக்கின்ற பலபேர் மிகுந்த பலசாலிகள். தெளிவான சிந்தனை உடையவர்கள். அங்கு உள்ள மாடங்களும், குளங்களும், நீரூற்றுகளும் அற்புதமானவை. 

தங்கத்தாலும், வெள்ளியாலும் இழைக்கப்பட்ட தூண்கள்...’’ என்றெல்லாம் சொல்ல, ஆச்சரியத்தோடு கேட்டு வந்தார்கள். ‘‘எல்லாவற்றிலும் சிறந்தது இந்திரனுடைய சபை. உள்ளே நடனமாதர்கள் அவ்வளவு அழகு...’’ அவர் விவரிக்க, தங்களுக்கோர் சபை வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. காண்டப்ரஸ்தத்திற்கு ஒரு மிகச் சிறந்த சபை என்று இருந்தால் அது மதிப்புதானே, மரியாதைதானே என்ற எண்ணம் வந்தது. இவர் வீடு வாங்கியிருக்கிறார், அவர் வீடு வாங்கியிருக்கிறார் என்று சொன்னால் கேட்டவருக்கு தானும் வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை வரும். நாரதர் நேரிடையாக உனக்கு ஒரு சபை வேண்டும் என்று சொல்லாது மற்றவர் சபையை வியந்து சொல்ல, தங்களுக்கும் சபை வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. 

அவர்களுக்கு மிகப் பெரிய சபை ஏற்பட்டு அதன் சித்திர விசித்திரங்கள் வெளியில் பேசப்பட்டு, வந்த விருந்தினர்கள் அதைக் கண்டு மயங்கி பொறாமைப்பட்டு, அதனால் பகை ஏற்பட்டு, அந்தப் பகையால் யுத்தம் ஏற்பட்டு அந்த யுத்தத்தால் பூபாரம் குறையும் என்ற எண்ணமே அங்கு இந்தச் செயலுக்கு காரணமாக இருந்தது. கிருஷ்ணரின் சம்மதம் இல்லாமலா நாரதர் வந்திருப்பார்! 

நன்றியில் நனைந்த மயன் தன்னுடைய திறமை முழுவதும் காட்டி தனக்கு அபயம் அளித்த அர்ஜுனனுக்கு நன்றி சொல்ல விரும்பினான். பரிசளிக்க விரும்பினான். அர்ஜுனனுக்கு தருவதின் மூலம் தருமருக்கு ஒரு மிகப் பெரிய சபா மண்டபத்தை அழகாக நிர்ணயம் செய்தான். பாறைகளால் அடித்தளங்கள் கட்டப்பட்டு, செங்கற்களால் தூண்கள் எழுப்பப்பட்டு, சுவர்கள் எழுப்பப்பட்டு, அதில் முத்து குழைக்கப்பட்டு, தங்கத்தில் உத்திரங்கள் பொருத்தப்பட்டு, வெள்ளியில் சித்திர வேலைப்பாடுகள் செய்யப்பட்டு, உலகத்தில் எந்த பொருள் மிக உயர்த்தியோ அது அந்தந்த இடத்திலே அழகாக பதிக்கப்பட்டு மிகச் சிறந்த சபையாக அது விளங்கியது.

பஞ்சபாண்டவர்கள் வியந்தார்கள். தங்களுக்கு இப்படி ஒரு சபையா, தங்களுக்கு மறுபடியும் ராஜ்ஜியமா, தங்களுக்கு இத்தனை அழகாக ஒரு மண்டபமா என்று ஆச்சரியப்பட்டார்கள். கிருஷ்ணனை மனதிற்குள் வைத்து வணங்கினார்கள். மாயாசூரன் அர்ஜுனனை தழுவிக் கொண்டான்.‘‘என் திறமை முழுவதும் காட்டியிருக்கிறேன். உன்னுடைய அன்புக்கு இது ஈடு செய்ததாகாது. உனக்கு இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்று ஆசை இருக்கிறது. உனக்கு காண்டீபம் என்கிற வில் கொடுத்ததுபோல, உன் தம்பியான பீமனுக்கு மிகச் சிறந்த கதை ஒன்று தந்திருக்கிறேன். அது மிகச்சிறந்த போர் வீரர்
களால் கையாளப்பட்டு ஓர் இடத்திலே வைக்கப்பட்டிருந்தது.

 அது பல கதைகளையும் உடைக்கும் வல்லமை பெற்றது. மிகுந்த வல்லமை பெற்றது. அதை சுழற்ற பீமனால் முடியும். இவை அனைத்தும் உங்களுக்கு உங்களைப் பற்றிய நம்பிக்கையை அதிகப்படுத்தும் என்று நினைத்தே வழங்குகின்றேன்.’’அந்த மாளிகை வர்ணனைக்கு அப்பாற்பட்டு இருந்தது. தெளிந்த நீரோடைபோல தரை இருந்தது. நீர் இருக்கும் என்று வேட்டியை சற்று தூக்கிக்கொண்டு போனால் அது தரையாக இருந்தது. இது தரைபோல் இருக்கின்ற இடம்.

ஆனால், கண்ணுக்கு நீராக காட்டப்படுகிறது என்று சொல்லி கால் வைத்தால் அது சலனமற்ற நீராக இருந்தது. இடுப்பளவு ஆழத்தில் விழ நேர்ந்தது. காவலர்கள் தடுமாறி விழ, பெண்கள் வாய்விட்டுச் சிரித்தார்கள். அந்த இடத்திற்கு எல்லா உலகத்திற்கும் சஞ்சாரம் செய்கிறவரும், எல்லா வித்தைகளும் தெரிந்தவருமான நாரதர் வந்தார். தருமருக்கு நாரதரை கண்டவுடன் மிகப்பெரிய சந்தோஷம். 

தருமர் பேசுவதில் விருப்பமுள்ளவர். உரையாடுவதில் ஆர்வமுள்ளவர். இது என்ன, அது என்ன என்ற கேள்விகள் உடையவர். விசாரம் உள்ளவர். எனவே நாரதர் வந்ததும்,‘‘எங்கள் சபையை பார்த்தீர்களா. இதுபோல சபை வேறு உலகத்தில் உண்டா?’’ என்று ஆவலாகக் கேட்டார். அவர் தன்னுடைய சபையை பற்றிய பெருமையை மட்டும் கொண்டவரில்லை.

 இது இந்த பூமியில் ஒன்றா அல்லது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு சபை இருக்கிறதா என்று அறிந்துகொள்ளும் ஆவலாக கேட்கப்பட்ட கேள்வி. இந்திரன் சபை பற்றியும், வருணனின் சபை பற்றியும், யமனின் சபை பற்றியும் நாரதர் விவரமாகச் சொல்ல, அவர்கள் மிகக் கவனமாகக் கேட்டு, அம்மாதிரியான விஷயங்களில் தங்களுடையதும் ஒன்று என்ற அமைதியை அடைந்தார்கள். 

கட்டிடங்கள் மட்டும் அல்ல. சுற்றியுள்ள குளங்களும், நீர் தேக்கங்களும், சிறிய அருவிகளும், அதைச் சுற்றியுள்ள தோட்டங்களும், அதில் உலா வரும் பறவைகளும் மிக நேர்த்தியாக அமைந்திருந்தன.நாரதரோடு தொடர்ந்து பேசுகிறபோது தருமர் பற்பல மன்னர்களைப் பற்றிக் கேட்க, அதில் குறிப்பாக அரிச்சந்திரன் என்ற மன்னனைப் பற்றி நாரதர் வெகுவாக சிலாகித்து கூறினார்: 

‘‘திரிசங்கு என்ற மன்னனுக்குப் பிறந்தவர் அரிச்சந்திரன். அவர் தன் புஜ பலத்தால் ஏழு கண்டங்களையும் வென்று அந்த மன்னர்களை அடிமையாக்கி காணிக்கைகள் பெற்று அதன்மூலம் பெரும் யாகங்கள் செய்து இணையில்லா மன்னராக திகழ்ந்தார். உலகம் அனைத்தும் ஜெயித்து ராஜசுய யாகம் செய்வதால் அவருக்கு இந்திரன் பதவியில் அமர்ந்திருக்கின்ற வாய்ப்பு கிட்டியது. 

அங்கு அவர் மிக கம்பீரமாகவும், நிரம்பிய அதிகாரத்தோடும் இருக்கிறார். தருமபுத்திரா, நான் இங்கு வரும்போது உன்னுடைய தந்தை பாண்டு அரிச்சந்திரனைப் பற்றி சொல்லி, அவரைப்போல ராஜசுய யாகம் நீ செய்ய வேண்டும் என்று அவர் கட்டளையிட்டதாக உன்னிடம் சொல்லச் சொன்னார். அற்புதமான இரண்டு தம்பிகளை பெற்று இருக்கின்ற நீ இதைச் செய்வதில் வல்லவன். ஆனால், இது எளிதான விஷயம் அல்ல. இதில் தவறு ஏற்படின் தண்டிப்பதற்கு பிரம்மராட்சசர்கள் த்துக்கொண்டிருக்கிறார்கள். 

எனவே, எந்த இடைஞ்சலும் இல்லாது மிகுந்த பராக்கிரமத்தோடும், நியமத்தோடும் இதைச் செய்து முடிக்க வேண்டும். இதைச்செய்து பெரும் புகழோடு தருமன் இங்கு வரவேண்டும் என்பதாகக் கூறு என்று தன்னுடைய ஆசையை தெரியப்படுத்தினார். இதை நான் உனக்குச் சொல்கிறேன். இதை நீ நன்கு யோசித்து இந்த பெரும் காரியத்தில் தீவிரமாக ஈடுபட்டு, இது உனக்கு நன்மை பயக்கும்’’ என்று ஆசிர்வதித்தார். நாரதரின் வருகை மிக சூட்சமமான 
விஷயத்தை பஞ்சபாண்டவர்களுக்கு நடுவே ஏற்படுத்தியிருந்தது. தேசம் கிடைத்துவிட்டது. 

வாழ்வதற்கும் அருமையான மாளிகை கிடைத்துவிட்டது. பலம் வாய்ந்த சகோதரர்களும், திறமையான அதிகாரிகளும், அன்பான மக்களும் இருக்கிறார்கள். தாயும், மனைவியும் இருக்கிறார்கள். இதைவிட வேறு என்ன தேவை ஒரு மன்னனுக்கு! இது போதுமே என்று இருக்க, தருமரை நாரதர் விடவில்லை. ஒரு விதையை அவர் நெஞ்சிலே வைத்துவிட்டுப் போனார். தான் சொல்வதாக இல்லாது இறந்துபோன பாண்டு சொன்னதாக, பித்ரு வாக்கியமாக அதை விதைத்துவிட்டுப் போனார். 

இப்போது அது வெறும் ஆலோசனையாக இல்லாது ஒரு உத்தரவாக மாறி தருமருடைய மனதை குடையத் துவங்கியது. ராஜசுய யாகமா, நானா என்னால் முடியுமா என்ற கலவரம் ஏற்பட்டது. முடியும் என்பதால்தான் ஊக்கப்படுத்துகிறார்கள். முயற்சித்தால் என்ன என்ற ஆசை வந்தது. பீமனும், அர்ஜுனனும் இருக்கும்போது இதற்கு கவலைப்படுவானேன் என்ற எண்ணம் ஏற்பட்டது. வேண்டும் என்று சில நேரமும், வேண்டாம் என்று சில காலமும் அவர் தவித்து வந்தார். 

அவ்வப்போது தன்னுடைய அதிகாரிகளையும், உறவினர்களையும், சகோதரர்களையும் ராஜசுய யாகம் பற்றி அவர்களுடைய கருத்துகளைக் கேட்டுக்கொண்டு வந்தார். எப்பொழுது சந்தித்தாலும் இதைப்பற்றி மன்னர் கேட்கிறார் என்பதால் அவரைச்சுற்றி உள்ளோரும் இதைப்பற்றி தீவிரமாக யோசிக்கத் துவங்கினார்கள். அவர்களால் எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. ஒருநாள் சரி என்றும், மறுநாள் வேண்டாம் என்றும் உற்றாரும், நண்பர்களும் கூறுவதைக் கேட்டு தருமபுத்திரர் மயங்கினார். 

வேறு வழியே இல்லை. கிருஷ்ணரிடம்தான் சரணடைய வேண்டும் என்று தீர்மானித்தார். உடனடியாக கிருஷ்ணரை இந்திரப்ரஸ்தம் வரும்படி தூது அனுப்பினார்.கிருஷ்ணருக்கும் அந்த ராஜசுய யாகம் பற்றிய தருமரின் நினைப்பு பிடித்திருந்தது. தன்னுடைய அவதார நோக்கிற்கு இந்த விஷயம் மிகப்பெரிய உதவி செய்யும் என்று புரிந்திருந்தது. 

வெகுவேகமாக கிருஷ்ணர் இந்திரப்ரஸ்தம் நோக்கி வந்தார். பஞ்ச பாண்டவர்கள் தக்கபடி அவரை உபசரித்தார்கள். தருமரும், பீமனும் அவர் தந்தையாகக் கொண்டாடினார்கள். அர்ஜுனன் நெடுங்காலம் பிரிந்த நண்பனைத் தழுவிக்கொண்டான். நகுலனும், சகாதேவனும் கிருஷ்ணரை குருவாக பார்த்தார்கள். இந்திரப்ரஸ்த ஜனங்களுக்கு கிருஷ்ணர் தெய்வமாகத் தோன்றினார். சகலரும் அவரை வணங்க, அவர் ராஜசுய யாகம் பற்றி பேசத் தொடங்கினார்.

பஞ்சபாண்டவர்கள் வியந்தார்கள். தங்களுக்கு இப்படி ஒரு சபையா, தங்களுக்கு மறுபடியும் ராஜ்ஜியமா, தங்களுக்கு இத்தனை அழகான ஒரு மண்டபமா என்று ஆச்சரியப்பட்டார்கள். கிருஷ்ணனை மனதிற்குள் வைத்து வணங்கினார்கள். மாயாசூரன் அர்ஜுனனை தழுவிக் கொண்டான்.

காண்டப்ரஸ்தத்திற்கு ஒரு மிகச் சிறந்த சபை என்று இருந்தால் அது மதிப்புதானே, மரியாதைதானே என்ற எண்ணம் வந்தது. இவர் வீடு வாங்கியிருக்கிறார், அவர் வீடு வாங்கியிருக்கிறார் என்று சொன்னால் கேட்டவருக்கு தானும் வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை வரும். நாரதர் நேரிடையாக உனக்கு ஒரு சபை வேண்டும் என்று சொல்லாது மற்றவர் சபையை வியந்து சொல்ல, தங்களுக்கும் சபை வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

Sent from my iPad

No comments: