Bhoo thatha's Blogspot

Search my older Blog

Wednesday, January 27, 2016

தெளிவு பெறு ஓம்

தெளிவு பெறு ஓம் 
Courtesy aanmeegappalan

?தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்லப்படுவது ஏன்?
-.

 ‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற சொற்றொடருக்கான விளக்கத்தை நமது ஆன்மிகம் இதழில் தமிழ் மாதங்களைப் பற்றிய சிறப்பு கட்டுரையில் ஏற்கெனவே நாம் கண்டிருக்கிறோம் என்றாலும் மீண்டும் ஒரு முறை தெளிவாகக் காண்போம். உழவுத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட நம் நாட்டில் ஆடிப்பட்டத்தில் தேடி விதைத்து, ஆறுமாதம் கழித்து அறுவடை முடித்து, சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் வைத்து வணங்குவர்.

அறுவடை செய்த பயிரை விற்றுப் பணம் சம்பாதிப்பது தை மாதத்தில் என்பதால் தை மாதத்தில் திருமணம், வீடு கட்டுதல் முதலான சுபச் செயல்களை மேற்கொள்ளலாம். கையில் பணமில்லாத காரணத்தால், சுபவிசேஷங்களைத் தள்ளி வைப்போருக்கு, தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற அர்த்தத்தில் கிராமத்துப் பெரியவர்கள் சொல்வார்கள்.

 அக்காலத்தில் தை மாதம் முதல் ஆனி மாதம் வரையிலான உத்தராயணம் எனப்படும் ஆறு மாத காலத்தை எல்லா சமூகத்தினரும் உழைத்து சம்பாதிக்க வேண்டிய காலமாக வகுத்திருந்தனர். ஆடி முதல் மார்கழி வரையிலான தட்சிணாயனம் எனும் ஆறு மாத காலத்தை தேவர்களைப் பூஜிப்பதற்கும், ஆலயம் கட்டுதல், குளம் வெட்டுதல் போன்ற பொதுச் சேவைகளில் ஈடுபடுவதற்கான காலமாகப் பிரித்தார்கள்.

வேத விற்பன்னர்கள் கூட ஆவணி அவிட்டம் நாள் முதல் வேத மந்திரங்களைக் கற்பதும், தை மாதத்தில் இருந்து கற்ற மந்திரங்களின் துணை கொண்டு பணம் சம்பாதிப்பதையும் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அனைத்து தரப்பினரும் உத்தராயணத்தில் சம்பாதித்த பொருளை தட்சிணாயனத்தில் செலவழித்தனர். கையிருப்பு கரைந்தவுடன் மீண்டும் தை மாதம் முதல் பொருள் தேடத் துவங்குவர். புதிதாகத் தொழில் தொடங்குவதற்கு உகந்ததாக தை மாதத்தைத் தேர்ந்தெடுத்தனர். தை மாதம் முதல் பணம் சம்பாதிப்பதற்கான வழி பிறக்கிறது.

    யாகங்களைச் செய்து வரும் வேத விற்பன்னர்கள் சிராவண மாதம் பௌர்ணமியில் (ஆவணி அவிட்டம்) இருந்து மார்கழி மாத பௌர்ணமி வரை சர்ப்ப பலி எனும் யாக பூஜையைச் செய்வது வழக்கம். இதற்குக் காரணம் இந்த இடைப்பட்ட காலத்தில்தான் பாம்பு, தேள், மரவட்டை, பூரான், நத்தை, அட்டை, கம்பளிப்பூச்சி முதலான விஷப்பூச்சிகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியில் வரும். அக்காலத்தில் மனிதர்கள் செல்லும் பாதையில் இந்த விஷப்பூச்சிகளால் பலவிதமான தொல்லைகள் உண்டாவது வழக்கம்.

மனிதர்களால் இந்த ஜந்துக்களுக்கும், இவற்றினால் மனிதர்களுக்கும் என இரு தரப்பிலும் பரஸ்பரம் எவ்வித பாதிப்பும் நேரக்கூடாது என்பதால் காட்டில் வசித்து வந்த ரிஷிகளும், சந்யாசிகளும்கூட சாதுர்மாஸ்ய விரதம் என்று இருப்பிடத்தை விட்டு வெளியில் வராமல் விரதம் காப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

தை மாதத்தின் பிறப்பிலிருந்து இந்த ஜந்துக்கள் தங்கள் இருப்பிடத்தில் தஞ்சம் புகுந்து விடும் என்பதால் தை மாதத்தில் மனிதர்கள் செல்வதற்கு பாதை (வழி) நல்லபடியாக அமைந்தது. இவ்வாறு விஷப்பூச்சிகளின் தொல்லையின்றி தை மாதம் முதல் பயணிக்க இயலும் என்பதால் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல் வழக்கு தோன்றியிருக்கலாம்.

தட்சிணாயனம் முடிந்து உத்தராயணம் என்பது தை மாதத்தின் முதல் தேதியில் ஆரம்பமாகிறது. சூரியன் தனது பாதையை தெற்கிலிருந்து வடக்கு நோக்கி மாற்றிக் கொள்ளும் நேரம். தேவர்களைப் பொறுத்த வரை ஒரு வருடம் என்பது ஒரு நாள் அளவே. இதில் உத்தராயணம் என்பது பகல் பொழுதாகவும், தட்சிணாயனம் என்பது இரவுப் பொழுதாகவும் இருக்கும். ஜோதிட ரீதியாக சூரியன் வலது கண்ணையும், சந்திரன் இடது கண்ணையும் குறிக்கின்ற கிரகங்கள்.

தை மாதத்தின் முதல் தேதி தேவர்களுக்கு பகல் பொழுது துவங்குகிற காலம். தேவர்கள் உறக்கத்தில் இருந்து எழும்போது அவர்கள் முதலில் வலது கண்ணையும், அதனைத் தொடர்ந்து இடது கண்ணையும் திறக்கின்றனர். அதனால் தான் பொங்கல் நாளன்று சூரிய, சந்திரர்களின் படம் வரைந்து பூஜிக்கிறோம். தட்சிணாயனம் முழுவதும் நமது பூஜைகளை ஏற்றுக் கொண்ட தேவர்கள் தங்கள் விழிகளைத் திறந்து நம் மீது அருட்பார்வை வீசுகின்ற நேரம்.  தை பிறந்தால் விழி திறக்கும் என்பது திரிந்து தை பிறந்தால் வழி பிறக்கும் என்று மாறியிருக்கலாம் என்பது ஜோதிட ஆராய்ச்சியாளர்களின் கருத்து. தை பிறந்தால் தேவர்களின் விழி திறந்து மனிதர்களாகிய நமக்கு வழி பிறக்கும் என்றும் பொருள் கொள்ளலாம்.

?சாந்தி முகூர்த்தம் என்றால் என்ன? அதன் சிறப்பு யாது?

-

‘பிரதமார்த்தவ சாந்தி முகூர்த்தம்’ என்பதே அதன் முழுமையான பெயர். முதலில் இருக்கும் வார்த்தையானது காலப்போக்கில் காணாமல் போய் சாந்தி முகூர்த்தம் என்ற பெயர் மட்டும் நிலைத்துவிட்டது. சிவசக்தி ஐக்கியமாக இந்த முகூர்த்தத்தினைச் சொல்வார்கள். திருமணத்திற்கு லக்னம் நிச்சயிக்கும்போது எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவிற்கு இந்த சாந்தி முகூர்த்த லக்னத்திற்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இந்த முகூர்த்தமானது தனிப்பட்ட கணவன் - மனைவியின் மன சந்தோஷ ஆரம்பத்துக்காக நிர்ணயிக்கப்படுவது அல்ல.

‘பிரஜோத்பத்தி’ என்ற முக்கியமான கடமையை நிறைவேற்றுவதற்காக பெரியவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ள ஒரு நிகழ்வுதான் இந்த சாந்தி முகூர்த்தம். சற்று விளக்கமாகவே காண்போம். ஒருவன் தனது பிரம்மச்சரிய காலத்தில் வேதங்களையும், வித்தைகளையும் சரிவர கற்பதன் மூலம் ரிஷிகளை திருப்திபடுத்துகிறான். வேதங்கள் என்றால் இது ஏதோ ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்காக என்று தவறாக எண்ணக்கூடாது. இன்று நாம் பள்ளிக்கூடத்தில் கற்றுக் கொள்கிற கணிதம், அறிவியல் உட்பட அனைத்துப் பாடங்களும் ஏற்கெனவே வேதத்தில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள்தான். இவை அனைத்தும் அன்றைய காலக்கட்டத்தில் வாழ்ந்த விஞ்ஞானிகளான மகரிஷிகளின் மூலமாக இந்த உலகத்திற்கு எடுத்துரைக்கப்பட்டவை.

இதையே நாம் வேதமாக போற்றுகிறோம். தங்களால் படைக்கப்பட்ட கருத்துகளை ஒருவன் படித்து அதன்படி நடந்துகொள்வதைக் கண்டு மகரிஷிகள் திருப்தி அடைகின்றனர். ஆக, வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை கல்வியினைக் கற்றுக் கொள்கின்ற காலம் பிரம்மச்சரியம். அதேபோல ஒருவன் யாகங்கள், யக்ஞங்கள் முதலானவற்றை செய்வதன் மூலம் தேவர்களை திருப்திபடுத்துகிறான்.

யாகங்கள் செய்வது என்றால் அவனே நேரடியாகச் செய்ய வேண்டும் என்பது இல்லை. அதற்குரிய பொருளுதவியைச் செய்து, தகுந்த பண்டிதர்களைக் கொண்டு அந்தந்த தேவர்களுக்கு உரிய அவிர்பாகத்தைத் தருவதன் மூலம் தேவர்களையும், கந்தவர்களையும் திருப்திபடுத்தி அவர்களுடைய ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொள்கிறான். அடுத்ததாக பூமியில் பிறந்த அனைவருக்கும் தங்களுடைய பித்ருக்கள், அதாவது, முன்னோர்களை திருப்திபடுத்த வேண்டிய முக்கியமான கடமை ஒன்று உண்டு.

அந்தக் கடமையின் பெயர்தான் பிரஜோத்பத்தி. அதாவது பிரஜைகளை உற்பத்தி செய்வது. படைக்கும் தொழிலைச் செய்கின்ற பிரம்மாவினுடைய அருளாசி அந்த நேரத்தில் தேவைப்படுகிறது. வம்சம் விருத்தி அடையும்போதுதான் பித்ருலோகத்தில் உள்ள முன்னோர்கள் மோட்ச
கதிக்குச் செல்ல இயலும். ஒரு பெண்ணின் துணையின்றி ரிஷிகளையும், தேவர்களையும் முன்சொன்ன இரண்டு கடமைகளின் மூலம் திருப்திபடுத்திவிட முடியும்.

ஆனால், பித்ருக்களை கரையேற்ற, அவர்களை திருப்திபடுத்த ஒரு பெண்ணின் துணை நிச்சமாகத் தேவைப்படுகிறது. சிவமும், சக்தியும் ஐக்கியமானால் மட்டுமே உலகத்தில் உயிர்கள் தோன்ற முடியும். உயிர்கள் இன்றி உலகம் இயங்காது. ஆக இந்த உலகத்தையே இயக்குகின்ற அந்த சிவசக்தி ஐக்கியத்தினை ஒரு ஆணும், பெண்ணும் தங்கள் வாழ்வினில் முதன்முதலில் உணருகின்ற அந்த சாந்தி முகூர்த்தம் என்பது இதனால்தான் இத்தனை முக்கியத்துவமும், சிறப்பும் பெறுகிறது.

?எனக்கு காலில் அடிபட்டு நடக்க இயலவில்லை. கீழே உட்கார்ந்து எழவும் இயலவில்லை. இந்த நிலையில் என் பெற்றோருக்கான சிராத்தத்தை என் உடன் பிறந்த சகோதரன் மட்டும் செய்தால் போதுமா?
- கே.ஜகந்நாதன், சேலம்-8.

நீங்கள் இதுகாலம் வரை உங்கள் உடன்பிறந்த சகோதரனோடு இணைந்து பெற்றோருக்கான சிராத்தத்தை ஒன்றாக செய்து வந்திருக்கும் பட்சத்தில் உங்கள் சகோதரன் மட்டும் செய்தால் போதும். நீங்கள் அவருக்கு அருகில் அமைதியாக அமர்ந்துகொண்டு பித்ருக்களை நமஸ்கரித்து பிரசாதத்தை பெற்றுக் கொள்வதோடு சிராத்தத்திற்கு ஆகும் செலவினில் பங்கெடுத்துக் கொண்டாலே போதும்.

ஆனால், இதற்கு முன்னர் நீங்கள் இருவரும் சிராத்தத்தை தனியாகச் செய்திருந்தீர்களேயானால் இந்த முறையும் நீங்கள் தனியாகச் செய்துதான் ஆக வேண்டும். உட்கார்ந்து, எழுந்து என்று சிராத்தத்திற்கு உரிய கிரியைகளை செய்து ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை. உடல்ரீதியாக இயலாத பட்சத்தில் ஹிரண்ய ரூபமாகச் செய்ய வேண்டும். உடல் ஒத்துழைக்க மறுக்கும் பட்சத்தில் ஒரு சிராத்தத்தை செய்வதற்கு தனியாக விதிமுறை உண்டு. உங்கள் வீட்டிற்கு வரும் சாஸ்திரிகளின் மூலமாகத் தெரிந்துகொண்டு அந்த முறையில் சிராத்தத்தை அவசியம் செய்ய வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் சிராத்தம் செய்யாமல் விட்டுவிடக் கூடாது.

?வேலைக்குச் செல்ல வேண்டி விடியற்காலை 4.30 மணியிலிருந்து 5.30 மணிக்குள் அமாவாசை தர்ப்பணம் செய்கிறார்களே, சூரிய உதயத்திற்கு முன் தர்ப்பணம் செய்வது சரியா?

- வி.வெங்கட்ராமன், செகந்திராபாத்-9.

சர்வ நிச்சயமாக சூரிய உதயத்திற்கு முன் அமாவாசை தர்ப்பணம் செய்யக்கூடாது. சூரிய உதயத்திற்கு முன் அமாவாசை தர்ப்பணம் செய்வது என்பது முற்றிலும் தவறு. அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. சூரிய உதயத்திற்கு முன் செய்யும் அமாவாசை தர்ப்பணத்தினால் எந்தவிதமான பிரயோஜனமும் இல்லை.

?என் மனைவியின் மாதவிலக்கு நாட்களில் நான் கோயிலுக்கு செல்லலாமா?
- பி.ரமேஷ்குமார், திருச்செங்கோடு.

மனைவியின் மாதவிலக்கு நாட்களில் நீங்கள் அவரது துணையின்றி உங்கள் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டு சமைத்து சாப்பிடும் பட்சத்தில் கோயிலுக்குச் செல்லலாம். அடிப்படைத் தேவைகள் என்றால் குளிக்க வெந்நீர் வைத்துக்கொள்வது, குடிக்க தண்ணீர் பிடிப்பது, உங்கள் துணிகளை துவைத்துக் கொள்வது, படுக்கை விரித்துக் கொள்வது ஆகியவற்றை அவரது துணையின்றி நீங்களே செய்துகொள்ளும் உங்களுக்கான வேலைகள். இந்த நடைமுறைகளை கடைப்பிடித்தால் மனைவியின் மாதவிலக்கு நாட்களில் கணவன் கோயிலுக்குச் சென்று கைங்கரியம் செய்வதில் எவ்விதத் தடையும் இல்லை.

?பிரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன? ஜாதகத்தில் சனியும், குருவும் இணைந்திருந்தால் இந்த தோஷம் உண்டாகும் என்று சில ஜோதிடர்கள் கூறுகிறார்கள். இது சரியா? இந்த தோஷம் நீங்க என்ன செய்ய வேண்டும்?
-

ஜாதகத்தில் சனியும், குருவும் இணைந்திருந்தால் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும் என்பது முற்றிலும் தவறான கருத்து. கிட்டத்தட்ட ஒரு வருட காலத்திற்கு சனியும், குருவும் ஒரே ராசியில் சஞ்சரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படியென்றால் அந்த ஒரு வருட காலத்தில் பிறக்கும் அத்தனை குழந்தைகளுக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகிவிடுமா?

ஜாதகத்தில் குருவும், சனியும் இணைந்திருந்தால் அதற்கு குரு-சண்டாள யோகம் என்று பெயர். பிரம்மஹத்தி தோஷத்திற்கும் ஜாதகத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. பிராமண நிந்தனையால் வருவது பிரம்மஹத்தி தோஷம். ஒரு பிராமணனை கொலை செய்தாலும் அல்லது அந்த பிராமணன் மனம் நொந்து, இறந்துபோகின்ற அளவிற்கு ஆளாக்கினாலும் இந்த பிரம்மஹத்தி தோஷம் வந்து சேரும்.

பஞ்சமஹாபாதகங்களுக்கு பிராயச்சித்தமே கிடையாது என்கிறது சாஸ்திரம். பஞ்சமஹா பாதகங்களில் முதலிடம் பிடிப்பது, இந்த பிரம்மஹத்யை! பிராம்மண வதை, மது அருந்துதல், குருவின் மனைவியின் மீது ஆசை வைத்தல், தங்கம் திருடுதல், இந்த நான்கினைச் செய்வோருக்கு உதவி செய்தல் ஆகிய இந்த ஐந்தும் பஞ்சமஹாபாதகங்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது. இந்த ஐந்திற்கும் பிராயச்சித்தம் என்பதே கிடையாது என்கிறது வேதம். இருப்பினும் ஒரு சில விதிவிலக்குகளும் உண்டு.

பொதுவாக செய்கின்ற பாவத்தினை மூன்று வகையாக பிரித்து அறிதல் வேண்டும். முதலாவது வகை தெரிந்தே பாவ காரியத்தினைச் செய்தல், இரண்டாவது தெரியாமல் பாவத்தினைச் செய்தல், மூன்றாவது தெரிந்தும், தெரியாமல் செய்தல். இந்த மூன்றாவது வகை சற்றே குழப்புகிறதா? இதைச் செய்வது பாவம் என்று தெரிந்தாலும், வேறு வழியின்றி அந்த பாவத்தைச் செய்வதே தெரிந்தும் தெரியாமல் செய்கின்ற வகை. அதாவது, தனது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், தர்மத்தை நிலை நாட்டுவதற்காகவும், ஒரு ஸ்திரீயின் மானம் காப்பதற்காகவும், பல உயிர்களைக் காக்கும் பொருட்டும் வேறு வழியின்றி இந்த பாவத்தைச் செய்வது.

இந்த மூன்றாவது வகையில் செய்கின்ற பாவத்திற்கு பிராயச்சித்தம் உண்டு. உதாரணத்திற்கு மகாபாரத யுத்தத்தில் துரோணர் என்ற பிராமணர் மனம் நோகும் வண்ணம்‘அஸ்வத்தாமா ஹத:’ (அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்) என்ற ஒரு பொய்யைச் சொல்கிறான் தர்மன். மனம் நொந்து வில்லினை கீழே போட்ட அந்த பிராம்மணனைக் கொல்கிறான் அர்ச்சுனன். இவர்கள் இருவரும் பிரம்மஹத்தி தோஷத்திற்கு ஆளாகியிருந்தாலும், தர்மத்தினைக் காக்கும் பொருட்டு வேறு வழியின்றி இந்த காரியத்தைச் செய்ததால் அவர்களுக்கு இந்த பிரம்மஹத்தி தோஷத்திற்கான பிரயாச்சித்தம் செய்துகொள்ள முடிந்தது.

வரகுண பாண்டியன் கும்பகோணம்-தஞ்சாவூருக்கு இடையில் உள்ள திருவிடைமருதூர் ஆலயத்திற்குச் சென்று இந்த பிரம்மஹத்தி தோஷத்திற்கான பிராயச்சித்தம் செய்திருக்கிறான் என்கிறது ஸ்தல புராணம். அவ்வாறே பிரம்மஹத்தி தோஷத்தினால் பீடிக்கப்பட்டவர்கள் கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை திருத்தலத்திற்குச் சென்று சுவாமிநாத ஸ்வாமியை வணங்கி கீழ்க்கண்ட ஸ்லோகத்தைப் பாராயணம் செய்து வந்தால் பிரம்மஹத்தி தோஷத்தின் வீரியம் குறையும்.

ஸூப்ரமண்யஸ்ய மஹிமா வர்ணிதும் கேநசக்யதே
யத்ரோச் திஷ்டமபி பஷ்டம் ச்விதரிண சோதயத்ய
ஹோப்ரஹ்மஹத்யா தோஷசேஷம் ப்ராஹ்மணானா மயம் ஹரன்
விரோதேது பரம் கார்யம் இதிந்யாய மாநயத்இவை எல்லாவற்றையும்விட,
இயன்ற வரை மேற்சொன்ன பஞ்ச மஹாபாதகங்களைச் செய்யாமல் இருப்பதே சாலச் சிறந்தது!

?திதி, நாள், நட்சத்திரம், யோகம், கரணம் என்று வகுத்துள்ளதன் காரணம் என்ன?
-
திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் இவை ஐந்தும் ஒரு நாளிற்குரிய முக்கியமான ஐந்து அங்கங்கள். இந்த ஐந்தையும் நமக்குத் தெரிவிப்பதுதான் பஞ்சாங்கம். அதாவது பஞ்ச அங்கம். திதி என்பது சூரியன் சஞ்சரிக்கும் நிலைக்கும், சந்திரன் சஞ்சரிக்கும் நிலைக்கும் இடையில் ஏற்படும் தூரத்தின் அளவைக் குறிப்பது.

உதாரணத்திற்கு அமாவாசை நாளன்று சூரியனும் சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்திருப்பர். அமாவாசை நாள் தொடங்கி பிரதமை, த்விதியை என்று ஒவ்வொரு நாளாக சூரியனின் பாகையிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக விலகி பௌர்ணமி நாளன்று நேர் எதிர் பாகையில் அதாவது சூரியன் இருக்கும் பாகையில் இருந்து சரியாக 180வது பாகையில் சந்திரன் சஞ்சரிப்பார்.

இந்த சஞ்சாரத்தின் அடிப்படையில் அமைவது திதி. அடுத்ததாக வாரம் என்பது. நம்மை ஆளுகின்ற உண்மைக் கோள்களான சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியோருக்கு என வாரத்தின் ஏழு நாட்களை தனித்தனியாக பிரித்துக் கொடுத்திருக்கிறோம். அந்தந்த நாளில் அந்தந்த கிரகத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும்.

உதாரணத்திற்கு வெள்ளிக்கிழமையில் சுக்கிரனின் தாக்கம் அதிகமாக இருக்கும். சுக்கிரன் வாழ்வின் எல்லா வளங்களையும் தருவதோடு மாங்கல்ய பலத்தையும் தரவல்லவர் என்பதால் வெள்ளிக்கிழமையில் சுமங்கலிப் பெண்கள் விசேஷ பூஜைகளை செய்கிறார்கள். அடுத்து வருவது நட்சத்திரம். ஒரு நாளில் சந்திரன் எந்த நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்கிறாரோ அதுவே அந்த நாளினுடைய நட்சத்திரமாகக் கணக்கில் கொள்ளப்படுகிறது. குழந்தை பிறக்கும்போது சந்திரன் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் நட்சத்திரமே குழந்தையின் ஜென்ம நட்சத்திரமாகும்.

 நட்சத்திரங்களைப் போலவே 27 யோகங்கள் உள்ளன. (அமிர்த, சித்த, மரண யோகம் அல்ல). சூரியனுடைய பாதையின் அளவையும், சந்திரனுடைய பாதையின் அளவையும் சேர்த்துப் பார்ப்பதே யோகம் ஆகும். அதேபோன்று கரணம் என்பது திதியின் அடிப்படையில் அமைவது. திதியின் அளவை சரிபாதியாகப் பிரித்துப் பார்ப்பது, கரணம். திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் என்று அழைக்கப்படும் இந்த ஐந்தும்தான் ஒரு நாளினை நிர்ணயம் செய்கின்றன. இந்த ஐந்தினைக் கொண்டுதான் இந்த நாளில் இந்தச் செயலை செய்யலாமா, வேண்டாமா என்பதை தீர்மானிக்க இயலும் என்பதால் இவை முக்கியத்துவம் பெறுகின்றன.

?கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது என்கிறார்களே, அது உண்மையா? சிவப்பு நிற பொட்டு மட்டும்தான் வைக்க வேண்டுமா, அது ஏன் அப்படி?
-

கருப்பு நிற பொட்டு வைத்தால் மாமாவிற்கு ஆகாது என்பது முற்றிலும் மூடநம்பிக்கை. முதலில் நெற்றியில் ஏன் பொட்டு வைக்கவேண்டும் என்பதைப் புரிந்து கொண்டீர்களேயானால் உங்களின் இந்த கேள்விக்கே இடமிருக்காது. நமது உடலிலே ஓடுகின்ற வலதுபுற நாடியும், இடதுபுற நாடியும் சங்கமிக்கின்ற இடம் நமது நெற்றி.

சுஷூம்னா நாடி என்று சொல்வார்கள். யோகா, தியானம் முதலான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வோர் கண்களை மூடி தியானம் செய்யும்போது ஒரு ஜோதியினை நெற்றிப் பொட்டில் நிலைநிறுத்தி தியானம் செய்வார்கள். மூன்றாவது கண் என்றுகூட அதனைச் சொல்வார்கள். அந்த மூன்றாவது கண்ணான நெற்றிக்கண்ணைத் திறக்கின்ற சக்தி பரமேஸ்வரனுக்கு மாத்திரமே உண்டு.

நம்முடைய கோபதாபத்தினை அடக்கி நற்செயல்களில் ஈடுபடுவதற்கு நமது நெற்றியில் இடுகின்ற திலகம் பெரும் துணை புரிகிறது. நடைமுறை வாழ்க்கையில் இந்த உண்மையை நாமே அனுபவித்து உணர இயலும். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, நெற்றியில் ஏதும் இட்டுக் கொள்ளாமல் வெற்று நெற்றியோடு இருப்பவர்களைக் கண்டால் ஒருவிதமான பயமோ அல்லது வெறுப்புணர்ச்சியோ தோன்றும்.

அதே நேரத்தில் நெற்றியில் பெரிய பொட்டு வைத்துக் கொண்டிருப்பவர்களைக் கண்டால் கையெடுத்து வணங்கத் தோன்றும். நெற்றியில் பொட்டு வைத்துக்கொள்வது என்றவுடன் நம் எல்லோருக்கும் ஸ்டிக்கர் பொட்டுதான் நினைவிற்கு வருகிறது. ஒரு ஆண்மகன் அவரவர் சம்பிரதாயத்திற்கு ஏற்றவாறு நெற்றி நிறைய திருநீறு அல்லது திருமண் இட்டுக் கொள்ள வேண்டும்.

சந்தனம் பூசி குங்குமத்தையும் வைத்துக் கொள்ளலாம். அதே போல பெண்கள் நெற்றியில் சுத்தமான மஞ்சளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நடுநெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். சுமங்கலிப் பெண்கள் நடுவடுகிலும் சேர்த்து குங்குமத்தை வைத்துக் கொள்ள வேண்டும். குங்குமத்தில் உள்ள மஞ்சளின் சக்தி நமக்குள் உண்டாகும் கோபதாபத்தினைக் குறைத்து நம்மை சாந்தப்படுத்துகிறது. மனம் சாந்தமடைந்தால் முகம் பொலிவடைகிறது. அதனால் நம்மைக் காண்பவர்கள் நம்மீது தனி மரியாதை கொள்வர்.

அதனை விடுத்து நாகரிகம் என்ற பெயரில் இருபுருவங்களுக்கு இடையே கீழ்ப்பகுதியில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு சின்னஞ்சிறு அளவில் பொட்டு வைத்துக் கொள்வதால் எவ்விதப் பயனும் இல்லை. பருவம் அடைந்த பெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்கு நாட்களில் பூஜிக்கப்பட்ட குங்குமத்தை வைத்துக் கொள்ளக்கூடாது. அந்த நாட்களில் சாந்து அல்லது கண்ணுக்கு இட்டுக்கொள்ளும் மையினை பொட்டாக வைத்துக் கொள்ளலாம்.

கருப்பு நிற மையினை பொட்டாக வைத்துக் கொள்வதால் காற்று கருப்பு முதலான தோஷங்கள் எதுவும் அருகில் அண்டாது. இந்த நிறத்தில் பொட்டு வைத்துக் கொள்வதால் தாய்மாமனுக்கு ஆகாது என்று சொல்வதெல்லாம் முற்றிலும் மூடநம்பிக்கையே. மஞ்சளில் தயாரிக்கப்பட்ட குங்குமத்தை நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள். அம்பிகையின் அருளால் மனதில் மகிழ்ச்சி பொங்கக் காண்பீர்கள்.

Sent from my iPad

No comments: