Bhoo thatha's Blogspot

Search my older Blog

Monday, November 16, 2009

AMNESIA

மனிதர்களுடன் கூடவே பிறப்பது மறதி!

பச்சிளம் பாலகன் முதல், பல்விழுந்த பாட்டாக்கள் வரை எவருமே மறதிக்கு ஆளாகாமல் தப்ப முடிவதில்லை.

தாலியைச் செய்ய மறந்து விட்டு, மணவறை ஏறிய மணவாளன் பற்றியும்,

புது மனைவியை மறந்து போய் விட்டுவிட்டுத் தன்னந்தனியே, இன்பக் கனவுகளுடன், தேன் நிலவைக் கொண்டாடச் சென்ற புதுமாப் பிள்ளை பற்றியும்,

சவரக்கத்தியை மறந்து விட்டு ஷேவ்| எடுக்கச் சென்ற சவரத் தொழிலாளி பற்றியும்,

பூவையும் கற்பூரத்தையும், மறந்து விட்டுப் பூசை செய்யக் கோயிலு க்குப் போன ஐயர் பற்றியும்,

பாஸ் போட்டையும், விஸாவையும் வீட்டில் பத்திரமாகப் பூட்டி வைத்துவிட்டு, வெளிநாடு பறப்பதற்காக விமானநிலையம் சென்றதிரு க்ரும்பேட்டைசுதர்சனன் போன்ற   நவயுக மறதி நாயகர்கள் பற்றியும்,


பல நகைச்சுவைக் கதைகளையும், சிரிப்புத் துணுக்குகளையும் அடிக்கடி படித்து ரசிக்கிறோம்.

இவை எல்லாமே கற்பனைச் சம்பவங்கள் என்று லேசாக ஒதுக்கி விட முடியாது. நாளாந்த வாழ்க்கையில் இப்படியான பல சுவையான மறதிச் சம்பவங்களையும், 'மறதி மகாலிங்கங்களையும்',
'அறணை மறதிக்காரர்களையும்'
அடிக்கடி சந்திக்கவே செய்கிறோம்.

விஞ்ஞானிகளும் மறதிக்குப் பெயர் போனவர்கள். அவர்கள் பலரது நடவடிக்கைகளும், செயல்களும் பல சந்தர்ப்பங்களில் கிறுக்குத்தனமாக அமைவதுண்டு.

பிரபல விஞ்ஞானி ஒருவர் ரயிலில் பிரயாணம் செய்த கொண்டிருந்த போது, டிக்கெட் பரிசோதகர் வந்து, அவரிடம் டிக்கெட்டை  கேட்டார். சைடு பாக்கெட் , ஷர்ட் பாக்கெட் , பர்ஸ், கைப்பை எல்லாம் தேடினார். காணவில்லை!
இதற்கிடையில் அந்த விஞ்ஞானியை அடையாளம் கண்டுவிட்ட டிக்கெட் பரிசோதகர்,

"பரவாயில்லை ஐயா, தேடி மெனக் னக்கெட வேண்டாம், எங்கே போக வேண்டும் என்று சொல்லுங்கோ. வேறு டிக்கெட்  தருவதற்கு ஒழுங்கு செய்கிறேன்" என்றார்.

அதைக் காதில் விழுத்தாமல் தொடர்ந்தும் மும்மரமாகத் தேடிக் கொண்டிருந்தார்.

"எங்கு போக வேண்டும் என்பதை மறந்து விட்டேன். டிக்க்கேட்டைப்ப்  பார்த்துத்தான் அதை நான் அறிந்து கொள்ள வேண்டும்" என்பது அவர் கவலை.

இந்த மறதிகள் பல காரணங்களால் ஏற்படலாம்.

சிறு குழந்தைகளுக்கும், சில பெரியவர்களுக்கும் கவலையீனத்தினா லோ, அசட்டையினாலோ, அல்லது விஷயங்களை நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று அக்கறையின்மையாலோ மறதி ஏற்படுகிறது.

சிலர் விஷயங்களைக் கவனத்திற்கு எடுத்தாலும் வேலைப்பளுவால் பலவற்றை மறந்து விடுவார்கள்.

சுயநல காரணங்களுக்காகச் சில விஷயங்களை மறப்பவர்கள்| 
சிலர், மறந்து விட்டதாகப் பாவனை பண்ணுவர்கள் இவர்களிற் பலர்!

கடன் வாங்கிய பணத்தைச் 'சுலபமாக' மறந்து விட்டு, கடன் கொடுத்தவர் விசாரித்தால், "நான் சரியான மறதிக்காரன்"

என்று அசட்டுச் சிரிப்புடன் தலையைச் சொறிவார்கள்.

வேறு சில காரியக்காரரான மறதிக்காரர்கள், அரிய புத்தகங்களை இரவல் வாங்கிவிட்டு, அவற்றைத் திருப்பிக் கொடுப்பதை 'வசதியாக' மறந்துவிட்டு, சொந்த நூலகத்தையே உண்டாக்கி விடுவார்கள்.

வயதானவர்களின் மறதி வித்தியாசமானது.

காலையில் அவர்களுடன் சாப்பிட்ட சாப்பாடு பற்றியோ, அல்லது அவர்களது பேரப்பிள்ளையின் பெயர் என்ன என்றோ விசாரித்தால் 'திரு திருவென' முழிப்பார்கள்!

ஆனால் ஐம்பது வருடங்களுக்கு முன் நடந்த சிறு விஷயங்களைப் பற்றிக்கூட திகதி, கிழமை, நேரம் போன்ற விபரங்களுடன் விஸ்தாரமாக உற்சாகத்துடன் விளக்குவார்கள்.

தலையில் அடிபட்டவர்களுக்குச் சில வேளைகளில் ஒரு புதுமையான மறதி ஏற்படுவதுண்டு. அடிபட்ட அந்தச் சம்பவம் பற்றியும், அதற்குமுன் நடந்த சம்பவம் பற்றியும் மாத்திரம் எதுவும் நினைவில்லாமல் 'பேய் அடித்தவன்' போல விழிப்பார்கள்.

'டாக்டரின் டயறி| பகுதிக்கு இம்முறை எழுதுவதற்கான குறிப்புக்கள் எழுதி வைத்திருந்த டயறியை மறதியில் எங்கோ தவற விட்டுவிட்டதால், மறதியைப் பற்றித் 'திடீர் ஞானோதயம்' வந்தது.

எனவே வைத்தியத் தொழிலுடன் சம்பந்தப்பட்ட சில மறதிச் சம்பவங்கள் பற்றி - மறக்காமல் இருப்பவற்றை எழுதி உங்களைக் கொஞ்சம் அறுக்கலாம் என்றிருக்கின்றேன்.

மறதி 1

ஆறுவயது மதிக்கத்தக்க சிறுவனைக் கூட்டிக் கொண்டு, அந்த இளம் தம்பதிகள் எனது அறைக்குள் நுழைந்ததும், குப்பென ஓர் துர்நாற் றம் அறையெங்கும் பரவியது. மெதுவாகச் சுற்றிக் கொண்டிருந்த மின்சார விசிறியை, விசையாகச் சுழல விட்டுவிட்டு அவர்களை விசாரித்தேன்.

சென்ற மூன்று மாதகாலமாக அவர்களின் பிள்ளையின் மூக்கிலிருந்து சகிக்க முடியாத துர்நாற்றத்துடன் சளி வடிந்து கொண்டிருக்கிறது. அவர்கள் வேலை செய்யும் அந்த வெளி மாகாணப் பிரதான நகரின் பிரபல டாக்டரிடம் காட்டித் தொடர்ந்து வைத்தியம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பக்ரிம், அம்பிசிலின், எரிதிரோமைசீன், கெப்போரெக்ஸ், என்று எல்லாக் காரமான நுண்ணுயிர் கொல்லி மருந்துகளையும் பாவித்து விட்டார்கள். ஆனால் ஒரு வித பிரயோசனமுமில்லை! மணம் அடங்க வில்லை!

மருந்து கொடுத்துப் பெற்றோர்களும், மருந்து குடித்து பிள்ளையும் அலுத்துக் களைத்து விட்டார்கள்.

தொடர்ந்து வைத்தியம் செய்த டாக்டரும் களைத்துப் போய் "பிள்ளையைக் கொண்டுபோய் ENT ஸ்பெசலிஸ்டிடம் காட்ட வேணும்" என்று சொல்லிக் கடிதமும் கொடுத்து விட்டார்.
 அவர்கள் கடைசி முயற்சியாக என்னிடமும் வந்திருந்தார்கள்.

இவ்வளவு மருந்து கொடுத்தும் மாறவில்லை என்பதால் ஏதோ ஒரு முக்கிய விசயம் கவனிக்கப்படாமல் தப்ப விடப்பட்டு விட்டது என மனதுக்குப்பட்டது.

ஓடிக்கொண்டிருந்த துர்நாற்றச் சளியைப் பஞ்சினால் துடைத்துச் சுத்தப்படுத்திவிட்டு, கூரிய ஒளியின் உதவியுடன் மூக்கை ஆராய்ந்தேன். இடது மூக்குத் துவாரத்தின் ஆழத்தில் ஏதோ இருப்பதுபோலத் தோன்றியது.

பிள்ளையைப் படுக்க வைத்துவிட்டு சிறு மருத்துவ உபகரணங்களுடன் அதை எடுக்க முயன்ற போது, துள்ளி வெளியே விழுந்து சளியால் மூடப்பட்ட பொருளொன்று!

எடுத்துத் துடைத்துப் பார்த்தபொழுது - அது ஒரு ரப்பர்த்துண்டு - இரேசர்!!




எப்பொழுதோ அந்தப் பிள்ளை மூக்கினுள் விளையாட்டாக வைத்து மறந்துவிட்ட அந்த ரப்பர் துண்டு எவ்வளவோ வீண் அலைச்சல்களுக்கும், சஞ்சலத்திற்கும், பணச் செலவிற்கும் பிறகு அப்பாவி போல் அமைதியாகக் கிடந்தது.

நன்றி; டாக்டர்  முருகனதமின் டைரிக்க்ரிப்புகள் 

No comments: