நகுலன், சகாதேவன் ஆகியோரின் தாயார் மாத்ரி. மத்ர தேசத்தைச் சேர்ந்தவள். இவளுடைய சகோதரன் சல்லியன். பாரதப் போர் நிகழப் போகிற தருணத்தில் கௌரவர்களும் பாண்டவர்களும் தங்களுடைய தூதர்களை பல தேசங்களுக்கும் அனுப்பினார்கள். அந்தத் தேசத்தின் மன்னர்களை போரில் உதவிபுரியுமாறு வேண்டுகோள் விடுத்தார்கள்.
பாண்டு புத்திரர்களுக்கு மாமாவாகிய சல்லியன், தம் பெரும் படையுடன் போரில் பாண்டவர்களுக்கு உதவி புரிய வேண்டும் என்ற நோக்கத்துடன் உபப்பிலாவிய நகரை நோக்கிப் புறப்பட்டார். சல்லியனின் வீரத்தையும் அவனுடைய பெரும் படையின் உதவியையும் பெற்றால் வெற்றி நிச்சயம் என்று துரியோதனன் நம்பினான். எனவே சல்லியனின் ஆதரவைப் பெற, ஒரு யுக்தி செய்தான். சல்லியன் படையுடன் வரும் வழி நெடுக படைவீரர்கள் தங்கி இளைப்பாறவும் பசியாறவும் தகுந்த ஏற்பாடுகளைச் செய்தான்.
சல்லியன், தங்களுடைய வரவை எதிர்நோக்கி, தர்ம புத்திரர் இத்தகைய வசதிகளைச் செய்திருக்கிறார் என்று எண்ணி மகிழ்ந்தார். படையுடன் உபப்பிலாவியத்தை நெருங்கும் போது, அங்கே துரியோதனன் சல்லியனை வந்து சந்தித்தான். தான் வழிநெடுகச் செய்த ஏற்பாடுகளைப் பற்றியும் உபசரிப்பைப் பற்றியும் கேட்டதும், சல்லியனுக்குப் புரிந்தது. அடடா, ஏமாந்து போனோமே என்று மனம் வருந்தினார்.
ஆயினும் பசியும் களைப்பும் போக்கிய துரியோதனனின் பேருதவியை நன்றியுடன் நினைவு கூர்ந்து, “உனக்கு என்ன வேண்டுமோ கேள்.” என்றார்.
“நீங்கள் என் தரப்பில் இருந்து போரிட வேண்டும்” என்று கேட்டுக்கொண்ட துரியோதனனுக்கு, எதிராக சல்லியனால் எதுவும் பேசமுடியவில்லை. அவன் கூறியதை ஒப்புக்கொண்டார். பின்பு தர்மபுத்திரரைச் சந்திக்கச் சென்றார். அங்கு சென்று நடந்தது அனைத்தையும் விவரித்தார்.
“மாமா! தாங்கள் வாக்கு அளித்து விட்டீர்கள். அதிலிருந்து மாறவேண்டாம். ஆனால் எங்களுக்காக, ஒரே ஓர் உதவி செய்ய வேண்டும்.” என்றார் தருமபுத்திரர்.
சல்லியன் மிகுந்த பாசத்துடன் “சொல் தருமா! நீ சொல்வதைச் செய்கிறேன்.” என்றார்.
“நீங்கள் ரதத்தை ஓட்டுவதில் கிருஷ்ணனுக்கு நிகரானவர். எனவே கௌரவப் படையில் கர்ணனுக்கு சாரதியாக உங்களை நியமிப்பான். அப்படி நியமித்தால் நீங்கள் கர்ணனின் வீரத்தைப் பற்றி இகழ்ந்து பேச வேண்டும்.” என்றான்.
தர்மபுத்திரரிடம் அவ்வாறே செய்வதாக உறுதி கூறிய சல்லியன் தர்மருக்கு வெற்றியே கிடைக்கும் என்று வாழ்த்தி ‘இந்திர விஜயம்’ என்ற சரித்திரத்தைக் கூறினார். பின்பு சல்லியன் தம் படை வீரர்கள் அடங்கிய மாபெரும் சேனையுடன் துரியோதனனின் இருப்பிடத்துக்குச் சென்றார்.
குருக்ஷேத்திரப் போரில் பீஷ்மர், துரோணர் போன்றவர்கள் வீழ்ந்த பிறகு கர்ணன் கௌரவப் படைத் தலைமையை ஏற்றான். அப்போது துரியோதனன் சல்லியனை அழைத்து, கர்ணனுக்குத் தேரோட்டியாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டான். சல்லியன் கோபம் கொண்டு, “மன்னராகிய நான் ஒரு தேரோட்டியின் மகனுக்கு தேரோட்டுவதா?” என்று கேட்டார். துரியோதனன், சல்லியனின் திறமையையும் தகுதியையும் புகழ்ந்து கூறி சம்மதிக்க வைத்தான்.
“நான் தேரோட்டுவேன். ஆனால் ஒரு நிபந்தனை. எனக்கு மனத்தில் தோன்றுவதை யெல்லாம் பேசுவேன்.” என்றதும் அதற்கு கௌரவர்கள் ஒப்புக் கொண்டார்கள். சல்லியன் கர்ணனின் தேரோட்டியானார். கர்ணனின் வீரத்தைத் தாழ்த்திப் பேசிப் பேசி அவனுக்கு மனச் சோர்வை ஏற்படுத்தினார். பலமுறை இருவருக்கும் வாக்குவாதம் நடைபெற்றது. பின்பு இறுதியில் சல்லியன் கர்ணனுக்கு உற்சாகமூட்டி, போர் புரிய வகை செய்தார்.
கர்ணன் இறந்த பின்பு 18ஆம் நாள் யுத்ததிற்கு சல்லியன் தளபதியாக நியமிக்கப்பட்டார். பாண்டவர் படையுடன் மோதி, போர் புரிந்தார்.
தர்மபுத்திரருடன் போரிட நேர்ந்த போது, சல்லியன் அவரால் கொல்லப்பட்டு வீழ்ந்தார். மகாபாரதத்திலே ஆராய்ந்து அறியாமல் பகைவரின் பக்கம் போரிட்டு உயிர்துறந்த மாமன் சல்லியனை நினைத்து பாண்டவர்கள் மனம் வருந்தினார்கள். ஆயினும் அவருடையை வீரத்தை கௌரவர்களும் பாண்டவர்களும் பாராட்டினார்கள். மகாபாரதக் கதையில் ‘சல்லியபர்வம்’ ஒன்பதாவது பகுதியாகி அவருக்குச் சிறப்பு சேர்க்கிறது.
No comments:
Post a Comment