Bhoo thatha's Blogspot

Search my older Blog

Sunday, November 15, 2009


புராணங்களில் சிறந்தது: விஷ்ணுபுராணமே புராணங்களில் சிறந்ததாகக் கூறப்படுகிறது. ஆதிசங்கரர் தம் பாஷ்யத்தில் இப்புராண ஸ்லோகங்களை மேற்கோள் காட்டியுள்ளார். இதிலுள்ள ஹம்ஸகீதையில் அரிய பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன. வெள்ளி, தங்கம் ஆகியவற்றை திரவ வடிவிலாக்கி வண்ணங்களுடன் குழைத்து சித்திரம் தீட்டினால் அவை காலம் காலமாக அழியாமல் இருக்கும் என்று இதில் வியாசர் குறிப்பிட்டுள்ளார். அஜந்தா, சித்தன்ன வாசல் ஓவியங்கள் அழியாமல் இருப்பதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். மேலும் பல கலைகளைப் பற்றிய நுணுக்கமான விஷயங்களும் இதில் விவரிக்கப்பட்டுள்ளன.
தருமர் பெற்ற சாபம்: துர்வாச மகரிஷி தர்மதேவதையைக் குறித்து தவம் செய்தார். பூவுலகக் கணக்குப்படி அவர் குறைந்தது லக்ஷம் வருஷங்கள் தவத்தில் ஆழ்ந்தார். அவ்வளவு காலம் தவம் செய்த பின்பும் தர்ம தேவதை அவர் முன்பு தோன்றவில்லை. அதனால் அவருக்கே உரிய கோபம் கொண்டார். தர்மதேவதைக்கே சாபம் அளித்தார். அவருடைய சாபத்தால் தர்மதேவதை தருமபுத்திரர் என்ற க்ஷத்திரியனாகவும், விதுரர் என்ற சூத்திரராகவும் ஹரிச்சந்திரனை விலைக்கு வாங்கிய சண்டாளனாகவும் பிறக்க நேர்ந்தது.
மீன்களுக்கும் முக்தி: ப்ருகு முனிவரின் மகனாகப் பிறந்தவர் சௌனக மகரிஷி. அவர் ஒரு முறை கங்கையில் மூழ்கியபடி பன்னிரண்டு ஆண்டுகள் தவம் செய்தார். அப்போது மீன் பிடிப்பவர்களின் வலையிலே மீன்களோடு மீன்களாக அகப்பட்டுக் கொண்டார். வலையில் அகப்பட்டதும் தவம் கலைந்து பார்த்தார். உடனே தம் தவ வலிமையால் வலையில் அகப்பட்ட மீன்களும் முக்திபதம் அடையும்படி அருள் செய்தார். சௌனக மகரிஷியை ‘பகவான்’ என்று போற்றுவதுண்டு. இம்மகரிஷியின் புதல்வர்களில் ஒருவரே ஜனகர் என்ற விதேக நாட்டு மன்னராவார். சீதையின் வளர்ப்புத் தந்தையும் இவரே.
பெருமாளே! பெருமாளே!: குமரனைப் போலவே நாராயணரும் அழகே வடிவானவர். இரு தெய்வங்களும் வனத்திலும் மலையிலும் எழுந்தருளியிருப்பவர்கள். குமரப் பெருமானும் பாம்பணைப் பிரானும் குழந்தை அம்சம், பிரம்மசரிய அம்சம், விவாகப்ராப்தம், தெய்வநிலை அம்சம், குருமூர்த்தி எனப் பல அம்சங்களைப் பெற்றவர்கள். இருவருக்கும் உள்ள தெய்வாம்சங்களில் நிலவும் ஒற்றுமையை உணர்ந்தவர் அருணகிரிநாதர். அதனால்தான் தாம் இயற்றிய திருப்புகழ்ப் பாடல்கள் அனைத்திலும் முருகப்பெருமானை ‘பெருமாளே’ என்று அழைக்கிறார்.
கருப்பசாமி: மதுரை அழகர் கோவிலின் வெளி வாயிலில் ‘கருப்பர்’ என்ற காவல் தெய்வம் உருவமற்றவராக உள்ளார். தர்மத்தின் பிரதிநிதியாக அவரை வழிபடுகிறார்கள். அவருடைய சந்நிதி முன்பு வழக்குகளுக்குத் தீர்ப்பு வழங்குகிறார்கள். கோவிலைப் பூட்டி விட்டு திறவுகோலை இந்தப் பதினெட்டாம்படி கருப்பர் முன்பு வைத்து விட்டு கோவில் அர்ச்சகர் செல்லுகிறார். மறுநாள் காலையில், கருப்பர் முன்பு வைத்த சாவியை எடுத்து கோவில் வாயிலைத் திறக்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளதாம்

நன்றி; அம்மன் தரிசனம் november'09

No comments: