பிள்ளையார் “பிடித்து” குரங்கில் “முடித்த” கதை!
எந்த ஒரு செயல் துவங்கினாலும், யாரை வணங்க வேண்டும்? அது உங்களுக்கே தெரியும்! -பிள்ளையார்!
அதே போல் எந்த ஒரு செயலை முடிக்கும் போது, யாரை வணங்க வேண்டும்? தெரியுமா? -அனுமன்!
ஏன் இப்படி? பார்ப்போம் வாருங்கள்!
சென்னை அடையாறு, மத்திய கைலாச ஆலயத்தில், இந்தப் பழமொழியின் பொருளைக் கண்ணுக்கு நேராகப் பார்க்கலாம்! ஆனந்த விநாயகர்! வேங்கடானந்த விநாயகர் என்பது சுவாமியின் திருநாமம்!
பிள்ளையார் பிடித்து குரங்கில் முடித்த கதை! ஆதியில் பிடித்து அந்தத்தில் முடிந்த கதை! ஆதி+அந்தம்+பிரபு = ஆத்யந்தப் பிரபு
அதாச்சும், பாதி பிள்ளையார்-பாதி அனுமன் என்ற ஒரு திருவுருவச் சிலையை இங்கே காணலாம்! இரண்டு உருவும் ஒன்றாய் இசைந்து! இதுவே ஆதியந்த ஸ்வாமி! * எந்த ஒரு செயல் துவங்கினாலும், பிள்ளையாரை வணங்கிச் செய்வது வழக்கம்! விக்கினங்கள்/தடைகள் இன்றி செவ்வனே நடைபெற!
பிரணவம் தானே மூலாதாரம்! அங்கிருந்து தானே எந்த மந்திரமும் துவக்கம்! அதான் முதலில் பிள்ளையார் பூஜை!
* அதே போல் அந்தச் செயல் முடிக்கும் போது, அனுமனைத் துதித்து முடிப்பது வழக்கம்! நன்றி தெரிவித்துக் கொள்ள!
எப்பேர்ப்பட்ட செயலையும் செய்து விட்டு, நன்றி ஒன்றைக் கூட எதிர்பாராது இருப்பவரிடம் சொல்லும் நன்றி மிகப் பெரிதல்லவா! அதான் இறுதியில் அனுமத் பூஜை!
மத்திய கைலாசத்தில் ஆத்யந்த சுவாமி!
பல உபன்னியாசங்களில், இசை நிகழ்ச்சிகளில் இதைப் பார்க்கலாம்!முதலில் “மகா கணபதிம்” என்று ஆரம்பித்தால், இறுதியில் அனுமனைக் கொண்டு, “ராமச்சந்த்ராய ஜனக” என்று மங்களம் பாடி முடிப்பார்கள்! பக்தி சார்ந்த எந்தவொரு விடயத்திலும் இந்த மரபு உண்டு!
பிள்ளையாரைப் பிடித்து, செயல் செவ்வனே நடந்து, மங்களகரமாய் முடிந்த கதை! இதுவே பிள்ளையார் பிடித்து குரங்கில் முடித்த கதை!
* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே பிரம்மச்சாரிகள்!
* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே விலங்கின ரூபம் கொண்டவர்கள்! * பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே சமநிலை மூர்த்திகள்! – யானையும் குரங்கும் நிலத்துக்குச் சமநிலையாகவே நடக்கும்! எதிர்த்து செங்குத்தாய் நடக்காது! அதிலும் குரங்கானது, கைகள் இருந்தும் கூட, நிலத்தை மீறித் “தான்” என்று எழுந்து நடக்காது!
அதே போல் ஞானச் செருக்கு இல்லாத சமநிலை மூர்த்திகள் இருவரும்! ஆனால் நமக்கு அருளும் போது மட்டும், நிமிர்ந்து நின்று, வேண்டியது வேண்டிய வண்ணம் அருளும் அனுக்ரஹ மூர்த்திகள்!
* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே எளியவர்க்கு எளியவர்கள்! இது தான் இடம், இது தான் பூசை என்றில்லை!
அவருக்கு ஆற்றங்கரை கூட இடம் தான்! மதுரை முக்குறுணியும் ஒரு இடம் தான்! இவருக்கோ தூண் கூட இடம் தான்! விஸ்வரூப நாமக்கல்லும் ஒரு இடம் தான்!
* வடநாட்டிலும் சிந்தூரம் பூசுவது பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருக்குமே!
* நவக்கிரகங்கள் என்னும் கோள் ஆளுமைக்கு அனைத்து தேவதைகளும் உட்பட்டவர்கள்! பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவரைத் தவிர!
* எம்பெருமான் கீதையில் காட்டிய விஸ்வரூபத்திலே பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருமே உண்டு!
* பிள்ளையார், ஆஞ்சநேயர் இருவருக்குமே ஐந்து முகங்கள் உண்டு! பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர்!
* பிள்ளையாரின் பீஜாக்ஷர (உயிர்ப்பெழுத்து) மந்திரம் = “கம்”; ஆஞ்சநேயரின் பீஜாக்ஷர (உயிர்ப்பெழுத்து) மந்திரம் = “ஹம்”! கம் கணபதயே என்று க-வில் துவங்கி ஸ்வாஹா என்று ஹ-வில் முடிப்பது மரபு.
பொதுவாகச் செயல் துவங்கும் முன்னர் விநாயகரை வணங்குதல் எல்லாருக்கும் தெரியும்! ஆனால் செயல் நிறைந்தவுடன், அனுமனை வணங்குதல் பல பேருக்குத் தெரிவதில்லை! அதான் அடியேன் இங்கு சொல்லி வைத்தேன்!
இராமாயணத்திலும், அனைவரையும் வழியனுப்பி விட்டு, இறுதியில் அனுமன் உபாசனையே நடக்கிறது! அனைவருக்கும் நன்றி சொல்லும் இராமன், அனுமனை மட்டும் மனைவியுடன் சேர்ந்து உபாசிக்கிறான்! நன்றி சொல்லி மாளுமா நன்றி ஒன்று வேண்டாதானிடம்? பிரணவ மந்திரம் ஓதி, ஜீவன் மண்ணுக்கு வருகிறது! – அது ஐங்கர (விநாயக) சொரூபம்!
அனுமனின் ராம மந்திரம் ஓதி, ஜீவனை மண்ணில் இருந்து அனுப்புகிறார் காசி நகர் ஈசன்! – அது அனுமத் சொரூபம்!
ஆதியில் தொடங்கி, அந்தத்தில் நிறையும் தத்துவம் தான் ஆதியந்த சுவாமி! அடுத்த முறை சென்னை மத்திய கைலாசத்தில் தரிசியுங்கள்!
இதுவே பிள்ளையார் பிடித்து குரங்கில் முடித்த கதை!
ஆதியில் பிடித்து அந்தத்தில் முடித்த கதை!
இனி பிள்ளையார் பிடிக்கப் போய், குரங்காய் முடிஞ்சி போச்சி-ன்னு சொல்லாதீங்க!
நன்றி--மாதவிப்பந்தல்
1 comment:
Post a Comment