நம் பிள்ளை
ஸ்ரீவசநபூஷணம், ஆசாரியா ஹ்ருதயம் முதலிய நூல்கள் உதயம்
பிள்ளைலோகாசாரியர் தம் முன்னவர்கள் உபதேசித்துள்ளதும் தாங்களே அனுஷ்டித்து வந்ததும் ஆன நூல்களை அனுசரித்து 18 ரகஸ்ய க்ரந்தங்களாக (முக்கிய நூல்களாக) ஆக்கி அருளினார். அவற்றுள் ஸ்ரீவசநபூஷணம் என்னும் நூல், முன்னோர் மொழிந்த வசனங்கள் என்பதால் அப்பெயர் பெற்றது.
அதில் மற்றவர்களுக்குச் சாஸ்த்ர விரோதம் போல் தோன்றும் பல அனுஷ்டானங்களை பெரியவர்களின் உபதேசங்களாலும் அவர்கள் அனுஷ்டித்த வழிபாடுகளாலும் நிரூபித்தார்கள். அவற்றுக்கும் சாஸ்திரங்களுக்கும் விரோதமில்லாமையைக் காட்டினார்கள். பிரபந்தங்களுக்கு இவற்றையே தாம் முடிந்த முடிவாகக் கொள்ள வேண்டும் என்றும் உபதேசித்தார்.
இந்த ஸ்ரீவசநபூஷண நூலைப் பற்றி தூப்புல் பிள்ளை என்பார், (வேதாந்த தேசிகர்) சாஸ்திர விரோதமானது என்று கூற நேர்ந்தது. அதைக் கேட்டு அழகிய மணவாளப் பெருமாள் நாயனாரும் அவரோடு அதற்காக விவாதம் செய்தார். தூப்புல் பிள்ளை அப்படியும் மனம் இசையாமல் இருந்துவிட்டார். ஆனாலும் நம்பெருமாள் வெளி ஊர்வலமாகப் புறப்படும் போது இருவரும் சேர்ந்து ஒரு பிரதிக்ஞை செய்து கொண்டார்கள்.
அதாவது நாயனார் கூறுவதைப் பெருமாள் ஏற்றுக்கொண்டால் தூப்புல்பிள்ளை பன்னிரண்டு வருஷங்கள் நம்பெருமாள் சேவையை இழந்து ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியே போய்விட வேண்டும்.
நம்பெருமாளும் தமது மாலை ஒன்றை நழுவவிட்டு அதை நாயனாருக்கு அணிவிக்கச் செய்து அதன் மூலம் தம் இசைவைத் தெரிவித்துவிட்டார். இவ்விதத்தில் பெருமாள் ஆசார்ய ஹ்ருதய நூலை அங்கீகரித்துவிட்டார். பிறகு தூப்புல்பிள்ளையும் தாம் உறுதி செய்து கொண்டபடி ஸ்ரீரங்கத்தை விட்டு வெளியேறினார்.
தூப்புல் பிள்ளை கண்ட கனவு
பிறகு பெரியவாச்சான்பிள்ளை பெரிய பெருமாளைச் சேவித்து விண்ணப்பம் செய்தார்.
“பெருமாளே! தாங்கள் பரந்த கருணையுள்ளங் கொண்டு பக்தர்களின் சிறந்த வாழ்வுக்காக பல நூல்களை வெளிப்படுத்தியுள்ளீர்கள். அவற்றை நாதமுனிகள் என்பாருக்கு ஆழ்வாரைக் கொண்டு நேராகவே உபதேசம் செய்ய வைத்தீர்கள்.
இவ்விதம் வைணவத்தை பரம்பரையாக இன்றளவும் நடத்திக் கொண்டு வருகிறீர்கள். இந்தத் தரிசனத்துக்கு எதிராக தூப்புல் பிள்ளை என்கிறவர் தாம் செய்த உபாசனையால் பெற்ற ஞானத்தால் கர்வம் கொண்டுவிட்டார். அதனால் வேறான கருத்துகளைக் கூறி வருகிறார். அவரைத் தாங்கள் திருத்தி, மற்றவர்கள் கருத்தை ஏற்றுக் கொள்ளும்படி செய்ய வேண்டும்.” என்று விண்ணப்பித்துக் கொண்டார்.
பெருமாளும் அதற்கு இசைந்தது போலத் தூப்புல் பிள்ளைக்கு ஒரு கனவு உண்டாகும்படி செய்தருளினார். அந்தக்கனவில் ஸ்ரீரங்க நகரத்திலே தோரணங்கள் கட்டுவது, திருவீதிகளெல்லாம் நீர் தெளித்துக் கோலங்களிடுவது முதலான அலங்காரங்கள் செய்யப்பட்டன. இதற்கு என்ன காரணம் என்று தூப்புல்பிள்ளை தம் கனவிலேயே யோசித்தார். மேலே இன்னும் கனவு தொடர்ந்தது.
வைஷ்ணவர்களும் ஜீயர்களும் பெரியவாச்சான் பிள்ளையைப் பல்லக்கிலேற்றிச் செல்ல வழியிலுள்ளார், தூபமெடுப்பார், பூமழை சொரிவார், ஆரத்தி எடுப்பார், அவருக்கு வாழ்த்தொலி தெரிவிப்பார் யாவருமே வழிநடத்தினார்கள்.
தூப்புல்பிள்ளை தம் கனவிலேயே திடுக்கிட்டார். ஏனெனில் அது போல் செய்வது எல்லாம் இறந்து விட்டவர்களுக்குக் கடைசியாகச் செய்யப்படும் மரியாதை.
ஆனால் பெரியவாச்சான்பிள்ளை இன்னும் உயிரோடு இருக்க, அவருக்கு இது மாதிரி நடப்பது எல்லாம் ஏன் என்று கனவிலேயே யோசித்தார் தூப்புல்பிள்ளை.
அப்படி அந்தக் கடைசி ஊர்வலம் பெரிய பெருமாள் கோபுரம் வந்ததும் பெருமாளும் நாச்சி மாருடம் கூடி பெரியவாச்சான் பிள்ளையை அழைத்துக் கொண்டு போனார்கள். மற்ற பெரியவர்களெல்லாரும் கோவிலுள்ளே புகுந்தார்கள். எல்லாரையும் உள்ளே விட்ட வாயில் காப்போர் தூப்புல் பிள்ளையை உள்ளே போக விடாமல் தடுத்துவிட்டனர்.
“ஏன் இப்படிச் செய்தீர்கள்?” என்று அவர்களைத் தூப்புல்பிள்ளை காரணம் கேட்டார். அவர்களும் “பெரிய பெருமாளின் வைணவ மார்க்கத்தில் நீர் அபசாரப்பட்டீராகையாலே உம் மேல் பெருமாள் மனம் கலங்கியுள்ளாராகையாலே உள்ளே புகுவதற்கு உமக்கு உத்தரவில்லை; அதனால் வெளியே போம்” என்று தள்ளி விட்டனர்.
பெரியவாச்சான் பிள்ளையுடன் தூப்புல்பிள்ளை விவாதம்
இவ்வாறு தாம் கண்ட கனவுக்கு விளக்கம் கேட்டு தூப்புல் பிள்ளை அவர்கள் காலை விடிந்ததும் நோய்வாய்ப்பட்டிருந்த பெரியவாச்சான் பிள்ளையிடன் சென்றார். தண்டனிட்டு உடல்நிலை பற்றி விசாரித்தார். அவரைக் குளிர நோக்கிப் பெரியவாச்சான் பிள்ளையும்,
“நமக்கு பெருமாளான பகவானின் வெறும் விளையாட்டாகக் கருதப்படும் இந்த உலகத்தை விடக்கூடிய நேரம் வந்துவிட்டது. இனி வைகுந்தம் போவதாக இருக்கிறோம்.” என்று கூறினார். தூப்புல்பிள்ளையும், அதைக் கேட்டதும் “தாங்கள் திருநாட்டுக்கு (வைகுந்தத்திற்கு) எழுந்தருளுவதாக நேற்று இரவு கனாக் கண்டேன்” என்றார். தாம் கண்ட கனவு முழுவதையும் விவரித்தார். “அப்படியா!” என்று மனம் உவந்த பெரியவாச்சான் பிள்ளையும் தூப்புல் பிள்ளையை அணைத்துக் கொண்டார்.
பிறகு வாயில் காப்பாளரால் தாம் உள்ளே போக முடியாமல் தள்ளப்பட்டதைப் பற்றி தூப்புல்பிள்ளை அவரிடம் கலக்கத்துடன் கூறினார்.
“இனி இதற்கு அடியேன் செய்யவேண்டுவது யாது?” என்று கேட்டார். அவருடைய நிலை கண்டு மனமிரங்கினார், பெரிய வாச்சான்பிள்ளை. கருணையோடு அவரை பார்த்தார்.
“தூப்புல் பிள்ளை! நாம் ஒன்று சொல்கிறோம் கேட்பீரா?” என்று கேட்டார். “அப்படியே செய்கிறேன்” என்று தூப்புல்பிள்ளை சொன்னார்.
“தாங்கள் வைணவத்தின் இதர ஆசாரியார்கள், பக்தர்கள் ஆகியோருடன் சேரவில்லை. தாங்கள் கல்வியை (வித்யையை) அடைவதற்கு ஹயக்ரீவரை உபாசனை செய்து அருள் பெற்றீர்கள். அதனால் வித்யையின் பெருமையை அடைந்தீர். அந்த வித்தைக்குப் பயனால் தாங்கள் மற்றவர்களது வழிபாடு, அனுஷ்டானங்கள் ஆகியவற்றைத் தாங்கள் வெல்வதற்கு முயலக்கூடாது.
முன்னோர்களின் சம்பிரதாய முடிவான அர்த்தங்களைக் கண்டித்துப் பேசக்கூடாது. அதற்காக புதுப்புது அர்த்தங்களை உண்டாக்கி அதைப் பரவ செய்தீர். அது பெரும் அபசாரம். ஆகையாலே பெருமாள் திருவுள்ளமே கலங்கிற்று. அதனால் தாங்களாக சிருஷ்டித்த அர்த்தங்களைப் பரப்பாமல் நம் ஆசாரிய முன்னோர்கள் கூறிய அர்த்த நெறியில் நில்லும்” என்று அருளினார்.
அதற்குத் தூப்புல்பிள்ளை, “அடியேன் அப்படியா செய்தேன்? ஸ்ரீபாஷ்யத்தைச் சொல்லிக் கொண்டும், அதற்குத் தக்கபடி சில நூல்களை எழுதி வெளியிட்டும் வந்தேன்.” என்று பதில் சொன்னார்.
பெரியவாச்சான்பிள்ளையும், “அதையன்று நான் குறிப்பிட்டது. இராமானுஜர் எழுதியுள்ள ஸ்ரீபாஷ்ய விஷயத்திலும் கூட நீர் சும்மா இருந்தீரா? அதில் சில குற்றங்களுண்டென்று எழுதினீர்கள். அப்போது எம்பெருமானாரான இராமானுஜரே உம் கனவில் தோன்றி உம்மைக் கோபித்துக் கொண்டார். பிறகு தான் நீர் திருந்திப் பயபக்தியுடன் பிழை பொறுத்தருள வேண்டினீர்கள். பின்னர் இராமானுஜருக்கு உகந்ததாக “யதிராஜ ஸப்ததி” என்கிற நூலை எழுதினீர்கள். ஸ்ரீபாஷ்யத்தைப் பிரசாரம் செய்தீர்கள்.
இவற்றையெல்லாம் பற்றிக்கூட நாம் சொல்லவில்லை. நம்மாழ்வார் நாதமுனிகளுக்குத் திவ்ய ப்ரபந்த விஷயமாகவும் விசேஷ அர்த்தங்கள் பல கூறியுள்ளார். அந்த அர்த்தங்களைக் கண்டித்து எழுதினீர். இது தவிர வேறே சில அர்த்தங்களைக் கற்பித்து நூல்கள் எழுதினீர்கள். இவற்றைத் தவிர்க்க வேண்டுமென்கிறேன்.” என்று கூறினார்.
அதற்குத் தூப்புல் பிள்ளை, “நம்மாழ்வார் திவ்ய ப்ரபந்தங்கட்கு ரகசிய அர்த்தங்கள் செய்ததில்லையே! அப்படியிருக்கும்போது அதற்கு மாறாக நான் செய்திருந்தால் அதைப் பிழை என்று சொல்லலாமா? இந்த அர்த்தங்களை இடையில் வந்தவர்களன்றோ கூறினார்கள்? அவை சாஸ்த்ர ப்ரமாணங்களுக்கு ஒத்து இராததன்றோ? அதனால் தானே நானும் கண்டித்து எழுதினேன்.” என்றார்.
அது கேட்டுப் பெரியவாச்சான்பிள்ளை, “அது அப்படியன்று; நம்மாழ்வார் மதுரகவிகள் மூலமாக வெளியிட்ட திருவாய்மொழி முதலிய ப்ரபந்தங்கள் மறைந்து போயின. பின்பு பெருமாள், நம்மாழ்வாரைக் கொண்டு நாதமுனிகளுக்கு நேராக அருளும்படி செய்தார். நாதமுனிகளும் அதையே தமக்குப் பின்னால் வந்தவர்களுக்கு அருளிச்செய்தார். இப்படி பரம்பரையாக வந்தபோது பிற்காலத்தவர் இந்த அர்த்தங்களை மந்தமதிகளும் அறியும்படி நூல் வடிவமாக்கினர். அதனால் அதற்கெல்லாம் மாறாகச் செய்வதைத் தாங்கள் விடவேண்டும் என்கிறேன்.” என்றார்.
அதற்கு மறுபடியும் தூப்புல்பிள்ளை, “ஆழ்வார் ப்ரமாணங்களுக்கு விரோதமாக ஏதாவது செய்தேனோ? அதை எனக்குக் கூறவேண்டும்” என்று கேட்டார்.
பெரியவாச்சான்பிள்ளையும், “ஆழ்வார் முக்திதசையில் எல்லாவற்றையும் நேராகக் கண்டிருக்கிறவராகையாலே தாம் நேரே கண்ட அர்த்தங்களையே நாதமுனிகளுக்கு அருளினார் அல்லவா? அவற்றுக்குத் தக்கவாறுள்ள பிரமாணங்களைக் கைக்கொண்டு மற்றுள்ளவற்றையும் அதற்குத் தக்கவாறு இசைவிக்கவேண்டும். கண்டதைக் கொண்டு காணாதவற்றை ஒருங்கு விடவேண்டும். காணாததைக் கொண்டு கண்டதை அழிக்கலாமா? ஆளவந்தார், எம்பெருமானார், திருக்குருகைப்பிரான் பிள்ளான், அருளாளப் பெருமாள் எம்பெருமானார், பட்டர், நஞ்ஜீயர் முதலானோருடைய பெருமைகளை தாங்கள் அறிந்ததில்லையா? அவர்களுக்குத் தெரியாத பிரமாண நிலை நமக்குத் தெரியுமோ?
இவற்றை விடுங்கள். வெறும் சாஸ்த்ரங்களைவிட ஆழ்வார் செய்தவை தான் மிகமிக முக்கியமானவை. ஆகவே தான் தத்வத்திலும் (உண்மைப் பொருளிலும்) அனுஷ்டானத்திலும் நாதமுனி மூலமாக அருளிய கட்டளையைப் பெற்று அதுவே சத்யமென்று நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும்.
அதற்குச் சேராதவற்றைக் கேள்வி எழுப்பி நம்முன்னோர் அனுகூலங்களை மட்டும் ஏற்றுக் கொண்டார்கள். அந்த முன்னோர்களின் அர்த்தங்களையே மற்றவர்கள் தங்களைச் சார்ந்தவர்களுக்கு உபதேசித்துக் கொண்டு வந்தார்கள். அதனால் அந்த நிலைக்கு மாறாக நீர் வேறே ஓர் அர்த்தத்தைக் கூறி வரும் புதிய வழியை விட்டுவிட வேண்டும்” என்றருளிச் செய்தார்நன்றி;ஞான ஆலயம்
1 comment:
Nice imagination and story writing skills.
Post a Comment