Bhoo thatha's Blogspot

Search my older Blog

Saturday, November 21, 2009

talking sri rangan

ஸ்ரீரங்கம் முரளி பட்டர்
அரங்கனில் கலந்தவர்கள்!

ருடவாகனராக, உபயநாச்சிமாருடன் சங்கு- சக்கரதாரியாக காட்சி தந்த பெருமாளை, பரவசத்துடன் தரிசித்தார் அவர். சில நொடிகளில் பதறிப் போனார். 'இந்த திவ்ய மங்களக் காட்சியைக் கண்டு, பெருமாளுக்கு திருஷ்டி பட்டுவிடுமோ...' என்று கலங்கினார். அண்ட சராசரத்தையே காக்கும் ஆதிமூலத்துக்கு திருஷ்டி என்பதெல்லாம் இல்லை என்றுகூடத் தோன்றவில்லை அவருக்கு! அத்தனை பிரியம் அவன் மீது! தான் ஏறி அமர்ந்த பட்டத்து யானையின் கழுத்தில் இருந்த மணிகளையே வாத்தியங்களாக்கினார்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்சேவடி செவ்வி திருக்காப்பு!

- பரிவும் பாசமும் பொங்க, காப்புப் பாடலைப் பாடினார். சித்தமெல்லாம் விஷ்ணுவே நிறைந்திருந்ததால் அவர் விஷ்ணுசித்தரானார். 'தாய்மைக்கு நிகரான பரிவுடனே பல்லாண்டு பாடியதால் பெரியாழ்வார் எனும் பேறு பெற்றார்...' என மணவாள மாமுனிகள் 'உபதேசரத்னமாலை'யில் தெரிவித்துள்ளார்.
மதுரையில், அரசவையில் பொற்கிழி ஒன்றைக் கட்டி வைத்தான் பாண்டிய மன்னன். உண்மைப் பொருளை விளக்குபவர், இந்தப் பொற்கிழியை அறுத்துச் செல்லலாம் என முரசறிவித்தான். இதை அறிந்த பலரும் பெரியாழ்வாரை மதுரைக்குச் செல்லும்படி வற்புறுத்தினர். அவரும் ஒப்புக் கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயியே பெரியாழ்வாரின் குரு! பெரியபெருமாளே நாவினில் வந்தமர்ந்து, பெரியாழ்வாருக்கு சகல வேதசாரத்தையும் இதிகாசங்களையும் அளித்தார். இவ்வாறு தாம் பெற்ற மேற்கோள்களைக் காட்டி,
ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம் முத்த்ருத்ய புஜமுச்யதே
வேத சாஸ்த்ராத் பரம் நாஸ்தி ந தைவம் கேசவாத் பரம்
- என்று
'இதிகா சங்கள் சத்யமாகக் கூறிய ஆதிமூலம்- கேசவனே'என்றும், 'அவன் ஒருவனையே பற்றிக் கொள்ள வேண்டும்' எனும் பேருண்மையையும் உரைத்தார் பெரியாழ்வார். இவரின் கருத்தினை ஆமோதிக்கும் வகையில், அரசவையின் தோரணத்தில் கட்டப்பட்ட பொற்கிழி, தாழ்ந்தது.
தனக்கு இவ்வாறு கிடைத்த பரிசுகளை எல்லாம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாளுக்கே அர்ப்பணித்தார் பெரியாழ்வார். பிறகு வழக்கம் போல், புஷ்ப கைங்கர்யத்தில் ஈடுபடலானார். இதற்காகவே மிகப்பெரிய நந்தவனம் அமைத்தார். இந்த நந்தவனத்தின் துளசி மாடத்தில்தான் கோதையைக் கண்டெடுத்தார் பெரியாழ்வார். பிறகென்ன... கோதையும் புஷ்ப கைங்கர்யத்தில் பங்கு கொண்டாள். நூற்றியெட்டு பெருமாளின் வைபவத்தையும் தந்தையிடம் கேட்டுத் தெரிந்து கொண்டாள். அரங்கனின் குழலழகு, வாயழகு மற்றும் கண்ணழகில் லயித்து, 'வந்தானோ திருவரங்கன் வாரானோ வென்றென்றே வளையுஞ் சோரும்' எனும் வைராக்கியத்துடன், அரங்கனையே நினைந்து, அரங்கன் மீதே ஆசை கொண்டாள்.
தந்தை பெரியாழ்வார், பெருமாளை வாழ்த்தி பல்லாண்டு பாடினார்; கோதையோ, பெருமாளையே துயில் எழுப்பி, அறிவுரை கூறினாள். இந்த ஆளுமை குணத்தால், கோதை... ஆண்டாளானாள்!
இன்னொன்று... அரங்கனுக்கும் நமக்குமான நெருக்கத்தை, உறவுத் தொடர்பை உலகுக்கு வெளிப்படுத்தியவளே ஆண்டாள்தான்! அரங்கன்... பிதா; நாமெல்லாம் அவனுடைய புத்திரர்கள்.
உன்றன்னோடு உற்றோமே யாவோம் உமக்கே நாம் ஆட்செய்வோம் என்றும்,
உன்றன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது என்றும்... அரங்கனுக்கும் நமக்குமான உறவை அழகுற தெளிவு படுத்துகிறாள் ஆண்டாள்.
''அரங்கப் பெருமாள் கிருஷ்ண வதாரம் எடுத்த காலத்தில் தனது திருவாயினால் அருளிச்செய்த சத்தியமான சரம சுலோகத்தை, என் தகப்பனார் கேட்டு, அதன்படி இருப்பார். 'தம்மை விரும்புகிறவர்களைத் தாமும் விரும்புவர்' எனும் சொல்லானது, பெரியபெருமாள் விஷயத்திலேயே பொய்யாகி விட்டால், அதனை யார் சரி செய்வது?'' எனும்படி,
செம்மையுடைய திருவரங்கர்தாம் பணித்த
மெய்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பார்
தம்மை யுகப்பாரைத் தாமுகப்பரெனும் சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பர் ஆர் இனியே?
- என்று அரங்கன் மேன்மையைச் சொல்கிறாள் ஆண்டாள். இதற்கு உதாரணமாக நடந்த சம்பவம் ஒன்று...
ராஜராஜ சோழன் காலத்தில் இருந்தவர் கருவூர் தேவர். ஒருமுறை, ஸ்ரீரங்கத்துக்கு வந்து பெருமாளை தரிசித்துவிட்டு, கருட மண்டபம் வழியே சென்றார். திருக்கச்சி நம்பி சந்நிதிக்கு அருகே வந்தபோது, ஆலயத்தின் தாசி ஒருத்தி கருவூர் தேவரை விழுந்து, வணங்கினாள். அவளது வற்புறுத்தலைத் தட்ட முடியாமல், இரவு உணவுக்காக அவளின் வீட்டுக்குச் சென்று உணவருந்தினார்.

கிளம்பும் போது, ''உனக்கு என்ன வேண்டும், கேள்?'' என்று கருவூர் தேவர் கேட்க, ''நம்பெருமாளின் தங்கக் காசுமாலை வேண்டும்'' என்றாள். இவளது வேண்டுகோளை நிராகரிக்க முடியாமல் தவித்தவர், அரங்கனிடம் மனதார வேண்டினார்; அடுத்த நொடி... அவருடைய கையில் அரங்கனின் காசுமாலை! தாசியிடம் காசுமாலையைக் கொடுத்துவிட்டு, புதுக்கோட்டை நோக்கிச் சென்றார்.
மறுநாள்! அரங்க நகரமே அல்லோலகல்லோலப்பட்டது... அரங்கனின் காசுமாலையைக் காணோம் என்று! இறுதியில், தாசியின் வீட்டில் காசுமாலை இருப்பதை அறிந்தான் மன்னன். விசாரணையில், கருவூர் தேவர் தந்ததாகச் சொல்ல, புதுக்கோட்டையில் இருந்த கருவூர்தேவரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடம் விசாரித்ததற்கு, ''காசுமாலையை அரங்கன்தான் கொடுத்தான்'' என்றார் கருவூர்தேவர். மன்னன் நம்பவில்லை; ''சரி.. இதற்கு யார் சாட்சி?'' என்று கேட்டு கர்ஜித்தான் மன்னன். ''கொடுத்தவனே சாட்சி'' என்று அங்கே முழங்கினான் அரங்கன்! அவனுடைய அன்பு அளப்பரியது!
ஆண்டாளை ஆட்கொள்ள சித்தம் கொண்டான் அரங்கன். தன் மகளின் திருமணம் குறித்த கவலையுடன் கண்ணயர்ந்த வேளையில் பெரியாழ்வாரின் கனவில், ''உன் மகள் கோதையை அரங்க நகருக்கு அழைத்து வா! அவளுடன் திருமணம் நடந்தேறும்'' என்று அருளினார் அரங்கன். இதேபோல், ''சகல மரியாதைகளுடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று கோதையை அழைத்து வாருங்கள்'' என்று கோயிலாருக்கும் கட்டளையிட்டார்.
வடபத்ரசாயியின் அனுமதியுடன் சகல மரியாதைகளுடன் பெரியாழ்வாரும் ஆண்டாளும் ஸ்ரீரங்கத்துக்கு வந்தனர். சூடிக் கொடுத்த நாச்சியார், அழகிய மணவாளன் திருமுன்னே சென்றாள்; மின்னலென உட்புகுந்தாள்; அரங்கனை கண்ணாரக் கண்டாள்; அவனுடைய திருவடியைத் தொழுதாள்; அரங்கனிடமே கலந்தாள்! குலசேகர ஆழ்வாரைப் போலவே, பெரியாழ்வாரும் அரங்கனுக்கு மாமனார் ஆனார்! தன் மாமனாருக்கு சகல மரியாதைகளும் செய்து, அவரை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அனுப்பி வைத்தான் அரங்கன்!
கருவறை விட்டு வந்த பெரியாழ்வாரை, மகளின் பிரிவு வாட்டியது. ஒரு மகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால், திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டு போனாரே - என்று வாய் விட்டுக் கதறினார்.
பெரியாழ்வாரும் ஆண்டாளும் ஸ்ரீரங்கத்தில் வந்து இறங்கிய இடம், மேல அடையவளைஞ்சான் தெருவில், வெளி ஆண்டாள் சந்நிதியாக உள்ளது. இங்கே... அமர்ந்த திருக்கோலத்தில் (மூலவர் விக்கிரகம்) கம்பீரத்துடன் காட்சி தருகிறாள் ஆண்டாள்! அரங்கன் - ஆண்டாள்! இருவரும் கொண்டிருக்கும் அன்புக்கு எல்லையே இல்லை. ஸ்ரீரங்கநாயகித் தாயார் மற்றும் உறையூர் கமலவல்லித் தாயார் ஆகியோருடன் அவரவர் சேர்த்தி நாளில் வருடத்துக்கு ஒருமுறைதான் மாலை மாற்றிக் கொள்கிறார் அரங்கன். ஆனால், ஆண்டாளுடன், அவளது சந்நிதி வழியே செல்லும் போதெல்லாம் மாலை மாற்றிக் கொள்கிறார்! அரங்கனை தரிசிக்க வரும்போது, இவளையும் தரிசியுங்கள்! இவள் மிகுந்த வரப்பிரசாதி! இதற்கு என் அனுபவம் ஒன்று...
மன்னார்குடியில் இருந்து சிறு வயதிலேயே இங்கே வந்துவிட்ட பார்த்தசாரதி என்பவர், வெளி ஆண்டாள் சந்நிதியில் தன்னால் முடிந்த கைங்கர்யங்களை செய்து வருகிறார். ஆரம்பத்தில் அர்ச்சகர்களுக்கு உதவியாக சேவை செய்தார். ஆண்டாளின் அருளால் அவருக்கு ரயில்வேயில் வேலை கிடைத்தது. ஆனாலும், தினமும் ஆண்டாள் சந்நிதியில் இருந்து துளசி சேகரித்து பெரிய பெருமாளின் திருவாராதனத்துக்குக் கொடுப்பார். இரவு, பெருமாளிடம் இருந்து மாலைகளை எடுத்து வந்து ஆண்டாளுக்குச் சார்த்துவார். சில ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திருமணம் நடந்தது. மனைவியாக அமைந்தவரின் பெயர்... ஆண்டாள்! அதுமட்டுமா? ஆண்டாளின் திருநட்சத்திர நாளான ஆடிப்பூரத்தில், ஆண்டாள் சந்நிதியில் திருமஞ்சன வைபவம் நடத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில், இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தாள்! குழந்தைக்கு கோதை என்றே பெயர் வைத்தனர்.
இப்படித்தான் ஆச்சரியங்கள்... அரங்கனின் மண்ணில் அரங்கேறிக் கொண்டே உள்ளன!
- (அரங்கன் பேசுவார்)

நன்றி;;ஜூனியர் vikatan

No comments: