Bhoo thatha's Blogspot

Search my older Blog

Saturday, November 14, 2009

annger

கோபத்தை  களைவது எப்படி ?

ஒரு துறவிக்குச் சிறு வயதில் இருந்தே படகில் பிரயாணம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு. அவரிடம் ஒரு சிறு படகு இருந்தது.அருகில் இருந்த ஏரிக்குச் சென்று அந்தப் படகில் மணிக்கணக்கில் இருப்பார்.பல சமயங்களில் கண்களை மூடித் தியானம் செய்வது கூட படகில் இருந்தபடி தான்.ஒரு நாள் அவர் படகில் தியானம் செய்து கொண்டு இருந்த போது காலியான வேறொரு படகு காற்றின் போக்கில் மிதந்து வந்து அவரது படகை இடித்தது.

தியானத்தில் இருந்த அவருக்கு மிகுந்த கோபம் ஏற்பட்டது.யாரோ அஜாக்கிரதையாக படகை ஓட்டிக் கொண்டு வந்து தம் படகில் மோதி விட்டதாக எண்ணி கண்களைத் திறந்து திட்ட முற்பட்டார்.பார்த்தால் காலிப் படகு ஒன்று தான் அவர் முன்னால் இருந்தது."என் கோபத்தை அந்தக் காலிப் படகின் மீது காட்டிப் பயன் இல்லை. மௌனமாகத் தான் நான் ஞானம் பெற்றேன்
அந்தப் படகு எனக்கு குருவாக இருந்தது. இப்போதெல்லாம் யாராவது வந்து என்னை அவமானப்படுத்தவோ மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது" என்று எனக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்வது எனக்குச் சுலபமாகி விட்டது" என்று அவர் பிற்காலத்தில் எப்போதும் கூறுவார்.

பொதுவாக நாம் நமக்கு ஏற்படும் கோபத்தை இரண்டு விதங்களில் கையாள்கிறோம். ஒன்று காரணமாகத் தோன்றும் மனிதர்கள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறோம்.அல்லது கோபத்தை அடக்கிக் கொண்டு விழுங்கிக் கொள்கிறோம்
பிறர் மீது போபித்து அனல் கக்கி ஓயும் போது பெரும்பாலும் நாம் மகிழ்ச்சியாய் இருப்பதில்லை.குற்ற உணர்வு பச்சாதாபம் தேவை இருந்திருக்கவில்லை என்கிற மறுபரிசீலனை என்று பல்வேறு உணர்வுகளால் பாதிக்கப்படுகிறோம்.இது ஒரு புறமிருக்க இதன் விளைவாக அந்தப்பக்கமும் கோபமும் வெறுப்பும் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தால் விளைவுகள் விபரீதமே.

ஏற்படும் கோபத்தை அடக்கி நமக்குள்ளே விழுங்கிக் கொண்டாலும் கோபம் மறைவதில்லை. உள்ளே சேர்த்து வைத்த கோபம் என்றாவது எப்போதாவது வெளிப்பட்டே தீரும்.அது இயற்கை.அது நம் கோபத்திற்குக் காரணமான நபர் மீதிருக்கலாம்.அல்லது பாவப்பட்ட வேறு யார் மீதாகவோ இருக்கலாம்.விழுங்கியது வெளிப்படவே செய்யும்
நமக்குள்ளே தங்கி இருந்ததன் வாடகையாக அல்சர் முதலான நோய்களைத் தந்து விட்டே கோபம் நம்மை விட்டு அகலும்.ஆக இந்த இரு வழி முறைகளும் நம்மைத் துன்பத்திற்கே அழைத்துச் செல்கின்றன.


பின் என்ன செய்வது என்ற கேள்விக்குப் பதில் தான் காலிப்படகுப் பாடம். கோபமே அவசியமில்லை கோபத்திற்கு யாரும் காரணமில்லை என்று உணர்ந்து அந்தக் கணத்திலேயே தெளிவடைவது தான் கோபத்திற்கு மருந்து.

ஒரு நண்பர் வந்து நம்மைக் கிண்டல் செய்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.பெரும்பாலும் நாம் சிரித்து பதிலுக்கு நாமும் ஏதாவது கிண்டலாக சொல்வோம். ஆனால் ஒரு நாள் நாம் பல பிரச்னைகளால் மனநிலை சரியில்லாமல் இருந்தால் அன்று அந்த நண்பரின் கிண்டல் நம்முள் ஒரு எரிமலையையே ஏற்படுத்தக்கூடும். அவரது வார்த்தைகளுக்கு அந்த நேரம் ஒரு தனி அர்த்தம் தெரியும்.மனம் வீணாகப் புண்படும்.கடுகடுப்புக்கு முகமும் கடுஞ்சொற்களுக்கு நாக்கும் தயாராகும்.இந்தச் சிறிய தினசரி அனுபவம் ஒரு பேருண்மையை வெளிப்படுத்துவதை நாம் சிந்தித்தால் உணரலாம்.அடுத்தவரது சொற்களோ செயல்களோ மட்டுமே கோபத்திற்குக் காரணம் என்றால் அவற்றை எப்போதும் கோபமாகத் தான் எதிர்கொள்வோம்.ஆனால் உண்மையில் கோபமும் கோபமின்மையும் நம் மனப்பான்மையையும் மனநிலையையும் பொறுத்தே அமைவதை நம் தினசரி வாழ்விலேயே பார்க்கிறோம்.

வறண்ட கிணற்றில் விடப்படும் வாளி வெற்று வாளியாகவே திரும்பும்.நீருள்ள கிணற்றில் விடப்படும் வாளியே நீருடன் திரும்பும்.உள்ளே உள்ளதை மட்டுமே வாளியால் வெளியே கொண்டு வர முடியும்.வாளியால் நீரை உருவாக்க முடியாது. அடுத்தவர்கள் வாளியைப் போன்றவர்கள்.அவர்களது சொற்களும் செயல்களும் நமக்குள்ளே சென்று வெளிக்கொணர்வது நமக்குள்ளே சென்று வெளிக் கொணர்வது நமக்குள்ளே இருப்பதைத் தான்.அது கோபமாகட்டும் வெறுப்பாகட்டும் அன்பாகட்டும் நல்லதாகட்டும் தீயதாகட்டும்.அவர்கள் நம்மில் வெளிக் கொணர்வது நாம் நம் ஆழ்மனதில் சேர்த்து வைத்திருப்பதையே.

இப்பொழுதெல்லாம் யாராவது வந்துஉங்களை  அவமானப்படுத்தவோ மனதைப் புண்படுத்தவோ முற்பட்டால் புன்னகையுடன் "இந்தப் படகும் காலியாகத் தான் இருக்கிறது" என்று உள்ளுக்குள் கூறி கொண்டு அமைதியாக நகர்ந்து விடுங்கள் ."கோபம் என்பது பலவீனம் அல்ல அது பாவம்"

No comments: