அத்தி மரத்திலான அனுமன்
தல வரலாறு:இலங்கையில் ராவணனை அழித்ததால், ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தோஷ நிவர்த்திக்காக ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்க பூஜை செய்ய முடிவெடுத்தார். இதற்காக லிங்கம் கொண்டு வர ஆஞ்சநேயர் கயிலாயம் சென்றார். அவர் வர தாமதமானதால், சீதாதேவி கடற்கரை மணலில் ஒரு லிங்கம் வடித்தாள். ராமபிரானும் அந்த லிங்கத்திற்கு பூஜை செய்து விட்டார்.
லிங்கத்துடன் வந்த ஆஞ்சநேயர் வருத்தமடைந்தார். மணல் லிங்கத்தை தனது வாலினால் சுற்றி பெயர்க்க முயன்றார். ஆனால், வால் அறுந்ததே தவிர, லிங்கத்தை அசைக்கக்கூட முடியவில்லை.
சிவஅபச்சாரம் செய்ததை எண்ணி வருந்தினார். ஒரு தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு விமோசனம் பெற்றார். லிங்கத்தை பெயர்க்க முயன்றபோது வால் அறுந்ததன் அடிப்படையில், இக்கோயிலில் ஆஞ்சநேயர் வால் இல்லாமல் காட்சி தருகிறார்.
அத்தி மர அனுமன்: மூலஸ்தானம் எட்டு பட்டைகளுடன் கூடிய விமானத்துடன் அமைக்கப்பட்டுள்ளது
. இதில், கல் வடிவ ஆஞ்சநேயரும், அத்திமரத்தால் ஆன அனுமனும் உள்ளனர்.
கல் சிலையில் வால் இல்லை. இவர் அஞ்சலிஹஸ்த நிலையில் வணங்கிய கோலத்தில் உள்ளார்.
இவரது அருகிலுள்ள அத்திமர அனுமனை "நரசிம்ம ஆஞ்சநேயர்' என்கின்றனர். இவர் அபயஹஸ்த நிலையில் பக்தர்களுக்கு அருளும் கோலத்தில் உள்ளார்.
இரணியனை வதம் செய்த நரசிம்மர், குளிர்ச்சிக்காக ஒரு அத்தி மரத்தில் புகுந்து கொண்டார். அத்தி மரம் நரசிம்மரின் அம்சமாக கருதப்படுகிறது. எனவே அத்திமர ஆஞ்சநேயரை "நரசிம்ம ஆஞ்சநேயர்' என்று அழைக்கிறார்கள்.
ஆஞ்சநேயரின் பீடத்திற்கு கீழே 12 கோடி "ராம ரக்ஷ' மந்திர எழுத்துக்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது. ராமர் பாதமும் இருக்கிறது. வெள்ளி தோறும் ஆஞ்சநேயருக்கு விசேஷ பூஜை நடக்கிறது.
மூன்று அபிஷேகம்: அளவில் சிறிய இக்கோயிலில் பரிவார மூர்த்திகள் இல்லை. "ஆஞ்சநேயர் தீர்த்தம்' கோயிலுக்கு பின்புறம் உள்ளது.
கோயில் வளாகத்தில் கடல் மணலில் உருவான சுயம்பு ஆஞ்சநேயரும் காட்சி தருகிறார். இவருக்கும் வால் கிடையாது. இந்த ஆஞ்சநேயர் சிலையில், கடல் சிப்பிகள் பதிந்திருப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம்.
தலவிருட்சமான அத்தி மரத்தில், பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டுமெனக் கோரி, இளநீர்களைக் கட்டுகிறார்கள்.
பிரார்த்தனை நிறைவேறியதும் வடை, வெற்றிலை மாலை அணிவித்து நன்றி செலுத்துகிறார்கள்.
ஆஞ்சநேயர் சிவலிங்கத்தைப் பெயர்க்கும் முயற்சியில் உக்கிரமாக இருந்ததால், இங்கு இளநீர் வழிபாடு நடக்கிறது
. பெரும்பாலான ஆஞ்சநேயர் கோயில்களில் மட்டைத் தேங்காய் நேர்த்திக் கடன் செய்வதே வழக்கமாக உள்ளது.
புரட்டாசி கடைசி சனிக் கிழமை, அனுமன் ஜெயந்தி, ஆனி மாத ரேவதி நட்சத்திரம் ஆகிய மூன்று நாட்களில் மட்டும் அத்தி மர ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் செய்யப்படும்.
இருப்பிடம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் மேற்கு வாசல் பஸ் ஸ்டாப்பில் இருந்து 2 கி.மீ., தூரத்தில் இக்கோயில் உள்ளது. ஆட்டோ வசதி உண்டு.
No comments:
Post a Comment