Bhoo thatha's Blogspot

Search my older Blog

Tuesday, November 17, 2009

நெஞ்சில் உரமுமின்றி, நேர்மைத் திறமுமின்றி!

நீதிபதி தினகரனுக்கு உச்சநீதி மன்றத்துக்குப் பதவி உயர்வு மறுக்கப்பட்டுள்ளது என்பதே, அவர் பேரில் உள்ள குற்றச்சாட்டுகள் வலுவானவை என்பதை உறுதிப்படுத்துகின்றது.

"இந்நிலையில் அவர் பதவியில் தொடரக்கூடாது; விசாரணை முடியும்வரை விலகி இருக்க வேண்டும்," என்று ஆணையிடுவதில் மத்திய அரசுக்கோ உச்சநீதிமன்றத்துக்கோ ஏன் தயக்கம் இருக்க வேண்டும்?!

அத்தகைய ஆணை எதுவும் வராத நிலையில், அவருக்குச் சமூக, தொழில் ரீதியான எதிர்ப்புகள் கடுமையாகி அதிகரித்தும் வந்துள்ளன. தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் நீதிபதி தினகரனுக்கு எதிராகக் கிளர்ச்சி எனில், கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் அவருக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்து, வழக்குரைஞர்களே நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்துள்ளனர்!

தாமே பதவி விலக முன்வராத தினகரனின் ராஜினாமாவை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோரியிருப்பாரேயானால், அவரவரும் சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக்கொள்ளும் சூழல் உருவாகியிராது. சட்டத்துறையினரே சட்டம்-ஒழுங்கை மீறும் அவலம் நிகழ்ந்திருக்காது.

இதுபோன்ற நிகழ்வுகளை எதிர்பார்த்து, தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் தீர்கதரிசனம்தான் நல்ல ஆட்சிக்கு அடையாளம். ஆனால், அந்த தீர்கதரிசனத்துக்குத்தான் இங்கே மிகுதியான பஞ்சம்!


மஹாராஷ்டிரா சட்டசபையில் புதிய அரசு பதவியேற்ற தினத்திலேயே கலாட்டா, கைகலப்பு! பிரதேசப் பித்து பிடித்த மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியினர், சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ அபுஆஸ்மியைக் கண் மூடித்தனமாகத் தாக்கத் துணிந்தது கொடுமை. அவர் ஹிந்தியில் பதவிப் பிரமாணம் ஏற்பது சட்டத்துக்கு உட்பட்ட செயல்! அவ்வாறிருக்க, எம்.என்.எஸ். உறுப்பினர்கள் அதை ஆட்சேபித்ததுடன் அபு ஆஸ்மியைத் தாக்கியும் இருக்கிறார்கள் என்றால், அதற்கு ஒரு காரணம் அவர்களது தலைவர் ராஜ் தாக்கரே அவர்களுக்குப் பரிந்தூட்டும் பிரிவினை அரசியல் சித்தாந்தம்.

இன்னொரு காரணம், ராஜ் தாக்கரேயின் பகிரங்க வன்முறை அழைப்புகளைக் கண்டும் காணாமல் இருக்கும் காங்கிரஸின் அரசியல் சுயநலம். சிவசேனாவிலிருந்து பிளவுபட்டு உருவாகியிருக்கும் மஹாராஷ்டிரா நவ நிர்மாண் ஸேனாவை, காங்கிரஸ் தனது எதிரியின் எதிரியாகப் பார்த்து வந்திருக்கிறது. அதன் தலைவர் ராஜ் தாக்கரே, பிரிவினை அரசியல் என்ற பெயரில் வன்முறையை அவிழ்த்துவிட்டபோதுகூ
ட, கடும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்தது; அவரைக் கைது செய்ய அஞ்சியது. இப்போது சட்டசபையிலேயே வன்முறை வெறியைக் காட்டியிருக்கிறது அக்கட்சி!

சட்டமன்ற உறுப்பினர்களுக்குச் சில உரிமைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றை அத்துமீறி துஷ்பிரயோகம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்பட வேண்டும்.

நீதிபதி தினகரன் விவகாரமும் சரி, எம்.என்.எஸ். கட்சியின் வன்முறைத் தாக்குதலும் சரி, கர்நாடகத்தில் ரெட்டி சகோதரர்களின் மிரட்டலுக்கு பா.ஜ.க. பணிந்ததும் சரி... தலைமையிலிருப்பவர்கள் தார்மிக பலத்துடன் தைரியமாகச் செயல்பட இயலவில்லை என்பதையே காட்டுகின்றன. பல்வேறு பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி எறியும் துணிவின்றி வளரவிடுவதைக் காட்டிலும், நாட்டுக்குப் பேரபாயம் வேறில்லை.                                                          source;   kalki

No comments: