Bhoo thatha's Blogspot

Search my older Blog

Tuesday, November 24, 2009

god's will

டவுளின் சித்தம் - பக்திக் கதைகள்



* அதுவே நீயாக ....



துறவி ஒருவர் கோயிலில் இருந்த இறைவனின் திருவுருவத்தைப் பார்த்து, ""என் நினைவெல்லாம் நீயே நிரம்பியிருக்கிறாய். எனவே என் பார்வையில் படுகின்ற பொருள்கள் எல்லாம் எனக்கு நீயாகவே தோன்றும் !'' என்று உருக்கமுடன் சொன்னார்.



அப்போது அருகில் இருந்த ஒருவன், ""துறவியாரே ! உங்கள் முன் கழுதை வந்தால் ?'' என்று கிண்டலாகக் கேட்டான். அவனைப் பார்த்த துறவி, ""அது எனக்கு நீயாகவே தெரியும் !'' என்றார்.



.



* இவன் பாவியா ???



ஒருவன் இறந்த பிறகு மேலோகம் சென்றான்.



அங்கே சித்ரகுப்தன் அவனிடம், ""நீ பூமியில் நிறைய பாவங்கள் செய்திருக்கிறாய். ஒரே ஒரு புண்ணிய காரியம் மட்டும் செய்திருக்கிறாய். எனவே நீ சிறிது நேரம் சொர்க்கவாசம் அனுபவிக்கலாம். செய்த ஒரே புண்ணியத்திற்காக முதலில் சொர்க்கவாசம் அனுபவித்துவிட்டு பின் நரகம் செல்கிறாயா, சொல் ?'' என கேட்டான்.



"" ஐயா ! முதலில் நான் சொர்க்க வாசம் அனுபவித்துவிட்டு பின் நரகம் செல்கிறேன் ?'' என்றான்.



சொர்க்கத்தின் கதவுகள் திறக்கபட்டதும் மூன்று லோகங்களையும் சுற்றி வரக் கிளம்பினான். முதலில் இந்திரலோகம் சென்றவன், இந்திரனை தரிசனம் செய்தான். பிறகு சிவன் இருக்கும் கைலாயத்தில் அவரை தரிசனம் செய்துவிட்டு திரும்பியவனை, எம தூதர்கள் பிடித்துக் கொண்டனர். "" சொர்க்கத்தில் உன் நேரம் முடிந்து விட்டது. இனி நரகத்திற்குப் போகலாம், வா''என்றனர்.



""நான் ஏன் நரகத்திற்கு வர வேண்டும் ?? சொர்க்கத்தில் நாராயணனையும், சிவனையும் நேரில் தரிசித்துவிட்ட புண்ணியத்தை அடைந்துள்ள நான் எப்படிப் பாவியாவேன் ?'' என்றான்.



""ஆம் ! அவன் பாவியல்ல !'' என்று கூறியபடி சிவகணங்கள் அவனை எம தூதர்களிடமிருந்து மீட்டு சிவலோகம் அழைத்துச் சென்றன.



-



* நினைப்பும் நடப்பும்



அரசன் அளித்த விருந்தில் கலந்து கொண்ட ஒரு பெரிய மனிதரின் வைர மோதிரத்தைக் காணவில்லை. அவர் தன் அருகில் அமர்ந்திருந்த துறவியின் மீது சந்தேகப்பட்டு, அரசனிடம் முறையிட்டார்.



அதற்குள் உண்மையில் மோதிரத்தைத் திருடியவனைப் பிடித்து விட்டனர். உடனே பெரிய மனிதர் துறவியிடம் மன்னிப்பு கோரினார்.



அதற்குத் துறவி, ""பரவாயில்லை. நான் உங்களை ஒரு பெரிய மனிதன் என நினைத்தேன். நீங்கள் என்னைத் திருடன் என நினைத்தீர்கள். இருவர் நினைப்பும் தவறு எனத் தெரிகிறது''என்றார்.








* கடவுளின் சித்தம்



துறவியார் ஒருவர் கடும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருடைய அபிமானிகளில் ஒருவர், ""கடவுள் ஏன் இந்தக் கொடுமை நோயை உங்களுக்குக் கொடுத்தார் ?'' என்று வினவினார். அதற்கு அவர், "" உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான துறவிகள் உள்ளனர். அதில் நம் நாட்டில் உள்ள துறவிகள் பலரில், என் சேவையை மெச்சி பல அன்பர்கள் பாராட்டினார்கள். அப்போதெல்லாம் நான், ""கடவுளே !!! என்னைப் போலப் போல பலர் சேவை செய்கிறார்களே ! அவர்களை எல்லாம் விட்டுவிட்டு என்னை மட்டும் பாராட்டும் நிலையில் ஏன் தேர்ந்தெடுத்தாய் ? என்று நான் கேட்டதில்லையே ? அப்படியிருக்க கடும் நோய்வாய்பட்டு வலியால் துடிக்கும் போது மட்டும் கடவுளிடம், ""ஏன் எனக்கு மட்டும் இந்த நோயைக் கொடுத்தாய் ? என்று எப்படி நான் கேட்க முடியும் ?''என்றார்.








* கொடுக்கல் - வாங்கல்



ஒரு கஞ்சன் ஆற்றில் விழுந்து வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தான். அதைக் கவனித்த கரையில் நின்ற ஒருவர், ""உன் கையை இப்படிக் கொண்டா. உன்னைப் பிடித்து இழுத்து கரையிலே சேர்க்கிறேன்'' என்று கத்தினார்.



எதையும் கொடுத்துப் பழக்கமில்லாத அந்தக் கஞ்சன், கையைக் கொடுக்க மாட்டேன் என்று தலையாட்டினான் .



அப்போது அங்கிருந்த துறவி ஒருவர், அவனிடம் ""இந்தா, என் கையைத் தருகிறேன். பிடித்துக்கொள் !'' என்று கத்தினார். உடனே கஞ்சன் துறவியின் கையைப் பிடித்துக் கொண்டு கரை சேர்ந்தான்.






* கோயிலுக்குச் செல்வது ஏன் ?



குருநாதர் ஒருவர் தன் சீடர்களுக்கு அறிவுரைக் கூறிக் கொண்டிருந்தார். அப்போது, ஒரு சீடர், எனக்கு ஒரு சந்தேகம் ! தெய்வப்படங்கள், விக்ரகங்களை நம் வீட்டில் வைத்து பூஜை செய்து வழிபடுகிறோம். அப்புறம் எதற்காகக் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும் ?'' என்று கேட்டான்.



""குடிக்கக் கொஞ்சம் நீர் கொண்டு வா'' என்றார், சீடனிடம். உடனே, சீடன் குவளையில் நீர் கொண்டு வந்து கொடுத்தான். "" சீடனே, நான் உன்னிடம் கேட்டது நீர். ஆனால், அதை ஏன் குவளையில் தருகிறாய்'' ?? என்றார்.



"" சுவாமி, தண்ணீரைக் கையிலா எடுத்துவர முடியும் ? அதை என் கையில் ஏந்தி வந்தால், அது கீழே சிந்தி விடாதா ?'' என்று வியப்புடன் கேட்டான்.



"" சீடனே, நம் மனமே ஒரு கோயில். நம் வீட்டில் இருந்து கொண்டே மனத்தைக் கட்டுப்படுத்தி இறைவனை எவ்வளவு துதித்தாலும், குரங்குபோல் மனம் திடீர் திடீர் என்று பல விஷயங்களுக்குத் தாவி விடும். அது நம் கையில் ஏந்தி வரும் தண்ணீருக்குச் சமம். அதே நேரம், அமைதியான தலங்களுக்கு நாம் சென்று வழிபடும் போது அலைபாயும் மனம் ஒருநிலைப்படும். அது குவளை தண்ணீருக்குச் சமம். என்ன ? உன் கேள்விக்கான விடையைத் தெரிந்து கொண்டாயா ? '' என்று கூறினார் குருநாதர். சீடனுக்குத் தெளிவு பிறந்தது.

நன்றி.;குமுதம் பக்தி ஸ்பெஷல்

No comments: