Bhoo thatha's Blogspot

Search my older Blog

Saturday, November 21, 2009

what is grief?

துன்பம் என்ன தொடர்கதையா?
ஆங்கிலத்தில் Joy, pleasure, bliss என மூன்று வார்த்தைகள் உண்டு. இவற்றை களிப்பு, மகிழ்ச்சி, ஆனந்தம் (நிறை நிலை) என தமிழ்ப்படுத்தலாம். களிப்பு(Joy) என்பது முழுவதும் உடல் சார்ந்த இன்ப அனுபவம்! இதனால்தான் மகாகவி, 'வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்' என்கிறார். மகிழ்ச்சி (pleasure) - மனம் சார்ந்தது; மனமகிழ்ச்சி எனும் சொல்லாடலே இதன் சாட்சி! இவையிரண்டும் கடந்த ஆனந்தமே ஆத்மநிலை! உடல் களிப்பு, உள்ள மகிழ்ச்சி என்பவை எல்லைக்கு உட்பட்டவை; தற்காலிகமானவை! ஆனால் ஆத்மாவின் ஆனந்த நிலை அழிவில்லாதது. ஏனெனில், அழிவில்லாதது ஆத்மா! இன்னும் தெளிவுறச் சொல்வதானால், உடல்- மனம் இரண்டையும் கடந்த நிலையே ஆத்மாவின் ஆனந்த நிலை! சரீர சிரமம், மன துக்கம் - இந்த இரண்டையும் கடந்த ஞானிகளுக்கு தீட்சா நாமம் வழங்கும் போது, அவர்கள் ஆத்மானந்தம் அடைந்ததைக் குறிக்கவே, விவேகானந்தர், சின்மயானந்தர், சித்பவானந்தர் என்று ஆனந்தா என முடியும் நாமத்தைச் சூட்டுகின்றனர்.
மனதையே கடந்து செல்லும் இந்த உன்னத நிலையை அடைவது சுலபமில்லை. எனில், மனம் ஏற்படுத்தும் துக்கத்தில் இருந்து விடுபட வழியே இல்லையா? இருக்கிறது. பிராணன் எனப் படும் சுவாசத்தில்தான் மன துக்கங்களில் இருந்து விடுபடும் சூட்சுமம் அடங்கி இருக்கிறது.


''அம்மா எனக்கு எப்பம்மா ஜுரம் வரும்?'' - பரிதாபமாகக் கேட்டது ஐந்து வயதுக் குழந்தை. இதைக் கேட்டு பதறிய தாயார், ''ஏன்.. இப்படிக் கேக்கறே?'' என்றாள். உடனே அந்தக் குழந்தை, ''ஜுரம் வந்தாதான் என்கூடவே இருக்கே நீ?! சாப்பாடு ஊட்டி விடுறே. மத்த நேரத்துல என்னைக் கொஞ்சவும் மாட்டேங்கிறே; அடிக்கறே'' என்று கண்கலங்கச் சொன்னதாம்!
பரபரப்பு மிகுந்த வாழ்க்கை முறையில், வீடுகள் பெரிதாகவும் குடும்பங்கள் சிறிதாகவும் ஆகிவிட்டன. அன்பு காட்டக்கூட நேரம் இல்லாமல், வாழ்க்கையை பணம் தின்னுகிறது. மிச்ச சொச்ச நேரத்தை, நிழல் சோகங்களான தொலைக்காட்சித் தொடர்கள் சுரண்டிக் கொள்கின்றன. அன்புக்கு ஏங்கும் குழந்தை, தனக்கு துன்பம் நேர்ந்தால் மட்டுமே அம்மாவின் குளிர்ச்சி கிடைக்கும் என்பதால் ஜுரத்துக்கு ஏங்குகிறது. குழந்தையானது, துன்பத்தை யாசிக்கிறது; பூசிக்கிறது; தனக்கு எப்போது துன்பம் வரும் என எதிர்பார்க்கிறது; மொத்தத்தில் கடவுளிடம் துன்ப வரம் கேட்கிறது குழந்தை என்பதை உணருங்கள்!
திருமணத்துக்கு முன், ஒரு நாளில் நூறு முறை அலைபேசி வழியே அழைத்து ஈரம் கசியும் காதலன், திருமணத்துக்குப் பிறகு மனைவியின் நூறு அழைப்புக்கு ஒருமுறை மட்டுமே சிக்குகிறான். மற்ற வேளைகளில், 'வாடிக்கையாளர், தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கிறார்' என்று எந்திரப் பொருள் மந்திரம் போல் உண்மை பேசுகிறது! ஆனாலும் மனைவிக்கு அடிபட்டு விட்டால், கணவன்மார்களின் கவனம் மனைவியின் பக்கம் திரும்பும். 'கால்கட்டு' போட்டவனது கவனத்தைத் திருப்ப, அடிபட்டு கால்கட்டு போட வேண்டியிருக்கிறது.
உதாரணம்... சிலப்பதிகாரம்! பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன், சபையில் ஆட்டக்காரியின் அழகில் தடுமாறினான். உடனே கோப்பெருந்தேவி, தலை வலி என எழுந்து சென்றாள். மணாளனின் கவனத்தை தன் பக்கம் திருப்ப வேறு வழி தெரியவில்லை அவளுக்கு! எப்படியோ... துன்பத்துக்கு பூரண கும்ப மரியாதை செய்து வரவேற்கின்றனர் மனிதர்கள்!
அவசரம் அவசரமாக வந்த பெண்மணி, ''டாக்டர் டாக்டர்... எனக்கு எதுனா ஒரு ஆபரேஷனை உடனே பண்ணுங்களேன்'' என்றாள். குழம்பிய டாக்டர், ''நல்லாத்தானே இருக்கீங்க. எதுக்கு ஆபரேஷன்?'' என்று கேட்க... ''எங்க லேடீஸ் கிளப் தலைவிக்கு பை பாஸ் ஆபரேஷன்; செகரட்டரிக்கு அப்பன்டிசிடிஸ்; பொருளாளருக்கு டான்சில்ஸ். இப்படி ஆளாளுக்கு ஆபரேஷன் நடக்கும்போது, எனக்கும் எதுனா பண்ணினாதானே கௌரவமா இருக்கும்?'' என்றாளாம்.
மனிதர்கள், ஆழ்மனதில் துன்பங்களை நேசிக் கின்றனர். அப்படி துன்பம் நேரும் போது, சமூகத்தின் கவனம் தன் பக்கம் திரும்புகிறது; தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது; காதலி அல்லது மனைவியைக்கூட கவர முடிகிறது என கண்டுபிடித் திருக்கின்றனர்!
சாலை விதிகளின்படி சரியாகச் சென்ற காரின் குறுக்கே, சாலை விதிகளை மதிக்காமல் பாய்ந்த சைக்கிளானது, காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்துச் சேதம் விளைவிக்க... சைக்கிள் நபர் கீழே விழுந்தார். லேசான காயம்! சரியாக ஓட்டிய கார்க்காரரை சமூகம் சும்மா விடுகிறதா? சரமாரியாக திட்டத்தானே செய்கிறது?! யார் சரி... யார் தவறு என்பது குறித்தெல்லாம் சமூகத்துக்கு என்ன அக்கறை? அடிபட்டவன் மீது பரிதாபம்; அவ்வளவுதான் காரணம்! தவறு செய்தவன், காயத்தில் லேசாகத் துடித்தால் கொஞ்சமாகவும், அதிகம் துடித்து அலறினால், அதிகமாகவும் இரக்கம் காட்டுகிற சமூகம் இது! ஆகவே, சமூகத்தின் இரக்கத்தைப் பெற வேண்டும் எனில், நாம் அதிகம் துன்பப்பட வேண்டும். இதுவொரு எழுதப்படாத விதி!
'பழுத்த' குற்றவாளி மீது நீதித்துறை பிடிவாரண்ட் பிறப்பித்தால், உடனே அவருக்கு நெஞ்சுவலி வந்து விடுகிறது. ஸ்ட்ரெச்சரில் நீதிமன்றம் வருவார். இனி, இரக்கம் காட்டாமல் இருக்க முடியாதே!
துன்பப்பட்டால்தான் உதவி, பணம், இரக்கம் ஆகியவற்றை பிறரிடம் இருந்து பெற முடியும் என்று கண்டுபிடித்து விட்டதால், பலரும் துன்பத்தை விரட்ட மனமின்றி உள்ளனர்; சோகத்தை விதைபோட்டு விளைவிக்கின்றனர்.
சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளிடம் பிச்சை எடுப்பவர்களை கவனித்திருக்கிறீர்களா? உங்களுக்கு அருகில் வந்ததும் முகத்தை இன்னும் சோகமாக வைத்துக் கொள்வார்கள்; கையில் உள்ள குழந்தையை எவருக்கும் தெரியாமல் கிள்ளிவிடுவார்கள். அப்போதுதான் நம்மிடம் இருந்து அதிக காசைப் பெற முடியும். அதாவது, சோகம் - மூலதனம்; இரக்கம் - லாபகரமான சிறு தொழில்! கூட்டிக் கழித்துப் பார்த்தால், நம்மில் பலரும் துன்பத்தில் ஏகப்பட்ட முதலீடு செய்கின்றனர்; வருத்தம், வட்டி போல் வருவதற்கு வழி வகுத்துள்ளனர்.
பிறரது கவனம், இரக்கம் மற்றும் அனுதாபம் தேவை இல்லை எனும் உன்னத நிலை எவருக்கு உள்ளதோ, அவர்களே துன்பங்களை உதறுகின்றனர்; துயரத்தில் இருந்து விடுதலை அடைகின்றனர். மற்றபடி பலருக்கும் இங்கே, துன்பத்துடன் ஒரு கள்ளக் காதல் இருக்கிறது.
எதை விரும்புகிறோமோ அது நம்மை வந்தடையும். எதற்காக ஏங்குகிறோமோ அதை இந்த பிரபஞ்சம் வாரி வழங்கும். நிஜமாகவே ஆனந்தமாக வாழ விரும்புகிறவர்கள், தங்கள் ஆழ்மனதின் அழுகல் குப்பைகளை அப்புறப்படுத்தத் துணிய வேண்டும். இதற்கு அசாத்திய துணிச்சல் தேவை. கோழைகள் ஒருபோதும் ஆனந்தம் அடைய முடியாது.
நண்பர் ஒருவர்... அடுக்கடுக்காக நிறைய ஃபைல்கள் வைத்திருப்பார். மருத்துவர்கள் பலர் எழுதிக் கொடுத்த மருந்துப் பட்டியல்; பரிசோதனைக் கூடத்தின் ஆய்வு முடிவுகள்; எக்ஸ்ரே, ஸ்கேன்... என்று கணக்கில் அடங்காதவற்றை அடுக்கி வைத்திருப்பார். சித்தா, அலோபதி, ஹோமியோபதி என மருந்துக் குவியலே அவரிடம் இருக்கும்.
'என்னாச்சு உடம்புக்கு? டாக்டருங்க என்ன சொல்றாங்க?' என்று கேட்டால், 'யாருக்கும் எதுவும் தெரியலை. எல்லாரும் யூஸ்லெஸ்' என்று தீர்ப்பு கொடுப்பார். 'உங்களுக்கு எந்த நோயும் இல்லை' என்று மருத்துவர்கள் சொல்வதைக் கேட்காமல், 'இவர்களுக்கு கண்டறியும் திறன் இல்லை' என்று குற்றம் சாட்டுவார். 'உடம்புல ஏதோ பெரீய்ய வியாதி இருக்கு' என்று ஆணித்தரமாக நம்புவார். இவரை எப்படிக் காப்பாற்ற முடியும்?
எச்.ஜி. வெல்ஸ் எழுதிய அழகான கதை ஒன்று! ரயிலில் இவர் பயணித்த போது, அருகில் அமர்ந்து கொள்கிறான் ஒருவன். அவன் முகத்தில் அப்படியரு சோகம்; அவனிடம், ''உங்களுக்கு என்ன சிரமம்?'' என்று வெல்ஸ் ஆறுதலாகக் கேட்க... கொட்டித் தீர்த்தான் அவன்!
''என் மனைவி பைத்தியம். தன்னை கோழியாவே நினைச்சுக்கிட்டு... எப்ப பாத்தாலும் 'கக்கக்'னு ஒரே சத்தம்தான்! சாப்பிடும்போதுகூட, கோழி மாதிரியே கொத்திதான் சாப்பிடுறா. 24 மணி நேரமும் அவளோட 'கக்கக்' சத்தம் கேட்குது. இத எங்கே போய்ச் சொல்றது?'' என்று கண்ணீர் விட்டான்.
''அட... இதுவொரு சின்னப் பிரச்னை. மனநல மருத்துவரைப் பாத்தா குணப்படுத்திடலாம். 'நீ கோழி இல்ல... லேடி'ன்னு புரியவெச்சிருவார் டாக்டர்'' என்று வெல்ஸ் சொல்ல... அவன் சொன்னான்: ''நீங்க சொன்ன படி பைத்தியத்தை சரி செய்துடலாம்; ஆனா, எனக்கு முட்டை கிடைக்காதே'' என்றானாம்! நீங்களே சொல்லுங்கள்... கணவன் - மனைவி இருவரில் யார் பைத்தியம்?
எந்தப் பைத்தியமும் தன்னை பைத்தியம் என ஒப்புக் கொள்வதில்லை. இதுவொரு சிக்கலான நிலைதான்! பைத்தியம் எனும் நிலை எப்போது தெளியும் தெரியுமா? 'நான்தான் பைத்தியமாக இருக்கிறேன்' என ஒருவர் உணரும் போதுதான்! அதுவரை, பிறரையே குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம்!
துன்பம்- பிறரிடம் இருந்து நம்மை வந்தடைவதாக நினைக்கிறோம். உண்மையில், நம் ஆழ்மனத்தின் பிரதிபலிப்பே துன்பம்! நம்மிடம் இருந்து வெளியே சென்று, பிறகு நம்மிடமே திரும்பி வருகிறது.
தம்பதிக்குள் கடும் சண்டை! ''என் எல்லா கஷ்டங் களுக்கும் நீதான் காரணம்'' என்றான் கணவன். மனைவி, ''நானா காதலிச்சேன்? நீங்கதானே துரத்தித் துரத்தி வந்து லவ் பண்ணி கல்யாணமும் பண்ணிகிட்டீங்க'' என்றாள். திகைத்த கணவன், ''அது சரி... எந்த எலிப்பொறியும் எலியைத் துரத்துவதில்லை. எலிதான் ஓடிப்போய் பொறியில் சிக்கிக் கொள்கிறது'' என்று அசடுவழிந்தான்.
இப்படித்தான் துன்பமும்! அது நம்மை ஒருபோதும் துரத்துவதில்லை. நாம்தான் வலியச் சென்று துன்பத்தில் சிக்கிக் கொள்கிறோம். இனி, துன்பத்தை வெளியேற்றும் வழி என்ன என்பதில்தான் ஆனந்தம் அடங்கியுள்ளது!

நன்றி;சக்தி விகடன் 

No comments: