Bhoo thatha's Blogspot

Search my older Blog

Saturday, November 21, 2009

'பகவான் நாராயணர், எத்தனையோ அவதாரங்களை நிகழ்த்தினாலும் அவற்றில் மனித சமூகத்துக்கான வாழ்வியல் கோட்பாடுகளை தெள்ளத் தெளிவாக விளக்கியது ஸ்ரீராமாவதாரம்! தாய்-தந்தை, சகோதரர்கள், மனைவி எனும் உறவுகளுடன் நண்பன், எதிரி, நலம்விரும்பி... எனும் கட்டமைப்பைக் கொண்டது நம் வாழ்க்கை!
தந்தையின் மீது பக்தி செலுத்த வேண்டும் என்பதை, ஸ்ரீராமனை விடவா ஒருவர் வலியுறுத்த முடியும்? மனைவி சீதாதேவியை மதித்து நடந்தார்; சகோதரன் பரதன் நாடாளுவதால், கலங்கவில்லை; வருத்தப்படவில்லை; வயிற்றெரிச்சல் கொள்ளவில்லை. சுக்ரீவனை நண்பனாக ஏற்றுக்கொண்டார்! தனது வெல் விஷர்... நலம்விரும்பி ஆஞ்சநேயருக்கு மனதில் உன்னத இடம் தந்து கௌரவித்தார். எதிரியின் கூடாரத்தைச் சேர்ந்த விபீஷணனுக்கு சரணாகதி அளித்து அருளினார்! இத்தனை விஷயங்களும் எப்போது நிகழ்ந்தன என்பதை கவனித்தால்... இவை அனைத்தும் கஷ்டம், கஷ்டம், கஷ்டம்... என கொடுமைகள் பலவற்றை அனுபவித்த வேளையில் நிகழ்ந்தன! அதாவது கஷ்ட காலத்தில்கூட மனிதனானவன், தர்மம், அன்பு, கருணை, அரவணைத்தல், தியாகம் ஆகிய நிலைகளில் இருந்து மாறக்கூடாது என வலியுறுத்தி வாழ்ந்தவர் ஸ்ரீராமபிரான்.
சரி... இத்தனை கஷ்டத்துக்கு நடுவிலும், நெறி பிறழாமல் இருந்தால் என்ன கிடைக்கும்?
பதவி இருந்தும் கர்வம் தலைதூக்கவில்லை தசரதருக்கு! 'ஸ்ரீராமருக்கு பட்டாபிஷேகம் நடத்தலாமா?' என சபையைக் கூட்டி தேச மக்களுக்கு மதிப்பு தந்த தந்தை உசத்திதானே? சொத்து -சுகம், மனைவி என இருந்தும், அண்ணனுக்காக வனவாசம் வந்த ஸ்ரீலட்சுமணர்; ராமர் பாதுகையை வைத்து ஆட்சி செய்த ஸ்ரீபரதன் என்று சகோதரர்கள் சும்மா கிடைத்து விடுவார்களா? ஐஸ்வர்யம், பக்தி, வீரம், ஆவேசம், ஆசை என்று அலட்டிக்கொண்ட ராவணனைப் பார்த்து சீதாதேவி மயங்கவும் இல்லை; பயந்து நடுங்கவும் இல்லை! முக்கியமாக, கணவன் மீட்பான் என்பதில் உறுதியாக இருந்தாள்.
சின்ன பதவி கிடைத்தால்கூட அகங்காரமும் ஆணவமும் தலைதூக்குகிற உலகம் இது! 'நான் ஸ்ரீராமபிரானின் நலம்விரும்பி; சீதையை மீட்க உதவினேன்; எப்படி பாலம் கட்டினேன் தெரியுமா? சஞ்சீவி மலையை எத்தனை லாகவமாக தூக்கி வந்தேன் தெரியுமா?' என்றெல்லாம் அலட்டிக் கொள்ளாத அணுக்கத் தொண்டன்
ஆஞ்சநேயன் எவருக்கேனும் கிடைப்பானா?
நாம் எப்படி இருக்கிறோமோ... அதை அப்படியே பிரதிபலிக்கும் கண்ணாடி! சக மனிதர்களும் இப்படித்தான்! எதைக் கொடுக்கிறோமோ அதுவே கிடைக்கும்! ஸ்ரீராமாயணத்தை இன்றைய இளைஞர்கள் வாசித்தால், ஸ்ரீராமனை நேசிக்கவும் செய்வார்கள்; ரோல்மாடலாக்கி, வாழ்வில் உயரவும் செய்வார்கள்

nandri; sakthi vikatan

No comments: