Bhoo thatha's Blogspot

Search my older Blog

Monday, November 9, 2009

படித்ததில் பிடித்தது

ஐப்பசி மாதம் வரும் பௌர்ணமி அன்று சிவன் கோவில்களில் அன்னத்தால் சிவனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. மூட்டைக் கணக்கில் அரிசியைச் சாதமாக வடித்து, கோவிலில் சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்து, அதனை ஏழைகளுக்கு விநியோகம் செய்வார்கள்.
அபிஷேகத்திற்கு என்று சந்தனம், நல்லெண்ணெய், பன்னீர் என்று பல பொருட்கள் இருக்க, அன்னாபிஷேகத்தில் என்ன விசேஷம்?

மனித வாழ்வின் ரகசியமே இதில்தான் அடங்கியிருக்கிறது

. மனிதனை இயக்குகின்ற சக்தியின் நிலைக் களனாய் விளங்குவது உணவு. மனிதனின் பிராணனோடும் தொடர்பு உடையது
அன்னம். அதனால்தான் 'அன்னமயா பிராணமயா' என்ற சொற்றொடர் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அதுமட்டும் அல்ல. அன்னம் இறைவனின் ரூபமாகவே கருதப்படுகிறது என்பதை "அன்னம் பரப்பிரம்ம சொரூபம்" என்ற பழமொழி மூலம் உணர்ந்து கொள்ளலாம்.
அதிகப்பசி இருக்கும் போது நாம், "பசி பிராணன் போகிறது" என்று சொல்வது உண்டு. உயிர் சக்தியைத் தருவது அன்னம்.
அதனால்தான் தானத்தில் சிறந்த தானமாகக் கருதப்படுவது அன்னதானம்.

உலகில் உள்ள உயிர்கள் அனைத்திற்கும், அவரவர்க்கு ஏற்றபடி உணவுப் பங்கீட்டு முறையை சரிவர அளிப்பவர், இறைவன். உணவு என்று வரும் போது அதனை அளிப்பவள் அன்னை. அதனால்தான் காசி மாநகரில், உலகைக் காக்கும் பொருட்டு, அன்னை அன்னத்தை அளிக்கும் அன்னபூரணியாக அருள் பாலிக்கிறாள். ஆம்! நாம் தாயின் வயிற்றில் இருக்கும் போதே நமக்கு உணவு வேண்டும் என்பதற்காகவே தொப்புள் கொடி மூலம் நமக்கு உணவு அனுப்பி வைக்கப்படுகிறது! அது மட்டும் அல்ல. பசி என்பது அனைவருக்கும் உரியது. எவ்வளவுதான் பணம் படைத்தவர்களாய் இருந்தாலும், அவர்களும் பசி வரும் நேரம் உணவைத்தான் தேடிச் செல்கின்றனர்.

மனிதன் விதவிதமான உணவு வகைகளை உண்டு வந்தாலும், அவனுக்கு அலுக்காத உணவு அன்னம். வருடம் 365 நாட்களும் மனிதன் அன்னத்தைத்தான் உண்கிறான். வளரும் குழந்தை முதல் தடவை அன்னம் உண்பதையே, அன்னப்பிராசனம் என்று விழாவாகக் கொண்டாடுவது இன்றளவும் உள்ளது. எவ்வளவுதான் மனிதன் அரிசி மூட்டையை வாங்கி அடுக்கி வைத்தாலும், அதை உண்பதற்கும் மனிதனுக்கு ஒரு பாக்கியம் வேண்டும். எனவேதான் பதினாறு வகைப் பேறில் ஒன்றாகக் கருதப்படுவது உணவு. அதிலும் நம் பெயர் எழுதப்பட்டிருந்தாலே கிடைக்கும். பல நேரங்களில் நாம் நினைத்த படி உண்ண முடிகிறது. சில நேரங்களில் நோய் வாய்ப்படுதல், ஆரோக்கியக் குறைவு ஆகிவற்றின் காரணமாக உண்ண முடிவதில்லை. அது போன்ற நேரங்களில், வீட்டில் உள்ள முதியவர்கள், "சாப்பாட்டில் இன்று உன் பெயர் எழுதப்படவில்லை" என்று சொல்வார்கள்.

அதுமட்டும் அல்ல. மனத்துக்கும் வயிற்றிற்கும் நிறைவைத் தரக் கூடியது உணவு ஒன்றே. மேலும் மனிதன் "போதும்" என்று சொல்வது உணவுக்கு மட்டுமே! இத்தருணத்தில் ஒரு விஷயத்தை இங்கு சொல்லியே ஆக வேண்டும். விழா, விருந்து என்று செல்லும் இடங்களில் நம்மில் பலர் உணவுப் பண்டத்தை வீணடிக்கிறோம். உலகமே உணவுக்காக உழைத்துக் கொண்டிருக்கையில், கிடைக்கும் உணவை வீணடிப்பது மிகப் பெரிய குற்றமல்லவா?

இனியாகிலும், உணவுப் பண்டத்தை வீணடிக்காமல் இருப்பது என்பதைக் கடைபிடித்தால், அது யாரேனும் ஒருவரின் பசியைத் தீர்க்கும் அமுதாகிவிடும். ஒவ்வொரு வேளை உணவு உண்ணும் போது நினைத்துக் கொள்ளுங்கள். "நாமெல்லாம் பாக்கியவான்கள்" என்று! ஏனெனில் இறையருள் இருந்தாலே அன்னம் கிடைக்கும் எனபதை திருநாவுக்கரசர்,

"அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம் பாலிக்கும்; மேலும் இப்பூமிசை
என் அன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புற
இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே"

என்று அழகாகப் பாடுகிறார். எனவே நமக்கு கிடைக்கும் உணவை வீணடிக்காமல் பிறருடன் பகிர்ந்துண்போம்! வயிறோடு மனமும் நிறைந்து விடும்!

நன்றி சென்னை ஆன்லைன்

No comments: