ஸ்ரீ கண்ணிநுண்சிறுத்தாம்பு – எளிய முறை விளக்கம்:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:ஸ்ரீமத் வரவர முநயே நம:
ஸ்ரீ பாலதந்வி மஹா குரவே நம:
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார்:
இந்த பகுதி தொடக்கமாக ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அருளிச் செய்த கண்ணிநுண்சிறுத்தாம்பு என்னும் பிரபந்தத்தின் அர்த்தங்களை ச்வீகரிப்போம். திவ்ய பிரபந்தங்களுக்கு நம் பூருவர்கள் ஆச்சர்யமான வ்யாக்யானங்களை அருளிச் செய்துள்ளனர். அடியேனுக்கு புரிந்த மற்றும் தெரிந்த அளவில் இந்த இணையதளத்தில் எழுதுகிறேன். பெரியோர்கள் குறை இருந்தால் அடியேனை திருத்திப் பணிகொள்ளப் பிரார்த்திக்கிறேன்.
முதலில் ஆழ்வாரின் திவ்ய சரித்திரத்தைச் சுருக்கமாக எழுதுகிறேன்.
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் ஈஸ்வர வருடம், சித்திரை மாதம், சுக்ல பக்ஷ சதுர்த்தசி திதியில் சித்திரை நக்ஷத்ரம் அன்று திருக்கோளூர் என்னும் திவ்யதேசத்தில் வைநதேயத்தின் அம்சமாக திருவவதாரம் செய்தருளினார். ஆழ்வார் ஞான பக்தி வைராக்யங்கள் நிரம்பப் பெற்றவர். இவர் அருளிச் செய்த திவ்ய பிரபந்தம் கண்ணிநுண்சிறுத்தாம்பு ஆகும். பாகவத பக்தியும், ஆசார்ய பக்தியும் நிறைந்து காணப்படும் பிரபந்தம். தம் ஆசார்யனான ஸ்ரீ நம்மாழ்வாரையே தமக்கு எல்லாமாகக் கொண்டாடுகிறார்.
சுவாமி அருளிச்செய்த பதினோரு பாசுரங்களால் அந்த பக்திச் சுவையின் ஆனந்தத்தையும், ஆசார்யன் திருவடி கைங்கர்யமே மிகவும் சிறந்தது போன்ற விசேஷ அர்த்தங்களை எல்லாம் பிரசாதித்து அருளியுள்ளார். அப்ப்ரபந்தத்தின் அர்த்தங்களை முதலில் சுருக்கமாகக் காண்போம். பிறகு பாசுர அர்த்தம் பார்க்கலாம்.
சுருக்கமான பாசுரார்த்தம்:
இப்பிரபந்தத்தில் பதினோரு பாசுரங்களைக் கொண்டது என்று முன்பே பார்த்தோம். அனைத்து பாசுரங்களும் அவருடைய எம்பெருமானைக் குறித்த பாசுரமாகும். அவருடைய எம்பெருமான் ஸ்ரீ நம்மாழ்வார் ஆவார். ஆச்சார்ய பக்தியின் பெருமை, ஆச்சார்யனின் பெருமை(அடைந்தவர்கட்கெல்லாம் அன்பன் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்), பாகவத பக்தியின் ஏற்றம்(தேவு மற்றறியேன் குருகூர் நம்பி), ஆச்சார்யனின் பெரிய உபகாரம்(செயல் நன்றாக திருத்திப் பணிகொள்வான்) ஆகியவைகளை நன்கு புரியும் படி தமிழ்ப் பாசுரமாக மங்களாசாசனம் பண்ணுகிறார். இக்கருத்தை நம் பூருவர்களும், பிரதமாசார்யாரான எம்பெருமானும் பல இடங்களில் காட்டி உள்ளனர். சுருக்கமாகச் சொன்னால் பாகவதப் ப்ராப்தியே பரமப் ப்ரோயோஜனமாகக் கொண்டார் ஆழ்வார்.
முதல் பாசுரம்:
கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என்னப்பனில்
நண்ணித் தென்குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என்னாவுக்கே
விளக்கம்:
ஞானியின் நினைவிலே எப்போதும் எம்பெருமானின் நினைவு இருக்குமாப்போலே, ஸ்ரீ மதுரகவிகளின் நினைவில் எப்போதும் ஸ்ரீ நம்மாழ்வாரையே நினைத்துக்கொண்டிருப்பாராம். அதனாலேயே ஸ்ரீ நம்மாழ்வாருக்கு உகப்பான விஷயமான ஸ்ரீ கிருஷ்ணா அவதாரத்தை அனுபவித்து, அவவனுபவத்தைக் காட்டிலும் ஸ்ரீ நம்மாழ்வாரின் திவ்ய நாமங்களைச் சொன்னால் நாவில் அமுது ஊறிக்கொண்டே இருக்கும் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.
இரண்டாம் பாசுரம்:
நாவினால் நவிற்று இன்பமெய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே
தேவுமற்றறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே
விளக்கம்:
நாம் சொல்லும் ஒரு சொல்லினால் ஏற்படும் கர்மங்களைத் தொலைக்க எத்தனையோ பிறப்புகள் வேண்டியிருக்க, ஸ்ரீ மதுரகவிகளோ சுவாமி நம்மாழ்வாரின் திருவடிகளைப் பற்றி(தேவு மற்றறியேன் குருகூர் நம்பி) அவர் திருநாமத்தைச் சொன்னாலே போதும், அதுவே ஸ்ரீ நம்மாழ்வார் பெற்ற பேற்றை பெற்றுத்தரும் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார். இதனாலேயே அவருடைய திவ்ய பாசுரங்களைப் பாடிக்கொண்டு எங்கும் திரிவேன் என்கிறார் ஸ்ரீ மதுரகவிகள்.
மூன்றாம் பாசுரம்:
திரிதந்தாகிலும் * தேவ பிரானுடை*
கரிய கோலத்* திரு உருக் காண்பான் நான்*
பெரிய வண்குருகூர்* நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய்* அடியேன் பெற்ற நன்மையே*
மூன்றாம் பாசுர விளக்கம்:
திரிகை என்பதற்கு மீண்டு வருதல் என்று பொருள். அப்படி அவர் சுவாமி நம்மாழ்வாரிடம் இருந்து மீண்டு வந்தாலும் அவருடைய சம்பந்தத்தால் மதுரகவிகளுக்கு கிடைக்கக் கூடிய இடமோ நித்ய சூரிகள் வசிக்கும் இடமான திருப்பரமபதம் ஆகும். எம்பெருமானை அடைந்த பின் திரும்பி வருவது என்பது கிடையாது(நச புனராவர்ததே). அத்தகைய பலன் ஆழ்வாருடைய திருவடியால் சரண் புகுந்ததால் இவருக்குக் கிடைத்தது. எம்பெருமானின் திவ்ய மங்கள திருமேனியின் அழகையும் சேவிக்கக் கிடைத்தது.
இந்த பாசுரத்தில் பெரிய வண்குருகூர் என்னும் சொல்லை சற்று ஆராய வேணும்: காருண்யமே வடிவெடுத்தவனான எம்பெருமான் ஸ்ரீ நம்மாழ்வாருக்கு மட்டும் மயர்வற மதிநலம் அருளினான். ஆனால் ஸ்வாமி நம்மாழ்வாரோ எல்லா உயிர்க்கும் மயர்வற மதிநலம் அருளினார். நம்மாழ்வாரைத் தந்த ஊர் என்பதாலும், பல மகாசார்யர்கள் தோன்றிய ஊர் என்பதாலும் இங்கு பெரிய வண்குருகூர் வான் சடபோகன் என்று அருளிச் செய்வதாக நம் பூருவர்கள் திருவாக்கு.
நான்காம் பாசுரம்:
நன்மையால் மிக்க* நான்மறையாளர்கள்*
புன்மையாகக்* கருதுவர் ஆதலின்*
அன்னையாய் அத்தனாய்* என்னை ஆண்டிடும்
தன்மையான்* சடகோபன் என் நம்பியே*
நான்காம் பாசுர விளக்கம்:
மிக உயர்ந்த குணங்களையும், வேதத்தைச் சொல்லிக்கொண்டும் நித்ய வாழ்க்கையைக் கழிப்பவர்களே நான்மறையாளர்களான அந்தணர்கள். அப்படிப் பட்ட அந்தணர்கள் இவரைப் புன்மையே வடிவெடுத்தவர் என்று கருதினாலும், ஸ்ரீ நம்மாழ்வாரே தமக்கு எல்லா வித உறவும் என்கிறார் இந்தப் பாசுரத்தில். இப்படி தம்மைப் போன்ற தாழ்ந்தவரையும் உயர்த்தும் தன்மை ஸ்ரீ நம்மாழ்வாருக்கு உண்டு என்பதைச் சொல்லி அவருடைய குணப் பூர்த்தியை பாடுகிறார் இந்த பாசுரத்தில்.
ஐந்தாம் பாசுரம்:
நம்பினேன்* பிறர் நன்பொருள் தன்னையும்*
நம்பினேன்* மடவாரையும் முன்னெலாம்*
செம்பொன் மாடத்* திருக்குருகூர் நம்பிக்கு
அன்பனாய்* அடியேன் சதிர்த்தேன் இன்றே*
விளக்கம்:
இந்தப் பாசுரத்திலே ஸ்ரீ மதுரகவிகள் தம்முடைய குற்றங்களையும், ஸ்ரீ நம்மாழ்வார் தமக்குச் செய்த மகா உபகாரத்தைப் பற்றியும் சொல்கிறார். குற்றங்கள் ஆவது – பிறருடைய பொருள்களையும், பெண்களையும் நம்பி இருந்தமை. உபகாரம் என்பது ஆழ்வாரிடத்திலே கடாக்ஷம் பெற்றது.
இதன் ஆழ்ந்த பொருள்:
எம்பெருமானுக்கே உரிய ஆத்ம வஸ்துவை என்னுடையது என்று நம்பினேன், அந்த நம்பிக்கையாலே தேஹ சம்பந்தமான விஷயங்களையும் அபகரித்தேன். இது போன்ற தவறான எண்ணங்களால் ஸ்ரியப்பதியிடம் காட்ட வேண்டிய மஹாவிஸ்வாஸத்தைப் பெண்களிடம் காட்டினேன். இப்படிப் பல குற்றங்கள் இழித்தும், தம்முடைய இழிமையைப் பாராமல் சுவாமி நம்மாழ்வார் தம்மைக் கடாக்ஷித்து சதுரன் ஆக்கின படியாலே சுவாமிக்கு அடியேன் கைங்கர்ய பரன் ஆனேன் என்று மங்களாசாசனம் பண்ணுகிறார்.
ஆறாம் பாசுரம்:
இன்று தொட்டும்* எழுமையும் எம்பிரான்*
நின்று தன் புகழ்* ஏத்த அருளினான்*
குன்ற மாடத்* திருக்குருகூர் நம்பி*
என்றும் என்னை* இகழ்விலன் காண்மினே*
விளக்கம்:
ஸ்வாமியினுடைய கடாக்ஷம் பெற்ற நாள் முதல்(இன்று தொட்டும்), இனி வரும் காலம் முழுவதும் தம்முடைய திருப்புகழை ஏத்தும் படி ஸ்ரீ நம்மாழ்வார் கடாக்ஷித்து அருளினார். இப்படி ஆழ்வாருடைய கிருபைக்கு பாத்திரம் ஆனபடியாலே, தாம் நெடுகாலம் வேறு அல்ப விஷயங்களில் ஈடு பட்டிருந்த போதும், ஆழ்வாருக்கு எம்பெருமான் மயர்வற மதிநலம் அருளினாப் போலே தமக்கு ஆழ்வார் அருளிச்செய்த படியால், தாம் மீண்டும் அங்கு போகாத படிச்செய்தது என்று அருளுகிறார்.
ஏழாம் பாசுரம்:
கண்டு கொண்டென்னைக்* காரி மாறப் பிரான்*
பண்டை வல்வினை* பாற்றி அருளினான்*
எண் திசையும்* அறிய இயம்புகேன்*
ஒண் தமிழ்* சடகோபன் அருளையே*
விளக்கம்:
எம்பெருமான் ஆழ்வாரைக் கண்டு கொண்டமைப் போல, ஆழ்வார் தம்மைக் கண்டுகொண்டு தம்மிடம் இருந்த வினைகள் தம்மைத் தொடராமலும், பிறரை அடையச் செய்யாமலும் உருத்தெரியாமல் அழித்தொழிந்தார். அப்படிப்பட்ட சுவாமியின் புகழை எட்டு திக்குகளிலும் பரப்புவேன் என்கிறார் இப்பசுரத்திலே.
எட்டாம் பாசுரம்:
அருள் கொண்டாடும்* அடியவர் இன்புற*
அருளினான்* அவ்வருமறையின் பொருள்*
அருள் கொண்டு* ஆயிரம் இன்தமிழ் பாடினான்*
அருள் கண்டீர்* இவ்வுலகினில் மிக்கதே*
விளக்கம்:
பரம பக்தர்களான அடியவர்கள் இன்புறுவதற்காக, கருணையே வடிவெடுத்தவனான எம்பெருமான், வேதார்த்தங்களை வெளியிட்டுஅருளினான்(வேதமறிந்த அதிகாரிகள் மட்டும் உய்யும் படி ஆயிற்று). இப்படி வேத ரகஸ்யங்களை வெளியிட்டு அருளின எம்பெருமானுடைய கிருபையைக் காட்டிலும், அவனுடைய கிருபையாலே சுவாமி நம்மாழ்வார் திருவாய்மலர்ந்தருளிய அழகிய இனிய தமிழ் மொழியில் அமைந்த திருவாய்மொழியோ அனைவரும் உய்வதற்காக அருளிச்செய்யப்பட்ட பிரபந்தம் ஆன படியாலே, அந்த கிருபை ஒன்று மட்டுமே இவ்வுலகினில் பெரியதாக விளங்குகிறது என்று மங்களாசாசனம் பண்ணுகிறார் இப்பாசுரத்தில்.
ஒன்பதாம் பாசுரம்:
மிக்க வேதியர்* வேதத்தின் உட்பொருள்*
நிற்கப் பாடி* என் நெஞ்சுள் நிறுத்தினான்*
தக்க சீர்ச்* சடகோபன் என் நம்பிக்கு* ஆள்
புக்க காதல்* அடிமைப் பயன் அன்றே*
விளக்கம்:
வேதத்தின் சாரம் திருவாய்மொழி, திருவாய்மொழி பத்துப்பத்துகளுக்கும் சாரம் பயிலும் சுடரொளி மற்றும் நெடுமாற்க்கடிமைப் பாசுரங்கள். சிறந்த பண்டிதர்களால் ஓதப்படும் வேதசாரமான திருவாய்மொழி திவ்யப் ப்ரபந்தத்தைக் கல்லில் குழியிட்டு நீர் நிறுத்துவதைப் போல, கல் போன்ற தம் மனதைக் கரைத்து அதில் திருவாய்மொழிப் பாசுரங்களை நிறுத்தினார் சுவாமி என்று அருளுகிறார் ஸ்ரீ மதுரகவிகள். அவருக்கு எவ்வளவு மேன்மை சொன்னாலும் அது மிகை ஆகாது என்றும், மேலும் நம்மாழ்வாரின் திருவடிகளில் ஏற்ப்பட்ட பக்தியே, அவருக்கு அடிமையாய் இருந்து கைங்கர்யம் பண்ணும் பிரயோஜனம் கிடைத்தது என்றும் மங்களாசாசனம் பண்ணுகிறார் இப்பாசுரத்தில்.
பத்தாம் பாசுரம்:
பயன் அன்றாகிலும்* பாங்கல்லர் ஆகிலும்*
செயல் நன்றாகத்* திருத்திப் பணி கொள்வான்*
குயில் நின்றார் பொழில் சூழ்* குருகூர் நம்பி*
முயல்கின்றேன்* உந்தன் மொய்கழற்க்கு அன்பையே*
விளக்கம்:
பிறர் திருந்துவதால் தமக்கு ஒரு பிரயோஜனம் இல்லாமல் இருந்தாலும், அதே போன்று கேட்பவர்களிடத்தில் திருந்தும் மனப்பான்மை இல்லாமல் போனாலும், அவருடைய குணப்பூர்த்தியால் தம்மை அண்டினவர்கள், அண்டாதவர்கள், நாட்டில் உள்ள எல்லோரும் உய்யும் படி எல்லோரையும் திருத்திப் பணிகொள்பவர் சுவாமி நம்மாழ்வார். மேலும் சுவாமி நம்மாழ்வாரைப் பற்றினால் இங்கேயே ஆனந்தம் பெறலாம் என்றும், எம்பெருமானை அடைவதற்கோ தெளிவிசும்பு திருநாட்டுக்கு எழுந்தருள வேண்டும் என்றும், அதுவும் நித்யர்கள் மற்றும் முக்தர்களே அங்கு அனுபவிக்கமுடியும் என்றும், ஆனால் தமக்கோ சுவாமி நம்மாழ்வாரின் திருவடிகளைப் பற்றினவாரே ஆனந்தம் கிடைத்ததையும், அதற்க்கு பிரதி உபகாரம் ஒன்றும் செய்ய முடியாமல் தடுமாறி அன்பு செய்ய முயலுகிறார்.
பதினோராம் பாசுரம்*
அன்பன் தன்னை* அடைந்தவர்கட்கெல்லாம்
அன்பன்* தென் குருகூர் நகர் நம்பிக்கு*
அன்பனாய்* மதுர கவி சொன்ன சொல்
நம்புவார் பதி* வைகுந்தம் காண்மினே*
விளக்கம்:
தன்னை அடைந்தவர், அடையாதவர் எல்லோரிடத்திலும் அன்புடன் இருப்பவர் எம்பெருமான்(வாத்சல்யம்). எம்பெருமானுக்கு உகப்பாக காரியங்களைச் செய்பவரே அடியார்கள் ஆவர். ஆக எம்பெருமான் உகந்ததைப் பற்ற வேணும் என்றால் அவன் அடியார்களைப் பற்ற வேண்டும். அதனால் அஞ்ஞான இருளைப் போக்குபவரான, எம்பெருமான் மிகவும் உகக்கும் ஆசார்யானையே முதலில் தாமும் முதலில் பற்றி நமக்கும் வழி காட்டுகிறார் ஸ்ரீ மதுரகவிகள். ஏன் என்றால் ப்ராப்திக்கு எல்லையும், புருஷகாரம் செய்பவரும் அவரே. இப்பாசுரங்களைத் தஞ்சமாகப் பற்றுபவருக்கு இடம் திருநாடான திருப்பரமபதம் ஆகும் என்று பூர்த்திஆகிறது இத்திவ்யப்ரபந்தம்.
முடிவுரை:
இந்தப் பாசுரங்களை அனைவரும் கற்று சுவாமி நம்மாழ்வாரின் திருவடியைப் பற்றி அநுக்ரஹம் பெற்று இன்புற்று வாழ முயற்சிப்போம். (வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே – ஆழ்வார் திருவாக்கு)
No comments:
Post a Comment